சிலைக்கு - நினைவிடத்தில் மலர் மாலை வைத்து கழகத் தலைவர் மரியாதை
தனிச்சிறப்பு: தமிழர் தலைவர் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதி மொழி ஏற்பு!
சென்னை, செப். 17- தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2021) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், “சமூகநீதி நாளாக” கடைப்பிடித்து உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று உலகமெங்கும் உள்ள பகுத்தறிவாளர்கள் மிகச்சிறப்பாக பல்வேறு சமூகத் தொண்டினை மேற்கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆக கடைப்பிடிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது என ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 13.9.2021 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
அதனையொட்டி சென்னை பெரியார் திடலில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பெரியார் பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காலை 10 மணியளவில் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தும், பின்னர் பெரியார் திடலில் உள்ள 20 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்திலும், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
உறுதிமொழி ஏற்பு
இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியான:-
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”
என கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்ல கழகத் தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் கே.வீரமணி, வழக்குரைஞர் ஜெ.துரை, வழக்குரைஞர் வீரமர்த்தினி.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, மோகனா வீரமணி அம்மையார், க.பார்வதி, டாக்டர் மீனாம்பாள், டாக்டர் தங்கம், டாக்டர் இ.தேனருவி, பேராசிரியர் இசையமுது, ஆடிட்டர் இராமச்சந்திரன், சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணன், நெய்வேலி வெ.ஞானசேகரன், டி.கே.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தெ.சே.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் விடுதலைநகர் ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் கண்மதியன், திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் கவிஞர் எஸ்.வாசு, திண்டிவனம் சிறீராமுலு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் பவானி இளவேனில் மற்றும் பொறுப்பாளர்கள், ஆதித்தமிழர் கட்சி ஜக்கய்யன் மற்றும் பொறுப்பாளர்கள், இடதுதொழிற்சங்கம் ஏ.எஸ்.குமார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நினைவிடத்தில்
தந்தை பெரியார் நினைவிடத்தில் மகளிரணி சார்பில் ச.இன்பக்கனி, அ.அருள்மொழி தலைமையிலும், திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் த.வீரசேகரன் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி சார்பில் திருச்சி சேகர் தலைமையிலும், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தலைமை குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நூல் வெளியீடு
இன்று காலை 11 மணியளவில் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தைபெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் தலைப்பில் ஜப்பானிய மொழியில் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். ஜப்பானியத் தூதரக கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் செல்வி மியூகி இனோஉவே சான் நூல்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மியூகி இனோஉவே சான் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கழகத் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை ஆற்றினார். சமூக நீதி நாள் உறுதி மொழியை கழகத் துணைத் தலைவர் கூற பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர உறுதிகூறினர்.
திராவிடர் கழக தொழில் நுட்பப்பிரிவு வி.சி.வில்வம், ÔவரலாறுÕ இணைய இதழாசிரியர் ச.கமலக்கண்ணன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஜப்பானியர் கோரோ ஒசிதா, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆய்வாளர் ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ஜுன்இச்சி ஹுக்காவோ, தமிழ்நாட்டைச்சேர்ந்தவரும், ஜப்பான் நாட்டில் பணியாற்றிவருபவருமான பொறியாளர் எழுத்தாளர் இரா.செந்தில்குமார் ஆகியோர் காணொலி வாயிலாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து உரை யாற்றினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'கற்போம் பெரியாரியம்' நூல் வெளியீடு
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட்டு உரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
தந்தைபெரியார் 143ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் வெளியீடு
கருர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மலரை வெளியிட்டு உரையாற்றினார்.
சிறப்புவிருந்தினர்கள் அனைவருக் கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக