அதையே நம்முடைய அரசுகளுக்கு வேண்டுகோளாக நான் முன் வைக்கிறேன்!
ஒட்டுமொத்த இந்தியாவும், உலகம் முழுவதும் உள்ளவர்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்!
வாருங்கள், ஜாதியற்ற உலகத்தை, புதிய சமுதாயத்தை படைப்போம் – இதுவே இவ்விழாவின் முக்கிய செய்தி!
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவரின் எழுச்சி உரை
வைக்கம், நவ.13 அரசமைப்புச் சட்டத்திலேயே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு’ மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசினார். அதையே நம்முடைய அரசுகளுக்கு வேண்டு கோளாக நான் முன் வைக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் ‘இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வாருங்கள், ஜாதியற்ற உலகத்தை, புதிய சமுதாயத்தை படைப்போம். இதுதான் இவ்விழாவின் முக்கிய செய்தி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா கேரள மாநிலம் வைக்கத்தில் நேற்று (12.12.2024) காலை நடைபெற்றது. இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘மார்க்சிஸ்ட் மாடல்’ முதலமைச்சர்!
பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று சொல்லக்கூடிய அளவில், இந்த மாபெரும் வைக்கம் நூற்றாண்டுநிறைவு விழா வெற்றி விழாவாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் நினைவகம், நூலகங்களோடு பூத்துக் குலுங்கி காய்த்துக் கனிந்திருக்கின்ற இந்த அருமையான நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு கேரள முதலமைச்சர், ‘மார்க்சிஸ்ட் மாடல்’ முதலமைச்சர், பெரு மைக்கும், சிறப்புக்கும் உரிய மாண்பமை பினராயி விஜயன் அவர்களே,
திராவிட ஆட்சியினுடைய மகுடத்தில்…
இந்த வெற்றி விழாவை உலக வரலாற்றில் பதிவு செய்வதற்காக – மூன்றாவது பெரிய விழாவாக நடத்து வதற்கு, எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து, திராவிட ஆட்சி வரலாற்றின் மகுடத்தில், ஒரு முத்தாகப் பொதித்திருக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பிலாத நாயகர் எங்கள் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே,
இந்த மேடையில் இருக்கின்ற தமிழ்நாடு, கேரள அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, நாடாளு மன்ற உறுப்பினர்களே, நம்மையெல்லாம் வரவேற்ற தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களே, நன்றி யுரை கூறவிருக்கக் கூடிய கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்களே,
எதிரே வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைக்கம் வெற்றி விழாவினுடைய மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, உங்கள் முன்னால் நிற்கின்றோம்.
(‘‘எந்தா ஆனந்தம் மனசிலாயி, எந்தா ஆனந்தம் மனசிலாயி’’ என்று மலையாளத்தில் கூறினார்).
அவ்வளவு பெரிய மகிழ்ச்சிக் கடல்! மக்கள் வெள்ளம் இங்கே சூழ்ந்திருக்கின்றது. ஈரம் எங்கு பார்த்தாலும் மண்ணிலே பதிந்திருக்கின்றது.
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவைதான் நம்முடைய களம் என்னும் சிந்தனை நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்றது!
நம்முடைய அமைச்சர் பெருமக்கள், நம்முடைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தாலும், செய்தித் துறை அமைச்சராக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும், எல்லோருடைய ஒத்துழைப்பும் – இரண்டு அரசுகளுடைய ஒத்துழைப்பும் மலர்ந்து, ஒரு நூறாண்டு அல்ல – பன்னூறாண்டுகள் பேசக்கூடிய வரலாறாக அமையக்கூடிய இந்த வைக்கம் போராட்ட வெற்றி விழா நிகழ்ச்சிக்கு நாங்கள் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
நூறாண்டுகளுக்கு முன்பாக, நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் இதே இடத்தில்தான், ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதற்காகப் போராடினார். கேரளத்துத் தோழர்கள் பெருமைக்குரிய டி.கே.மாதவன் அவர்களுடைய முன்னெடுப்பால், கே.பி.கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி அவர்கள், ஜார்ஜ் ஜோசப் அவர்கள் எல்லாம் இணைந்து நடத்திய அந்தப் போராட்டத்தை, அன்றைய அரசு அடக்கியது, ஒடுக்கி யது, சிறைச்சாலைக்கு அனுப்பியது.
சமூகநீதி என்றைக்கும் வெல்லும் – ஒருபோதும் சமூகநீதியை யாராலும் தோற்கடிக்க முடியாது!
நியாயங்கள் இருந்தால், அந்தப் போராட்டங்கள் தோற்பதில்லை. சமூகநீதி என்றைக்கும் வெல்லும் – ஒருபோதும் சமூகநீதியை யாராலும் தோற்கடிக்க முடியாது; சமூகநீதி எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றி ருக்கின்றது என்பதற்கு அடையாளமாகப் பெரியார் நினைவகம் – நூலகத்தினைத் திறந்து வைத்தனர் இரண்டு முதலமைச்சர்களும்!
உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கேள்விடப்படாத, காட்டுமிராண்டித்தனமான ஒரு தத்துவம், ஒரு மதத்தின் பெயரால், ஸநாதனத்தின் பெயரால், மிகப்பெரிய வைதீகத்தின் பெயரால், தீண்டாமை, நெருங்காமை, பாராமை என்ற ஜாதிக் கொடுமைகள் நிகழ்வதை வெளிநாட்டுக்காரர்கள் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாமல் கேட்கிறார்கள். அது என்ன Untouchability, Unseeability, Unapproachability? என்று!
சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதம்,
ஒரு பெரிய மாறுதலை உருவாக்கிற்று!
அப்படிப்பட்டவற்றையெல்லாம் எதிர்த்து நூறாண்டு களுக்கு முன்பு, ஒரு போராட்டம் நடத்தி, எங்கே அந்தப் போராட்டம் சிறைச்சாலையோடு முடிந்துவிடுமோ என்று நினைத்த நேரத்தில், ஒரு கடிதம், ஒரு சாதாரண கடிதம் – சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், ஒரு பெரிய மாறுதலை உருவாக்கிற்று.
தந்தை பெரியார் அவர்கள், ஈரோட்டிலிருந்து விரைந்தார். இங்கே (கேரளத்தில்) வீறுகொண்டு எழுந்தது அந்தப் போராட்டம். அதனுடைய வெற்றி விழாதான் இன்றைக்கு இங்கே நடைபெறுகிறது.
நமது மக்களின்மீது திணிக்கப்பட்ட ஜாதி தீண்டா மைக் கொடுமையை எதிர்த்து நீங்கள் செய்த முயற்சி களுக்கு நன்றி சொல்ல இந்த விழாவிற்கு நாங்கள் இங்கே வந்துள்ளோம்.
இந்த மாபெரும் இயக்கத்தின் வெற்றி!
ஏனெனில் ஜாதியும், தீண்டாமையும் நம் மக்களை மனிதத் தன்மையற்றவர்களாக்குகிறது (dehumanize). ஆனால், நமது இயக்கம், வைக்கம் போராட்டம், பெரியாரின் இயக்கம், திராவிட இயக்கம், தம் வழிகளில் மனித நேயத்தை வளர்க்கவும், மனிதத்தன்மை அற்ற நிலையிலிருந்து (dehumanize), மீண்டும் மனிதத் தன்மைக்குக் (rehumanize) கொண்டுவரப் போராடு கிறோம். அதுதான் இந்த மாபெரும் இயக்கத்தின் வெற்றி.
இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை.
இந்தப் போராட்டம் தொடர வேண்டும், அதுவே நமது செய்தி! ஜாதி ஒழிப்புக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பல போராட்டங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து முறியடிப்போம் – ஜாதியை அழித்தொழிப்போம்!
அன்று ஜாதியின் கொடுமை வெளிப்படையாகத் தெரிந்தது (patent); தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, நெருங்கக் கூடாது என்று வெளிப்படையாக ஜாதி வெறியுடன் நடந்துகொண்டார்கள். ஆனால், இன்று அவை மறைமுகமாக (latent) நடக்கின்றன. புரிந்து கொள்ள முடியாத அளவில் பாகுபாடு காட்டுகிறார்கள். ஒரு சில இடங்களில் நேரடியாகவும் கொடுமைகள் தலைகாட்டுகின்றன.
எந்த வடிவத்தில் ஜாதிக் கொடுமைகள் நிகழ்ந்தாலும் அதை நாம் எதிர்த்து முறியடிப்போம். ஜாதியை அழித்தொழிப்போம்!
நாம் இங்கு போராட வந்துள்ளோம். இன்று நாம் அறைகூவல் விடுக்கிறோம். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த இளைஞர்களுக்கு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
‘திராவிட மாடல் – மார்க்சிய மாடல் – காந்திய மாடல்!’
‘திராவிட மாடல் – மார்க்சிய மாடல் – காந்திய மாடல்!’ எல்லாம் சேர்ந்து இங்கே சத்தியாக்கிரகம் எப்படி பயன்பட்டு இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறீர்கள்! இந்தக் கட்டுமானம் இந்தச் சிந்தனைகளின் வெற்றியின் அடையாளம்.
எனவே, எங்களுடைய தலைதாழ்ந்த வணக்கத்தை, உலகெங்கும் இருக்கக்கூடிய பெரியாரியஸ்டுகள் மட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, நாத்திகர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானிகள், சமூகநீதியாளர்கள் அனைவரின் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்தப் போராட்டத்தில் இரண்டு மாநிலங்களும் பெற்றிருக்கும் வெற்றியை முதலமைச்சர்கள் கொண்டா டுகிறார்கள். ஓராண்டு காலமாக. மூன்றாவது நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சிறப்புக்குச் சிறப்புக்குச் சிறப்பு!
எங்கள் முதலமைச்சர் அவர்கள், அங்கேயும், இங்கேயும் சிறப்பாக வரலாற்றினுடைய பொன்னேடு களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அதுதான் அவருடைய ஆட்சியினுடைய சிறப்புக்குச் சிறப்புக்குச் சிறப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றன.
தோழர்களே, அனைவருக்கும் ஒரே ஒரு விண்ணப்பம்தான்! ஜாதி ஒழிப்பு என்ற பொதுவான இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். பெரியார் தனது 94 ஆவது வயதில் இறுதியாக நடத்திய ‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு” மாநாட்டில் பேசும்போது, அனைத்து அரசுகளுக்கும் ஓர் ஆலோசனையை வேண்டுகோளாக விடுத்தார்: அது எந்த அரசாக இருந்தாலும், எந்த வண்ணமாக இருந்தாலும், “ஜாதியை அரசமைப்புச் சட்டத்தின்படியே ஒழித்துவிட வேண்டும். அதை நம்முடைய அரசுகளுக்கு வேண்டுகோளாக நான் முன் வைக்கிறேன்” என்றார்.
இது பெரியாரின் வேண்டுகோள், பெரியாரின் கோரிக்கை; பெரியாரின் விண்ணப்பம்.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன் படி ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று இருக்கி றது. அதில் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்பதற்குப் பதிலாக, ‘‘ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று மாற்றப்பட வேண்டும். சட்டத்தின்படியே ஜாதி ஒழிக்கப்பட்டாக வேண்டும். அதற்கு நாம் போராட வேண்டும்.
ஏனெனில், ஜாதி என்பது தான் நிரந்தரத் தீமை. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு.
ஜாதியை ஒழித்துவிட்டால் தீண்டாமை தானாகப் போய்விடும். வேர் அறுந்துவிட்டால், பிறகு தானாகக் கிளை முறிந்துவிடும். ஜாதிதான் மூலப் பிரச்சினை. சிறப்புக்குரிய பங்கேற்பாளர்களே, இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஜாதியற்ற உலகத்தை,
புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்!
வாருங்கள், ஜாதியற்ற உலகத்தை, புதிய சமுதா யத்தை உருவாக்குவோம். அதுதான் நாம் ஏற்கின்ற உறுதிமொழி. அதுவே நமது சிந்தனை, அதை நோக்கி, நாம் செல்ல வேண்டும். நாம் பல களங்களில் வெற்றி பெற்றுள்ளோம், ஆனால், போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. போர்வீரர்களாக உறுதியேற்போம். அதற்காகவே இந்த மேடை. அதுவே நமது உறுதிமொழி. அனைவருக்கும் நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக