வியாழன், 23 செப்டம்பர், 2021

தந்தை பெரியார் விழாவில் முக்கிய தீர்மானங்கள்


தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள்  நாடு தழுவிய அளவில், கடந்த காலங்களைவிட வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று - தமிழ்நாடு அரசே தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும் அறிவித்ததோடு, அந்த நாளில் தந்தை பெரியார் கருத்துகளை மய்யமாக வைத்து தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசுப் பணி யாளர்களும், கல்விக் கூடங்களிலும் உறுதிமொழி எடுக்கப் பட்டது மகத்தான திருப்பு முனையான நிகழ்வாகும்.

சென்னையில் நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பல முக்கிய அம்சங்களை மய்யமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒன்றாகும் (தனியே செய்தி காண்க).

விழாவுக்குத் தலைமை ஏற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அய்ந்து தீர்மானங்கள் என்ற ஓர் அறிவிப்பைத் தந்தார்.

(1) தந்தை பெரியார் பிறந்த நாளை "சமூகநீதி நாளாக" அறிவித்து அரசுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அரசுக்கு சிறப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு - இடஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டதை வரவேற்றது முதல் தீர்மானம். ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் முக்கிய பகுதியாகும்.

(2) அடல்பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்து பொதுத்துறையை விற்பதற்கென்றே (Disinvestment) ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்)

வாஜ்பேயி அரசு சொத்துக்களை விற்றது என்றால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA)அரசு சொத்துக்களை அடமானம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

அரசுத்துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ஏன் எனில் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு இல்லை.

இந்நிலையில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வற்புறுத்துகிறோம் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் இந்தியாவின் தேசிய கட்சியான காங்கிரஸ் தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

3) சமூகநீதி என்று சொல்லும் பொழுது - அது பாலியல் நீதியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது தீர்மானமாகும்.

4) நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது நான்காம் தீர்மானம்.

5) 'நீட்' தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், 'நீட்' ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், 'நீட்' கேள்வித்தாள் 34 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் - இது யாருக்குப் பயன்படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே 'நீட்' என்பது சுத்தப் புரட்டு என்பதும் அம்பலமாகி விட்டது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி இது தொடர்பாக மக்கள் கருத்தைப் பெரும் அளவில் உருவாக்கிட  சமூகநீதியில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து முடிவு செய்யும் வகையில் வரும் 21ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் கடைசி தீர்மானமாகும்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது தந்தை பெரியார் அவர்களுக்குப் புகழ் மாலை சூட்டும் விழாவாக இல்லாமல், தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதியை வென்றெடுக்கக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளும் அர்த்தம் நிறைந்த செயல் ஊக்கமுள்ள விழாவாக அமைந்தது குறிப்பிட்டதக்கதாகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக