தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தினர் - இளைஞரணியினர் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்!
தமிழ்நாட்டின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!
சென்னை, ஆக.22- சமூகநீதிக்கு எதிரான - கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டின் ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக! ஒன்றிய பிஜேபி அரசே தூண்டாதே! மாணவர் புரட்சியைத் தூண்டாதே! என்பதை வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இன்று (22.8.2023) தமிழ்நாடெங்கும் மாபெரும் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகநீதிக்கு எதிராக முதன்முதலில் இப்படி ‘நீட்’ என்ற ஒரு தேர்வு கொண்டுவரப்பட வேண்டும் என்ற முடிவை உள்ளே திணித்தது ஒன்றிய அரசின் அதிகார வர்க்கம்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், அது தேவையில்லை என்று தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், மற்றொரு நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர் தீர்ப்பு வழங்க, குஜராத்தைச் சேர்ந்த தவே என்ற (பார்ப்பன) நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை (‘நீட்’ தேர்வு தேவை) என தந்தார்.
அந்த தலைமை நீதிபதி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர் ஓய்வு பெற்ற நிலையில், மறு சீராய்வு என்ற போர்வையில் - மரபுக்கு மாறாக, முன்பு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி தவே தலைமையில் ஓர் அமர்வு வழங்கிய ‘நீட்’ தேர்வு தேவை என்ற தீர்ப்பின் மூலமே மீண்டும் ‘நீட்’ தேர்வு நுழைந்தது!
தொடக்கத்திலிருந்தே தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் ‘நீட்’ தேர்வை எதிர்த்து கடுமையான பிரச்சாரம், போராட்டங்களை நடத்தி வந்தன. திராவிடர் கழகம் நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அரியலூர் அனிதா, ஓர் தாழ்த்தப்பட்ட சமூக தொழிலாளியின் மகள். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (1200க்கு 1176 மதிப்பெண்கள்) வாங்கியும், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (86) பெறாமல், உச்சநீதிமன்றம் வரையில் போராடி, விரக்தி, வேதனையில் தனது மருத்துவக் கனவு நிறைவேறாததால். தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு தோல்வியால் ஏழை, எளிய, கிராம, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பலரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த 10.8.2023 அன்று கூட குரோம்பேட்டை ஜெகதீசுவரன் தற்கொலை செய்துகொண்டார்; மகன் இறந்த துக்கம் தாளாமல், மாணவனுடைய தந்தை செல்வசேகர் கடந்த 14ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். இப்படித் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 21 உயிர்களை பலி கொண்டுள்ளது.
இதற்கிடையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘நீட்’ தேர்வு ஒழிப்புக்குரிய ஏற்பாடுகளை சட்டரீதியாக உடனடியாக மேற்கொண்டு நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அது ஆராய்ந்து சிறப்பான ஓர் அறிக்கையை மூன்றே மாதங்களில் தந்தது.
அதன் பரிந்துரை அடிப்படையில் சட்டப் பேரவையில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கான தனி மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலம் அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக - முறைகேடாக ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டதை எதிர்த்து, பலத்த எதிர்ப்புக் குரல்கள் (நாடு தழுவிய பிரச்சாரப் பயணம்) எழுந்தன. அப்படியிருந்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மசோதாவி¬னை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்திருந்தார்.
முதலில் திருப்பி அனுப்பினார்; உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, விரும்பிய திருத்தங்களைச் செய்து ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கே அனுப்பிட, ஆளுநர் பிறகு அசைந்தார். அது குடியரசுத் தலைவரைச் சென்றடைந்து, அவரது பரிசீலனை என்ற அளவில் நிலுவையில் உள்ளது.
தி.மு.க. அரசு அதன் அதிகார எல்லைக்குள் எந்த அளவு விரைந்து செயல்பட முடியுமோ, அதைச் செய்து, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நமது முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து இடையறாது வற்புறுத்தியும் வரத் தவறவில்லை!
இந்த நிலையில், என்ன செய்ய முடியுமோ, அதைத் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், ஆணை இல்லாமல் ஆஜராவதைப் போல, தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோத ஆளும் அவதாரமான ஆர்.என்.ரவி என்ற ஆர்.எஸ்.எஸ் சனாதன பிரச்சார ஆளுநர், “எனக்கு அதிகாரம் இருந்தால், நான் ‘நீட்’ தேர்வு ரத்து சட்டத்திற்குக் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத நிலைப்பாட்டைக் கூறி, தமிழ்நாட்டு மக்களை, பெற்றோரை - தமிழ்நாடு அரசை நாளும் வீண்வம்புக்கு இழுக்கிறார்!
இவற்றை மக்களுக்கு விளக்கிடவும், மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிடவும், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திடவும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் அல்லது முக்கிய நகரங்கள் - கிராமங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 22.8.2023 அன்று நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடெங்கும் இன்று (22.8.2023) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்:-
திணிக்காதே திணிக்காதே!
நீட் தேர்வைத் திணிக்காதே!
பறிக்காதே பறிக்காதே!
மருத்துவக் கனவைப் பறிக்காதே!
எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?
நீட் தேர்வுத் திணிப்பினால் எத்தனைப் பலிகள்?
தேவையில்லை தேவையில்லை!
நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை!
வேலையில்லை வேலையில்லை!
ஒன்றிய அரசின் கங்காணிக்குத்
தமிழ்நாட்டில் வேலையில்லை!
கரையான்களெல்லாம் புற்றெடுக்க
கருநாகம் வந்த குடியேறுமா?
எங்கள் வரிப்பணத்தில் கல்லூரி கட்டினால்
வடநாட்டவர்க்குத் தாரை வார்ப்பா?
கல்வியை வணிகப் பொருளாக்கும்
நீட் தேர்வை ஒழித்துக் கட்டு!
காவியை நாட்டில் திணிக்கப் பார்க்கும்
பாஜகவே மூட்டை கட்டு!
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கெதிராய்
நீட்டைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சே!
தமிழ்நாட்டு மாணவர் உயிரைப் பறிக்கும்
ஆளுநர் ஆர்.என்.ரவியே!
வெளியேறு வெளியேறு தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!
ஒப்புதல் வழங்குக, ஒப்புதல் வழங்குக!
நீட் விலக்கு மசோதாவுக்கு
தமிழ்நாட்டின் மசோதாவுக்கு
குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!
தூண்டதே தூண்டாதே!
ஒன்றிய அரசே தூண்டாதே!
மாணவர் புரட்சியைத் தூண்டாதே!
என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை - தாம்பரம்
‘நீட்’ தேர்வை கண்டித்து சென்னை - தாம்பரம் சண்முகம் சாலை, பாரதி திடலில் இன்று (22.8.2023) காலை 11 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் இர.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்ட கண்டன உரை
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மதிமுக தலைமைக் கழக பேச்சாளர் எஸ்.டி. செல்வராஜ், மனிதநேய மக்கள் கட்சி - தமிமுன் அன்சாரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளங்கோ, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன விளக்கவுரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார். பெரியார் யுவராஜ், பொழிசை கண்ணன், மு.மணிமாறன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக காப்பாளர் தி.இரா.ரத்தினசாமி, திராவிடர் மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் பா. அறிவழகன், தாம்பரம் ம. சுபாஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோளிங்க மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன். மாவட்டச் செயலாளர்கள்: கோ.நாத்திகன், செ.ர.பார்த்தசாரதி, சு.அன்புச்செல்வன், அ.விஜய் உத்தமன் ராஜ். மகளிரணி பொறுப்பாளர்கள்: பசும்பொன், இறைவி, நூர்ஜஹான், த.மரகமணி, அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சோளிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.
_-------------+++++++++-+++------++++---++----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக