ஞாயிறு, 30 ஜூன், 2019

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்

* வரைவு தேசியக் கொள்கையையும், நீட் தேர்வையும் முற்றிலுமாகக் கைவிடுக!
* உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுக!
மக்களுக்கான மருத்துவ உதவியை அரசிடமிருந்து முழுவதுமாகப் பெறுவதை குடிமக்களின் அடிப்படை உரிமை ஆக்குக!
சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு  மற்றும் கழக வேலைத் திட்டங்கள்
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின்  முக்கிய முடிவு
திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை 1.7.2019 அன்று தொடங்கி, 15.8.2019 தேதியோடு நிறைவு செய்வது என்றும், உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணம்  ரூ.50 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.
கழகப் பொறுப்பாளர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, பாராட்டத்தக்க வகையில் முடித்துத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, ஜூன் 29 புதிய கல்வித் திட்டத்தை முற்றிலு மாகக் கைவிடவேண்டும் என்றும், உயர்ஜாதி ஏழை களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பது உள்பட பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மருத்துவ உதவியை அரசிடமிருந்து முழுவதுமாகப் பெறுவதை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்கவேண் டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
29.6.2019 சனியன்று காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1 :
இரங்கல் தீர்மானம்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளருமான மானமிகு ஞான.செபஸ்தியான் (வயது 101) அவர்கள் (மறைவு 4.6.2019), சிவகங்கை சுயமரியாதை இயக்க வீரர், மேனாள் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் (வயது 90, 5.6.2019), திராவிட இயக்க எழுத்தாளர் பேராசிரியர் அ.அய்யாசாமி (வயது 79, 16.6.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் விக்ர பாண்டியம் மானமிகு இரா.அழகேசன் (வயது 96 - மறைவு 1.6.2019), தூத்துக்குடி கழக மகளிரணி தலைவர் மானமிகு பொ.சாந்தி (வயது 53 - மறைவு 1.5.2019), சுயமரியாதை வீரர் கோவை மு.இராமநாதன் (வயது 87 - மறைவு 9.5.219), திமுக சென்னை மாவட்ட மேனாள் செயலாளர் ஆர்.டி.சீத்தாபதி (வயது 82 - மறைவு 21.5.2019), புதுச்சேரி திராவிட இயக்கப் பேரவை மிசா நந்திவர்மன் (மறைவு 30.5.2019) ஆகியோர் மறைவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் எண்  2:
சுகாதாரம் - மருத்துவம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஆக்குக!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், கல்வி அடிப்படை உரிமை என்று கூறப்படுவதுபோல, குடிமக்களை நோயி லிருந்து மீட்கும் மருத்துவ வசதிகளை முழுமையாக அளிக்கவேண்டியது அரசின் கடமை என்றும், இது குடிமக்களின்  அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அடிப் படை உரிமை என்பது மக்கள் நல்வாழ்வாகும். ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் சுகாதாரம் - மருத்துவம் உள்ளிட்ட நல்வாழ்வு குடிமக்களின் அடிப்படை உரிமை யாக்கப்பட வேண்டும்!
நோய் என்பது ஏழை, பணக்காரனைப் பொறுத்துத் தொற்றுவதல்ல. ஆதலின் வசதி வாய்ப்புள்ளவர்கள் உயர்ந்த தரமான மருத்துவ உதவியைப் பெறுவதும், வசதி வாய்ப்பற்றவர்கள் அத்தகைய மருத்துவ உதவிகளைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும், மனித உரிமைக்கும், மனித நேயத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரானது. ஆகையால், மத்திய அரசு குடிமக்களின் இத்தகு நல்வாழ்வை அடிப்படை உரிமையாக்கும் வகை யில் சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 3:
சமுக நீதி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்:
அ.இட ஒதுக்கீட்டிற்கான சட்டம்
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் அளித்த சட்ட முன் வரைவு அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கப்பட்டு, சட்டமன்றத்தில் சட்டமாகி, பின்னர் அரச மைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசில் இத்தகைய சட்டம், குறிப்பாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. மாறாக, அரசின் ஆணைகள் மூலமாகத்தான்  நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நீதிமன்றத்தில் பல தடைகளும் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
முந்தைய அய்க்கிய முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டில், இட ஒதுக்கீடு சட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு அறிக்கை மூலம் நாடாளுமன் றத்திற்குப் பரிந்துரைத்தும் இன்றளவும் அந்த அறிக்கைமீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ளதுபோல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
ஆ.மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்றிடுக
அ) அரசியல் அமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவின்படி மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (மண்டல் கமிஷன்) அளித்த பரிந்துரை 31.12.1980 அன்று அரசிடம் அளிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆகிய நிலை யிலும்கூட, அதன் இரண்டு பரிந்துரைகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட் டுள்ளது. ஏனைய பரிந்துரைகள்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித்துறையில் இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடு  இவை இன்றளவும் நிறை வேற்றப்படவில்லை. (அந்த 27 விழுக்காடு கூட முழு மையாக நிறைவேற்றப்படாமல் வெறும் 9 விழுக்காடு மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. எஞ்சியவை முன்னேறிய ஜாதியினர்க்கே (FC) செல்கிறது)
ஆ) நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத் தும் தற்போது சமுக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளதுபோல், தனியாக பிற்படுத்தப்பட்டோர்க்கு என அமைச்சகம் மத்திய அரசில் உருவாக்கப்படவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர்க்கு தனி அமைச்சகம் இருப்பது போல், பிற்படுத்தப்பட்டோரின் நலன் சார்ந்த திட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெற, தனி அமைச்சகம் (தமிழ்நாட்டில் கலைஞர் 1971 இல் அமைத்து இந்தியாவுக்கே வழிகாட் டினார்) அமைத்திட மத்திய அரசை தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
இ) பிற்படுத்தப்பட்டோர் அனைத்துத் துறைகளிலும் உரிய பங்கீடு பெற வேண்டுமாயின், மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
இ. ’கிரீமிலேயர்’ எனும் கிருமி ஒழிக்கப்பட வேண்டும்
அரசியலமைப்புச் சட்டம், சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உள்ள  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட உரிமை தந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்திட எந்தப் பிரிவும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உருவானபோதே, பொருளாதார அளவுகோல் நிலை யற்றது,  தேவையற்றது என நாடாளுமன்றத்தின் பெரும் பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் (இந்திரா சகானி வழக்கு), உச்சநீதிமன்றம் கிரீமிலேயர் எனும் முறையை தேவை யின்றி புகுத்தியது.  இதன் காரணமாக, பிற்படுத்தப்பட் டோரில் தகுதி படைத்த பலரும், இட ஒதுக்கீடு உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற ஏற்பட்ட ஒரு கருவி யாகும். இதில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் கிரீமிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
ஈ. தனியார்த் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு
தாராள மயம், தனியார் மயம், உலகமயம் (LPG) என்பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல் பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமுகநீதி யின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இட ஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.
அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படியாகக் கிடைத்திருக்க வேண்டிய இடஒதுக்கீடு விகிதாச்சாரம் இன்னும் முழுமையான அளவு எட்டப் படவில்லை என்பது வேதனைக்குரியது. இட ஒதுக்கீடு முழுமையான வகையில் நிறைவேற்றப்படுகிறதா என்ப தைக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு நிறைவேற்றுவதில் தவறு செய்யும் அதி காரிகளை தண்டிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும். Monitoring Cell ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்,
நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார்  துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியிருப்பதன்மூலம் பிஜேபி ஆட்சி எத்தகை யவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடி கிறது. இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் வெளி நாடுகளில் தொழில்களைத் துவங்கும்போது அந்நாட்டு மண்ணுக்குரிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், உள்நாட்டில் மட்டும் தனியார்த்  துறைகளில் இடஒதுக்கீடு அளிக்காததும், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் தனியார்த்துறை இடஒதுக்கீட்டை எதிர்ப் பதும், வெகு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வு களுக்கும் எதிரானது என்பதை சுட்டிக்காட்டி, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
உ. சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - உடன் சட்டத் திருத்தம் தேவை!
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் கிடைத்துள்ள இடங்கள் வெறும் 78 தான். விழுக்காட்டில் வெறும் பதினான்கே!
அதேபோல இந்தியா முழுதும் உள்ள 4030 சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் பெற்றுள்ள இடங்கள் வெறும் 311 மட்டுமே. விழுக்காட்டில் எட்டு மட்டுமே!
இது மக்கள் பிரதிநிதித்துவம் என்ற முறையில் சமுக நீதிக்கு மிகவும் எதிரானதே! இந்த நிலையில் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கு 33 விழுக்காட் டுக்கான மசோதா (108ஆம் திருத்தம்) 1996 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு மேலும் காலந்தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது - அநீதியானது என்பதால் பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டுடன் கூடிய (தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோருக்குத் தனித்தனி ஒதுக்கீடு) சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது. உள் ஒதுக்கீடு இல்லாவிடின், உயர்ஜாதியினரே இந்த இடங்களை பறித்துக் கொள்ளும் ஆபத்து ஏற்படும் என்பதையும் எச்சரிக்கையுடன் தலைமை செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.
ஊ. நீதித்துறையில் இட ஒதுக்கீடு
இந்திய நாட்டு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன் றமும்தான் உண்மையாக இன்றைய அரசமைப்புச் சட்ட ஜனநாயக முறையில் அதிக அதிகாரம் படைத்த அமைப் புகள். மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டம்கூட சரியா - தவறா என்று தீர்ப்பளிப்பது அங்கேதானே! எனவே, அந்த மன்றங்களிலும் சமுகநீதி அவசியம் தேவை.
உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள். அதில் சில இடங்கள் காலியாகவும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களைச் சேர்ந்த நீதிபதிகள் (உயர்நீதிமன்றங்களில் சிறந்த மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்களாக இருந்தும்கூட) ஒரே ஒருவர் கூட இல்லை. அண்மையில்தான் ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் (SC) உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மக்கள் தொகையில் 70 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுகங்களி லிருந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒருவர் தான். இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகள் நியமனத்திலும், அகில இந்திய தேர்வைப் புகுத்தி, சமுக நீதியைக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அரசின் முதன்மை துறைகளுள் நிர்வாகம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உள்ள நிலையில், மூன்றாவது துறையான நீதித்துறையில், உச்ச நீதிமன்றம் வரை, இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சரி யானதாக இருக்க முடியும். இதனை மத்திய அரசு உணர்ந்து உரிய சட்டம் இயற்றிட தலைமைச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
எ. நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குக!
மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் நீட் எனும் நுழைவுத் தேர்வுமுறை சமுகநீதிக்கு எதிரானது என்றும், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும், கிராமப் புறத்தினருக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகமும், முக்கிய அரசியல் கட்சிகளும், சமுகநீதி அமைப்புகளும் எச்சரித்தபடியே, தொடர்ந்து நடைபெற்ற 2017-2018, 2018-19, 2019-20 ஆம் ஆண் டுக்கான நீட் தேர்வின் முடிவுகள் அமைந்துவிட்டன.
அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் (15.6.2019) வந்துள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற 180 மாணவர்களில் 50 மாணவர்கள், இயற்பியல் அல்லது வேதியியல் பாடத் தேர்வில்  ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 7 மாணவர்கள், பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளனர். 10 மாணவர்கள், பூஜ்யத்திற்கும் கீழே மைனஸ் மதிப்பெண் பெற்றுள்ளனர் என வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி, திறமையின் அடிப்படையில்தான் மருத்துவம் படிக்க வேண்டும்; அதற்கு நீட் தேர்வுதான் உரிய தீர்வு என மத்திய பார்ப்பன பாஜக அரசு முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியபோது, நீட் தேர்வு என்பது ஒரு மோசடியே, வசதி படைத்தவர்களுக்கும், பார்ப்பனர் களுக்குமே அதிக வாய்ப்பை உருவாக்கும், மருத்துவப் படிப்பு ஏழை சமுக மாணவர்களுக்கு எட்டாக்கனி யாகிவிடும் என முதன் முதலில் இந்த நாட்டிற்கு எடுத்துரைத்தது திராவிடர் கழகம் தான். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து இது குறித்து எச்சரித்து அறிக்கை விடுத்து, போராட்டமும் நடத்தப்பட்டது. தற்போது அந்த எச்சரிக்கை உண்மையானது என டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி உறுதி செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமே நீட் தேர்வை நடத்துவது என்பது மிகப் பெரிய சதியும் மோசடியுமாகையால் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை திராவிடர் கழக தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கான விலக் குக் கோரி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் மத்திய அரசினை தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது. நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே பல்வேறு மோசடிகளையும், குழப்பங்களையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளது என்பதையும் தலைமை செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு - மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவருவது தான் என்று தீர்க்கமாக திராவிடர் கழகம் அறிவிக்கிறது. மாநில அரசு கள், மத்திய அரசை இவ்வகையில் வலியுறுத்த வேண்டும் என்று இத்தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
ஏ. உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் மோசடி
100 ஆண்டு கால நடைமுறையையும், பல்வேறு போராட்டங்களையும் வரலாறாகக் கொண்ட இட ஒதுக்கீடு என்ற பெயரால் உள்ள சமுகநீதியின் அடிப் படையைத் தகர்க்கும் வகையில், பொருளாதார அடிப் படையில் உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்புகளில் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை, சில நாட்களில் மக்களவை, மாநிலங்களவைகளில் மத்திய அரசு நிறைவேற்றி அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமுலாக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் சில சமுக அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கானது என்ற அளவுகோலில் பொருளாதார அளவுகோலையும் இப்பொழுது உள்ளே திணித்தால், அடுத்து, தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டிலும் {15(4) 16(4)} பொரு ளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக்கி சட்டம் இயற்றும் ஆபத்து இருக்கிறது என்பதையும் தலைமை செயற்குழு  தொலைநோக்குடனும், எச்சரிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்கனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு, கிரீமிலேயர் என்ற பெயரில், பொருளாதார அளவுகோல், மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளது.
உயர்ஜாதிக்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற் காக அவர்களை weaker section என்று குறிப்பிடுவது அப்பட்டமான மோசடியாகும். கல்வி, வேலை வாய்ப்பு களில் உயர்ஜாதியினர் ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது தான் உண்மை. தகவல் அறியும் உரிமையின்கீழ் பெறப் பட்ட தகவலும் அதனை உறுதிப்படுத்துகிறது. ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் (மாதம் 65 ஆயிரம் ரூபாய்) வருமானம் உள்ள உயர்ஜாதியினரை ஏழைகள் என்று அடையாளப்படுத்துவது கேலிக்குரியது.
அண்மையில் ’எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ பத்திரிக்கையில் (ஜூன் 8, 2019) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், உயர்ஜாதியில் நலிந்த பிரிவினர் தற்போது இட ஒதுக்கீடு இல்லாமலேயே நாட்டின் 445 உயர்கல்வி நிலையங்களில் 28 விழுக்காடு அளவு உயர் ஜாதியினர் படிக்கின்றனர் என்ற புள்ளிவிவரம், ஆய்வு அறிக்கை மூலம்   வெளிவந்துள்ளது. அவர்களுக்கு மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமுக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும்.
சமூகநீதியைக் குழி தோண்டி புதைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின்- உயர்ஜாதியினருக்கு அளிக்கப்படும் பொருளாதார அடிப்படையிலான (அவர்கள் விகிதாச் சாரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில்)  இட ஒதுக்கீட்டை  ரத்து செய்திட வேண்டும் என்று திராவிடர் கழக தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
அய். மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்
தற்போது, மத்திய அரசின் பணிகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வு (சிவில் சர்வீஸ்), மத்திய பணியாளர் ஆணையம் (எஸ்.எஸ்.சி.), நடத்தும் தேர்வு, ரயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி களில் கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டு நடத்தப்படு கின்றன. இதன் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து, குறிப்பாக, பீகார், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து பெரும் அளவில் தேர்ச்சி பெற்று, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக, இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
மேலும், குரூப் சி மற்றும் டி பதவிகள், வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கு, அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியையும் மாற்றி, முன்னுரிமை என்று மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநில மொழி (தமிழ்) தெரியாத வட மாநிலத்தவர், இந்த பதவி களிலும் வரக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த நிலை அதிகரித்து வருகிறது.
தமிநாட்டில் படித்துப் பட்டம் பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இது மிக மோசமான சமுகக் கொந்தளிப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி வருகிறது.
சமுகநீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமல்ல. மாநில உரிமையையும் உள்ளடக்கியதே. இந்த அடிப் படையில்,
1. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பதவிகளுக்கான தேர்வு அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும்  நடத்தப்பட வேண்டும்.
2. அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள், அகில இந்திய அளவில் என்றில்லாமல், மண்டல வாரியாக (தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலம்) என்ற வகையில் தேர்வுகள் இருப்பதுதான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும். ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அனைவரும் அந்த மாநில அரசின் அலுவல் மொழியை தெரிந்திருப்பது கட்டாயம் என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.
இதற்கு ஏற்ற வகையில் உரிய சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
3. பிற மாநில ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சில மாநிலங்கள் சட்டம் இயற்றுவது போல தமிழ் நாட்டிலும் அத்தகைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தலைமை செயற்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.
ஒ. சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு:
சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமுகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எதனையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்.
ஓ. வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 - திரும்பப் பெறுக!
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்ட வணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக் கையை மொழிபெயர்த்து மத்திய அரசே அதிகாரப் பூர்வமாக வெளியிட வேண்டும்.
2.            புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
3.            தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து விவா திக்க வேண்டும்.
4.            மத்திய அரசு கூட்டியிருக்கும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி,  இவ் வரைவு குறித்த அனைவரின் கருத்துகளையும் தமிழ்நாடு அரசு கேட்க வேண்டும்.
5.            தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில் நுட்பக் கல்வி என பல துறைகளிலும் உள்ள கல்வி யாளர்களை அழைத்து, இந்த வரைவு அறிக்கை பற்றிய மிக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
6.            மூன்றாவது வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி விருப்பப்பாடமாகவும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றா வது மொழி கட்டாயமாகவும் கற்க வேண்டும் என்பதெல்லாம் சிறிய வயதிலேயே மொழிச் சுமையைச் சுமத்தி, மாணவர்கள் இடையில் நிற்கும் (Drop Outs) ஆபத்து புதிய கல்விக் கொள்கையில் பதுங்கி இருக்கிறது.
7.            இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமையைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள் ளிட்ட சமுகநீதிக்கு எதிரான, கல்வியை முழுமையாக வணிக மயமாக்குகின்ற இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.
8.            இந்திய பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாக திரும்பப்பெறப்பட வேண்டும் என திராவிடர் கழக தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.
ஔ. மத்திய அரசு தொகுப்பில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒவ்வொரு மாநிலமும், 15 விழுக்காடு இடங்களை மத்திய அரசிற்கு ஆண்டுதோறும் தருகின்றன. மேல்படிப்பு (PG MEDICAL COURSE) இடங்களில் 50 விழுக்காடு இடங்களையும் மத்திய அரசு பெறுகிறது. இந்த இடங்களுக்கு அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல், பட்டப்படிப்பு மற்றும் மேல்படிப்பு இந்த இரண்டு படிப்புகளுக்குமான இடங்களில், மாநிலத் தொகுப்பில் இருந்து பெறப்படும் இடங்களுக்கு, பிற்படுத்தப்பட்ட சமுக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படுவது இல்லை. மத்திய அரசே நடத்தும் இ.எஸ்.அய். உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டோருக்கு தரப்படுகிறது.
இதன் காரணமாக ஆண்டுதோறும், ஆயிரக்கணக் கான இடங்கள், பிற்படுத்தப்பட்ட சமுக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் தரப்பட வேண்டிய இடங்கள், பொதுப் போட்டி என்ற பெயரில் உயர்ஜாதி யினர்க்கு தரப்படுகின்றன. 2017-2018 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2000 இடங்கள் இதுபோல் உயர்ஜாதியினர்க்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையிலும் இந்த சமுக அநீதி தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு தரப்பட்ட சுமார் 879 இடங்களில் ஒரு இடம் கூட பிற்படுத்தப் பட் டோருக்கு கிடையாது என்பது மிகப் பெரிய கொடுமையும் அநீதியுமாகும். இந்த சமுக அநீதியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்ப வேண்டும். அரசமைப்பு சட்டத்தின்படியான இட ஒதுக்கீடு உரிமை பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த ஆண்டே வழங்கப்பட வேண்டும் என திராவிடர் கழக தலைமை செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4 :
சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு
’திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநகரில் திராவிடர் கழகத்தின் பவள விழாவை (75ஆம் ஆண்டு விழாவை) எழுச்சியுடனும், வரலாற்றுச் சிறப்புடனும் பேரணியோடு மிகச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 5:
அமைப்புப் பணிகள் - பிரச்சாரத் திட்டங்கள்!
திராவிடர் கழகத்தின் அமைப்புப் பணிகள் - களப் பணிகள் - பிரச்சாரப் பணிகளை முழு வீச்சுடன் செயல் படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(அ)        கிராமப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள்.
(ஆ)       சுவர் எழுத்துப் பணிகள்
(இ)        துண்டு அறிக்கைகள் வெளியீடு.
(ஈ)         இளைஞர்கள், மாணவர்கள், மகளிரைக் கழகத் திற்குப் புதிதாக சேர்க்கும் பணி.
(உ)        பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துதல்.
(ஊ) புத்தகச் சந்தைகளை நடத்துவது, ஏடுகளுக்குச் சந்தாக்களைச் சேர்ப்பது
(எ)         மாவட்டம், ஒன்றியம், கிராமக் கழகக் கூட்டங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டி, கழகப் பணிகளுக்கான திட்டங்களை வகுத்தல்.
அமைப்புச் செயலாளர்கள் இந்த அடிப்படைப் பணி யில் கவனம் செலுத்தி ஒருங்கிணைத்துச் செயல்படுதல்.
(ஏ)         கழக உறுப்பினர்கள் விடுதலை சந்தாதாரராக இருப்பதை உறுதிபடுத்துதல் சிறப்பானது என்றும் தலை மைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 6 :
மக்கள் விரோதத் திட்டங்களை கைவிடுக
மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய இடங்களிலும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத் தொழில் களில் ஈடுபட்டு இருக்கும் ஊர்களிலும் அய்ட்ரோகார்பன், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, நச்சு விளைவுகளை ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும் பதிப்பு, நச்சு விளைவுகளை ஏற்படுத்தும், நச்சு விளைவுகளை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் ஸ்டெர் லைட் போன்ற ஆலைகள், சேலம் எட்டுவழிச்சாலை ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பதும், அவற்றைத் தொடர்ந்து முழுவீச்சில் உருவாக்குவதற்கு அரசு அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவதும், மக் களின் வாழ்வுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரபாயத்தை ஏற்படுத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், பொது மக்கள் மீது அடக்கு முறையை ஏவுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
மின் உற்பத்திக்காகவே கூடங்குளம் அணு உலை என்று சொல்லிவிட்டு தற்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மய்யம் தொடங்குவது என்று அறிவித்திருப் பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
மக்கள் எதிர்ப் புக்குப் பயந்து பல்வேறு மாநிலங்களிலு மிருந்து விரட்டப் பட்ட இத்தகைய ஆபத்தான திட்டங்களை தமிழ் நாட்டின் மீது திணிப்பது உள்நோக்கம் கொண்டது என்றே கருத முடிகிறது. வளம் கொழிக்கும் தொழில் நிறுவனங்களை மூடும் தொழில் நிறுவனங்களை மூடும் மத்திய அரசு ஆபத்தான திட்டங்களை தமிழ் மக்கள் மீது திணிப்பது வஞ்சம் தீர்க்கும் செயல் என்றே கருதப்பட முடியும்.
மத்திய அரசின் இத்தகைய திட்டங்களுக்கு தமிழ் நாட்டை ஆளும் அதிமுக அரசு தலையாட்டிக் கொண்டே இருப்பது மக்கள் விரோதச் செயலாகும். இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கண்டிப்பதோடு, இத் திட்டங்களை, தொழிற்சாலைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- விடுதலை நாளேடு, 29.06.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக