திங்கள், 29 ஏப்ரல், 2019

"குகைகளை விட்டு சிங்கங்களே வெளியே வருக!''

விஞர் கலி.பூங்குன்றன்




சென்னை, ஏப்.28 திராவிடர் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் எத்தனையோ முறை நடந் துள்ளன. ஆனாலும், நேற்று (27.4.2019) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட திராவிடர் கழக தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே சொல்லவேண்டும்.

17 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் இத்தகையதோர் கூட்டம் - தேவையின் அடிப்படையிலும், கசப்பான அனுபவங்களின் எதிரொலியிலும் அமைந்தது என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

மாநிலம் தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் எடுத்து வைத்த கருத்துகள், வெளியிட்ட சில தகவல்கள் பல்வேறு எண்ணங்களின் வண்ணக் கலவையாகும்.

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி புரட்சிகரமான எண்ணங்களை எடுத்துச் சொன்னபொழுது, பக்தியிலும், மூடத்தனத்திலும் மூழ்கிக் கிடந்த நம் மக்கள், எதிர்வினை ஆற்றியதுண்டு. தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் பாம்பை விட்டதுண்டு. முரட்டுக் காளைகளை விரட்டிவிட்டதுண்டு. கழுதையின் வாலில் வெடியைப் பற்ற வைத்து கூட்டத்திற்குள் ஊடுருவ விட்டதும் உண்டு.

முட்டைக்குள் மலத்தை வைத்து முகத்துக்கு நேரே வீசியதுண்டு. சின்னாளப்பட்டியில் தந்தை பெரியார் பேசிக்கொண்டு இருந்தபோது சரமாரியான கல் வீச்சுகள், சால்வையை முண்டாசாகக் கட்டிக் கொண்டு பேச்சை நிறுத்தாமல் சொன் மாரி பொழிந்தார் அந்தச் சுயமரியாதைச் சூரியன்.

கூட்டத்தில் இருந்தவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் அந்தத் தென்னாட்டுச் சாக்ரட்டீஸ்.

மாயவரம் நடராசனும், நாகை மணியும், திருவாரூர் தண்டவாளங்களும் புறப்பட்டு தந்தை பெரியார் அவர்களுக்கு மெய்க் காப்பாளர்களாக வலம் வந்தனர்.

அந்தக் காலத்தை எல்லாம் கடந்து யார் கல் வீசி னார்களோ, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினர் தந்தை பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டினர். மாலைக்குப் பதில் பணம் கொடுத்தனர். தந்தை பெரியாருடன் படம் எடுத்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கும் - ஆட்டோ கிராபில் கையொப்பம் பெறுவதற்கும் பணம் கொடுத்து கியூவில் நின்றனர் பிற்காலத்தில்.

தஞ்சையிலே ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், அவர் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு 80 பரிசுப் பொருள்களைக் கொடுத்தபோது - தந்தை பெரியார் பேசினார்.

"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?''


மதுரை வரலாறு படைத்தது!


"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை எட்வர்டு மன்றத்தில் 25.4.2019 அன்று மாலை நடைபெற்றது. 1064 நூல்கள் மேடையிலேயே விற்றுத் தீர்ந்தன. அதற்கான தொகை 80,500 ரூபாயை முதல் தவணையாகக் கழகத் தலைவரிடம் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தே.எடிசன்ராசா, வழக்குரைஞர் கணேசன், எரிமலை, சிவகுருநாதன் ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே அளித்தனர் - பாராட்டுகள்!


எனக்கொரு சந்தேகம் - இதே ஊரில், இதே திடலில் ஒரு காலத்தில் நான் பேசியபோது கல்லால் அடித்தார்கள்; காலித்தனங்களில் ஈடுபட்டனர். அதே ஊரில், அதே திடலில் என் பிறந்த நாள் என்ற பெயரில், இவ்வளவுப் பொருள்களையும் தந்துள்ளனர் என்றால், எனக்கொரு சந்தேகம்! நான் ஏதாவது கொள்கையில் பல்டி அடித்துவிட்டேனா அல்லது உங்களுக்குப் புத்தி வந்தது என்று காட்டிக் கொண்டுள்ளீர்களா?'' என்று கேட்ட தலைவர் உலகத்தில் தந்தை பெரியாரை தவிர வேறு எவராகத்தானிருக்க முடியும்?

அந்தக் கேள்விக்குத் தந்தை பெரியாரே பதிலும் கூறிவிட்டார் அதே நிகழ்ச்சியில்,

என்னைப் பொறுத்தவரை நான் என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரமாகத்தான் இருந்து வருகிறேன். அப்படியென்றால், உங்களுக்குப் புத்தி வந்திருக்கிறது என்று காட்டிக் கொண்டுள்ளீர்கள்'' என்று சொன்ன பொழுது, அப்படியொரு ஆர்ப்பாட்டம்,  சலசலப்பு!

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்னை மணியம்மையார் அவர்கள் மறைந்து 41 ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஆனாலும், இந்த இயக்கம் நடக்கிறதே - முன்பைவிட  வீறுகொண்டு நடக்கிறதே - ஆயிரக்கணக்கான கருஞ் சட்டை இளைஞர்கள் திரள்கிறார்களே என்கிற கோபம், ஆத்திரம் இன எதிரிகளுக்கு - அவர்கள் இந்து' என்ற மதப் போர்வையை அணிந்துகொண்டு பக்தி முகமூடியை அணிந்துகொண்டு, நம் அப்பாவி மக்களைக் கிளப்பிவிட்டு கலகம் விளைவிக்க முயலுகிறார்கள்.

இன எதிரிகள் யார் என்று திராவிட இயக்கத்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் அதனைத் திசை திருப்பிட - சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்தரித்து சூ' காட்டுகின்றனர்.

அந்தச் சூழ்ச்சியையும், பித்தலாட்டத்தையும் அம் பலப்படுத்துகிறதே இந்த திராவிடர் கழகம் - அதன் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் பழைய கதையைத் தொடர நினைக்கிறார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் அதிகார சக்திகள் இவர்களுக்கு ஆலவட்டம் சுற்றுவதாலும், பணக்கத்தைகளை வாரி இறைப்பதாலும், மலிவாக விலை போகும் மனிதர்கள் இந்தச் சமுதாயத்தில் கிடைப்பதாலும், அவர்களைக் கொண்டு, காலித்தனத்தில் இறங்கி திராவிடர் கழகப் பிரச்சாரத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் கூட்டங்களை முடக்கவேண்டும்  - வன்முறையால் அடக்கவேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் - நிகழ்ச்சிகள்


திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (27.4.2019) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அழைப்பு அனுப்பப்பட்ட 200 தோழர்களில் 165 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.


மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் - சட்டக் கல்லூரி மாணவி மதிவதினி கடவுள் மறுப்பு வாசகங்களைக் கூறிட, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.


பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித்துளி அமைதி காத்தனர்.


தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அண்மைக் காலத்தின் நாட்டு நடப்புகள், கழக செயல்பாடுகள், சந்தித்த பிரச்சினைகள், தேர்தல் பரப்புரை - பரப்புரையின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் - காவல்துறையிடம் நமது புகார்கள் பற்றி ஒரு விரிவான அறிக்கையை வழங்கினார்.


கழகப் பொறுப்பாளர்கள் அளித்த செயல் திட்டங்களைத் தெரிவு செய்து, 30 அம்சங்களைக் கொண்ட அந்தத் திட்டங்களையும் நிரல்படுத்தினார்.


தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன்ராசா, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தூத்துக்குடி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பால்.இராசேந்திரம், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி,  மாநில வழக்குரைஞரணித் துணைத் தலைவர் மதுரை கணேசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் செந்தமிழ்ச் செல்வி, சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், புதுக்கோட்டை மண்டலக் கழகத் தலைவர் பெ.இராவணன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டும் நிறைவுரையை வழங்கினார்.


கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி நன்றி கூறிட, பிற்பகல் 3 மணிக்குக் கலந்துரையாடல் நிறைவு பெற்றது. அனைவருக்கும் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது.


அட அடிமுட்டாள்களே, அடிக்க அடிக்க எழும் பந்து இது. அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் இது. சுடச்சுட ஒளிரும் பொன்னிது - என்பதை அறியாமல் ஆட்டம் போடுகிறார்கள் - அவர்களின் வாலை நறுக்கக் கிளம்பிற்றுக் காண் வீரச் சிங்கப் பட்டாளம் என்பதன் வீச்சுதான் நேற்றைய பெரியார் திடல் சங்கமம்.

அவர்களின் பேச்சில் கோபக்கனல் இருந்தது - அதிலும் கொள்கை மணம் கமழ்ந்தது!

நம்முடைய பிரச்சாரக் கூட்டம் முன்னிலும் அதிகமாக நடக்கவேண்டும் - கழகப் பிரச்சாரக் கூட்டங்கள் எங்கெங்கும் நடந்துகொண்டே இருக்கவேண்டும் - தேன் கூட்டில் கை வைத்து விட்டோமே என்று எதிரிகளும், துரோகிகளும் கலக்கமடையவேண்டும்.

வன்முறைக்கு போகவேண்டாம் - அதில் நமக்கு உடன்பாடில்லை - அப்படிச் சொல்லியும் அய்யா நம்மை வளர்க்கவும் இல்லை.

ஆனால், நமது செலவில் முறைப்படி காவல்துறை அனுமதியும் பெற்று கூட்டம் நடத்தினால், எவ்வளவுக் கொழுப்பு' இருந்தால் நமது கூட்டத்திற்கே வந்து கலகம் விளைவிப்பார்கள் - காவல்துறையின் கண்ணெதிரே இவை நடக்கின்றன என்றால், இது காவல்துறையா? ஏவல் துறையா? என்ற கேள்வி எழுகிறதல்லவா!

இதனைத்தான் நமது தோழர்கள் எடுத்து வைத்தார்கள். நாம் யாருக்காகப் பிரச்சாரம் செய்யப் போகிறோமோ, அவர்களே பல இடங்களில் கண்டுகொள்வதில்லை என்ற தோழர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ளத்தக்கதே!

தோழர்களின் கனல் கக்கும் உரைகளையும், உணர்வு களையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் - அய்யாவின் அணுக்கத் தீயில் புடம் போட்ட சொக்கத் தங்கம் அல்லவா - எனக்குப் பின் வீரமும், துணிவும், உணர்ச்சியும் கொண்ட ஒருவன் தலைவனாக வருவான், கழகத்தை வழி நடத்துவான் என்று சிவகங்கையில் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு சொன்னார்களே, அந்த வகையில் வரலாறு நமக்குத் தந்த தலைவர் வீரமணி அவர்கள் 50 மணித்துளிகள் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் கோடி பொன் பெறும்.

எதிர்ப்புகள் தான் நமக்கு உரம் - எதிர்ப்பு நீச்சலில் வளர்ந்ததுதான் நமது கழகம் - எதிர்ப்புகளை நான் வரவேற்கிறேன் - எதிர்ப்புகள் வரும்போது நாம் உற்சாகம் பெறுகிறோம் - முன்பைவிட இன்னும் வேகமாகப் பணியாற்ற நாம் துடிக்கிறோம் என்பதை இங்கே பேசிய தோழர்களின் உணர்வே அதனை எடுத்துக்காட்டுகிறது.

குமரிமுதல் திருத்தணிவரை உள்ள இயக்கப் பொறுப்பாளர்கள் வேறு எந்த நேரத்திலும் வராத அளவுக்குத் திரண்டுள்ளீர்களே - இதற்குக் காரணம் இந்த எதிர்ப்புகள்தானே என்று கழகத் தலைவர் எடுத்துக்காட்டியபோது பலத்த ஆரவாரம் - கரவொலி!

இயக்கத்தைப் பலப்படுத்துங்கள், மேலும் இளை ஞர்களை இயக்கத்தை நோக்கி அழைத்து வாருங்கள் - எங்கும் வாரந்தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள்.

65 மாவட்டங்கள் என்றால், 650 சமுகக் காப்பு அணிக்கான இளைஞர்களை ஈர்த்து பயிற்சி களைக்கொடுங்கள். மக்கள் தொண்டாற்றும் பயிற்சிகளைக் கொடுங்கள். கஷ்ட காலத்தில் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்ற வழிமுறைகளைக் கற்றுத்தாருங்கள். கழகக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேர்த்தியாக எப்படி எப்படியெல்லாம் செய்வதற்கான பயிற்சிகளை நன்முறையில் அளியுங்கள்!

இந்த இயக்கத்தின் வளர்ச்சி நாட்டுக்கான வளர்ச்சி - இன நலனுக்கான வளர்ச்சி! இது நிலைநாட்டப்பட்டால் எனக்கென்று தனிப் பாதுகாப்புத் தேவைப்படாது என்று கூறிய கழகத் தலைவர் - நம்முன் நிற்கும் பிரச்சினைகளைப்பற்றி ஆழமாக எடுத்துரைத்தார்.

நாம் தி.மு.க.வையோ, அதன் கூட்டணிக் கட்சி களையோ ஆதரிப்பது - அவர்களுக்காக அல்ல - நமது கொள்கையின் அடிப்படையில்தான் ஆதரிக்கிறோம்!

இந்த அணி வெற்றி பெற்றால்தான் மதச்சார் பின்மைக்கும், சமுகநீதிக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் ஆதரிக்கிறோம். இந்த நிலையில், அவர்கள் நமக்கு உதவிக்கு வருகிறார்களா - ஆதரவு காட்டுகிறார்களா, மதிக்கிறார்களா என்ற கேள்விக்கே இடமில்லை.

ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதற்கான அணுகுமுறையைத் தந்தை பெரியார் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அப்படி தந்தை பெரியார் தந்த புத்தி இருக்கிறதே, அதில் சபலத்துக்கு இடமில்லை, சுயநலத்துக்கும் இடமில்லை.

அந்த அடிப்படையில்தான் நாம் எந்தப் பிரச்சி னையையும் அணுகுகிறோம் - அணுகவும் வேண்டும்.

திராவிடர் கழகத்தையும், தி.மு.க.வையும் எதிர்ப்பதில் எதிரிகள் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வீரமணியிடமிருந்து விலகி இருக்கவேண்டும்'' - துக்ளக்' குருமூர்த்தி) நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் - ஊடகங்களின் துணை கொண்டு - இதில் நாம் ஏமாந்துவிடக் கூடாது - விழிப்போடு இருக்கவேண்டும் - தி.மு.க.வே ஆட்சிக்கு வரவேண்டும்.

ஒன்று முக்கியமானது; திராவிடர் கழகத்தின் சமு தாயக் கொள்கைப் பலத்தால்தான், பிரச்சாரத்தால்தான் நமக்கான அரசியலையும் இங்கே உருவாக்க முடியும்.

திராவிடர் கழகப் பிரச்சாரத்தால் அரசியலிலோ, தேர்தலிலோ நாம் ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பலகீனம் ஏற்பட்டு விடாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் வகுத்த திராவிட இயக்கக் கொள்கைதான், உழைப்புதான் ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டின் வரலாறு என்பதை மறந்துவிடக் கூடாது - இதனைப் புரிந்துகொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ தவறு இழைத்தால் நமது பலத்தை நாமே பலகீனப்படுத்துபவர்களாக ஆகிவிடுவாம் என்ற பொருளில் தமிழர் தலைவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

தேர்தலுக்குச் சம்பந்தமில்லாத முறையில் கிருஷ் ணன் பற்றி நாம் பேசியதை இந்தத் தேர்தலில் நமது இன எதிரிகள், காவிகள் பெரும் அளவுக்குப் பிரச்சாரம் செய்து, நாம் ஆதரிக்கும் கட்சிகளுக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றை உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள் - இதிலும் அவர்கள் தோல்வியைத்தான் அடைவார்கள் - வெற்றி பெறவே முடியாது.

1971 ஆம் ஆண்டு ஜனவரியில் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை மய்யப்படுத்தி, ராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கிற தி.மு.க.வுக்கா ஓட்டு என்று சுற்றி வளைத்துப் பிரச்சாரப் புழுதியைப் புயல் போல கிளப்பினார்கள்.

தேர்தல் முடிவு எதுவாக அமைந்தது? 1967 ஆம் ஆண்டில் 138 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. 1971 ஆம் ஆண்டில் 184 இடங்களில் வெற்றி பெற்றது நினைவில் இருக்கட்டும்!  இப்பொழுதும் அதே நிலைதான் தொடரும். காரணம், இது பெரியார் மண் - திராவிட இயக்கத்தால், சுயமரியாதை இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்ற வரலாற்றுத் தகவல்களை - அய்யாவின் பாடங்களை தமிழர் தலைவர் சொல்லிக் கொடுத்தார். நமது கொள்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், ஏன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எசுக்குக் கடும் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம் நமது இயக்கம்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நாகர்கோவிலில் அவருக்குப் பெரியார்பற்றிய  ஆங்கில நூலை கொடுத்தது நன்கு வேலை செய்துள்ளது. (அதை மோடிக்கும் கொடுத்துள்ளார்).

நிறைவாக தந்தை பெரியார் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கூறிய அருமையான பொறுக்கு மணி போன்ற ஒரு கருத்தை முத்தாய்ப்பாக எடுத்துக்காட்டினார்.

"நமது இலட்சியங்கள் பெரிதும் வாலிபம் நிறைந்தவை. எனவே, வாலிப உலகு, இந்த இலட்சியங்களை நாம் வெற்றிகரமாகப் பெற முன்வந்து உதவவேண்டும்.


நாம் நடத்துவது பெரும் போர், இதிலே கொதிக்கும் ரத்தமும், கொள்கையில் பற்றும், எத்துணை எதிர்ப்புக்கும் அஞ்சா நெஞ்சமும் படைத்த வாலிப சிங்கங்கள் தேவை. அவைகள் தங்கள் சொந்த வாழ்க்கை எனும் குகைகளை விட்டு வெளி வந்து கர்ஜிக்க வேண்டுகிறேன்.


தோழர்களே, நாம் உண்மையில் வெற்றி பெறவேண்டுமானால், நாம் தியாகம் செய்தே தீரவேண்டும். சிலருடைய பொருள், நேரம், உங்கள் அனைவரின் உழைப்பு, அர்ப்பணம் செய்யப்படவேண்டும். சிலரின் தொழில் வாழ்வு, உத்தியோகம் கெடினும் கவலையில்லை. முதலில் நமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வோம் என்ற உணர்ச்சி கொண்டு ஒற்றுமையுடன் தமிழர் பணியாற்ற வரும்படி உங்களை அன்புடன் அழைத்து மறுபடியும் உங்கள் பேரன்புக்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு எனது தலைமை உரையை முடிக்கிறேன்.''


என்று இன்றைக்கு 80 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் பேசிய பேச்சினை, விடுத்த வேண்டுகோளை மிகப்பொருத்தமாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டினார்.

குகைகளை விட்டு வெளியே வாருங்கள் சிங்கங்களே! குல்லூகப் பட்டர் பரம்பரை குதித்தாடும் குரங்குகளாகக் குதிக்க ஆரம்பித்துள்ளன! அதன் வாலை நறுக்கக் கொள்கை வாளாக - கட்டுப்பாடு காக்கும் கவசங்களாக - தொண்டறம் புரியும் தூய தொண்டர்களாக பணியாற்றிட இருபால் இளைஞர்களே வாருங்கள்! வாருங்கள்!! என்ற அழைப்பைக் கொடுத்தது நேற்றைய கலந்துரையாடல்! புது ரத்தம் பாய்ச்சப்பட்ட உணர்வோடு தோழர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!! பிரச்சாரம் அடை மழையாகப் பொழியட்டும்! பொழியட்டும்!! கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட திட்டங்கள் தீரமுடன் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

நாளை நமதே!!!

இரங்கல் தீர்மானம்


27.04.2019 சனியன்று சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்:

இரங்கல் தீர்மானம்


மேனாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88, மறைவு 29.1.2019), தமிழ் அறிஞர் பெருமகனார் சிலம்பொலி செல்லப்பன் (வயது 91, மறைவு 6.4.2019), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், எண்ணற்ற நூல்களின் ஆசிரியர் க.ப.அறவாணன் (வயது 78, மறைவு 22.12.2018), கல்வெட்டு ஆய்வாளரும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவரும், தினமணியின் மேனாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் (வயது 88, மறைவு 26.11.2018), கூத்துப்பட்டறை முத்துசாமி (வயது 82, மறைவு 24.10.2018), மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி (வயது 58, மறைவு 13.10.2018), மலேசிய இந்தியன் காங்கிரஸ் மேனாள் துணைத்தலைவர் ஜோகூர் டான்சிறீ கோ.பாலகிருஷ்ணன், அமெரிக்க தமிழ்ச் சங்க நிறுவனர் சாக்ரட்டீஸ் வாழ்விணையர் பூவழகி (22.10.2018), பெரும்புலவர் தமிழகப் புலவர் குழுவின் தலைவர் பெரும் புலவர் அரங்கசாமி (வயது 97, 19.11.2018), மும்பை பெருநகர திமுக துணைச் செயலாளர் அமீரா மீரான் (8.12.2018).

சென்னை பெரியார் திடல், பெரியார் மணியம்மை மருத்துவமனை மேனாள் இயக்குநரும், சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இன உணர்வாளருமான டாக்டர் வி.பி.நாராயணன் (வயது 79, மறைவு 9.12.2018), பேராசிரியர் ரெஜினா பாப்பா, சீரிய ஆங்கில எழுத்தாளரும், சென்னை வரலாற்றை காலவரிசைப்படி கட்டுரைகள் வடித்தவருமான எஸ்.முத்தையா (வயது 89, 22.4.2019) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நமது அரும்பெரும் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி  (வயது 72, மறைவு 4.12.2018)

தந்தை பெரியாரின் தனிச் செயலாளரும், திராவிடர் கழக அறக்கட்டளை உறுப்பினருமான திருச்சி தி.மகாலிங்கன் (வயது 89, மறைவு 25.11.2018)

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில பொதுச் செயலாளரும் கல்வியாளருமான கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 12.3.2019, உடற்கொடை)

மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் (வயது 69 - மறைவு 31.10.2018)

சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் கூடுவாஞ்சேரி மன்னார் (வயது 85 - மறைவு 21.11.2018)

விருதாங்கநல்லூர் எல்.மணி (5.2.2019)

கழகப் பொதுக்குழு உறுப்பினர் கரூர் கவிஞர் பழ.இராமசாமி, தஞ்சை சாலியமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வெ.துரைராசன் (வயது 84, மறைவு 14.11.2018)

கழகப் பொதுக்குழு உறுப்பினர் திண்டிவனம் டாக்டர் வே.மணி (3.11.2018), இலால்குடி கீழவாளாடி பெ.அமராவதி (9.10.2018), கரூர் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பெருங்கவிஞர் பாரி (வயது 80, மறைவு 24.10.2019), சேலம் தாதகாப்பட்டி அங்கம்மாள் (வயது 85, மறைவு 30.10.2018, உடற்கொடை).

கடலூர் மாவட்டக் கழக மகளிரணி தலைவர் சீனியம்மாள் (வயது 70- 20.10.2018 - உடற்கொடை)

மன்னை எடமேலையூர் கழகத் தலைவர் மீசை எம்.சவுந்தரராசன் (14.11.2018)

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பெரியார் பெருந்தொண்டர் கூ.கர்ணன் (வயது 106, மறைவு 25.11.2018).

திருச்சி ஜெயில்பேட்டை மாதவன் (வயது 70, 25.11.2018)

நெல்லை மாவட்டம் சிவகளை கழக வீராங்கனை கஸ்தூரி (வயது 71, மறைவு 26.11.2018, உடற்கொடை).

காட்டுமன்னார்குடி நத்தமலை சுயமரியாதை வீரர் க.பன்னீர்செல்வம் (வயது 61, மறைவு 27.11.2018).

மதுரை மாவட்ட மேனாள் மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி (வயது 64, மறைவு 1.12.2018)

திருத்துறைப்பூண்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ந.பழனிவேல் (வயது 64 - மறைவு 3.12.2018, உடற்கொடை)

திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் சோழங்கநல்லூர் இராமமூர்த்தி (7.12.2018)

பாபநாசம் பெரியார் பெருந்தொண்டர் உ.குணசேகரன் (10.12.2018), தஞ்சை காவளூர் பெரியார் பெருந்தொண்டர் சி.தங்கவேல் (வயது 84 - மறைவு 4.12.2018), தஞ்சை அம்மாப்பேட்டை நெய்க்குன்னம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.நடராசன் (வயது 97 - மறைவு 3.12.2018), காளாஞ்சிமேடு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.சுப்பையன் (வயது 97 - மறைவு 18.12.2018), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் மஞ்சக்குடி பி.சிவானந்தம் (வயது 87, மறைவு 20.12.2018)

தருமபுரி, வரகூர் பெரியார் பெருந்தொண்டர் வி.பி.முனுசாமி (வயது 82, மறைவு 16.12.2018)

அறந்தாங்கி மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.கண்ணுசாமி (வயது 90, மறைவு 2.1.2019),

முதுபெரும் பெரியார் ருநதொண்டர் திருவாரூர் பி.எஸ்.அகமதுபாய் (வயது 90, மறைவு 25.12.2018)

தென்சென்னை கழக மகளிரணி மேனாள் தலைவர் ந.நீலாயதாட்சி (வயது 92, மறைவு 2.1.2019)

காரைக்கால் நிரவி பெரியார் பெருந்தொண்டர் பெரிய நாயகம் (வயது 80, மறைவு 17.1.2019),

மன்னார்குடி மேலவாசல் பெரியார் பெருந்தொண்டர் கோ.அப்பராசு (19.1.2019)

மயிலாடுதுறை கழகத் தோழர் எஸ்.இராமநாதன் (15.1.2019)

திருத்துறைப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆசைத்தம்பி (வயது 60, மறைவு 25.1.2019)

ஓசூர் நகர திராவிடர் கழக செயலாளர் பெ.செல்லதுரை (வயது 53, மறைவு 27.1.2019)

நாகை திருப்புகலூர் பெரியார் பெருந்தொண்டர் வை.சோமு (வயது 95, மறைவு 31.1.2019)

லால்குடி மாவட்டம் ஆங்கரை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உலகநாதன் (வயது 89, மறைவு 3.2.2019),

தருமபுரி மாவட்டம் சாலிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நந்திக் கண்ணன் (11.2.2019),

கண்கொடுத்தவனிதம் ஏ.இலட்சுமணன் (வயது 70, மறைவு 18.2.2019)

வேலூர் சத்துவாச்சாரி பெரியார் பெருந்தொண்டர் மு.பெருமாள் (வயது 76, மறைவு 20.2.2019)

திருக்கோவிலூர் நகர திராவிடர்கழக செயலாளர் தி.பி.சண்முகம் (24.2.2019)

தி.மு.க. இலக்கிய அணி முன்னாள் செயலாளர் திருவில்லிபுத்தூர் ச.அமுதன் (வயது 81, 17.3.2019)

கழக சொற்பொழிவாளர் கோபி கருப்பண்ணன் (18.3.2019)

சிதம்பரம் பூந்தோட்டம் பெரியார் பெருந்தொண்டர் மா.சுப்பிரமணியன் (வயது 85, மறைவு 20.3.2019).

செயங்கொண்டம் உட்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சி.பரமசிவம் (வயது 84, மறைவு 21.3.2019)

நெல்லை சுள்ளிக்குளம் கோவிந்தராசு (21.3.2019)

கரூர் மாவட்டம் திராவிடர் கழகத் துணைச் செயலாளர் தி.செல்வராசு (வயது 52, மறைவு 24.3.2019)

திருவாரூர் எருகாட்டூர் மாசிலாமணி (26.3.2019),

ஆவடி கழகத் தோழர் ஜெ.இராமப்பா (வயது 57, மறைவு 28.3.2019)

தருமபுரி பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இளங்கோ (வயது 93, மறைவு 1.4.2019, உடற்கொடை)

தாராபுரம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ப.வடிவேல் (வயது 78, மறைவு 13.4.2019, உடற்கொடை)

ஒட்டன்சத்திரம் சுயமரியாதை வீரர் க.முத்துசாமி (வயது 91, மறைவு 14.4.2019),

சிதம்பரம் பெருமத்தூர் கணபதி (வயது 74, மறைவு 16.4.2019), திருப்பூர் - மேட்டுப்பாளையம் தோழர் உ.பொன்னுசாமி (6.4.2019), பகுத்தறிவாளர் தோழர் செம்மல் (வயது 69, மறைவு 7.11.2018), மும்பை மேனாள் கழக செயலாளர் தருமராசன் (வயது 61, 8.11.2018), சங்கரன்கோவில் பெரியார் பற்றாளர் தி.ஆ.நாராயணசாமி (வயது . ), கிருட்டிணகிரி மாவட்டம் பையூர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ப.பெரியசாமி (மறைவு 12.7.2019), குடந்தை பெரியார் பெருந்தொண்டர் கோ.துரைசாமி (வயது 105) நெய்வேலி மணிமேகலை மருதப்பிள்ளை (வயது 92 - 4.2.2019). ஆகிய தோழர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது துயரத்தைத் தெரிவிப்பதுடன் இப்பெரு மக்களின் அளப்பரும் இயக்கத் தொண்டுக்கு, ஈகத்திற்கு இக்கூட்டம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவர்களின் பிரிவால் ஆறாத துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினர்க்கும் உற்றார், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் இக்கூட்டம் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது..

- விடுதலை நாளேடு, 28.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக