சனி, 14 டிசம்பர், 2024

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024) (தமிழ்நாடு முதல்வர் உரை)


இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Published December 12, 2024
தமிழ்நாடு

தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் – கேரளா முதலமைச்சர் – தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் மலர் தூவி மரியாதை (கேரளா, வைக்கம், 12.12.2024)
8 வைக்கத்தில் பெரியார் நினைவகத்தைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை!
8 சமூகநீதி வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்னாள்! வைக்கத்தில் பெரியார் நினைவகம் – நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த கேரள அரசுக்கு நன்றி!
பெரியாரை எதிர்த்த மண்ணிலே அவருக்கு விழா எடுப்பது சமூகநீதியின் வெற்றி! வைக்கத்தில் பெரியார் நினைவகம் என்பது சமூகநீதிக்கான வெற்றியின் சின்னம்!!

வைக்கம், டிச.12 வைக்கத்தில் பெரியார் நினைவகத்தைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை. சமூகநீதி வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்னாள். வைக்கத்தில் பெரியார் நினைவகம் – நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த கேரள அரசுக்கு நன்றி! பெரியாரை எதிர்த்த மண்ணிலே அவருக்கு விழா எடுப்பது சமூகநீதியின் வெற்றி! வைக்கத்தில் பெரியார் நினைவகம் என்பது சமூகநீதிக்கான வெற்றியின் சின்னம்! எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழிப்புடன் வெற்றி பெற வைத்தவர் தந்தை பெரியார் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2024) வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை வருமாறு:

வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் தலைமையு ரையாற்றிய கேரள முதலமைச்சர் எனது மதிப்பிற்குரிய சகாவு. பினராயி விஜயன் அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, தமிழ்நாட்டைச் சார்ந்த அமைச்சர் பெருமக்கள்

மூத்த அமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களே,
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்போடு செய்து வெற்றி கண்டிருக்கின்ற விழா நாயகர் எ.வ. வேலு அவர்களே,

துணை நின்று பணியாற்றிருக்கக்கூடிய சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே, கேரள மாநில அமைச்சர்கள் பெருமக்கள் வி.என். வாசவன் அவர்களே, சஜி செரியன் அவர்களே, துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அவர்களே,

நிறைவாக நன்றி நல்கியிருக்கக்கூடிய கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், அவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அமைச்சர் பெருமக்களே, கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் சாமுவேல், அவர்களே, கோட்டயம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் அவர்களே,

வைக்கம் சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஆஷா அவர்களே, வைக்கம் நகரமன்றத் தலைவர் பிரிதா ராஜேஷ் அவர்களே, வார்டு கவுன்சிலர் ராஜசேகர் அவர்களே, ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த அதியமான் உள்ளிட்ட தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களைச் சார்ந்த சமூகநீதி ஆர்வலர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய தந்தைப் பெரியாரின் தொண்டர்களே, ஊடகத் துறை, பத்திரிகை உலக நண்பர்களே, சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்னு சரித்திரத்திண்டே ஏடுகளில், தங்க-லிபிகளில் ரேகப்பெடுத்தேண்ட திவசமாணு.
ப்ரவேஷனம் நிஷேதிகப்பெட்ட வைக்கத்து – தந்தை பெரியாரினு நம்மள் ஒரு ஸ்மாரகம் நிர்மிச்சிட்-உண்டு. ஒரிக்கல், தந்தை பெரியாரினெ அரெஸ்ட்டு செய்து, ஜெயிலில் அடைச்ச வைக்கத்து-தன்னெயாணு தமிழ்நாடு, கேரள சர்க்காருகளுடெ பேரில் நம்மள் ஈ பரிபாடி ஆகோஷிக்குன்னது.

(தமிழாக்கம்: இன்று வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!
எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ – எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.)

தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு

 

இதுதான் பெரியாரின் வெற்றி! பெரியாரியத்தின் வெற்றி! திராவிட இயக்கத்தின் வெற்றி!

அந்த வகையில் சமூகநீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்!
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுடைய முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது!

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர்
கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லையே என்ற வருத்தம்!

இந்த நேரத்தில், என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்தக் காட்சியைக் காண நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம்தான் அந்த வருத்தத்திற்குக் காரணம்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், தோள்சீலைப் போராட்டத்தோடு 200 ஆவது ஆண்டு விழா நாகர்கோயிலில் நடந்தது. நானும், சகாவு பினராயி விஜயன் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, என்னையும் அழைத்திருந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்.
இப்போது எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார்.

இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன் அவர்கள், பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டு வதற்கான அனுமதியை தந்தது முதல் அனைத்து முன்னெ டுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கும், கேரள அரசுக்கும், கேரள அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையும், நன்றியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பாராட்டு–
வாழ்த்து!

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப் போலவே இந்த நினைவகத்தையும் கம்பீரமாக, அழகியலோடு – அறிவுக் கருவூலமாக உருவாக்கியிருக்க தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். அவருக்கும், இந்தத் துறையின் அதிகாரிகள், அலுவலர்கள், கட்டுமான நிபுணர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்!

இதற்கான முன்னெடுப்புகளை மிகச் சிறப்பாக எடுத்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!

கேரளம் இயற்கை எழில் கொஞ்சக்கூடிய சிறப்புக்குரிய ஒரு சுற்றுலா தலம். கேரளா கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறி இருக்கக்கூடிய மாநிலம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது!

கேரளாவிற்கு வரும் அனைவரும் கட்டாயம் இந்த வைக்கம் நினைவகத்தைப் பார்த்து, ஒடுக்கப்பட்ட மக்கள், அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்!

முதலாவது “வைக்கம் விருது”

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்ட அறிவிப்புகளில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். அதோடு ஒரு பகுதியாக கருநாடக மாநிலத்தின் மொழி உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடி எழுத்துலகில் சாதனைப் படைத்த தேவநூர மஹாதேவா அவர்களுக்கு முதலாவது “வைக்கம் விருது” வழங்கப்பட்டி ருக்கிறது.

அதுமட்டுமல்ல, வைக்கம் போராட்ட நினைவ கங்களையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம்.
நம்முடைய வெற்றியின் சின்னம்!

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் சிறப்பை பற்றி சொல்லும்போது குறிப்பிட்டதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

‘‘ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தை திறந்து பேசி, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் – எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கு இல்லாமல் வேறு எங்கேயும் இருந்ததில்லை” என்று சொன்னார்.

அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, இது நம்மு டைய வெற்றியின் சின்னம்! இனி அடைய இருக்கக்கூடிய வெற்றிகளுக்கும் வழிகாட்டுகின்ற சின்னம்!

1924 ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகுத்த போராட்டம்!

மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய சமூக கொடுமையை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டத்தில், வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதானார்கள். இங்கிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்தக் கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் அவர்கள் ஏப்ரல் 13 ஆம் நாள் இங்கு வந்தார்.

ஏதோ ஒருநாள் வந்துவிட்டு, அடையாளப் போராட்டம் நடத்திக் கொண்டு பெரியார் திரும்பிப் போகவில்லை. கிட்டத்தட்ட அய்ந்து மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.

“பந்தனத்தில் நின்னு” என்ற புத்தகத்தில்…

அந்த சிறைவாசத்தில், அரசியல் கைதிகளுக்கான மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதை கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவ மேனன் அவர்கள் “பந்தனத்தில் நின்னு” என்ற புத்தகத்தில் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

காந்தியார் ்அவர்கள், அய்யா பெரியாரைப் பற்றி எழுதி இருக்கிறார்.
“திருவாங்கூர் கவர்ன்மெண்டார் குரூர் நீலகண்டன் நம்பூதிரியைச் சிறையினின்று விடுவித்து விட்டார்கள் என்பதையும், ஈ.வி.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதையும் கேட்க வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தியார் எழுதியிருக்கிறார்.

இப்படி, இறுதிவரைக்கும் போராடினார் தந்தை பெரியார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காந்தியாரோடு இருக்கிறார் பெரியார்.

தந்தை பெரியாரின் உரை பெரியாரிடம் ஆலோசனை செய்துவிட்டுதான் திருவிதாங்கூர் ராணியை காந்தியார் சந்திக்கிறார். கோயிலின் மூன்று பக்கம் முதலில் திறந்து விடப்படுகிறது. இது தொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு பெரியார் தலைமை தாங்குகிறார்.

வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925 இல் நடந்தபோது, அதில் கலந்துகொள்ள பெரியாருக்கும், நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்திப் பேசினார். ‘‘உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்திற்கு ஏற்பட்ட மகிமை என்று தந்தை பெரியார் பேசினார். பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால்கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்” என்று பேசினார் தந்தை பெரியார்.

இந்த வீரம் மிகுந்த போரில் மறக்க முடியாத இரண்டு பெண்கள், பெரியாரின் மனைவி அம்மையார் நாகம்மாளும், அவருடைய தங்கை அம்மையார் கண்ணம்மாளும்!

வைக்கம் போராட்டத்தில் வெற்றிகண்ட தந்தை பெரியாரை அனைவரும் பாராட்டினார்கள்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், “வைக்கம் வீரர்” என்று பெரியாரைப் போற்றினார்!
மூதறிஞர் ராஜாஜி அவர்கள், “தீரரைப் போற்றுகிறது தமிழ்நாடு” என்று எழுதினார்!

இதையெல்லாம்விட புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியது மிக முக்கியமானது. “இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற 1924 இல் திருவிதாங்கூர் மாநிலத்தில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுதான் ‘மகத்’ போராட்டத்தை தொடங்கினார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

”திரு. ராமசாமி நாயக்கர் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். தன் சிந்தனையிலும், செயலிலும் காந்தியத்தைக் கொண்டிருந்தாலும், சமூக மாற்றமே இந்தியாவுக்கு முதன்மையானது என்று உறுதியாக நம்புகிறவர்” என்று 1928 ஆம் ஆண்டு பாராட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

சமூகநீதிப் போராட்டங்களுக்கான
தொடக்கப் புள்ளி!

‘வைக்கம் போராட்டம்’ என்பது, கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி!
அமராவதி கோயில் நுழைவு, பார்வதி கோயில் நுழைவு, நாசிக்-இல் இருக்கும் காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றிற்கு புரட்சியாளர் அம்பேத்கர் முயற்சிகள் காரணம் என்றால், தமிழ்நாட்டில் சுசீந்திரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், மயிலாடுதுறை கோயில், சென்னை திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம்.
ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழ்நாட்டின் பல கோயில்களுக்குள் சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் நுழைய முடிவு செய்தார்கள். இந்த நிலையில்தான், 1939 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, ‘கோயிலுக்குள் வருகிறவர்கள் அனைவரையும் அரசு பாதுகாக்கும்’ என்று உத்தரவாதம் பெறப்பட்டது.
கேரள சமூகச் சீர்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் பல்ப்பு பத்மநாபன் போன்றவர்களும், தமிழ்நாட்டு சமூகச் சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோரும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர்கள் பட்டியல் மிக நீளமானது. தமிழ்நாட்டில் இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம்.

மாபெரும் எடுத்துக்காட்டு
வைக்கம் போராட்டம்!

சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல்வழியிலும், பொரு ளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி, ஏழை – பணக்காரன், ஆண் – பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்.
நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்திப் பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும்!

தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், சிறீ நாராயண குரு, மகாத்மா ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, கார்ல் மார்க்ஸ் என்னிவருடெ ஆஷேயங்களும் சிந்தகளும் ஒரோ வ்யக்தியிலும் எத்திச்சேரணம்.
(தமிழாக்கம்: தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், சிறீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும்.)

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையை…

அதற்காகத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசில் அறிவித்திருக்கிறோம்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்! தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது அந்தப் போராளிகளை போற்றுவதற்காக மட்டுமல்ல! அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச் செல்ல!

ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்!

வைக்கம் ஒரு ஒற்றப்பெட்ட விஜயமல்லா! பின்னீடுள்ள விஜயங்களுடெயும் துடக்கம் ஆயிருன்னு அது! எல்லா மேகலைகளிலும் துடர்ச்சயாய விஜயங்கள் நேடுந்நதினு நமுக்கு உறச்சு நில்க்காம்! எந்து தடசங்கள் வந்நாலும் நம்மள் அவையெ தகர்க்கும்! நம்முடெ ஆதர்ஷங்கள் உயர்த்திப் பிடிக்குந்நதில் நம்மள் விஜயிக்-குகயும்; எந்து வில கொடுத்தும் ஒரு சமத்துவ சமூஹம் ஸ்தாபிக்-குகயும் செய்யும்!

(தமிழாக்கம்: வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்!
அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்! எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்! கொண்ட கொள்கையில் வெல்வோம்! ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்!)
வாழ்க பெரியாரின் புகழ்! வாழ்க பெரியாரின் புகழ்!
நன்றி! வணக்கம்!

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக