சென்னை, ஜூலை 14 சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உரிமை என்கிற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய காலகட்டத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம்; ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.7.2017) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வுப் பொன்விழாவில் பங்கேற்று சு.திருநாவுக்கரசர்பற்றிய நூலினை வெளி யிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சிறப்பாக நடைபெறக்கூடிய அருமை நண்பர் அரசியலிலே பொன் விழா காணுகின்றவர்.
மிக அற்புதமான நட்புக்குரிய நண்பர் என்று அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அருமை நண்பர் திருநாவுக்கரசர் அவர்களுடைய பிறந்தநாள் பெருவிழா, பொதுவாழ்வில் பொன்விழா ஆகிய அற்புதமான நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய பாட்டாளிகளின் தோழரும், எளிமையின் இலக்கணமும், தமிழகத்தினுடைய மூத்த தலைவராக கலைஞர் அவர்களுக்கு அடுத்தபடியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவருமான அன்பிற்குரிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழகத்தினுடைய நம்பிக்கையாக, தமிழ்நாட்டினுடைய தற்போதைய நிலைகளுக்கெல்லாம் ஒரு விடியலாக வந்திருக்கக்கூடிய தமிழகத்தின் ஒப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர் அருமைச்சகோதரர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மலரை வெளியிட்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய புதுவை மாநில ஜனநாயகப்போராளி, முதல்வர் என்பது இரண்டாவது, ஜனநாயகப்போராளி என்ற பெருமையை இன்றைக்கும் பெற்றிருக்கக்கூடிய மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களே, அனைத்து இயக்கங்களைச்சார்ந்த, கட்சி களின் தலைவர்களே, சான்றோர்களே, காங்கிரசு பேரியக்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
இங்கே வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் விசுவநாதன் சுட்டிக்காட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி ஒரு வாக்கியத்தை தோழர் திருநாவுக்கரசருக்கு சொன்னார்கள் என்பதை சிறப்பாக எடுத்து சுட்டிக்காட்டினார்.
‘‘ஜனக்கட்டு’’ உடையவர்
என்றைக்கும் மக்களோடு இருக்கக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக, தோழனாக பணியாற்றக்கூடியவராக, தலைவராக திகழக்கூடிய ஒருவர் என்ற பெருமை இருக்கிறதே, இதுதான் எளிதில் எவரும் சம்பாதிக்க முடியாத ஒன்றாகும். அதிலே அவர் தனித்தன்மையோடு இருக்கக்கூடியவர்.
அறந்தாங்கியானாலும், புதுக்கோட்டை மாவட்ட மானாலும், அங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையிலே நேசிக்கப்படக்கூடிய தோழர் அருமை திருநாவுக்கரசர் ஆவார். அங்கே எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் இல்லங்களில் நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும், துயர நிகழ்ச்சியாக இருந்தாலும் அது எத்துணை மாதங்களானாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிற ஓர் எடுத்துக்காட்டான தலைவர் என்று சொன்னால், அவர் தோழர் திருநாவுக்கரசர் ஆவார்.
மாணவர் பருவத்திலேயே திராவிடர் இயக்கம்
அவர் மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்திலேயே இருந்து வளர்க்கப்பட்டவர். காங்கிரசு பேரியக்கத்தில் நமக்கு ஒன்றும் பெரியஅளவில் கருத்துப்போர் கிடையாது. ஆனால், அவரை திராவிட இயக்கம்தான் வளர்த்து காங்கிரசு இயக்கத்துக்கு தந்திருக்கிறது. விவசாயத்திலே ஒரு புதுமையான கண்டுபிடிப்பு உண்டு. விதைகளாக வைத்து, செடிகளாக வைத்து நடுவது என்பது ஒரு முறை, மரங்களையே அப்படியே பெயர்த்து எடுத்து வைப்பது இன்னொரு முறை. திருநாவுக்கரசர் இரண்டாவது முறையைச் சார்ந்தவர். திராவிட இயக்க மண்ணிலிருந்து, திராவிட இயக்கத்தாலே வளர்ந்த காரணத்தாலேதான் அவர்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்ன அண்ணாவினுடைய குணம் உண்டு. எனவேதான், அவர் திராவிட இயக்கத்துக்கும், தேசிய இயக்கத்துக்கும் முரண்பாடல்ல, உறவுப்பாலம் உண்டு. அதுவும் இந்த காலகட்டத்திலே, இன்றைக்கு தோன்றியிருக்கிற சங்கடமான மிகப்பெரிய அளவில், மதசார்பின்மைக்கு அறைகூவல், சமூக நீதிக்கு அறைகூவல், மாநிலங்களின் உரிமைகளுக்கு அறைகூவல், ஆளுநர்களே உரிமைகளைப் பறிக்கக் கூடிய அளவிற்கு அறைகூவல். அதற்கு புதுவையைவிட நல்ல உதாரணம் வேறு கிடையாது. நாம் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியத்தில் - தமிழ்நாட்டில் ஆளுநரே இல்லை. பல காலம் ஆளுநரால் பிரச்சினை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆளுநரே பொறுப்பு ஆளுநர். பொறுப்பில்லாத பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு போவார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் சந்திக்க வேண்டும் என்றால்கூட, மும்பைக்குப்போய்த்தான் சந்திக்கிறார்கள். எனவே, அதைக் கேட்பதற்குக்கூட உரிமை இல்லை.
போர்த் தளபதிகள் கூடியிருக்கின்றனர்
இந்தக் காலக்கட்டத்திலேதான் இந்த மேடையிலே இருக்கிற அனைவரும் திருநாவுக்கரசரை பாராட்டுவதற்காக, அவரது பொன்விழாவைக் கொண்டாடுவதற்காக, அல்லது நாமெல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக என்பதல்ல, ஜனநாயக உரிமைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தை எதிர்த்துப் போரிடுகின்ற போர் வீரர்கள். போர்த் தளபதிகள். இதிலே எல்லோரும் சேர்ந்திருக்கிறார்கள். இதிலே கட்சியில்லை, கருத்து மாறுபாடுகள் இல்லை. இதைக்காட்டுக¤ன்ற விழாவாக இந்த விழா இருக்கிறது.
எனவேதான், நல்ல தளபதிகள் இங்கே அமர்ந்தி ருக்கிறார்கள். நடக்கக்கூடிய போரில் வெல்வோம், வெல்வோம். இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரசு கட்சி முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன், திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கய்யன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
பொன் விழா காணும் திருநாவுக்கரசர்பற்றிய நூலினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி பெற்றுக்கொண்டார்.
உடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விழா நாயகர் சு.திருநாவுக்கரசர் (13.7.2017)
உடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விழா நாயகர் சு.திருநாவுக்கரசர் (13.7.2017)
-விடுதலை,14.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக