புதன், 27 மார்ச், 2024

தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



விடுதலை நாளேடு
Published March 26, 2024

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவோம்!
♦ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம்!
‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்!
தேர்தல் களத்தில் கழகத் தோழர்களின் பங்களிப்பு சிறக்கட்டும்!
தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தமிழர் தலைவர் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் புத்தகத்தை கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

தஞ்சை, மார்ச் 26 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் மதவாத ஒன்றிய பி.ஜே.பி. அரசை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்தி, வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதைக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்றும், தேர்தல் களத்தில் திராவிடர் கழகத் தோழர்களின் பணி சிறப்பாக இருக்கவேண்டும் என்றும் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்த கழகத் தோழர்கள்

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (25.3.2024) மாலை திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் 

தீர்மானம் எண் 2:
மக்களவைத் தேர்தலும் – வாக்காளர்களின் கடமையும்!

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு, ‘‘முன்னேற்றம், வளர்ச்சி” என்ற கோஷத்தோடும், வாக்களித்தால், ‘அச்சே தின்’ ‘நல்ல காலம் மக்களுக்கு பிறக்கும்’ என்ற வாக்குறுதி அளித்தும் பெரும்பான்மை இடங்களை பெற்று ஒன்றியத்தில் ஆட்சிக்கு இருமுறை வந்தது.
கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது.
பொருளாதார மேம்பாடு, ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு என மோடி அரசு அளித்த வாக் குறுதிகள் அனைத்துமே வெற்று அறிவிப் புகளாக, காலவாதியான வாக்குறுதிகளாக இருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் இன்று தெளிவாக உணர்ந்துள்ளார்கள் – கொடு மைக்கும் ஆளாகியுள்ளனர்.

ரூபாய் மதிப்பிழப்பு என்று திடீரென்று அறிவித்து பொருளாதாரமே முற்றிலும் நசிந்து போகும் நிலையை உருவாக்கினார் பிரதமர் மோடி. சிறு குறு, நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டன. இலட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து நடுவீதிக்கு வந்தனர்.

கோவிட் பெருந்தொற்றுப் பிரச்சினையை தவறாகக் கையாண்டதும், தடுப்பூசி என்பதில் நடந்த குழப்பங்களும், பொருளாதாரத் துறை யின் நாசகாரச் செயல்பாடும், பாதுகாப்புத் துறை சாதனங்களை வாங்குவதில்கூட ஏற்பட்ட சந்தேகங்களும், விவசாயிகள் போராட்டத்தை அரசு அணுகிய விதம், பெட்ரோல், டீசல் விலைகளின் செங்குத்தான ஏற்றம் அனைத்துமே, மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்கள் விரோத அரசாகவே தொடர்ந்து நடந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அவமதித்தல், ஜனநாயக மாண்பைக் காலில் போட்டு மிதித்தல், அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள அமைப்புகளின் மாண்பைத் தகர்த்தல், மா நில உரிமைகளை மறுத்தல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக ‘‘போட்டி அரசாங்கத்தை” நடத்துதல், நிதி பங்கீட்டில் ஓரவஞ்சனை என அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு தீவிர போக்கினை மட்டுமே பாஜக அரசு செய்து வந்துள்ளது. ‘‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற பெயரில் நாட்டை ஹிந்துத்துவ மதவாதப் படுகுழியில் தள்ளும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது மோடி அரசு.

‘‘எங்கள் அரசு வெளிப்படைத் தன்மையுடனும், அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும்” எனப் பேசி வந்த பிரதமர் மோடியின் தொடர் நடவடிக்கைகள், அதற்கு எதிர்மாறாகவே உள்ளன. தேர்தல் பத்திரம் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என்பதில் காட்டிய தீவிரம், ‘‘பி.எம்.கேர்” என அரசு விளம்பரத்தோடு நடைபெறும் நிறுவனம் தனியார் அமைப்பு என கூசாமல் தந்திரமாக நடைபெறும் ஓர் அரசாக மோடி அரசு விளங்குகிறது.
தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பின்மூலம் மக்கள் நலன் சார்ந்தும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகநீதி அடிப்படையிலும் எந்த திட்டங்களையும், சட்டங்களையும் பாஜக ஆட்சி செயல்படுத்தவில்லை. மாறாக, முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் பாசிச சித்தாந்தந்தை நடைமுறைப்படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் சட்டங்களை நிறைவேற்றுவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் முத்தாய்ப்பாக விளங்கும் மதசார்பின்மைக் கொள்கையை குழி தோண்டி புதைக்கும் விதமாக, கோயில் கட்டுவதிலும், அதைத் திறப்பதிலும் ஹிந்துத்வா கொள்கையை முன்னெடுக்கும் ஓர் அரசாக மோடி தலைமையிலான அரசு நாளும் நடந்து வருகிறது.

நமது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், நாட்டின் மதசார்பின்மைக்கும், சமூக நீதிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பாசிச பாஜக எதேச்சதிகார ஆட்சியை அகற்றுவது இந்திய மக்களின் இன்றைய இன்றியமையாத கடமையாகும். ஆகவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சியை விரட்டிடவும், இந்தியா கூட்டணிக்கு பேராதரவு தந்து வெற்றி பெற செய்திடவும் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கவேண்டுமென்றும், நாட்டு மக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக திராவிடர் கழகம் முழு மூச்சுடன் களத்தில் இறங்கிப் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3:
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

அறிவாசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2024 நவம்பரில் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு நிறை வடைகிறது.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் உலகம் தழுவிய அளவில் இன்றைய தினம் பெரும் வரவேற் பைப் பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை, சமூகநீதி, இனநலம், மொழி மானம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, பாலியல் உரிமை, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்ம சிந்தனைகளின் செழித்த விளைச்சல் நிலமாகவும், இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித்துவம் மிக்கதாகவும், ‘‘திராவிட பூமி, பெரியார் மண்” என்று கட்சிகளைக் கடந்து பலராலும் ஒப்புக்கொள் ளப்பட்டதாகவும், அரசியலிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும், பார்ப்பன வல்லாண்மையை வேரடி மண்ணோடு வீழ்த்தும் போராயுதமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்றால், அதற்கு வலுவான அடித்தளம் இட்டது தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கமே!

சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகள் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரலாற்றுத் திருப்பங் களாகவும், ஆட்சிகள்மூலம் செயல்படுத்தப்படும் உயரத்தை எட்டின என்பதும் வரலாறு!

ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கும், ‘‘நீதிக் கட்சி” என்றழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்திற்கும் தலைவராக விளங்கி, பிறகு, ‘‘திராவிடர் கழகமாக” பரிணமித்து, இன்றுவரை உயிர்த் துடிப்போடு – தேர்தலில் பங்கேற்காத சமூகப் புரட்சி இயக்கமாக, நாட்டின் அரசியல், சமூக கலங்கரை வெளிச்சமாகவும் செயல் பட்டு வருகிறது.
பிரச்சாரம் – போராட்டம் என்ற இரு விசைகளுடன் சுழன்று சுழன்று தொண்டறம் புரியும் மக்கள் இயக்கமாகவும், அனைத்துத் திராவிட கட்சிகளுக்கும் தாய் என்று சொல்லும் அளவுக்கும், பிற கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் சக்தியாகவும், வரலாறு படைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம் இவ்வாண்டு நவம்பரில் வருகிறது.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் சுயமரி யாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை இவ்வாண்டு இறுதியில் கொண்டாடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
அதற்குள் இயக்கம் இல்லாத பட்டி, தொட்டி, நாடு, நகரங்கள் எல்லாவற்றிலும் நமது கிளைகள் அமைக்கும் பணியை முடித்தாகவேண்டும் என்று கழகத் தோழர் களை, பொறுப்பாளர்களை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 4:
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டுவிழா!

சிந்து சமவெளி என்பது திராவிட நாகரிகம்தான் என்று (பொ.ஆ.மு. (Common Era) BCE 3300-1300) இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த சர்ஜான் மார்ஷல் என்பவர் 1924 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வின் மூலம் உலகறியச் செய்தார்.

‘ஆரியம் – திராவிடம்’ என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் பரப்புரை செய்வதெல்லாம் – ஆரியப் பார்ப்பனர்களின் தந்திரமே என்பது 1924 இல் தொல்லியல் ஆய்வின்மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று உறுதி செய்யப்பட்டது. (‘தினமணி’ ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் இதனை ஏற்கின்றனர்).

1924 இல் பிரகடனப்படுத்தப்பட்ட திராவிட நாகரிகத் தினையும், அதனை ஆய்வின்மூலம் உலகறியச் செய்த சர்ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பையும் வரலாற்றில் நினைவு கூர்வதற்கு அதன் நூற்றாண்டு விழாவினை வரும் டிசம்பரில் சிறப்புடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:
பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது – தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவோருக்குக் கண்டனம்- எச்சரிக்கை!

சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுமென அறிவித் திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஞ்சனி-காயத்ரி என்ற இரண்டு பாடகிகள், டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் பற்றி பாடல் பாடியிருக்கிறார் என்றும், கருநாடக இசையில் சமூகக் கருத்துகளைப் பாடுவதையும் காரணம் சொல்லி, தந்தை பெரியாரைக் குறித்த அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளை யும் தெரிவித்துள்ளனர். அதனையொட்டி மேலும் சில பார்ப்பனக் கோஷ்டிகளும் அவர்களுடன் இணைந்து உள்ளன. பெரியார் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகவும், தந்தை பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே ராகத்தை இசைப் பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பது மிகவும் தெளிவாகிறது.
ஆனால், இப்பிரச்சினையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் மியூசிக் அகாடமியும், அதன் தலைவர் என்.முரளியும் காட்டிவரும் உறுதி பாராட்டுக் குரியதாகும்.
தந்தை பெரியார் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத் தலைவர். அவரை இழிவு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்கவில்லை யெனில், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 6(அ):
கழக செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துதல்!

2023 மே 13 ஆம் தேதியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கழக அமைப்பு முறையிலும், நிர்வாக முறையிலும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கழகப் பணிகள் பல தளங்களிலும் எழுச்சி யுடன் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கழகச் செயல்வீரர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
அடுத்து நாம் சந்திக்க இருப்பது மக்களவைத் தேர்தலாகும். கொள்கை, லட்சியம் என்ற அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தல் என்பது – நமது கழகத் திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகமிக முக்கிய மானதாகும்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்த வகையில் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாகும் என்பதற்கு அவர் பெரிதும் உழைத்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியே தக்க சான்று. இந்தியா கூட்டணியின் வெற்றியே ‘வேற்றுமையில் ஒற்றுமையை’ இந்திய நாடும், நாளை அமையப்போகும் அரசும் தக்க வைக்கவும், கூட்டாட்சி தத்துவத்தோடு, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியாக ஒன்றியத்தில் அமைவதற்கான நல்வாய்ப்பாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெற நமது கழகத் தோழர்கள் முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும், அடுத்து இவ்வாண்டு இறுதியில் காத்திருக்கும் இரு நூற்றாண்டு விழாக்கள் சிறப்புற நடத்துவது என்றும்,
இந்தப் பணிகளுக்கிடையே கழகக் கட்டமைப்புப் பணிகளிலும் கழகப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கழகத் தோழர்களை யும், பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6(ஆ):
தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரைப் பணிகள்

கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நமது சொற்பொழி வாளர்கள்மூலம் பரப்புரை பயணங்களை வாக்காளர் களிடையே போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையில் பொறுப்புடன் நடத்தி, கொள்கைக் கூட்டணிக்கு அச்சாணி போன்று இயக்கவேண்டியது நமது தலையாய கடமையாகும். தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரை பணிகள் அமைக்கப்படல் வேண்டும் என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

ஈரோடு த. சண்முகத்தின் 60ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை ஆதவனின் 68ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை கூறினார். தாராசுரம் இளங்கோவனின் 84ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (தஞ்சை 25.3.2024)

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் – சீரிய எழுத்தாளர் – பேச்சாளர் கடலூர் மானமிகு சு.அறிவுக் கரசு (வயது 84, மறைவு: 22.1.2024), திராவிடர் கழக மேனாள் மாநில மகளிரணி செயலாளரும் கொள்கை வீராங்கனையுமாகிய க.பார்வதி (வயது 77, மறைவு: 8.11.2023), நீண்டகால இயக்க செயல்வீரர், மாவட்ட கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெயராமன் (வயது 82, மறைவு: 22.12.2023), முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கோவை கண்ணன் (வயது 84, மறைவு: 2.1.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கோவையில் பல்வேறு பொது அமைப்புகளில் இருந்து தொண்டறம் பேணிய கோவை ‘வசந்தம்‘ கு.இராமச்சந்திரன் (வயது 98, மறைவு: 24.6.2023), கோவை மாவட்ட மேனாள் செயலாளர், பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி (வயது 67, மறைவு: 4.2.2024).

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் தொண்டர் கு.தாமோதரன் (மறைவு: 9.2.2024), ஆந்திர மாநிலம் பாரத

நாத்திக சமாஜ் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80, மறைவு: 7.2.2024), புதுக்கோட்டை மாவட்டக் கழக காப்பாளர் செயல் வீரர் பெ.இராவணன் (வயது 90, மறைவு: 11.2.2024), திராவிட இயக்க உணர்வாளர் – சிந்தனையாளர் கயல் தினகரன் (வயது 88, மறைவு: 14.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் (வயது 94, மறைவு: 22.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102, மறைவு: 25.2.2024), புழல் தோழர் டி.பி.ஏழுமலை (வயது 71, மறைவு: 24.2.2024), பெரியார் பெருந்தொண்டர் மூக்கனூர் பெருமாள் (ரெட்டியார்) (ஓமலூர் வட்டம்) (வயது 94, மறைவு: 27.2.2024), கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் (வயது 84, மறைவு: 6.3.2024).

அரூர் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மார்க்ஸ் (மறைவு: 11.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிறீரங்கம் எஸ்.எஸ்.முத்து (வயது 93, மறைவு: 13.3.2024), விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் ப.சுப்பராயன் (வயது 71, மறைவு: 18.3.2024), வேலூர் – திமிரி நகர கழக தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76, மறைவு: 20.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு வடிவேலு (வயது 91, மறைவு: 21.3.2024).

புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் – கவிஞர் தமிழ் ஒளி படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற எழுத்தாளர் செ.து.சஞ்சீவி (வயது 94, மறைவு: 20.5.2023), நீடாமங்கலம் நகர கழகத் தலைவர் இர.அமிர்தராஜ் (வயது 82, மறைவு: 21.5.2023), விருத் தாசலம் நகர கழகத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73, மறைவு 25.5.2023), ஜாதி ஒழிப்பு வீரர் – தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91, மறைவு: ஜூன் 2023), சோழங்கநல்லூர் வடகுடி கிளைக் கழகத் தலை வர் த.காமராஜ்(ஜூன் 2023).

சென்னை தியாகராயர் நகர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92, மறைவு: 15.6.2023), இயக்க ஈடுபாட்டாளர் சிங்கப்பூர் அன்னபூரணி நடராசன் (வயது 89, மறைவு: 19.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த உறுப்பினர் இரா.நல்லுசாமி (மறைவு: 21.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த தலைவர் சின்னப்பன் (மறைவு: 21.7.2023), மதுரை பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் (வயது 78, மறைவு: 23.7.2023), இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி (வயது 83, மறைவு: 7.8.2023), பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் (வயது 86, மறைவு: 9.8.2023), கழகக் காப்பாளர் திருச்சி துப்பாக்கி நகர் சோ.கிரேசி (வயது 76, மறைவு: 20.8.2023).

மத்தூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் ப.மங்களதேவி (மறைவு: 23.8.2023), குடந்தை மாநகர கழகத் தலைவர் செயல் வீரர் கு.கவுதமன் (வயது 68, மறைவு: 24.8.2023), கழகப் பற்றாளர் துறையூர் ‘வீகேயென்’ பாண்டியன் (மறைவு: 25.8.2023), சென்னை பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு (வயது 83, மறைவு: 26.8.2023), திருத்தணி ஒன்றிய கழக அமைப்பாளர் கி.சபரி (மறைவு: 29.8.2023), இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி (வயது 54, மறைவு: 4.9.2023), பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் (வயது 93, மறைவு: 4.9.2023).
பகுத்தறிவு இயக்குநர் – நடிகர் தேனி மாரிமுத்து (வயது 56, மறைவு: 8.9.2023), தருமபுரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் புலவர் வேட்ராயன் (வயது 76, மறைவு: 17.9.2023), கடலியல் வரலாற்று ஆய்வாளர், ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் (வயது 60, 6.10.2023), செம்பனார் கோவில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் டி.கனகலிங்கம் (வயது 82, மறைவு 17.02.2024) ஆகிய மறைவுற்ற பெருமக்களுக்கும், சுயமரியாதைச் சுடரொளிகளுக்கும் இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த துயரத்தையும், அவர்களின் அளப் பரிய தொண்டுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் இப்பெருமக்களின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத் தினருக்கும் இப்பொதுக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகத் தோழர்கள், கொள்கை முழக்கமிட்டு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்
சி.அமர்சிங் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (தஞ்சை – 25.3.2024)

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை

விடுதலை நாளேடு
Published March 26, 2024

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு – கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (திராவிடர் கழகப் பொதுக்குழு, தஞ்சை – 25-3-2024)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக