ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மத்தியப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியைப் பின்பற்றாததைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் சிறப்புரை


 நாம் போராடுவது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; 
துண்டை ஏந்தி, ‘அய்யா கொஞ்சம் கவனியுங்கள்' என்று கெஞ்சிக் கேட்கவேண்டியதில்லை
நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்; 
சட்டப்படியாக இருக்கின்ற உரிமையைக் கேட்கிறோம்

1

சென்னை, ஆக.13  நாம் போராடுவது என்பது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை ஏந்தி, அய்யா கொஞ்சம் கவனியுங்கள் என்று கெஞ்சிக் கேட்க வேண்டியதில்லை; நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்; சட்டப்படியாக இருக்கின்ற உரிமையைக் கேட்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (12.8.2023) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மத்தியப் பல்கலைக் கழகங்களில் சமூகநீதி பின்பற்றப்படாதததைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சமூகநீதிக் குரல்

ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சார்ந்த பெண்கள் உள்பட அனைவரும் படிக்கட்டு ஜாதிமுறையின்கீழ் காலங்காலமாய் அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, அதன் காரணமாக, உத்தியோகம் வகிப் பதற்குத் தகுதியற்றவர்களாக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையைப் போக்குவதுதான் சமூகநீதிக் குரல் என்பதாகும்.

அந்த சமூகநீதிக் குரலைத்தான் திராவிடர் கழகம் ஒலிக்கப் பிறந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

அந்த சமூகநீதிக் குரலுக்காகத்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், காஞ்சிபுரத்திலிருந்து காங் கிரஸ் தேசிய பேரியக்கத்திலிருந்து வெளியேறி, தனித்த ஒரு சுயமரியாதை இயக்கத்தையே  அவர்கள் உருவாக் கினார்.

நிரந்தரமான அடிக்கட்டுமான சமூகநீதிக்கான மாளிகை!

வகுப்புரிமைக்காகப் போராடிய  நீதிக்கட்சி, வகுப் புரிமை ஆணையை நிறைவேற்றிய நிலையிலும்கூட, அதனை நினைத்துப் பார்க்காத நன்றி மறந்த நம்முடைய மக்கள், வழக்கமாக தங்களுக்கான குழியை தாங்களே தோண்டிக் கொண்டதைப்போல, நீதிக்கட்சியை அவர் கள் தோற்கடித்தாலும், அவர்கள் எழுப்பிய மாளிகையை எவராலும் இடித்துத் தள்ள முடியவில்லை. அதுதான் நிரந்தரமான அடிக்கட்டுமான சமூகநீதிக்கான மாளிகை யாகும்.

அதிலேதான் நம்முடைய வாய்ப்பற்ற மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள் பயன் பெற்றனர். அப்படிப்பட்ட மக்களுக்காக நூறாண்டையும் தாண்டி, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு - திராவிடர் கழகம் வேகமாக விரைந்து வேலை செய்த நேரத்தில், முதல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது - வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொன்ன காரணத்தினால்.

தந்தை பெரியாரால் இந்தியா முழுமைக்கும் கிடைத்தது!

அதன் காரணமாகத்தான், சென்னை மாகாணம் என்று சொல்லப்பட்ட சென்னை ராஜதானி - நீதிக்கட்சியால் உருவாக்கப்பட்ட, ஒரு மாநிலக் கட்சியால் உருவாக்கப்பட்ட அந்த சமூகநீதிச் சட்டம் - அதனுடைய விழுமிய பயன் இந்தியா முழுவதற்கும் கிடைக்கச் செய்த பெருமை - தந்தை பெரியார் என்ற பேரா சானுடைய கடுமையான போராட்டத்தின் மூலமாகத் தான் இந்தியா முழுமைக்கும் கிடைத்தது.

பல பேருக்கு இந்தியாவைத் தெரியுமே தவிர, சமூகநீதியைத் தெரியாது.

ஆனால், சமூகநீதியை இந்தியாவிற்கே தெரிவித்த பெருமை திராவிடர் இயக்கம் - அதனுடைய பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கே உரியதாகும்!

தனித்த வரலாறு படைத்தது இந்த இயக்கம்!

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு தனித்த வரலாறு படைத்த இந்த இயக்கம் - இன்றைக்கு இந்தக் கிளர்ச் சியை செய்கிறது.

இந்தக் கிளர்ச்சிக்கு வயது இடைவெளி இல்லை. வயது குறுக்கீடு இல்லை என்பதற்காகத்தான் - நானே தலைமை தாங்கக் களத்திற்கு வருகிறேன் என்று சொன்னேன்.

களத்திற்கு வருவதற்கு இராணுவத்தில்கூட வயது கட்டுப்பாடு உண்டு. ஆனால், பெரியாரின் இராணுவமோ வயது கட்டுப்பாடு இல்லாத ஒரு இராணுவம்.

அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், 95 வயதைப் பெற்ற ஒருவர், தன்னுடைய இறுதி நாள்களில் ஜாதி ஒழிப்பிற்காக, தீண்டாமை ஒழிப்பிற்காக அவர்கள் களமிறங்குவேன் என்று சொல்லி, களத்தில் நின்று, களமாடி, அந்தக் களத்தினுடைய ஆயுதத்தை, சுடரை நம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார். அந்தச் சுடரை நாங்கள் கைகளில் ஏந்தி வந்து, உங்களை நாங்கள் சந்திக்கின்றோம்.

எவையெல்லாம் நம்மை அழுத்துகிறதோ, எவை யெல்லாம் நம்மை தாழ்த்துகிறதோ, எவையெல்லாம் நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்றதோ, அவற்றை யெல்லாம் மீட்டுத் தரக்கூடிய பொறுப்பு நமக்கு உண்டு.

மனிதர்களுக்கு சம வாய்ப்பு வேண்டும் - சமத்துவம் வேண்டும்

ஏனென்றால், மானமும், அறிவும் மக்களுக்கு அழகு என்று சொன்ன தந்தை பெரியார் - அந்த மானமும், அறிவும் அழகு என்று சொன்னதோடு மட்டுமல்ல - மனிதர்களுக்கு சம வாய்ப்பு வேண்டும் - சமத்துவம் வேண்டும் என்று சொன்னார்.

அதற்காகத்தான் சமூகநீதி, சமூகநீதி என்றார். 

என்னுடைய ஒரே அளவுகோல்: தந்தை பெரியார்!

‘‘நான் எத்தனையோ ஆளுங்கட்சிகளை ஆதரித்திருக்கிறேன்; எதிர்த்திருக்கிறேன்; உற் சாகப்படுத்தி இருக்கிறேன்; கண்டித்திருக்கிறேன். ஆனால், அதற்கு ஒரே ஒரு அளவுகோல்தான், அவர்கள் சமூகநீதியாளர்களா, இல்லையா? என்பதுதான் என்னுடைய ஒரே அளவுகோல்'' என்று சொன்னார்.

அந்த அடிப்படையில்தான் நண்பர்களே, இந்தப் போராட்டம் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு வரவேற்புரையாற்றி, மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்துள்ள தென்சென்னை மாவட்டத் தலைவர் மானமிகு தோழர் இரா.வில்வநாதன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மாநில ஒருங்கிணைப் பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே, ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, சே.மெ.மதிவதனி அவர்களே, 

தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர் செல்வம் அவர்களே, தே.சே.கோபால் அவர்களே, காஞ்சி. கதிரவன் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே, திண்டிவனம் இளம்பரிதி அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் கண்டன உரையாற்றிய பெருமதிப்பிற்குரிய கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே, கழகப் பிரச்சார செயலாளர் தோழர் அ.அருள்மொழி அவர்களே,வெளியுறவுத் துறைச் செயலாளர் தோழர் சமூகநீதிப் போராளி கோ.கருணாநிதி அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்கக்கூடிய அனைத்துத் தோழர்களே, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களான வழக்குரைஞர் தளபதி.பாண்டியன் அவர்களே, புரசை சு.அன்புச்செல்வன் அவர்களே, மோகன் அவர்களே, ஒளிவண்ணன் அவர்களே, தாம்பரம் ப.முத்தையன் அவர்களே, நாத்திகன் அவர்களே, வீரபத்திரன் அவர்களே, உத்தமன் விஜய் அவர்களே, கார்வேந்தன், இளவரசன் அவர்களே, புழல். ஆனந்தன் அவர்களே, ஜெயபாஸ்கர் அவர்களே, இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கின்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய செ.ர.பார்த்தசாரதி அவர்களே,

அனைத்துத் தோழர்களே, ஊடக நண்பர்களே, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குமுன் இங்கே உரையாற்றிய அத்துணை தோழர்களும் அருள்மொழி உள்பட மிகத் தெளிவாக உங்களுக்கு இந்தப் போராட்டத்தினுடைய நோக்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.

இதனால் எங்களுக்கு என் பயன்?

இதனால் பயன்பட வேண்டியவர்கள் யார்?

எங்களுடைய பிள்ளைகள் மட்டும்தானா?

திராவிடர் கழகத்துக்காரர்களுக்கு மட்டும்தான் இந்தப் போராட்டமா?

அருள்கூர்ந்து நினைத்துப் பாருங்கள் - எந்தக் கட்சியைச சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்து இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கொண் டிருப்பவர்களாக இருந்தாலும், அத்துணை பேருக்காக வும்தான் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக் கின்றோம்.

நாங்கள் பத்தியத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம்; போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்!

நீங்கள் மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் - நாங்கள் குடை பிடிக்கின்ற வேலையை செய்துகொண்டிருக்கின்றோம்.

உங்களுக்கு நோய் வரக்கூடாது என்பதால்தான், நாங்கள் பத்தியத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம்; போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். அதை நீங்கள் எண்ணிப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.

எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்!

ஒரு தாய், எப்படி தன்னுடைய குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுபோல, திராவிடர் கழகம் என்கிற தாய்,  கருத்து வேறுபாடில்லாமல், அவர்கள் எவ்வளவுதான் எங்களை எட்டி உதைத்தாலும், எவ்வளவுதான் எங்களை அலட்சியப்படுத்தினாலும், எவ்வளவுதான் எங்களைக் கேவலப்படுத்தினாலும், எவ்வளவுதான் எங்களுக்கு எதிர்ப்புக் காட்டினாலும், புரியாத அந்தக் குழந்தையினுடைய அன்பிற்குரிய தாய்போல, எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் தோழர்களே!

இந்த உரிமைகள் எப்படி வந்தன?

நிரப்புங்கள், நிரப்புங்கள், நிரப்புங்கள் இடம் காலியாக இருக்கின்றன என்று இன்றைக்குக் கேட்கிறோம். இது அடுத்த கட்டம்.

நிரப்புவதற்கு முன்பு, கதவு திறந்து இருந்ததா? கதவு திறந்தது எப்படி? வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்.

திராவிடர் கழகத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!

முதலில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு கிடையாது. எஸ்.சி., எஸ்.டி., என்று சொல்லக்கூடிய பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்முடைய சகோதரர்கள். யார் அடித் தளத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் முதலில் கைகொடுக்கவேண்டும். மேலே இருக் கின்றவன், அடுத்த படிக்கட்டில் இருப்பவர்கள் விரைவில் மேலே வருகிறார்கள். இதுதான் திராவிடர் கழகத்தினுடைய அடிப்படைத் தத்துவம்.

எனவே, எஸ்.சி., எஸ்.டி., என்று சொல்லக்கூடிய அந்த மக்களுக்கு எதன் காரணமாகக் கொடுத்தார்கள்? உரிமைகளைக் கொடுப்பதாகச் சொன்னார்களே தவிர, அதற்குக் காரணம் அன்றைக்கு அண்ணல் அம்பேத்கர் - புரட்சியாளர் அம்பேத்கர் - அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தார்.

தந்தை பெரியாரின், இந்த இயக்கமே ஒடுக்கப் பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தது.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்பொழுது மிக சாமர்த்தியமாக என்ன செய்தார்கள் என்றால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு நாங்கள் கொடுக்கிறோம், எண்ணிக்கை விதமாக என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆரிய மாயை - ஆரியத்தினுடைய தந்திரம்!

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில் ஏதோ பெரிய அளவிற்குப் பயனை நாம் அடைந்துவிட்டோம் என்கிற உணர்ச்சியை, அவர்களுக்கு மேலெழுந்த வாரியாக ஊட்டினார்கள்; நடைமுறையில் அதை செயல்படுத்தினார்களா என்றால், இல்லை. இதுதான் ஆரிய மாயை - ஆரியத்தினுடைய தந்திரம்! 

‘‘தந்திர மூர்த்தி போற்றி! 

தாசர்தம் தலைவா போற்றி!''

என்று சொன்னதுபோன்று, தந்திரங்களிலே அவர்கள் வருவார்கள்.

அவர்கள் கொடுத்தார்களே தவிர, எண்ணிக்கை இருந்ததே தவிர, அந்த இடங்கள் நிராகரிக்கப்படவில்லை.

எப்பொழுது புரிய வைத்தார்கள்?

இதுதான் சமூகநீதியினுடைய தனித்தன்மை; நம்முடைய போராட்டத்தினுடைய தனித்தன்மை.

மண்டல் ஆணைய அறிக்கையிலேயே அதைத் தெளிவாக எழுதினார் மண்டல் அவர்கள்.

முதல் கமிஷன் அறிக்கையில் பார்ப்பனர்களைப் போட்டார்கள்; அகில இந்திய கட்சி என்று சொன்னாலே, அதனுடைய தத்துவம் அதுதான்.  மண்டல் அறிக் கையைப் பார்க்கவேயில்லை.

ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தானே என்று மற்றவர்கள் அலட்சியமாக நினைத்தார்கள்.

அடியில் இருப்பவர்கள் மேலே வரவேண்டும் என்றால்,  அவருக்கு மேலே இருப்பவரை இழுத்துவிட வேண்டும்.

ஆகவே, கிரேடேட் இன் இக்வாலிட்டி என்று இருக்கக்கூடிய வகையில்தான், மண்டல் ஆணையம் அந்தப் பணியை செய்தது. அதிலே அவர்கள் புரிதலோடு கொடுத்தார்கள். அதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 23 சதவிகிதம்; அதுதான் முன்னுரிமை!

மண்டல் அவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதத்தைப் பரிந்துரை செய்தார்.

மண்டல் அவர்களின் மிகத் தெளிவான அறிக்கை

நம்முடைய சகோதரர்கள் ஜாதிப் பெருமையைக் கிளப்பிவிட்டு, ஒடுக்கப்பட்டோர் மத்தியிலேயே குறுக்கே ஒரு கோடு போட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒரு பெரிய போராட்டம். இவர்களுடைய உரிமையை அவர்கள் எடுக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தைக் கொடுத்த நேரத்தில்தான், மண்டல் அவர்கள் மிகத் தெளிவான அறிக்கையைக் கொடுத்தார்.

52 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று பரிந்துரை. ஆனால், அன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்ததினால், அர சமைப்புச் சட்டம் வரையறுக்காத ஒன்றை, அவர்களே வரையறுத்துக் கொண்டார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் இல்லை!

50 சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று, பாலாஜி வழக்கு என்று ஒரு வழக்கைப் போட்டார்கள். ஆனால், எத்தனை சதவிகிதம் இருக்கவேண்டும் என்று எந்த இடத்திலும் அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. ஆனால், அதுபற்றி யாரும் வாய்த் திறக்கவில்லை.

அரசமைப்புச் சட்டப்படித்தானே இட ஒதுக்கீட்டைக் கேட்கிறோம். ஏனென்றால், இட ஒதுக்கீட்டை உருவாக்குவதற்காக முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை தந்தை பெரியார், இந்தியாவிற்கே உருவாக்கி அந்தப் பயனைக் கொடுத்தார்.

யாருக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்?

அடுத்தக் கட்டத்திற்குப் போகவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அடுத்தக் கட்டத் திற்குப் போன நிலையில் என்ன செய்தார்கள் என்றால், 52 சதவிகிதம் என்று பரிந்துரை செய்தாலும், 50 சதவிகிதத்திற்குமேல் போகக் கூடாது என்று இருக்கின்ற காரணத்தினால், என்ன செய்யவேண்டும். யாருக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்?

முதலில் அடியில் உள்ளவரை மேலே தூக்க வேண்டும்; எஸ்.சி. எஸ்.டி., என்று சொல்லக்கூடிய பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

நாம் தாழ்ந்தவர்கள் அல்ல; தாழ்த்தப்பட்டவர்கள். நாம் பின்தங்கியவர்கள் அல்ல; பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில் பசியேப்பக்காரர்களை பந்தியில் அமர வையுங்கள். அவர்களுக்கு எத்தனை சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது?

23 சதவிகிதம். 15+7 = 23 சதவிகிதம்.

மண்டல் அவர்கள் எங்களையெல்லாம் கலந்து ஆலோசித்துத்தான் அந்தப் பரிந்துரையை செய்தார்.

50 சதவிகிதத்தில் முதல் உரிமை - எஸ்.சி., எஸ்.டி.,க்குத்தான்!

சட்டப்படியே போவோம் - முதலில் மெதுவாகக் கதவு திறக்கட்டும்; பிறகு, அகலமாகக் கதவைத் திறப்போம் என்று சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டு, எப்படி பரிந்துரைத்தார் அவர்? 50 சதவிகிதத்தில் முதல் உரிமை - எஸ்.சி., எஸ்.டி.,க்குத்தான்.

50 சதவிகிதத்தில் 23 சதவிகிதத்தைக் கழித்தால், 27 சதவிகிதம். ஆக, 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு என்று வந்தது. அது எப்படி வந்தது? யாருக்கு முதலில் முன்னுரிமை கொடுத்தது என்றால், ஏற்கெனவே இருப்பவர்களுக்கு உறுதியானது.

ஆனால், அவர்களுக்காவது 23 சதவிகிதம் கொடுத் திருக்கிறார்களா என்றால், அதுவரை கொடுத்ததே கிடையாது. அதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

4 சதவிகிதம், 5 சதவிகிதம், 2 சதவிகிதம் - அதிலும், கிளாஸ் ஒன்  ஆபீசர் என்று சொல்லக்கூடிய மேல் நிலையில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே கிடையாது. பட்டை நாமம்தான். ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம் என்றுதான் இருந்தது.

இதே புள்ளி விவரம் - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிலைதான். அதையேதான் இப்பொழுதும் நாம் சொல்கிறோம்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

ஆகவேதான், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், வராது வந்த மாமணியமாக நமக்குக் கிடைத்தார். இட ஒதுக்கீட்டிற்காகவே அவர்கள் பிரதமர் பதவியை இழந்தார். ‘‘நான் எத்தனை முறை வேண்டுமானாலும், இதற்காகப் பிரதமர் பதவியை இழப்பேன்'' என்று சொன்னார்.

அவர்தான் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால், கல்வித் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியவில்லை.

காரணம் அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால், மத்தியப் பல்கலைக் கழகங்கள், ஒன்றிய அரசுப் பணிகளில் எல்லாம், கல்வியிலிருந்து வந்தால் தானே, வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், நிறைய நம்மாட்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; முதலில் அவர்களுக்கு வேலை கிடைக்கட்டும்; அதற்கு இட ஒதுக்கீட்டை முதலில் செய்வோம். ஆனால், அதற்கே எதிர்ப்பைக் காட்டினார்கள். பிறகு நாம் போராடி, வெற்றி பெற்றோம்.

அதற்கு அடுத்தக்கட்டமாக நாம் சும்மா இல்லை. உடனடியாக கல்வியில், மத்தியப் பல்கலைக் கழகங் களில், மாநிலங்களில் உள்ளதைப்போல வரவேண்டும் என்று சொன்னோம்; அதற்காகப் போராடிக் கொண் டிருந்தோம்.

93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

அன்றைக்கு நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்கள், தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச் சராகவும், ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தவுடன், தொடர் போராட்டத்தின் காரணமாக மிக முக்கியமான வாய்ப்பு ஏற்பட்டது. மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆனாலும், அய்.அய்.டி. ஆனாலும், அய்.அய்.எம்.எஸ். ஆனாலும், மத்திய கல்வி நிறுவனங்களானாலும், கல்வி நிலையங்களாலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லி, அதற்காக ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தமே கொண்டு வந்தோம். 

அந்தத் திருத்தத்திற்குப் பெயர்தான் 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்.

நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்!

அதன்படி, சட்டப்படி நமக்கு உரிமை இருக்கிறது. இப்பொழுது நாம் போராடுவது என்பது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை ஏந்தி, அய்யா கொஞ்சம் கவனியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கவேண் டியதில்லை; அவர்கள் என்னவோ எஜமானர்கள் என்று கருதிக்கொண்டு, நாம் ஏதோ சாதாரண அடிமையாக நம்மைக் கருதிக்கொண்டு இதைக் கேட்கவில்லை. நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்; சட்டப்படியாக இருக்கின்ற உரிமையைக் கேட்கிறோம்.

இது தெரியாமல், நம்மாள் ஜாதி சங்கத்திற்குப் போறானே தவிர, அதனால் அவனுக்கு  இருக்கக்கூடிய உரிமைகளைக் கேட்பதற்கு வாய்ப்பில்லை. மத்திய அரசுப் பல்கலைக் கழகங்களில் சம்பளம் அதிகம். மத்திய பல்கலைக் கழகம் என்றால் யார்? அதற்கு வேண்டிய நிதியை தனியே மோடி கொண்டு வந்து போடுகிறாரா? அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிதியிலிருந்து நடைபெறுகிறதா? அது நம்முடைய வரிப் பணம் அல்லவா!

வருவதற்குப் போராடி கொண்டு வருகிறோம். ஆனால், வந்த பிறகு, அது யாருக்குப் பயன்பட வேண்டும்?

8

நாங்கள்தான் போராடி அதில் வெற்றி பெற்றோம்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காகப் போராடு கிறோம்; போராடி வந்த பிறகு, வடமாநிலமான அசாம் மாநிலத்திற்கு ராயல்டி கொடுக்கிறீர்கள்; தமிழ்நாட்டிற்குக் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள். அதற்காக நாங்கள் தான் போராடி அதில் வெற்றி பெற்றோம். அந்தப் பணத்தை நாங்களா வாங்கிக் கொண்டிருக்கின்றோம்; தமிழ்நாடு அரசுதான் வாங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்; ஆனால், அவர்கள் மாதம் தோறும் ராயல்டி வாங்குகிறார்களே, அதனைச் செய்தது திரா விடர் கழகம். அதற்காகப் போராடியது திராவிடர் கழகம்.

ஒருமுறை கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது, அவரிடம் கேட்டேன், ‘‘என்னங்க, ராயல்டி எவ்வளவு வருகிறது?'' என்றேன்.

‘‘நீங்கள் எல்லாம் சுவற்றில் எழுதி, எழுதி, போராடி பெற்று தந்தீர்கள். அடுத்து நிதி பற்றாக்குறை என்றால், அடுத்த ஆண்டிற்கான ராயல்டியையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறோம்; அது எங்களுக்குப் பயன்படு கிறது''  என்றார்.

‘‘நீங்கள் ராயல்படி வாங்குகிறீர்கள்; எங்களுக்கு சிங்கிள் டீ கூட கிடையாது'' என்று வேடிக்கையாக நான் சொன்னேன்.

சிரித்துக் கொண்டார் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு மத்தியப் பல்கலைக் கழகங்களில் என்ன சூழ்நிலை என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

இங்கே அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கள்; பத்திரிகையிலும் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், 45 மத்திய பல் கலைக் கழகங்கள் இருக்கின்றன. அதில், இட ஒதுக்கீடு என்பதில் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு உள்ள நிலை என்ன?

மீதமுள்ள 93 சதவிகிதத்தை யார் சாப்பிட்டது?

டீச்சிங் அண்ட் நான் டீச்சிங் ஸ்டாஃப் என்று சொல் லும்பொழுது 7 சதவிகிதம்தான் எஸ்.டி., சமுதாயத்தின ருக்குக் கிடைத்திருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது 100 சதவிகிதம்; அப்படியானால், மீதமுள்ள 93 சதவிகிதத்தை யார் சாப்பிட்டது?

அதேபோன்று, எஸ்.டி., சமுதாயத்தினருக்கு 2 சத விகிதம்தான் கிடைத்திருக்கிறது; அவர்களுக்கு ஏழரை சதவிகிதம் சட்டப்பூர்வமாகக் கிடைக்கவேண்டும். ஆனால், ஆயிரக்கணக்கான பதவி இடங்கள் பறி போயுள்ளது.

ஆனால் அதேநேரத்தில், உயர்ஜாதியில் ஏழை களுக்கு 10 சதவிகிதம் என்று புதிதாகக் கொண்டு வந்தார்களே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக - அவர்களுக்கு உரியது 3 சதவிகிதம்.

உயர்ஜாதியில் ஏழை என்று சொல்கிறார்களே, அந்த ஏழைகள் யார்? ஒரு நாளைக்கு 2,224 ரூபாய் சம்பாதிப்பவர்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு ஆளாவது சென்றிருப்பீர்களா?

ஒரே ஒரு கேள்வி கேட்டோம் நாங்கள் - உயர்ஜாதி ஏழைகள் 10 சதவிகிதம் என்று சொல்லி ஏமாற்றுகிறீர்களே, அந்த ஏழைகளில், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு ஆளாவது சென்றிருப்பீர்களா? மண்வெட்டி தூக்கியிருப் பார்களா? கடப்பாரை தூக்கி இருப்பார்களா? என்று கேட்டோம்.

இவர்களைப் பொறுத்தவரையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. நான்கரை சதவிகிதம்தான். ரத்தம் கொதிக்கிறதே! இவ்வளவு நாள் போராடிய பிறகும், வெற்றி பெற்ற பிறகும் இந்நிலையா?

நாணயம் இருக்கிற, ஒழுக்கம் இருக்கிற, திறமை இருக்கிற, நேர்மை இருக்கிற ஓர் அரசாங்கமாக இருந் தால், ஒரு ஒன்றிய அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? சட்டப்படி நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம் - அதற்கு திறந்தப் போட்டி இருக்கிறது; அதில் உங்கள் திறமையை முழுவதும் காட்டலாமே? நிறைய அளவிற்கு வரலாமே?

பேராசிரியர் பதவிக்கு சம்பளம், கொள்ளை சம்பளம் மத்தியப் பல்கலைக் கழகங்களில். ஒரு மாநில அரசு அதுபோன்று கொடுக்க முடியாது.

மற்றவர்களால் தனியார்த் துறையில்கூட அது போன்று சம்பளம் கொடுக்க முடியவில்லை.

அவர்களுக்குக் கொடுக்கவேண்டியது நூறு சதவிகிதம்; ஆனால், கொடுக்கப்பட்டது ஏழு சதவிகிதம் என்றால், மிக முக்கியமாக 23 சதவிகிதத்தில், 13 சதவிகிதம்தான் நிரப்பப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், ஒரு உதாரணத்திற்கு, உங்களுக்கு விளக் குவதற்காகச் சொல்கிறேன் - 10 சதவிகிதம் மீதம் உள்ளது.

மூன்று ஆண்டுகள்வரை காத்திருக்கலாம்!

மண்டல் அறிக்கை பரிந்துரைப்படி, இட ஒதுக்கீட்டில், போதுமான அளவிற்குத் தகுதி உள்ளவர்கள், அவர்கள் வைத்திருக்கின்ற அளவீட்டுப்படி அலுவலர்கள் வர வில்லை என்றால், மூன்று ஆண்டுகள்வரை காத்திருக் கலாம்.

ஏனென்றால், வாய்ப்பில்லாத சமூகம் - ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகம்; பல பேர் முதல் தலைமுறையாக இப்பொழுது தான் படிக்கிறார்கள்.

இந்த ஆண்டு நிரப்பவில்லை என்றால், மூன்று ஆண்டுகள் காத்திருந்து அந்தப் பணியிடங்களை நிரப்பவேண்டும். அப்படி செய்தால், அவர்களுக்கே அந்த இட ஒதுக்கீடு சதவிகிதம் கிடைக்கும்.

ஆனால், அவர்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் அத்துணை பேருடைய இடங்களும் காலியாக இருக்கின்றன அல்லவா  - அதை யாரைக் கொண்டு நிரப்புகிறார்கள் என்றால், உயர்ஜாதிக்காரர்களைக் கொண்டுதான்.  அதுதான் அவர்களுடைய தந்திரம்.

நமக்குக் கிடைக்கவேண்டிய உரிய சதவிகிதம்கூட கிடைக்கவில்லை!

300 சதவிகிதம் அவர்களுக்குக் கிடைக்கிறது. நமக்குக் கிடைக்கவேண்டிய உரிய சதவிகிதம்கூட கிடைக்கவில்லை. ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைவிட, மூன்று மடங்கு, அய்ந்து மடங்கு அதிகமாகக் கிடைக்கிறது. இதைவிட கொடுமையான சமூகநீதி வேறு இருக்க முடியுமா?

வீட்டிற்கு வீடு இந்தப் புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.

கலைஞர் அரும்பாடுபட்டு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம் வரவேண்டும் என்று முயற்சி செய்தார். அப்படி வந்தாலும், துணைவேந்தராகக்கூட நம்மாட்கள் வர முடியாத அளவிற்கு இருக்கிறது.

45 மத்திய பல்கலைக் கழகங்களில், ஒரே ஒரு எஸ்.சி., சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் துணைவேந்தராக இருக்கிறார்.  அதுவும் நாங்கள் நீண்ட நாள்கள் போராடிய பிறகுதான். அங்கே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அட்டை வைத்திருந்தால்தான் உள்ளே விடுவார்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறீர்களா?’’

வடநாட்டில் எங்களோடு சமூகநீதிக்காகப் போராடி யவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். அவர் காசிப் பல்கலைக் கழகத்திற்கு, மற்ற பல்கலைக் கழகத்திற்குப் போகவேண்டும் என்றவுடனே, 

‘‘ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அட்டை வைத்திருக் கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

‘‘என்னிடம் இல்லை'' என்றார் அவர்.

‘‘அப்படியானால், உறுப்பினர் அட்டை கொடுக்கச் சொல்கிறோம், வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்றார்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அட்டை வாங்கித்தான் நான் அந்தப் பதவிக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனக்கு அந்தப் பதவி வேண்டாம்.'' என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். 

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மண்டல் கமிசனுக்காகப் போராடியவர் அவர்.

ஒரே ஒரு எஸ்.சி., ஒரே ஒரு எஸ்.டி., ஊறுகாய் போன்று வைத்திருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 5 இடங்களில்.

தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும்...

எதற்காக இந்தச் செய்தியைச் சொல்கிறேன் என்றால், செய்தியாளர்கள்மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும், உங்கள் மூலமாகவும், தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும் இதுபோன்ற பிரச்சாரங்களை செய்யவேண்டும்.

ஒன்றியத்தில் உள்ள மோடி ஆட்சி மீண்டும் வரக் கூடாது; ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை விரட்டியடிப்பதற்கு ஆறே மாதங்கள்தான் இருக்கின்றன என்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நண்பர்களே, இதுதான் காரணம்.

நம்மாட்களில் துணைவேந்தர்களுக்கு என்ன அறிவுப் பஞ்சமா? நம்மாட்கள் படிக்கவில்லையா?

45 இல் 38 பேர் - இவர்கள் யார்?

மத்தியப் பல்கலைக் கழகங்களில் 45 துணை வேந்தர்களில் ஒரே ஒரு எஸ்.டி., ஒரே ஒரு எஸ்.சி., பிற்படுத்தப்பட்டவர் 5.

45 இல் 7 பேரை கழித்துவிட்டால், மீதி 38 பேர். இவர்கள் யார்?

அவ்வளவும் பார்ப்பனர்; அல்லது பார்ப்பனர் களுக்குப் பக்கத்தில் உள்ள ஜாதி.

இது என்ன கொடுமை?

அவர்கள் இருப்பது எத்தனை சதவிகிதம்?

3 சதவிகிதம்தான் மக்கள் தொகையில்.

ஓட்டுப் போடுவது எல்லாம் நம்மாள். இவர்கள் நெற்றியில் பட்டை நாமம்!

இது வெட்கக்கேடா, இல்லையா?

உயர்ஜாதிக்காரர்கள் அத்துணை பேரும் உங்களுக்கு ஓட்டு போட்டால்கூட, நீங்கள் வாங்கிய வாக்கு சத விகிதம் 37 சதவிகிதம். அவர்கள் இருப்பது 10 சத விகிதம்கூட கிடையாது. மீதி உள்ள 27 சதவிகிதத்தை முட்டாள்கள்தானே - எங்கள் ஆட்கள்தானே வாக்குப் போட்டிருக்கிறார்கள்.

நாங்களே களத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் இதுதான்!

இதை நினைத்தால், ரத்தம் கொதிக்கிறது நண்பர்களே - அதனால்தான், இதுபோன்ற போராட்டக் களத்திற்கு மற்றவர்களை அனுப்பிவிட்டு, நாங்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. நாங்களே களத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் இதுதான்.

ஏனென்றால், பெரியாருடைய தொண்டர்கள் நாங்கள். தந்தை பெரியார் அவர்கள் 95 வயதுவரையில் களத்தில் நின்றார்.

மத்தியப் பல்கலைக் கழகம் வரவேண்டும் என்பதற் காகப் போராடிப் பெற்றால், கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுவதுபோல - கருநாகத்தை எப்படி யாவது அடிக்கவேண்டும் என்றாலும், அதற்கும் நாங்கள் தான் நிற்கவேண்டும். உங்களை கடைசிவரையில் நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கவேண்டும்.

நீங்கள் யார் பின்னாலோ போய்க் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக் கின்றோம்; நீங்கள் யார் பின்னாலோ போய்க் கொண்டிருக்கிறீர்கள். அதனால், உங்கள் சந்ததிகள்தான் பாழாய்ப் போகும் என்பதுதான் எங்களுடைய கவலை.

7 இடங்களுக்கு மேல் போகக்கூடாது என்று நினைத்துவிட்டார்கள்

துணைவேந்தர் பதவிகள் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்; 45 மத்திய பல்கலைக் கழகங்களில், துணைவேந்தருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய பதவி - பதிவாளர் பதவியாகும்.

அதில் எஸ்.சி., இரண்டு பேர்.

எஸ்.டி., இரண்டு பேர்

ஓ.பி.சி. மூன்று பேர்.

ஆக மொத்தம் 7 இடங்கள்தான். 7 இடங்களுக்கு மேல் போகக்கூடாது என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

எல்லாம் சப்த ரிஷிகள், சப்த ராகங்கள் 7 என்பது போன்று வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு காலத்திற்கு நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்பது? எங்கள் தலையில் நீங்கள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பீர்கள்; நாங்கள் ஏமாந்து கொண்டே இருக்கவேண்டுமா?

‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன்

புலி வேஷம் போட்டு ஆடுகின்றான்

புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?''

என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்!

நாடெலாம் கேட்கவேண்டும்; வீடெலாம் பரவவேண்டும்!

அதுபோன்று நண்பர்களே, இதில் தட்டி எழுப்ப வேண்டும். இந்தக் குரல் நாடெலாம் கேட்கவேண்டும்; வீடெலாம் பரவவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள், நம் மக்கள்.

யாத்திரை போகிறவர் யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டார்களா? மண்ணைப் பற்றி கவலைப் படுகிறேன்; மக்களைப்பற்றி கவலைப்படுகிறேன் என்று சொன்னால், அந்த மக்களுக்கு மேலே, சமூகநீதிக்கு மேலே மண்ணைப் போடுகிறார்களே, அந்த மண்ணைப்பற்றி நீ கவலைப்படுகிறாயா? இன்னும் மண்ணை அதிகமாக எப்படிப் போடுவது என்பதைப் பற்றித்தானே சிந்திக்கிறாய்.

விலைக்கு வாங்கிய மக்கள் நம் பக்கம் வரவில்லையே என்பதற்காக மயக்க பிஸ்கெட்டை தேடுகிறீர்களா?

ஆகவேதான் நண்பர்களே, நாங்கள் இந்த சமூகநீதிப் பயணத்தைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கக்கூடிய ஒரு கொடி! அது இந்தத் தமிழ் மண்ணிலேதான்; பெரியார் மண் - சமூகநீதி மண்!

இந்தியாவையே காப்பாற்றக்கூடிய தலைமை!

‘திராவிட மாடல்' ஆட்சி, இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக இருந்து, இந்தியாவையே காப்பாற்றக்கூடிய தலைமை இன்றைக்கு இங்கே இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கக் கூடிய நல்வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்றைக்கு இதுபோன்ற போராட்டங்களை, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிகத் தெளிவாகச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதேபோன்று, உச்ச, உயர்நீதிமன்றங்களில் எத்தனை பேர் நம்மாட்கள் இருக்கிறார்கள்?

ஒரு காலத்தில் நம்மாட்கள் இல்லாமல் இருந்திருக்க லாம்; ஆனால், இன்றைய நிலை என்ன?

3 சதவிகிதம் இருப்பவர்களுக்கு 150 விழுக்காடு; 200 விழுக்காடு பதவிகள்.

அதில் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள்; பார்ப்பனர்களின் தந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கே, பெரியார் கண்ணாடி வேண்டும். அதுதான் நுண்ணாடி. அது மற்றவர்களுக்கு எளிதாகப் புரியாது.

பெண்களை நீதிபதிகளாக நியமிக்கவேண்டும் என்று சொன்னால்,  பார்ப்பன, உயர்ஜாதிப் பெண்களைத்தான் அந்தப் பதவிக்கு நியமிக்கிறார்கள்.

சரி, அப்படியாவது பெண்கள் வந்தார்களே என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.

பிராமணப் பெண்கள், பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் ‘‘நமோ சூத்திரர்’’கள்தான்!

ஆனால், சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்? பிராமணப் பெண்கள், பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் ‘‘நமோ சூத்திரர்''கள்தான். இது அந்தப் பெண்களுக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்.

எனவேதான், நீதித்துறை, நிர்வாகத் துறை, கல்வித் துறை, காவல்துறை - எந்தத் துறையாக இருந்தாலும்,  இன்றைக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் வரவில்லை என்றால், தந்தை பெரியார் வரவில்லை என்றால், நீதிக்கட்சி வரவில்லை என்றால், திராவிட இயக்கம் வரவில்லை என்றால், காமராஜர் வரவில்லை என்றால், அண்ணா வரவில்லை என்றால், கலைஞர் வரவில்லை என்றால், இட ஒதுக்கீடு மண்டல் கமிசனில் வரவில்லை என்றால், விழிப்புணர் வூட்டும் இந்தப் போராட்டங்கள் எல்லாம் இந்த அளவிற்கு விரிவாகி இருக்க முடியாது.

மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும்!

ஆகவே நண்பர்களே, நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும். அதற்காக அவ்வப்பொழுது பிரச் சினைகள் ஏற்படும்பொழுது, நீங்கள் எல்லோரும் இணைந்து போராடவேண்டும். எல்லா கட்சியினருக்கும் இதனை அறிவுறுத்துங்கள். இளைஞர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்; இந்தப் பிரச்சினையை நாம் எங்கே கொண்டு போகவேண்டும் என்றால், மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும்.

நேற்று நாங்குநேரில் நடைபெற்ற செய்தியைக் கேட் டால் வேதனையாக இருக்கிறது. அதுகுறித்து இன்றைக்கு அறிக்கை எழுதியிருக்கிறேன்.

பிஞ்சு உள்ளத்தில் ஜாதி நஞ்சை செலுத்துகிறார்கள்!

மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் ஜாதி நஞ்சை செலுத்துகிறார்கள். இதற்கெல்லாம் விடியல் காண வேண்டுமானால் நண்பர்களே, சமத்துவம் - சமூகநீதி - சுயமரியாதை - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

எங்களுக்குப் பதவி நோக்கம் இல்லை!

எங்களுக்குப் பதவி கிடையாது; எங்களுக்குப் பதவி நோக்கம் இல்லை. எங்களுக்குக் குறிப்பிட்டவர்களை சுமந்தாகவேண்டும் என்கிற வேலை இல்லை.

ஆனால், இந்த நாடு சமத்துவத்தைப் பார்க்க வேண்டும்; இந்த நாடு ஜாதி ஒழிந்த நாடாக இருக்க வேண்டும்; அரசியல் கட்சிக்காரர்கள், ஜாதிகளைப் பார்க்கும்பொழுது, எவ்வளவு ஓட்டு வரும் என்றுதான் பார்க்கிறார்கள்.

கொள்கையைச் செயல்படுத்துவதற்குத்தான் பதவி, பொறுப்பு

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், திராவிடர் கழக மானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் முதலில் கொள்கை; இரண்டாவதுதான் பதவி. அந்தக் கொள்கையைச் செய்வதற்குத்தான் பதவி, பொறுப்பு.

ஆகவேதான், இட ஒதுக்கீட்டை உருவாக்குவது மட்டுமல்ல; இட ஒதுக்கீட்டைக் கண்காணிப்பதும் மிக முக்கியம்.

இளைய பிள்ளைகள் மத்தியில், ஜாதிக் கலவரங்களை உருவாக்குகிறார்கள்; தனிப்பட்ட இரண்டு பேருக்குத் தகராறு  என்றால், அதை ஜாதி வன்மத்தோடு அணுகலாமா?

இதை அத்தனையையும் எதிர்த்து நாம் பெரிய அளவிற்குப் பயணம் செய்யவேண்டும்.

இன்னும் அடையவேண்டிய வெற்றிகள் நிறைய இருக்கின்றன!

அடைந்த வெற்றிகளைவிட, இன்னும் அடைய வேண்டிய வெற்றிகள் நிறைய இருக்கின்றன. அடைந்த வெற்றிகளையும் பாதுகாக்கவேண்டும் என்பதற் காகத்தான் இதுபோன்ற போராட்டங்கள்; ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

தூதுவர்களாக இருந்து, மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்!

பல பகுதிகளில் இருந்து வந்திருக்கின்ற தோழர்களுக்குச் சொல்கிறேன், அந்தந்த மாவட்டங்களில் இதுபோன்ற போராட்டங்களை நடத்தவேண்டும்; விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். எங்கெங் கெல்லாம் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றனவோ, அந்தந்தப் பகுதிகளில் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்; இந்த நாட்டில் எந்தச் செய்தி அவர் களுக்குப் போய்ச் சேரவேண்டுமோ, அந்தச் செய்திகள் போய்ச் சேரவில்லை. எந்தச் செய்தி போகக்கூடாதோ, அதை அவர்களிடம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம், ஒரு தூதுவர்களாக இருந்து, மக்களுக்கு எடுத்துச் சொல்லி, நீதி,  நியாயம் என்பதைக் கேட்க வேண்டும்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!

ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி! காவல்துறையினருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக