புதன், 14 ஆகஸ்ட், 2024

சைதை மானமிகு எம்.பி. பாலு மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!


விடுதலை நாளேடு

சென்னையில் சைதாப்பேட்டை என்பது திராவிடர் கழகத்தின் பாசறை முகாமாகும். மாணவப் பருவந்தொட்டு இந்த இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, இறுதி மூச்சு அடங்கும் வரை கொள்கையில் உறுதியானவராக வாழ்ந்த எங்கள் அருமைத் தோழர் – கட்டுப்பாட்டின் கவசம் – கருஞ்சட்டைக் கொள்கை மறவர் – அருமைத் தோழர்

எம்.பி. பாலு நேற்று மாலை (13.8.2024) தனது 92ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளானோம்!

சைதையில்தான் எத்தனை எத்தனைக் கழக மாநாடுகள் – கழகப் பொதுக் கூட்டங்கள் – கணக்கில் அடங்காதவை. அவற்றிற்கெல்லாம் முதுகெலும்பாக இருந்து உழைத்த உன்னத வீரர் சைதை பாலு!

சில சமயங்களில் கழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அத்தருணத்தில் எல்லாம் சிறிதும் சஞ்சலத்திற்கு ஆளாகாமல், உருக்கு மலையாகக் கம்பீரமாக நின்றவர் – துரோகத்திற்கு துணை போகாதவரான சுயமரியாதைச் சுடரொளியாகி விட்டார்!

கழகக் ெகாள்கையைத் தீவிரமாகப் பேசியதற்காக அவர்மீது வழக்குப் பாய்ந்ததும் உண்டு.
தென் சென்னை மாவட்ட செயலாளராக, தலைவராக, கழகக் காப்பாளராகப் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தடம் பதித்த மாமனிதர்!

கழகம் அவரை சரியாக அடையாளங்கண்டு உரிய சிறப்புகளைச் செய்து பலமுறை கவுரவித்ததுதான் நாம் அனைவரும் பெறும் ஒரே ஆறுதல்!

பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் திருமதி வள்ளியம்மாள், மகன்கள் அருள், செந்தில்நாதன், மகள்கள் செந்தாமரை, பூங்கொடி ஆகியோருக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
அப்பழுக்கற்ற அவரின் கழகப் பணிகளை நினைவு கூர்ந்து, கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்!
வாழ்க சைதை எம்.பி. பாலு!

சென்னை
14.8.2024

கி.வீரமனி
தலைவர்
திராவிடர் கழகம்

குறிப்பு: 15.8.2024 காலை 10 மணியளவில் சைதாப்பேட்டை சடையப்பர் தெருவிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக