வியாழன், 13 ஏப்ரல், 2023

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக் கூட்டம்



தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

சென்னை, ஏப். 13- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் நேற்று (12.4.2023) மாலை சைதை - தேரடி திடலில் அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்துமீறி வரும் ஆளுநர் ஆர். என்.ரவியைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி சார்பில் 12.4.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை - தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சைக் கண்டித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச் சினை குறித்தும், சனாதன ஆதரவு குறித்து, தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும் நேற்று (12.4.2023) மாலை சைதை நேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. தலைமையுரை

இப்பொதுக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி உரையாற்றுகையில்:

"தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநி லங்களில் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கு எதிரான இந்தப் பொதுக் கூட்டம் இதோடு நின்று விடாது. டில்லி வரை சென்று இந்தக் கூட்டம் போராடும். ஆளுநர் தனது அதிகாரம் என்னவென்று புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இல்லை யென்றால் பெரியார் மண் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

ஆளுநர் பதவி வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் போரா டிக் கொண்டிருக்கிறது. எங்களின் தியாகங்களை, போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதை முதலில் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் மற்ற மாநிலங்களிலும் பேரவையில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச் சர்களுக்கு நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிற்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு வழிகாட்டும்" என தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலா ளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சு.திரு நாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச் செயலாளர் மும்மது அபுபக்கர், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்பட தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங் கேற்று ஆளுநரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

இம்மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மணிக்கம், துணை செயலா ளர் வி.பி.மணி, காங்கிரஸ் கட்சி தளபதி பாஸ்கர், தி.மு.க. நாடாளுமனற் உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டக் கழகப் பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, சைதை தென்றல், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், சைதை ரவி, சண்முகப்பிரியன், மு.இரா.மாணிக்கம், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணை அமைப்பாளர் சி.பாசுகர், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் மற்றும் கழகத் தோழர்கள், தி.மு.க. பகுதிச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், ள்ளிட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்ற னர்.

சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!


 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவி

ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!

இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; 

மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்!

எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!

1

சென்னை, ஏப்.13  அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக நடக்கும் ஆளுநர் ரவி; ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்! இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்! எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில்

மாபெரும் கண்டனக் கூட்டம்!

நேற்று (12.4.2023) மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

போரை அறிவித்தாலே வெற்றி பெறும் திராவிட மாடல் ஆட்சி!

சிறப்பு வாய்ந்த எழுச்சி நிறைந்த இந்தப் போராட்டக் களத்தில், திராவிட மாடல் ஆட்சி எப்பொழுதும் தோற்காது, என்றைக்கும் வெற்றி பெறும் - எப்படிப்பட்ட வெற்றியைப் பெறும் என்று சொன்னால், போரில்லாமலே வெற்றி பெறும்; போரை அறிவித்தாலே வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு நடைபெறவேண்டிய மிகப்பெரிய ஓர் ஆர்ப்பாட்டம், போராட்டம் பொதுக்கூட்டமாக இந்த சைதைத் தேரடி யில் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற் றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகப் பொரு ளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

சைதைப் பகுதியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களே,

மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக இங்கே உரையாற்றக்கூடிய அருமைச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் அன்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

இளைஞர்களின் குரலாக...

எனக்கு முன்னால், இளைஞர்களின் குரலாக மிக வேகமாக உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் வேல்முருகன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் உரையாற்றி, விடை பெற்று சென்றுகொண்டிருக்கக் கூடிய திராவிட இயக் கத்தின் போர்வாள் 500 டன் அய்சையும்கூட பொருட் படுத்தாமல், மிகப்பெரிய அளவிற்கு தன்னுடைய லட்சியத்தை பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களை, நேரத்தின் அருமை கருதி, அனைவரையும் விளித்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று அன் போடு வேண்டிக்கொண்டு என்னுரையைத் தொடங்கு கின்றேன்.

 பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு 

என்ன காரணம்?

பெரிய அளவிற்கு இதனைப் பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு என்ன காரணம்? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம், நீங்கள் வாக்களித்துத்தான் இன்றைய ஆட்சி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத்தான் இந்த ஆட்சி உருவாகி யிருக்கிறது.

அப்படி உருவாகிய ஆட்சி, செயல்படவேண்டுமா? இல்லையா?

சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத்தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்

எதற்காக நாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, ஓர் ஆட்சியை நிறுவி, அந்த ஆட்சி, அத னுடைய ஒப்பற்ற முதலமைச்சராக, நம்முடைய முதலமைச்சர் திராவிட சமுதாயத்தினுடைய மானத்தை, உரிமையைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களு டைய தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னால், சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத் தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்.

அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து, இதுபோன்று பொதுப் பிரச்சினைகள் என்று சொன்னால், ஒரே வகை யில் சிந்திக்கின்றார்கள் என்பதற்கு அடையாளமாக, ஓரிருவர் தவிர, மிகப்பெரிய அளவிற்கு அடிமைகளாக  ஆகிவிட்டவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும், பெரும்பாலானோர்  நலத்தைப் பயக்கக்கூடிய, அத் துணை பேருக்கும் வாய்ப்புள்ள சட்ட வரைவுகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்து, ஆதரவு தெரிவித்த பின்பு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.

ஆளுநருடைய கடமை என்ன?

அவர் எதற்காக ஆளுநராக இருக்கிறார்?

திராவிட இயக்கங்களுக்கு கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு!

அடிப்படையிலே, திராவிட இயக்கங்களுக்கு ஆளுநர் பதவியைப் பொறுத்து தொடக்கத்திலிருந்தே ஒரு கொள்கை உண்டு; அந்தக் கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு. இருந்தாலும், ஆளுநராக இருக்கிறவர்கள் சரியாகப் பயன்படவேண்டுமல்லவா?

ஆளுநர் பொறுப்பே தேவையில்லை - ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நம்முடைய நிரந்தர நிலைப்பாடு.

சரி, பரவாயில்லை!

ஆளுநர் இருந்தால், அந்த ஆளுநர் தன்னுடைய கடமையை ஒழுங்காக, சிறப்பாக செய்யவேண்டும்.

நம்முடைய கோரிக்கை!

நம்முடைய விருப்பத்திற்கு அவர் செய்யவேண்டும் என்றுகூட நாங்கள் வாதாட  வரவில்லை.  மாறாக, அவர் எந்த  அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத் தாரோ, அந்த உறுதிமொழிக்கேற்ப அவருடைய கடமை யைச் செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

இது ஒரு விசித்திரமான கோரிக்கை.

அவருடைய கடமையை நினைவூட்டுவதற்கு ஓர் அரசாங்கம்; அவருடைய கடமையை நினைவூட்டு வதற்கு ஒரு சட்டமன்றம்.

அதில் மக்கள் பிரதிநிதிகள்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் - இப்படிப்பட்ட தலைவர்கள் ஏன் தேவைப் படுகின்றனர்?

அருமை நண்பர்களே, இதோ என் கையில் இருப்பது அரசமைப்புச் சட்டப் புத்தகம்.

சமூகநீதியில், சமத்துவத்தில் 

உறுதியாக இருந்தார் டாக்டர் அம்பேத்கர்!

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம். அவர்தான் அதற்கு மிக முக்கியமான தத்துவம் கொடுத்து உயிர் கொடுத்தார், உரு கொடுத்தார். அவருக்கு விருப்பமில்லாத விஷயங் களும் உள்ளே இருந்ததை வெளிப்படையாக சொன் னார். ஆனால், அப்படி இருந்தும்கூட, அவர் தெளிவாக பல செய்திகளில் உறுதியாக இருந்தார். சமூகநீதியில் உறுதியாக இருந்தார். சமத்துவத்தில் உறுதியாக இருந்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களை முதன்மைப்டுத்தி அடிப்படையானவற்றை அடிக்கட்டுமானப் பகுதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி!

அவற்றையெல்லாம் நிறைவேற்றக் கூடிய ஆட் சிக்குப் பெயர்தான் இங்கு நடைபெறக்கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி.

அப்படிப்பட்ட நிலையில், இங்கே ஓர் ஆளுநர் டில்லியிலிருந்து அனுப்பப்படுகிறார்.

அந்த ஆளுநர் எடுத்த உறுதிமொழி என்ன?

அவர் எடுத்த உறுதிமொழியைத்தான் இங்கே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நண்பர்களே, இங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; அதேபோல, நகராட்சியில் மேயர், துணை மேயர் உள்பட எல்லோரும் இருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று!

பொறுப்புகளை ஏற்கிறவர்கள், குடியரசுத் தலைவரி லிருந்து, நீதிபதிகளிலிருந்து, அமைச்சர்களிலிருந்து எல்லோரும் உறுதிமொழியைச் சொல்லி பிரமாணம் எடுக்கிறார்கள். அமைச்சர்களின் உறுதிமொழியில், காப்புறுதி உண்டு; ரகசிய காப்புறுதி  உண்டு; அதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

அந்த சூழ்நிலையில், ஆளுநராக இருக்கின்றவர் களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற அந்த வாக் குறுதியினுடைய வாசகங்கள், அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று.

இதை சட்டப்பூர்வமாக சொல்லவேண்டும்; வழக் குரைஞர் என்ற முறையில். இங்கே சட்டம் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அரசியல் உணர்வுள்ளவர்கள் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், இன்னுங்கேட்டால், ஆளுங் கட்சியாக, வடக்கே இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கவனிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு சொல்லுவது என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு:

‘‘Oath or affirmation by the Governor.-Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say -

swear in the name of God

“I, A. B., do solemnly affirm that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of Tamil nadu (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of  Tamil nadu (name of the State)”

‘‘அரசமைப்புச் சட்டத்தை நான் காப்பாற்றுவேன்; அரசமைப்புச்  சட்டத்திற்காக நான் வாதாடுவேன். அரச மைப்புச்  சட்டத்திற்காக நான் எல்லா சட்டங்களையும் காப்பாற்றுவேன்.''

இதையெல்லாம் செய்துவிட்ட பிறகு, ஆளுநருக்குக் கூடுதலாக ஒரு பொறுப்பு இருக்கிறது. மாநிலத்தில் வரக்கூடியவர்களுக்கு, ஆளுநர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி அது.

‘‘I will devote myself to the service and well-being of the people of State.''

அதாவது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது, அரசமைப்புச் சட்டத்தின்மீது வாதாடுவது, அதனுடைய விழுமியங்களைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய கடமை என்றாலும், அதையும் தாண்டி அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது.

வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்!

அந்தப் பொறுப்பு என்னவென்றால் புரிந்துகொள் ளுங்கள்; இந்தச் செய்திகளை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். இங்கே வந்திருப்பவர்கள் தெரிந்துகொண் டால் மட்டும் போதாது; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய கூட்டணி யும் செய்யவேண்டும்; வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்.

ஆளுநர்மீது நமக்கென்ன தனிப்பட்ட முறையில் கோபமா? இந்த அரசிற்குக் கோபமா?

இன்னுங்கேட்டால், இங்கே நம்முடைய அருமைச் சகோதரர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சொன்னதைப்போல, வேக மாகப் பாயவேண்டிய நேரத்தில்கூட நிதானமாக இருக்கிறார், நம்முடைய முதலமைச்சர் என்று வேண்டு மானாலும் சொல்லலாமே தவிர, அவர் வேகமாகப் பாய்கிறார் என்று சொல்ல முடியாது.

பாதுகாக்க வேண்டிய பொறுப்பு 

ஆளுநருக்கு உண்டு!

அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

To the service and well-being of the people.

2
மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும்; மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்; அதைக் காப்பாற்றவேண்டிய,  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.

இந்த வாசகம், அமைச்சர்களுடைய உறுதிமொழியில் கூட கிடையாது. ஆகவே, ஓர் ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

தற்கொலைகளுக்கெல்லாம் இடமில்லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும்

அப்படிப்பட்டவர், ஆன்-லைன் சூதாட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து,  ஏற்கெனவே பழைய அரசில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்த ஓட்டைகளை எல்லாம் இல்லாமல் செய்யவேண்டும்; அதன்மூலம், அன்றாடம் தற்கொலைகள் மிகுந்துகொண்டிருக்கின்ற இடத்தில், அந்தத் தற்கொலைகளுக்கெல்லாம் இடமில் லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற முறையில், இன்றைய தி.மு.க. அரசு, முதலமைச்சரால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!

யாருடைய உயிராக இருந்தாலும், மனித உயிர்கள். அந்த மனித உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கான மனித நேய சட்டம் இது.

ஆனால், அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பு கின்ற நேரத்தில், ஆளுநர் என்ன செய்தார் என்பதை இங்கே நம்முடைய வேல்முருகன் அவர்கள் சொன் னாரே!

ஆளுநர், சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 

பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்!

ஆளுநர் யாரைச் சந்திக்கிறார்?

சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 40 பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். அதேநேரத்தில், அமைச்சர்களைச் சந்திப்பதற்குத் தாமதிக்கிறார்.

இப்படி நடந்துகொள்கிறார் என்றால், அதற்குப் பொருள் என்ன?

இன்னுங்கேட்டால், அவர் ஆர்.எஸ்.எஸ். உணர்வு உள்ளவர். பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியமானவர். அதன் காரணமாக, பாரதத்திலிருந்துதானே சூதாட்டத் தைக் கற்று வந்திருக்கிறார்கள்; பாரதத்தினுடைய கதையே சூதாட்டத்திலிருந்துதானே வருகிறது. அந்தப் பற்று அவருக்கு இருக்கலாம்; அதை அவரோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அது சட்டமன்றத்தில் சட்டப் புத்தகத்தில் எட்டிப் பார்க்கக் கூடாது; தலைநீட்டக் கூடாது.

சூதாட்டத்தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, 

அதுதான் அடையாளம்!

இன்னுங்கேட்டால், இருப்பதிலேயே மிகவும் யோக்கியமானவன் ‘தர்மன்' என்று பஞ்ச பாண்டவ பாத்திரங்களில் சொல்வார்கள்.

அவருக்கென்ன ‘தர்ம ராஜா' என்று சொல்வார்கள்; இங்கேகூட ‘தர்மராஜா' கோவில் உண்டு.

அப்படிப்பட்ட சூழலில், அந்தத் தர்மன்தான் சூதாடு கிறான்; சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறான்; கடைசியில், சுற்றும் முற்றும் பார்க்கிறான், பந்தயம் கட்டுவதற்குப் பொருளில்லை. திரவுபதைதான் மிச்சம்.

திரவுபதையையும் வைத்து சூதாடுகிறான்.  சூதாட்டத் தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, அதுதான் அடையாளம்.

மனிதநேயத்தோடு 

அதை செய்கிறோம்!

இன்னுங்கேட்டால், அவனுக்கு முழு உரிமை உண்டா? என்று கேட்டால், கிடையாது; அய்ந்தில் ஒரு பாகம்தான் இவனுக்கு உரிமை உண்டு. நான்கு பேருடைய பாகத்தை அவனே எடுத்துக்கொண்டு சூதாடியிருக்கிறான். சூதாட்டத்தினுடைய கொடுமை அதன்மூலமாகத் தெரிகிறது. ஆனால், அதைப் படித்துவிட்டு, பாரதக் கலாச்சாரம் பேசி, சனாதனம் பேசுகிறீர்களே ஆளுநர் ரவி அவர் களே, இப்பொழுதாவது எங்களுடைய ஆட்சி வந்திருக்கிறது; மனிதநேயத்தோடு அதை செய்கி றோம் என்று சொல்லும்பொழுது, அதை ஏன் நீங்கள் ஊறுகாய் ஜாடியில் போடுகிறீர்கள்? என்பதுதான் கேள்வி.

அந்த மசோதாவை முதலில் ஆளுநர் திருப்பி  அனுப்பியபொழுது, அவர் சொன்ன காரணம் இருக்கிறதே, அதன்படி அரசமைப்புச் சட்டத்தை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறாரா? படித்திருக் கிறாரா? என்கிற சந்தேகம்தான் எழுகிறது.

அறியாமையா? அல்லது ஆணவமா? என்ற கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறது.

அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு உரிய அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்.

7 ஆவது ஷெட்யூலில்...

உடனடியாக அதே அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பதில் எழுதினோம்;  நாங்கள் அறிக்கை எழுதினோம்.

7 ஆவது ஷெட்யூலில் மூன்று பட்டியல் இருக்கின்றன.

1. ஒன்றிய அரசினுடைய அதிகாரங்கள்.

2. மாநில அரசிற்குரிய அதிகாரங்கள்.

3. கன்கரண்ட் லிஸ்ட் - தமிழில் இது பொதுப்பட்டியல் என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால், பொதுப் பட்டியல் அல்ல; தவறாகச் சொல்கிறார்கள். அது ஒத்திசைவுப் பட்டியல்.

அந்த ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது என்று சிலர் நீங்களெல்லாம் நினைப்பீர்கள்.

சூதாட்டம் என்பது 

மாநிலப் பட்டியலில் இருக்கிறது

‘‘Betting and Gambling'' என்று சொல்லக்கூடிய இந்த சூதாட்டம் என்பது, அது மாநிலப் பட்டிய லிலேயே இருக்கிறது.

எனவே, இப்பொழுது சொல்லுங்கள், ஆளு நருக்கு அறியாமையா? அரசமைப்புச் சட்டத்தைப் படித்திருக்கிறாரா? இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பதற்கு அவர் தகுதியானவரா? பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி நடந்திருக்கின்றாரா? என்று கேட்பது நியாயமான கேள்வி அல்லவா!

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில், ‘‘ஆன்லைன் சூதாட் டத் தடைச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசிற்கு உரிமை இல்லை என்று சொல்லுகிறார்களே, அதற்கு உங்களுடைய பதில் என்ன?'' என்று கேட்டார்.

ஒன்றிய அமைச்சரின் பதில்!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘நிச்சய மாக மாநில அரசினுடைய அதிகாரப் பட்டியலில் இருக்கிறது; 34 ஆவது அயிட்டத்தில் இருக்கிறது'' என்று சொன்னார்.

ஒன்றிய அமைச்சர் இப்படி சொல்லிய பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டிருந்தார்.

இது என்ன நியாயம்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

பதவிப் பிரமாண உறுதிமொழிப்படி 

ஆளுநர் நடக்கவேண்டாமா?

நமக்காக அல்ல; யாருக்காகவும் அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி ஆளுநர் நடக்கவேண்டாமா?

அதைத்தான் எங்களுடைய முதலமைச்சர் கேட்டார்.

இதுவரையில், தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்ட முறைகளைப்பற்றி, எனக்கு முன்பு உரையாற்றிய நண்பர்கள், தோழர்கள் சொன்னார்கள்.

சட்டமன்றத்தில் இருந்து 

வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர்!

தயவு செய்து எண்ணிப் பாருங்கள், இதுவரை நூறாண்டை தாண்டிய தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய் வார்கள்; ஆனால், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர், இந்தியாவிலேயே இவர்தான் என்றால், இதைவிடக் கேவலம், இதைவிட அரசமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, அசிங்கமான, அருவெறுக்கத்தக்க - கடமை தவறுகின்ற நிலை வேறு இருக்க முடியுமா?

எனவேதான் நண்பர்களே, நிதானமாக, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கடைசியில் இனிமேலும் பொறுக்க முடியாது - பட்டதெல்லாம் போதும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தின் முன்பகுதி மிகவும் முக்கியமானது. 

144 சட்டமன்ற உறுப்பினர்கள் 

ஒப்புதல் கொடுத்தனர்!

ஆளுநரைப்பற்றி பேச முடியாது; விவாதிக்க முடியாது என்று சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய சில விதிமுறைகளையும் திருத்தி - மாற்றி, 144 சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் கொடுத்த பிறகு, முறையாக, அடுத்த கட்டத்திற்கு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த பிறகு, அதற்காக ஒரு நிரந்தரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு முதலில் அனுப்பி வைத் தார்கள். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு, பிறகு திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்குப் பிறகு இரண்டாவது முறை தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும், கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர்.

ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார்

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

எனவே, அவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார். அதுதான் மக்கள் போராட்டம்; மக்களிடத்தில் இருக்கிற அதிகாரம்தான் மிக முக்கியமானது.

அதேபோல, நீட் தேர்வு எதிர்ப்பு மசோதா. அதற்கும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. நாடு முழுவதும் நாம் பிரச்சாரம் செய்தோம்.

ஆளுநரின் வேலை ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது! 

இன்னுங்கேட்டால், நீட் தேர்வு மசோதாமீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் இவருடைய வேலை அது ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதிலும் அதிகப்பிரசிங்கத்தனமாக நடந்துகொண்டார். பிறகு அந்த மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப் பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவாக இருந்தாலும், அந்த மசோதாவை ஆளுநர் தவிர்க்க முடியாது; மறுக்க முடியாது; ஒப்புதல் அளித்தே தீரவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய காப்பாளராக இருக்கிறவர் - அதற்கு வியாக்கியானம் சொல்லவேண் டியது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?  ஆளுநர்கள் தன்னுடைய கடமையைத் தவறக் கூடாது என்று சொன்னார்கள்.

பேரறிவாளன் வழக்கில், உச்சநீதிமன்றம் இதே ஆளுநரின் தலையில் குட்டு வைத்தது. மற்ற வழக்கு களிலும் ஆளுநரின் பங்கு என்ன? என்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர் தன்னிச்சையாக நடந்துகொள்வதா?

பொதுவாகவே, ஆளுநர் தேவையில்லை என்கிற ஒரு நிலை இருந்தாலும், இந்த ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அரசமைப்புச் சட்டம் யாருக்காக இருக்கிறதோ, அந்த மக்களை மதிக்காமல், மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல், இவர் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார், ‘‘நான் குடி யரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவன்'' என்று சொல்கிறார்.

குடியரசுத் தலைவருக்குத்தான் நீங்கள் கட்டுப்பட்ட வர் என்பதுபோல சொல்கிறீர்களே, அரசமைப்புச் சட் டத்தை அப்படியாவது ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? 

உங்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்கள் யார்?

தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாடு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது!

தமிழ்நாடு அரசு உங்களுக்காக ஒதுக்குகின்ற நிதியைக்கூட யார் யாருக்கோ வாரிக் கொடுக்கிறீர்கள். 

ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் கொடுக்கின்ற பணத்தை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு, அட்சய பாத்திரம் நடத்துகிறீர்கள்; இன்னும் வெவ்வேறு பாத்திரங்களையெல்லாம் நடத்து கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டி ருக்கிறீர்கள் என்றால், அதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந்திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, மிக முக்கியமாக இந்தக் கூட்டத்தின் மூலமாக, இது முதல் கூட்டமாக இருக்க வேண்டும்; இது முடிவல்ல; இதுதான் தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந் திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்.

பெருந்திரள் என்ற சொல்லை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் கொடுத்தார்கள்.

பெருந்திரள் கூட்டம் என்று வள்ளுவர்கோட்டத்தில் நடத்துங்கள் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

இருகை நீட்டி வரவேற்கிறோம்!

அந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கூட்டத்தை, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், கூட் டணித் தோழர்களும், இன்னும் ஏனைய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளராக தங்களைக் கருதக்கூடிய வர்களாக யார் வந்தாலும், இருகை நீட்டி வரவேற்று, மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இது என்னுடைய கருத்து மட்டுமல்ல நண்பர்களே, இது பொதுமக்களுடைய கருத்துமாகும்.

2022 ஆம் ஆண்டு  

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’’ கட்டுரை!

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா'', ஏப்ரல் 18, 2022 ஆம் ஆண்டு வெளிவந்த நாளிதழில், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து குரல்கள் எழுந்தபொழுது, ‘‘ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்'' என்று கட்டுரை எழுதியிருந்தார் ஒரு கட்டுரையாளர்.

Governor Should not Resign in set the force should be abolished

என்று Arun Raman Article in ‘‘Times of India'', April 28, 2022  எழுதியிருக்கிறார்.   அந்தக் கட்டுரையில் கடைசியாக, ‘‘ஒரு தனி நபருக்கு ஏன் இத்தனை ஏக்க ராவில் மாளிகை. அந்த இடம் காட்சியகமாக மாற்றப் படட்டும்; எதற்காக தனி மனிதருக்கு ஆடம்பரமான மாளிகை. வெள்ளைக்காரன் ஆடம்பரம் செய்தான் என்றால், அன்றைக்கு இருந்தது அந்நிய ஆட்சி - இன்றைக்கு இருப்பது சுதந்திர ஆட்சி!'' என்கிறார்.

இதை நாங்கள் கேட்கவில்லை. கட்டுரையாளர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு ஆளுநர் பதவி 

தேவையில்லை!

ஆகவேதான் நண்பர்களே, பொதுமக்களிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டிய விஷயம் - இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை; அது ஒழிக்கப்படுகின்ற வரையில்.

பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வேந்தர்; அங்கங்கே இணைவேந்தர் உண்டு. அந்தந்தத் துறையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரைப் பொறுத்தவரையில், அந்த அதிகாரங்களில், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிப்பதற்காகத்தான் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

பல்கலைக் கழகங்களில் 

பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார்

ஆனால், அதேநேரத்தில், பல்கலைக் கழகங்களுக்கு நான்தான் (ஆளுநர்) வரவேண்டும்; நான்தான் (ஆளுநர்) பேசவேண்டும் என்று சொல்லி, பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார். பல பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறவில்லை. பட்டமளித்தால்தான், மாணவர்கள் பட்டதாரிகளாகி வேலைக்குப் போகவேண்டும்; அது அங்கே சுணக்கப்படுகிறது. அதைக் கண்டித்து நாங்கள் எல்லோரும் வற்புறுத்தினோம். பிறகு, தமிழ்நாடு அரசு, அந்த அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்து, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சார்பாகத்தான் வேந்தர் இருக்க வேண்டும்; ஆளுநர், வேந்தராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

அந்த வேந்தர் பொறுப்பு, ஆளுநருக்கு எப்படி கிடைக்கிறது என்று சொன்னால் நண்பர்களே,  ex-officio  - ஆளுநராக இருக்கின்ற காரணத்தினால், அவர் வேந்தராக ஆகிறார் என்கிற நிலை இருக்கிறது; அதை யும் எடுத்து மாற்றியிருக்கிறார்கள், மக்கள் நலன் கருதி.

அந்த மசோதாவும், இங்கே இருக்கக்கூடிய மசோதாவில் ஒன்றாக இருக்கிறது.

கிடப்பில் உள்ள சட்டவரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்

எனவேதான், அந்த சட்ட வரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள்,  தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 20 மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் அண்ணாமலை சொல்கிறார், 20 மசோதாக்கள் அல்ல; 19 மசோதாக்கள்தான் என்று. 

இது புத்திசாலித்தனமான பதிலா? ஏன் ஆளுநர் மாளிகையில் ஊறுகாய் ஜாடியில் அவை  இருக்க வேண்டும்?

எதற்காக?

இவர்கள் இதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?

மக்கள் தயாராக இருக்கவேண்டும்

எனவேதான், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்து, சட்டமன்றத்தையும் அவமதித்து, எல்லாவற்றையும்விட, மக்கள் மன்றத்தையும் அவமதித்துள்ள இவர்கள் இங்கே வேலையில்லை - இவர்களை வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

அரசாங்கம் ஒருபக்கத்தில் இருந்தாலும்,  மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; அந்த மக்கள் கிளர்ச்சிக்கு இந்தக்  கூட்டணி பொறுப்பேற்கும். அரசு அதனுடைய கடமையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையை செய்துகொண்டிருப்போம். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் நாங்கள் தயார்! தயார்!! தயார்!!! என்று மக்களைத் தயார்படுத்துகின்ற கூட்டம்தான் இது - மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற கூட்டமல்ல. 

வேகமாக நாடு முழுவதும் பரவும்!

ஏனென்றால், இன்னமும் நடக்கவேண்டிய பணி களும், இன்னமும் ஒப்புதல் கையெழுத்துப் போட வேண்டிய மசோதாக்களும் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் சில நாள்களில், அந்த மசோதாக்களில் எல்லாம் கையெழுத்துப் போடவேண்டும்; இல்லையானால், இந்தக் கிளர்ச்சி என்பது தொடக்கம்தான்; இது வேகமாக நாடு முழுவதும் பரவும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்றால், குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ, மற்றவர்களுக்கோ அல்ல; மக்களிடம்தான் இருக்கிறது.

அதுதான் அரசமைப்புச் சட்டம்.

மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் 

இந்தக் கூட்டம்!

ஆகவே, அதற்காக மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!

நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று, நம்முடைய ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மக்க ளுடைய உறுதிமொழியைக் காப்பாற்ற ஆயத்தமாவோம், ஆயத்தமாவோம்!

‘திராவிட மாடல் ஆட்சிக்குத் 

துணை நிற்போம்!

தமிழ்நாட்டைக் காப்பாற்றவேண்டும், அது ‘திராவிட மாடல்' ஆட்சியால்தான்  முடியும். ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய செயல்திறனாலும், மதி வியூகத்தாலும், சிறப்பான ராஜ தந்திரத்தாலும், சாதுரியத் தாலும், அது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குத் துணை இருப்போம் இந்தக் கூட்டணித் தோழர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு,13.04.2023



மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ் உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கினார்.

   சந்தாக்கான தொகை


2

மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ்  15 உண்மை சந்தா, 2 பெரியார் 

பிஞ்சு சந்தாக்கான தொகை ரூ.14,700 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் 

வழங்கினார். (03.04.2023,பெரியார் திடல் ).

தோழர்கள் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்

 

5

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டல 

பொறுப்பாளர் இரா. சிவசாமி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் 

வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழவரம் சக்கரவர்த்தி, சண்முகப்

பிரியன், இ. தமிழ்மணி, துரை, ரவீந்திரன், தென் சென்னை மாவட்ட 

செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்ட தோழர்கள் இளைஞரணி 

கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் 

அவர்களை சந்தித்தனர்.(08..04.2023)

மறைவுற்ற இரா.கோவிந்தசாமிக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

 

7

செங்கற்பட்டு, ஏப். 10- முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்-செங்கற்பட்டு 

இரா.கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் 8.4.2013 அன்று முற்பகல் 10.30 

மணியளவில் மறைந்தார்.காவல்துறையில் பணியாற்றிய காலந்தொட்டு 

இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஓய்வுக்குப் பிறகும் 

செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக கழக பணியாற்றியவர். கழகம் 

அறிவித்த போராட்டம், ஆர்ப்பாட்டம்,மறியல் என்று அனைத்து களத்திலும் 

முன் நின்று களப் பணியாற்றியவர். கடைசி மூச்சு அடங்கும் வரை 

கருஞ்சட்டை தொண்டராக வாழ்ந்து காட்டிய முதுபெரும் பெரியார் பெருந் 

தொண்டர் மறைவு கழகத்திற்கு பேரிழப்பு. இரா.கோவிந்தசாமி அவர்கள் 

உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

தலைமைக் கழகத்தின் சார்பில் 8.4.2023 அன்று மாலை 5 மணியளவில் 

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் தலைமையில் 

சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால், 

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,தாம்பரம் நகர செயலாளர் 

சு.மோகன்ராஜ், செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், 

மாவட்டச் செயலாளர் அ.செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன்.

இராசேந்திரன், செங்கற்பட்டு நகர தலைவர் க.தனசேகரன், காஞ்சிபுரம் 

மாவட்ட இணைச் செயலாளர் ஆ.மோகன் ஆகியோர் மலர் மாலை 

வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர். இரா.கோவிந்தசாமி அவர்களின்

மூத்த மகன் கோ.தமிழ்ச்செல்வன், இளைய மகன் கோ.இரவி மற்றும் 

குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

புதன், 12 ஏப்ரல், 2023

மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடுதொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவு



10

தாம்பரம், ஏப். 12- மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம் பேத்கர் சிலை அருகில் அமையப் பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 9.4.2023 அன்று மாலை 6.30 மணியளவில் திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வரும் 7.5.2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழி லாளரணி மாநாடு குறித்து  தொழிலாளரணி மாநில தலைவர் திருச்சி மு.சேகர் மாநாடு நோக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்,சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல கழக செயலாளர் 

தே.செ.கோபால், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு,சோமங்கலம் இனமாறன் (எ)பாலமுரளி, தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ். ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் இரா.சு.உத்ரா, தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், வட சென்னை மாவட்ட செயலாளர் திருவொற்றியூர் தி.செ.கணேசன்,வட சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் க.சுமதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், செம்பாக்கம் கு.வைத்தியலிங்கம் மற்றும் ஆவடி மாவட்டத் துணைச் செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாநாடு சிறக்க தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் தாம்பரம் தொழி லாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களின் கை தட்டலுடன் நிறைவேற்றப்பட்டது.

11

தீர்மானம் 1:

திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டை தாம்பரம் மாநகரில் நடத்திட ஒப்புதல் தந்த தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டை யும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2:

தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தொழிலாளரணிமாநில மாநாட்டை சிறப்புற நடத்திட சென்னை மண்டல,மாவட்ட பொறுப் பாளர்கள் ஒருங்கிணைத்து செயல்பட்டு நடத்திக் காட்டிடுவோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

தாம்பரத்தில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திரளாக தோழர் களை திரட்டி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

மாநாட்டின் போது தமிழர் தலைவர் அவர் களால் அறிவிக்கப்பட்ட உண்மை சந்தாக்களையும் வழங்கி தமிழர் தலைவர் அவர்களை மகிழ் விப்போம் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நாசகார திட்டம்"நிலக்கரி"சுரங்கம் அமைப்பதை தடுத்திட்ட தமிழர் தலைவர் அவர்களையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.

மாநாட்டு நன்கொடை அறிவித்த தோழர்கள்

தென் சென்னை மாவட்டம்  50 ஆயிரம்,

ஆவடி ஏழுமலை ரூ.50 ஆயிரம்,

ப.முத்தையன்  ரூ.25 ஆயிரம்,

மா.இராசு  ரூ.25 ஆயிரம்

பொறியாளர் ந.கரிகாலன் ரூ.10 ஆயிரம்

தே.செ.கோபால் ரூ.10 ஆயிரம் 

ஆ.வெங்கடேசன்  ரூ.5 ஆயிரம் 

கோ.நாத்திகன் ரூ.5 ஆயிரம்

கு.வைத்தியலிங்கம் ரூ.5 ஆயிரம்

பாலமுரளி  ரூ.3 ஆயிரம் 

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்

வட சென்னை சுமதி ரூ.2 ஆயிரம்

நன்கொடை வழங்கிய 

தோழர்கள்

ஆ.வெங்கடேசன் ரூ.5 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்.

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

மாநாடு எப்படி நடத்த வேண்டும்; மற்றும் தற்போதைய நிலை குறித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 10.4.2023 அன்று மாநில தொழிலாளரணி தலைவர் மு.சேகர், சிவகுருநாதன், ப.முத்தையன், மா.இராசு ஆகி யோர் கலந்தா லோசித்து முடிவில் 10 உண்மை சந்தாக்களை வழங்கினர்.

சனி, 8 ஏப்ரல், 2023

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக மாபெரும் முழு அடைப்பு! / சைதாப்பேட்டை தேரடித் தெருவில் மாபெரும் பொதுக்-கூட்டம்

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

அக்டோபர் 16-31,2021

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி......

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.

மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது,  தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.