‘‘தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதி! உறுதி!!
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை, மார்ச் 31 நேற்று (30.3.2021) மாலை சென்னை சைதை சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஈக் காட்டுத்தாங்கல் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எய்திட்ட அறிவுக்கணைகள்:
* தி.மு.க. கூட்டணி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
* இப்பொழுது தேவையெல்லாம் எதிரணியினர் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறக் கூடாது என்பதுதான்.
* காவிகளுக்கோ காலிகளுக்கோ இந்த மண்ணில் இடமில்லை. கருத்துக் கணிப்பை நாங்கள் எப்போதும் நம்புவதில்லை. ஆனால், மக்களின் நாடித்துடிப்பை நேரில் சென்று பார்த்து வருகிறோம். ஆகவே, சொல்கிறோம் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
* தளபதி மு.க.ஸ்டாலின் மீட்கப் போவது தமிழ்நாட்டை மட்டுமல்ல - பா.ஜ.க.வுக்கு அடிமையாகப் போய்விட்ட - அடகு வைக்கப்பட்ட பொருளான அண்ணா பெயரில் உள்ள அ.தி.மு.க.வையும் சேர்த்துதான்.
* அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க. என்று சொன்னது விளையாட்டு வார்த்தையல்ல - நாகர்கோவிலுக்கு வந்து பரப்புரை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார்?
* 234 இடங்களில் வெறும் 20 இடங்களில் மட்டும் போட்டியிடும் பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறது என்று சொன்னாரே - அதன் பொருள் என்ன?
* கரோனாவை ஒழித்துக்கட்ட கைதட்டுங்கள் என்றார்; பிறகு விளக்கேற்றுங்கள் என்று சொன்னார் பிரதமர் மோடி - கரோனா ஒழிந்ததா?
* அறிவியலான விஞ்ஞானம்தானே - தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதானே ஓரளவுக்காவது ஒழிக்க முடிந்தது.
* கரோனாவைவிட ஆபத்தானது - பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ். எனும் கோவிட்-19 கிருமி. அதனை ஒழிக்கும் தடுப்பூசிதான் தளபதி மு.க.ஸ்டாலின். கூட்டணி என்பதுதான் சுத்தம் செய்யும் சோப்பு. கிருமி நாசினிதான் திராவிடர்கழகம்.
* இன்றைய தினம் தாராபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்தவர் நமது பிரதமர் என்று பெருமை பொங்கப் பேசினாரே - அவரைப் பார்த்து ஒரு கேள்வி -
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்ன பயன்? அதுதான் நீட்டைக் கொண்டு வந்து ஒழித்துவிட்டாரே - இட ஒதுக்கீடும் இல்லை என்று கூறிவிட்டாரே- முதலமைச்சர் தூக்கிச் சுமக்கும் பிரதமர்.
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாக அல்லவா ஆகிவிட்டது.
* பிரதமரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியிருக்கிறார், மத்திய அரசுடன் ஒத்துப்போனால் காரி யங்களைச் சாதிக்க முடியும் என்கிறார் ('காக்கா' பிடிப்பது என்பார்களே, அது இதுதானோ!)
ஒத்துப் போவது என்பது வேறு - ஒத்து ஊதுவது என்பது வேறு!
மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பதை இப்படிக் கொச்சைப்படுத்தலாமா?
மானமிகு கலைஞர் என்ன சொன்னார்?
''உறவுக்குக் கைகொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்'' என்ற கலைஞர் எங்கே - இந்த எடப்பாடிகள் எங்கே?
* அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று சும்மா சும்மா சொல்கிறார்களே, அந்த அம்மா ஆட்சியில் இருந்தபோது - நீட்டை நுழைய விட்டாரா - ஓராண்டு விலக்குப் பெறவில்லையா?
எடப்படியால் ஏன் முடியவில்லை? இரு மசோதாக் களை எதிர்க்கட்சிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியும், ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து ஏன் பெற முடியவில்லை?
* இப்பொழுது நடைபெறும் ஆட்சி லேடி ஆட்சியா? மோடி ஆட்சியா?
* அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முதன்முறை சென்றபோது ஆற்றிய கன்னிப் பேச்சில், ''I come from Dravidian Stock'' என்று பேசினாரே!
* ''நான் திராவிட மரபிலிருந்து வந்தவன்'' என்று கம்பீர மாகச் சொன்னாரே - அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிட, கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறிக்க அந்தக் கட்சிக்குத் தகுதி உண்டா?
* அண்ணா என்ன சொன்னார்? பதவி என்பது துண்டு; கொள்கை - இலட்சியம் என்பது வேட்டி என்றாரே - அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கும் அ.தி.மு.க., துண்டு மட்டும் போதும் என்ற நிலையில் அல்லவா இருக்கிறது!
* வாக்குப் பதிவுக்கு இன்னும் இடையில் சில நாள்களே உள்ளன - அதற்குள் வீட்டுக்கு வீடு யானையைக் கொடுப் பேன் என்று முதலமைச்சர் அறிவித்தாலும் அறிவிப்பார்.
* ஊழல், ஊழல் என்று ஓங்கிப் பேசுகிறார்களே, அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. சின்ன சேலத்தைச் சேர்ந்தவருக்கு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே - இதுதான் ஊழலை ஒழிக்கும் அ.தி.மு.க.வின் லட்சணமா?
* தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது?
* தி.மு.க. ஆட்சியில் முதலில் ஒழிக்கப்படப் போவது 'நீட்' என்று கூறப்பட்டுள்ளதே - அந்த உறுதிமொழி உண்டா அ.தி.மு.க.விடம்? இரண்டு மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக நிறை வேற்றப்பட்டும் சாதிக்க முடியவில்லையே!
* அரசு பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம் என்று மார்தட்டுகிறதே அ.தி.மு.க. அரசு - அதற்கும் இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுவிட்டதே!
* புதுச்சேரி மாநிலத்தில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்குச் சட்டம் செய்திருந்தும், அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் இதுபோன்ற இட ஒதுக்கீட்டை அளிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்று மத்திய அரசின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?
அடுத்துத் தமிழ்நாட்டின் கழுத்துக்கும் கத்தி தீட்டப் படும் அபாயம் உள்ளதே!
* வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் நிலை என்ன?
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலத்தவர்களும் பங்குகொள்ளலாம் என்று - முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஆணை பிறப்பித்தவர்தானே ஓ.பன்னீர்செல்வம்! மறுக்க முடியுமா?
* திருச்சி பொன்மலையில் இரயில்வே பதவி 581 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 12 பேர்தானே - மீதி இடங்கள் எல்லாம் வெளிமாநிலத் தவர்களுக்கே!
* சென்னை மண்டல இரயில்வே துறையில் 884 பதவிகளில் 804 இடங்களில் பிற மாநிலத்தவர்கள் - வெறும் 80 இடங்களில்தான் தமிழ்நாட்டுக்காரர்கள்.
* 'பெல்' நிறுவனத்தில் 738 பெரிய உத்தியோகங்கள் என்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பூஜ்ஜியமே!
* இதுதான் தமிழ்நாட்டின் நிலை - தட்டிக் கேட்கும் முதலமைச்சராக தளபதி மு.க.ஸ்டாலின்தான் இருப்பார். ஊர்ந்து செல்லும் முதலமைச்சர்களால் சாதிக்க முடியாது.
* எந்த வகையில் மக்கள் நல அரசாக மத்திய - மாநில அரசுகள் இருக்கின்றன? இதற்குப் பாடம் கற்பிக்கப்பட வேண்டாமா?
* தேர்தல் நாளன்று உதயசூரியன் பொத்தானை அழுத் துங்கள் - விளக்கு எரியும்வரை அழுத்துங்கள் - அங்கு விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும். நாட்டிலும் விளக்கு எரியும். காரிருளும் அகன்று உதிக்கட்டும் உதயசூரியன்- உதயமாகட்டும் புத்துலகு! ஓடி மறையட்டும் நாட்டைப் பீடித்த காரிருள்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப் பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிர மணியனை ஆதரித்து ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தி.மு.க. வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க. பகுதி கழக துணை செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்புரை வழங்கிட, தி.மு.க. பகுதி கழக செயலாளர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மோகன்குமார், பால்ராஜ், நரசிம்மன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தொடக்கவுரையாற்றினார். அடுத்து சைதைத் தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத் தையன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தி.மு.க.மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சி.பி.அய். மாவட்ட செயலாளர் ஏழுமலை, வி.சி.க. பகுதி கழக செயலாளர் சைதை ஜேக்கப், சி.பி.அய். மாநிலக்குழு தலைவர் சுசீலா, த.வா.க. பகுதி செயலாளர் வீரன், தனசேகரன், விஜி, திராவிடர் கழக பகுதி செயலாளர் சேகர், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் லயன் விவேகானந்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக வட்ட தி.மு.க. செயலாளர் சென்னப்பன் நன்றி கூறினார்.
பரப்புரை பயணக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர் மதுரை வேசெல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக