ஞாயிறு, 10 மார்ச், 2024

‘இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் உரிமையும், கடமையும்’ என்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கம்!


விடுதலை நாளேடு

 நிறைவாக தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை

சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று (1.2.2024) நடைபெற்ற ஊர்வலம், கண்டனப்போராட்டத்தில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் ஒத்துழைப் புடன், 22 கழக மாவட்டங்களிலிருந்து கழக மாணவர்கள் சென்னையில் திரண்டனர். நேற்று (1.2.2024) காலை பல்வேறு மாணவர் அமைப்பினர்களுடன் இணைந்து புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான ஊர்வலம், கண்டன போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாணவரணி செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர் பாண்டியன் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் பெருந் திரளாக கலந்துகொண்டனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மன்னார்குடி, கோவை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, சென்னை, அரியலூர், செய்யாறு, ஆத்தூர், கிருஷ்ணகிரி, கோபிசெட்டிப்பாளையம், இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் திராவிட மாணவர் கழகம் சார்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் திடலில்…
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (1.2.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம் வரவேற்றார். திருவாரூர் நர்மதா இணைப்புரை வழங்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் மாணவர் கழக பொறுப்பாளர்கள் உரையாற் றினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் சமூக தளத்தில்…எனும் தலைப்பில் கோவை மேட்டுப்பாளையம் அன்புமதி, அரசியல் தளத்தில் … தலைப்பில் .ஆவடி மாவட்ட மாணவர்கழகத் தலைவர் அறிவுமதி, பண்பாட்டுத்தளத்தில்… எனும் தலைப்பில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
மணிமொழி, சிவபாரதி, ராகுல், இனியன், அறிவுச்சுடர் உள்ளிட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

சமூக தளத்தில்…
சமூக தளத்தில்… தலைப்பில் மேட்டுப் பாளையம் இரா.அன்புமதி உரையில்,
கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் முன்னேறச் செய்ய வேண்டும். சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் மனித சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்வதுதான் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிஜேபி அரசு கல்வி, வேலைவாய்ப்புகளை அடியோடு அடித்து நொறுக்குவதற்கான செயல் திட்டங்களை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.
‘சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது, சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், படிப் பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்று மனுதர்மத்தில் சொல்லி, இதையெல்லாம் செய்தனர். அதன் பிறகு படிப்படியாக கல்வியைக்கொடுத்தது திராவிடர் இயக்கமும், நீதிக்கட்சியும்தான். ஆனால், இன்றைக்கு மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மனுதர்மத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ‘நீட்’, புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா பெயரால் மாணவர் களின் முன்னேற்றத்தைத் தடுத்து சமூக வளர்ச்சியை முடக்குவதற்கானசெயலை இந்த ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருகிறது. ‘நீட்’ என்கிற பெயரால் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்காக அன்று முதல் இன்றும் திராவிடர் இயக்கம்தான் போராடி வருகிறது. நம்மை வழிநடத்தி வருபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.

அரசியல் தளத்தில்…
அரசியல் தளத்தில்…தலைப்பில் ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி.அறிவுமதி உரையில்,
பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்கள், அரசியல் என்றால் பாலிடிக்ஸ் எனக்குப் பிடிக் காது என்று பெருமையாக சொல்கிற காலம். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய காலம் என்பது ஒவ்வொருத்தரையும் அரசியல் படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக் கிறோம். 18 வயது நிரம்பியவர்களாக, படித்தவர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இன்று கல்வி அறிவு பெற்றவர்களின் விகிதம் 50 விழுக்காடாக இருக்கிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன்பு பார்த்தால், 1901இல் ஆங்கிலேய அரசு கணக்கெடுப்பில் தமிழ் நாட்டில் படித்தவர்கள் எண்ணக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழேதான் இருந்தது. அப்படியென்றால் கிட்டதட்ட 99 சதவீதம்பேர் படிக்காமல் இருந்துள்ளனர். அதற்குக் காரணம் படிக்கும் உரிமையைக்கொடுக்காமல் இருந்த காலம். ஆனால், இன்றைக்கு நிலைமை நாம் எல்லாரும் படித்திருக்கிறோம். நாம் பெற்றுள்ள இடஒதுக்கீடு, சமூகப்போராட்டங்களால் நம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
அப்படி இருக்கும் நம்மை திரும்ப பின்னோக்கி இழுத்துச்செல்கிறது பாசிச பாஜக அரசு.அதை நாம் முறியடிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்க் கூட்டம் மாணவர் களிடையே அவர்களுடைய சித்தாந்தங்களை திணித்து வருகிறார்கள். நம்முடைய சித்தாந்தம் திராவிட சித்தாந்தம். அவர்களுடைய சித் தாந்தம் ஆரியசித்தாந்தம்.
திராவிடத்துக்கு எதிரானது ஆரியம். எல் லோருக்கும் கல்வி இன்றியமையாததுஎன்பது திராவிடம். சூத்திரர்- பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கூடாது என்பது ஆரியம்.
அதையெல்லாம் நாம் மீட்டுக்கொண்டு வருகிற வேளையில், அவர்கள் ஹிந்துத்துவா, ஹிந்துராஜ்ஜியம் என்ற மதவெறியுடன் நம்மைத் திரும்பவும் பழைய நிலைக்கே அனுப்பப்பார்க்கிறார்கள். அரசியல் மாற்றத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பண்பாட்டுத்தளத்தில்…
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் உரையில், ஆரிய பண்பாட்டுப்படையெடுப்பாலேயே தீபாவளி, தமிழே இல்லாத ஆண்டுகளை தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியப் பண்பாட்டைத் திணித்து வருகிறார்கள். தமிழில் பெயர் சூட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். நம்முடைய பண்பாட்டை மீட்டெடுக்க கழகத்தில் நாம் பயணிக்க வேண்டும். நம் எதிரிகள் என்றால் மனுதர்மம், ராஜாஜி, இன்று பிஜேபி மோடியாக இருக்கிறது என்றால், சித்தாந்த எதிரியாக இருக்கிறார்கள். குலக் கல்வியைக் கண்டு கொதித்தெழுந்த தந்தை பெரியார் அதனை முறியடித்து வெற்றி பெற்றார். கத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெட்ரோலையும், தீப்பந்தத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லும்போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்றார் பெரியார். தேவாசுரப்போராட்டம் என்றார் ராஜாஜி. ஆரிய – திராவிடப் போராட்டம் என்று சொன்ன தந்தைபெரியார் வென்றார். குலத்தொழிலை வலியுறுத்திச் சொல்கின்ற ஆரியம் நாம் படிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறது. ஸநாதனம், நீட், புதிய கல்விக்கொள்கை, விஸ்கர்ம யோஜனா என்று இன்றைக்கும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடப்போராட்டத்தில் நாம் வென்றெடுக்க தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பணியாற்ற வேண்டும். அதன் மூலம் கல்வி, பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் உரையில்
பொழுதுபோக்குகின்றவர்கள் மத்தியில் கல்வி உரிமை காப்போம், புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம் என்று சுமார் 22 மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வந்துள் ளீர்கள். மாணவர்கள், பெற்றோர்கள், கழகப்பொறுபபாளர்களுக்கு பாராட்டு. அடுத்த தலைமுறைமீது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. திராவிடர் கழகம் எனும் முத்திரை பதித்துள்ளீர்கள். கழகத்தைத் தவிர வேறு எங்கும் இதுபோன்று களத்திற்கே செல்லும் வாய்ப்பு, பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நம்முடைய இயக்கத்தில்தான் 38 இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. 2761 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 1599 பேர். பெண்கள் 1162 பேர் புதிதாக இயக்கத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
பலகைகளில் எழுதுவது, சுவர் எழுத்துப் பிரச்சாரங்கள் என்பது கழகத்தால் தொடர்ச் சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பிரச் சாரங்கள் தற்பொது தொழில்நுட்பத்துடன் இணையத்தில் சமூக ஊடகங்களிலும் தொடர்கின்றன.
தற்பொழுது 13 லட்சத்துக்கும் மேற் பட்டவர்கள் புதிய வாக்காளர்களாக உள்ளனர். அவர்களிடம் இந்த உணர்வைக் கொண்டு செல்ல வேண்டும். ‘விடுதலை’ செய்திகளை எடுத்து பரப்பவேண்டும். அமைதிப் புரட்சியாக செயல்பட வேண்டும்.
‘நீட்’ குழப்பங்கள், படிக்கும் போதே பாதியில் இடையில் நின்றுபோகிறவர்கள் என 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசால் என்னவெல்லாம் நடந்துள்ளது என்று அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவாக சிறப்புரை ஆற்றினார்.
மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோ ருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி நன்றி கூறினார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக