‘பெரியார் உலகம்' உருவாக்கத்திற்கு நிதியினைத் தாரீர்! நிதி திரட்டிடும் பணியில் ஈடுபடுவீர்! அரசு - அனைத்துக் கட்சி - அனைத்துத் தரப்பினரிடமும் ஆதரவு கோரி வேண்டுகோள்!
• Viduthalaiதிராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு - மண்டல, மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனத்திற்குப் பாராட்டு
மருத்துவ மேற்படிப்பு - உயர் சிறப்பு மேற்படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு தேவை
‘நீட்'டை ரத்து செய்க! தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அவசியம்!
‘‘பெரியார் உலகத்திற்கு'' அரசாணை அளித்த தி.மு.க. அரசுக்கு - முதலமைச்சருக்கு நன்றி!
சென்னை, செப்.4- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம், பெரியார் உலகத்திற்கு அரசாணை, மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு, தனியார்த் துறை களிலும் இட ஒதுக்கீடு, ‘நீட்' தேர்வு ரத்து, பெரியார் உலகத் திற்கு நன்கொடை உள்ளிட்ட தீர்மானங்கள் திராவிடர் கழக மாநில அளவிலான கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு, மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் மாநில அளவிலான கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (4.9.2021) முற்பகல் கூடி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம் (5 ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் 2:
தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை வரும் செப்டம்பர் 17ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சியுடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்துக் கட்சியினரையும், அமைப்பினரையும் அழைத்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களின் ஒட்டுமொத்தமான ‘திராவிடத் திருவிழாவாக’ நடத்துவது என்றும், அன்று காலை முதல் மாலை வரை ஒலிபெருக்கி மூலம் தந்தை பெரியார் உரை களையும், பாடல்களையும் ஒலி பரப்புவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3:
திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் - தமிழ்நாடு அரசின் அனுமதி ஆணைக்கு நன்றி தெரிவிப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூரில் உருவாக்கப்பட இருக்கும் “பெரியார் உலகத்திற்கு”த் தேவையான முக்கியமான அனுமதி ஆணையினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு - குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் தனது சிறப்பு நன்றியுணர்வைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகம் வியக்கும் வண்ணம் தமிழ்நாட்டின் பெருமைகளுள் முக்கியமானதாகத் திகழும் வகையில் உருவாகும் “பெரியார் உலகம்“ பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து அளித்து வரு மாறும் தமிழ்நாடு அரசையும், அனைத்துக் கட்சிகள், அமைப்புகளையும், பொதுமக்களையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
(அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்).
தீர்மானம் 4(அ):
பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனத்துக்குப் பாராட்டும் - நன்றி அறிவிப்பும்!
தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு - அதற்கான போராட்டக் களத்தில் நின்ற தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆணையை செயல்படுத்தும் வகையில், மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முயன்றதை முடிக்கும் வகையில், பயிற்சி பெற்ற 58 பேர்களுக்குப் பணி நியமனம் வழங்கி - சமூக மறுமலர்ச்சி - சமத்துவப் பாதையில் புதிய மைல் கல்லைப் பதித்த தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தி.மு.க. ஆட்சிக்கு - அதிலும் குறிப்பாக - சிறப்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4(ஆ):
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்
பயிற்சி பெற்ற மற்ற எஞ்சியவர்களுக்கும், அர்ச்சகர்களாகும் பணி வாய்ப்பு அளிப்பதுடன் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5:
“பெரியார் உலகம்” நிதி அளித்திடுவீர்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூரில் “பெரியார் உலகம்” பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய வரலாற்றுக் கருவூலமாக, காட்சியகமாக உருவாக்கப்பட உள்ளது.
95 ஆண்டு காலம் வாழ்ந்து, தன் முழு வாழ்வையே தமிழர் பெருவாழ்விற்கு முழுமையாக ஒப்படைத்து - “தொண்டு செய்வதே பிறப்பின் பயன்” என்ற தொண்டறத்தை கடைசி மூச்சு அடங்கும்வரை மேற்கொண்ட - மானுடக் காவலர் உலகத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மொழியில் கூறவேண்டுமானால், ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் - ஒரு நிறுவனமான ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவராம் தந்தை பெரியாரின் வரலாற்றை நிரந்தரப்படுத்தி, நிகழ்கால, எதிர்கால சந்ததியினருக்கும் உணர்வூட்டும், சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஒப்பரிய வரலாற்று சின்னம்தான் “பெரியார் உலகமாகும்”
95 அடி உயரப் பெரியார் சிலை, 40 அடி அடிபீடம், திராவிட வரலாற்று அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் பூங்கா, கோளரங்கம், படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம், உணவகம்,, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களின் அணிவகுப்பாக அமையவிருக்கும் “பெரியார் உலகம்” உருவாகிட பெரு நிதி தேவைப்படும் நிலையில், தந்தை பெரியாரால் பயனடைந்த மக்களின் நன்றி உணர்வின் வெளிப்பாடாக, பெரும் அளவில் நிதியளித்து உதவுமாறு பொதுமக்களை இக்கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.
திராவிடர் கழகத்தின் அனைத்து அணியினரும், பகுத்தறிவாளர்களும், அமைப்புகளும் நிதி திரட்டும் இம்முக்கிய பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நன்கொடை திரட்டி அளித்து “பெரியார் உலகம்” என்னும் பெரும் பணியினை சிறப்புடன் முடித்திட உதவிக்கரம் நீட்டுமாறு அனைத்துத் தரப்பினரையும் இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6:
மருத்துவ மேற்படிப்பு - உயர் சிறப்பு மேற்படிப்பிலும் 50% இடஒதுக்கீடு தேவை
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு MD/MS/MDS மருத்துவ மேற்படிப்புகளிலும், DM/MCH உயர் சிறப்பு மேற்படிப்புகளிலும் வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு நடைமுறையானது NEET நுழைவுத் தேர்வு முறையினால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டது. அதனை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது - வருகிறது, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தார்கள். உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் மாநில அரசுக்கு “அரசு மருத்துவர்கள் சர்வீஸ் கோட்டா” வழங்க உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு MD/MS/MDS பட்டமேற்படிப்புகளிலும், ஞிவி/விசிபி உயர் சிறப்பு மேற்படிப்புகளிலும் 50% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணைகள் 463 மற்றும் 462 மூலம் முறையே கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தாமல் தடுக்கப்பட்டது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான DM,MCh ஆகியவை இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தான் அதிக அளவில் 369 இடங்கள் உள்ளன. இந்த 369 இடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடும் தமிழ்நாடு தனியார் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பினால் 369 இடங்கள் அனைத்தும் அகில இந்திய தொகுப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது . இதனால் DM, MCh சேருகின்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்தது. இவ்வாண்டு சிறுநீரகவியல் துறைக்கான 47 டிஎம் இடங்களில் வெறும் 2 அரசு மருத்துவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் . அதுபோல இதய நோய் துறையில் 74 இடங்களில் 17 என்று மிகவும் குறைந்த அளவு அரசு மருத்துவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு படிக்க வந்த மருத்துவர்களும் படிப்பு முடிந்த பின்னர் இரண்டாண்டுகள் பணி செய்ய வேண்டும் என்கிற ஒப்பந்தத்தையும் பின்பற்றாமல் விதிமீறல்கள் நடந்து கொண்டே உள்ளன.
இந்நிலை நீடித்தால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை (Doctors with Super - Speciality Degree) அடுத்து வருகின்ற ஆண்டுகளில் மிகவும் குறைந்து போய்விடும். அதனால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். மேலும் எதிர் வரும் ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கான அரசு மருத்துவர்கள் கூட இல்லாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது. இதனால் 369 உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது, வெளி மாநிலத்தவர்கள் கையில் மருத்துவக் கல்வி பறிபோகும் ஆபத்தும் இதில் உண்டு.
தமிழ்நாடு அரசின் நிதியால் பல ஆண்டுகாலமாக உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் உயர் சிறப்பு மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நோக்கம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இதுவரை பெற்றுவந்த பலனும் பயனும் பறிக்கப்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசு தனிச்சட்டத்தை இயற்றி MD/MS/MDS மற்றும் DM/MCh இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துத் தரவேண்டும் என்று சமூகநீதியில் அக்கறை உள்ள தமிழ்நாடு அரசை - சிறப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து சிறப்பான முறையில் வாதாடி சாதகமான தீர்ப்பினைப் பெற்று மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 7:
தனியார் துறையில் தேவை இடஒதுக்கீடு
அரசு துறைகள், பொதுத்துறைகள் வேகவேகமாக தனியார் வசம் பறிபோகும் ஒரு சூழலில், தனியார் துறைகளில் சமூகநீதி கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவையாகி விட்டதால் அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசையும், ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் மாநில அரசுகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் உள்ள அனைத்துத் தரப்பினரும் இதற்கு முக்கியத்துவம் அளித்து பாடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8:
‘நீட்’டை ரத்து செய்க - அல்லது விதிவிலக்கைத் தருக!
ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற மக்களையும் மிகக்கடுமையாக பாதிக்கச் செய்யும் ‘நீட்’ தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்தபட்சம் விதிவிலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு அந்த வாய்ப்பினைத் தர வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக