திங்கள், 29 ஏப்ரல், 2019

கழகப் பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கட்டும், நடக்கட்டும்! பாதுகாப்பு ஏற்பாடுகளை நமக்கு நாமே செய்துகொள்வோம்!


காவல்துறையை நம்பிப் பயனில்லை

மாநில - மண்டல - மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை, ஏப்.27 மாநில அளவில் திராவிடர் கழகக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கை வருமாறு:

திட்டக் குறிப்புகள்!

1. இணைய தளப் பிரச்சார அணி

2. கிராமப்புறப் பிரச்சாரம்

3. தெருமுனைப் பிரச்சாரம்

4. கூட்டத் துண்டு அறிக்கையின் பின்பக்கத்தில் கழக முக்கிய கொள்கைகள் இடம்பெறவேண்டும். துண்டறிக்கைகள் அளிப்பு வெளியீடு தொடர் பணியாக அமைதல் அவசியம்.

5. மாணவர்கள் மத்தியில் சமுகநீதி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பிரச்சாரம்

6. முக்கிய இடங்களில் கொடி மரங்கள்

7.முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர்ப் பொதுப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி இருக்கக்கூடாது.  தேவைப்பட்டால் நாமே முன்னெடுத்து நடத்தலாம், மற்றவர்களின் ஒத்துழைப்போடு. (கழகத் தலைமையின் அனுமதியோடு)

8. கழகக் குடும்பங்களின் கலந்துரையாடல்கள்

9. கிராமங்களில் பெண்கள்பற்றிய பிரச்சினை, உடல்நலம், குழந்தைகள் பராமரிப்பு, வளர்ப்பு, கல்வி  வழிகாட்டல்கள்.

10. பெண்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள், பாது காப்புகள்பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்

11. பெரியார் பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள்,  அன்னை மணியம்மையார் பிறந்த நாள், புரட்சிக்கவிஞர் பிறந்த நாள், ஆசிரியர் பிறந்த நாள் விழாக்கள்,  உலக மகளிர் நாள், மேதினம், தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா, நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள் கொள்கை விழாவாக கொண்டாடப்படவேண்டும்.

12. குற்றாலம், ஒகேனக்கல் என்பதோடு சனி, ஞாயிறுகளில் மாவட்டந்தோறும் பயிற்சிப் பட்டறை.

13. பெரியார் சமுகக் காப்பு அணி வலிமைப்படுத்துதல், பயிற்சிகளைப் பரவலாக அந்தந்த பகுதிகளில்  நடத்துதல், தற்காப்புப் பயிற்சிகள், மாநில அளவில் இதனை ஒருங்கிணைக்க மாநில அமைப்பாளர் ஒருவர் முழு நேரப் பணியாளராக நிமித்தல் - கழகக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பில்  இவர்களின் பங்கு முக்கியப்படுத்தப்பட வேண்டும். 14. தலைமைக் கழகம் அறிவிக்கும் கூட்டங்களை மட்டும் நடத்தினால்போதும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்; பேச்சாளர்களிடம் தேதி வாங்கி கூட்டங்கள் நடத்தும் முறை ஏற்படவேண்டும். மாவட்டப் பொறுப் பாளர் தங்கள் மாவட்டத்துக்கு மூன்று, நான்கு கூட்டங்களுக்குப்  பேச்சாளரிடம் தேதி பெற்று நடத்துவது சிறப்பானதாகும்.

இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணியினர் தத்தம் அமைப்புகள் சார்பாக கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் நடத்துதல் அவசியம்.

15. பேச்சாளர்கள் பயிற்சி, களப்பணி பயிற்சி, மந்திரமா? தந்திரமா? பயிற்சி நடத்தி புதிய தோழர்கள் உருவாக்கப்படவேண்டும்.

16. ஆண்டுக்கு ஒருமுறை கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மாவட்டம் அல்லது மண்டல வாரியான கலந்துரையாடல் கூட்டங்கள்.

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ஒன்றிய, நகர, கிளைக் கழகக்கூட்டங்களை மாவட்டத் தலைவர், செயலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்துதல்.

17. ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - குறிப்பிட்ட காலத்தில் என்பதாக மட்டும் அல்லாமல், அது அன்றாட தொடர் பணியாக இருத்தல். திருமணம் முதலியவைகளுக்கு அன்பளிப்பு - சந்தாவாக அளித்தல்.

18. புத்தகச் சந்தைகள் ஆண்டு முழுவதும் சுழன்று கொண்டே இருக்கும் வகையில் திட்டமிடல்.

19. முழு இரவு கலை நிகழ்ச்சிகள் முக்கிய நகரங்களில் - முக்கிய ஒன்றிய தலைநகரங்களில்.

20. பல்வேறு கட்சிகளில் உள்ள பகுத்தறிவாளர்களை, இன உணர்வாளர்களை இணைக்கும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சிகளை குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை நடத்துதல்.

21. பகுத்தறிவுக் கரும் பலகைத் திட்டம் - சுவர் எழுத்துப் பணிகள்.

22. பெரியார் ஆயிரம் ஆண்டுதோறும் நடை பெறுவதற்கான ஏற்பாடு.

23. பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி பொறுப்பு.

24. தொழிலாளர் அணியைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பணிகள் - துண்டறிக்கைகள், வாயில் கூட்டங்கள், கரும்பலகைப் பிரச்சாரம், தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழிகாட்டுதல்.

25. பெரியார் கல்வி நிறுவனங்கள், அதன் பணிகள் குறித்து - நமது பிரச்சாரத்தினூடே இடம்பெறுதல்.

26. மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு கண்காட்சி - செய்முறைகள், நூல்கள் விற்பனை, உறுப் பினர் சேர்க்கை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஏற்பாடுகள் (பேக்கேஜ்) ஒரு வாகனத்தின்மூலம்  நாடு தழுவிய    அளவில் நடந்துகொண்டே இருக்க ஏற்பாடு.

27. உறுப்பினர் சேர்க்கை

28. பெரியார் படிப்பகங்கள் செயல்படும் தன்மையோடு நடக்க ஆவன செய்யப்படுதல்

29. கழகப் பணிகள், செயல்பாடுகள் இவற்றைக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் முக்கியம்.

30. அமைப்புச் செயலாளர்கள் தத்தம் மாவட்டங்களின் பணிகளை ஒருங்கிணைத்தல், பிரச்சார ஏற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் பொறுப்பாவார்கள்.

தலைமைக் கழகத்திற்கு நேரிடைப் பொறுப்பு அவர்களே!

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டார்கள் என்ற நிலையில், அதனைக் கண்டித்து நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பின.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 12.3.2019 நாளிட்ட விடுதலை'யில் கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி எழுதியிருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி கலாச்சார சீரழிவுக்கான காரணங்கள்'' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிய துக்ளக்' வார ஏட்டில் (27.3.2019, பக்கம்6).

இந்தக் கலாச்சார சீரழிவுக்கு விதை போடப்பட்டது ஈ.வெ.ரா. காலத்தில்தான் என்றும், அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்து வருகிறார் என்றும்'' அபாண்டமாக வீண்பழி சுமத்தி, உண்மைக்கு மாறாக எழுதியிருந்தது துக்ளக்.'

இது உண்மைக்கு மாறானது என்றும், வாழ்நாள் முழுவதும் பொது ஒழுக்கத்தை ஓம்பியவர் தந்தை பெரியார் என்றும், ஒழுக்கக்கேடுகளுக்கு வித்திடுவது மதம்தான் என்றும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றில் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துப் பேசினார் (22.3.2019).

திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் பிழை இருக்கிறது - குற்றமிருக்கிறது என்று கருதினால், அவற்றை மறுத்து உரையாற்றலாம், கட்டுரைகள் தீட்டலாம்; ஆனால், கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத பார்ப்ப னர்கள் 30.3.2019 அன்று இந்து ஆலயங்கள் மீட்பு'' என்ற பெயரில் சென்னை பார்த்தசாரதி கோவிலில் கூடியும் - 30.3.2019 அன்றே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியும் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்பற்றியும் மிகவும் கீழ்த்தரமாகவும், கொச்சையாகவும் பேசியுள்ளார்கள். EV Ramasamy Rascal என்றும்,  Bloody  கேடி வீரமணி என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

அதுகுறித்து ஆதாரங்களை இணைத்து காவல்துறைத் தலைமை இயக்குநர் அவர்களுக்கு (5.4.2019) சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையருக்கும் (17.4.2019) புகார் கொடுக்கப்பட்டது.

சி.பி.மீடியா யூடியூப் இணையத்தில் பேசப்பட்ட அந்தத் தரக்குறைவான பேச்சுகள் அடங்கிய ஆடி யோவும் - எழுத்து வடிவமும் இணைக்கப்பட்டு நேரில் அளிக்கப்பட்டது.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இதற்கிடையில் தினமலர்' வார மலரில் (3.3.2019, பக்கம் 10 இல்) கேள்வி - பதில் பகுதியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்ற அதே ஜாதிக்காரன் (அதாவது பார்ப்பான்) வீரமணியையும் கொல்லுவான் என்ற பொருள்படும்படி எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்தும் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் (5.4.2019), சென்னை பெருநகர ஆணையருக்கும் புகார் மனு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைக் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது.

சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையரின்  5.4.2019 நாளிட்டக் கடிதத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லையென்று சட்டத் துறை கூறுவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து நிவாரணம் தேடிக் கொள்ளுமாறும் பதிலிறுக்கப்பட்டுள்ளது.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.

திருச்சியில் நடந்தது என்ன?

திருச்சி நாடாளுமன்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரிக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடைபெற்றன.

ஆனால், அந்தத் தேதியில் பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. காவல்துறை ஏன் அப்படியொரு தவறான தகவலை சொல்ல வேண்டும்?

முதல் கூட்டம் பெரம்பலூரில் முடித்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர், பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்,

அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது.

இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள்.

"கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்" என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் - திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்து வைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்களும் செவிமடுத்தனர்.

சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு, தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு, கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்கினர். இரு சக்கர வாகனங் களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண் டிருந்த திராவிடர் கழகத் தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது,

வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. , கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலை வர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ, மண்டை உடைக்கப்பட்டதோ அவர்கள் மீதே வழக்கைத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை, இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை காவல்துறை நடந்துகொண்ட போக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.

ஒரு தலைவர் பேசி முடித்த பிறகு அவர் பயணம் செய்யும் வாகனத்தைப் பின் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு கொடுப்பது வழக்கம். அதுவும் ஒரு வன்முறை நடவடிக்கை திட்டமிட்டு நடந்த தருணத்தில், சூழ்நிலையில் திருச்சி காவல்துறை அந்தக் கடமையைச் செய்யத் தவறியது ஏன்?

இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை வேடிக்கை பார்த்தது - அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது.

அதைவிடப் பெருங்கொடுமை தாக்குதலுக்குக் காரணமானவர்களையும் தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களையும் சமமான ஒரே கண் ணோட்டத்தில் பார்ப்பதும் பாதிக்கப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மீதே பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறைக்கனுப்புவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

திருச்சி நிகழ்ச்சிக்குப் பிறகு திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் அவர்கள் 5.4.2019 அன்று கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளிலும், 6.4.2019 அன்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், 7.4.2019 அன்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பரப்புரை செய்தார். எந்தப் பிரச்சினையும் இல்லை.

8.4.2019 அன்று பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பொள்ளாச்சியில் கூட்டத்திற்கு அனு மதி மறுக்கப்படுவதாக காவல்துறைத் துணைக் கண் காணிப்பாளரால் கடிதம் கொடுக்கப்பட்டது.

திருச்சியில் ஏப்ரல் 4 சம்பவங்களுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று நாள்கள் பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றுவதற்கு அனுமதியளித்த அதே காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் பொள்ளாச்சிக்கும், மறுநாள் 9.4.2019, 10.4.2019 நாள்களில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும், 11.4.2019 அன்று ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் அனுமதி மறுத்தது எந்த அடிப்படையில்?

ஊருக்கு ஒரு சட்டமா? ஆணையா? என்ற கேள்வி எழுகிறது.

8.4.2019 அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் - திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் மேயருமான மானமிகு செல்வராஜ் அவர்களின் தீவிரமான முயற்சியாலும், சரியான அணுகுமுறையாலும் திராவிடர் கழகத் தலைவர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

திருப்பூரில் தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற காரில், திராவிடர் கழகத் தலைவரைக் குறிபார்த்து கல்லை வீசி உயிருக்கு உலை வைக்க திட்டமிட்டு செயல்படுத்தவும்பட்டது. மயிரிழையில் கழகத் தலைவர் உயிர் தப்பினார் என்றே சொல்லவேண்டும்.

திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் மானமிகு செல்வராஜ் அவர்களின் செயல்திறனும், உரிமைக்காகப் போராடும் குணமும், தாய்க் கழகத் தலைவர் கண்டிப்பாகப் பேசியே தீரவேண்டும் என்ற வைராக்கிய உணர்வுடனும் செயல்பட்டதானது பாராட்டத்தக்கது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எந்த எதிர்ப்பு வந்தாலும், அச்சுறுத்தல் வந்தாலும் எம் பயணம் தொடர்ந்தே தீரும் என்ற - தமிழ் தலைவர் ஆசிரியருக்கே உரித்தான போராட்டக் குணத்தோடு தொடர்ந்து தருமபுரி, திருவள்ளூர், சென்னை மக்களவைத் தொகுதிகளில் தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.

கடைசி நாள், கடைசி கட்ட நேரப் பிரச்சாரத்தையும் தஞ்சையில் நிகழ்த்தியே கழகத் தலைவர் சென்னை திரும்பினார்.

பொள்ளாச்சியில் கழகத் தலைவரின் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, அதே பொள்ளாச்சியில் திராவிடர் கழகத் தலைவரைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு (14.4.2019) அனுமதியளித்தது என் றால், தமிழகக் காவல்துறை அசல் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பதற்கு அடையாளமே!

இதுகுறித்தும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது (15.4.2019).

உரிய முறையில், உரிய காலத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையம் சார்பில் காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாதது - காவல்துறையின் ஒரு சார்பு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது.

திராவிடர் கழகத் தலைவர் - கிருஷ்ணன் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று கூறி, இந்துத்துவா சக்திகள் பல இடங்களில் காவல்துறையிடம் புகாரும் கொடுத்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துவிட்டது. தினமலர்' வார மலரில் கழகத் தலைவர்மீது கொலை வெறியைத் தூண்டும் கேள்வி - பதில் பகுதி குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கழகத் தோழர்கள் ஆங்காங்கே காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கழகப் பிரச்சாரக் கூட்டங்களை விரிவான அளவில் நடத்தித் தீரவேண்டிய காலகட்டம் இது என்பதால், கழகத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், மற்றும் கழகப் பிரச்சார நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைக் காவல்துறையிடம் எதிர்ப்பார்க்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

மம்சாபுரம் (20.7.1982), சென்னை இராயபுரம் (11.4.1985), வடசென்னை புதுவண்ணை (27.4.1985), சேலம் தம்மம்பட்டி (28.8.1987), விருத்தாசலம் (28.9.2013), திருச்சி (4.4.2019), திருப்பூர் (8.4.2019) என்று கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டுள்ள நிலையிலும், சற்றும் தளராமல் இந்த 86 ஆம் வயதிலும் அவர்களின் சுற்றுப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தந்தை பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் வீறுகொண்டு செயல்படுவதையும் பொறுக்காத காவிகள் ஏதோ ஒரு  திட்டத்தோடு கழகத் தலைவர்மீதான வன்முறைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது கவனத்திற்கும், கவலைக்கும் உரியதாகும்.

ஜாதிய வாதமும், மதவாதமும் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்தில், அரசியல், தேர்தல், பதவிகள் என்பனவற்றையெல்லாம் தாண்டி மக்கள் மத்தியில் மதச் சார்பின்மை, சமுகநீதி, பகுத்தறிவு, மொழி உணர்வு, மண்ணுக்கான உரிமைத் தளங்களில் மிகப்பெரிய அளவுக்குத் தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும், களம் காண் பதிலும் இளைஞர்களை ஆயத்தப்படுத்தும் கடமையும், பணியும் முன்னிலும் அதிகமாக நம்முன் எழுந்து நிற்கிறது. நூற்றாண்டுக்கால திராவிட இயக்கத்திற்குச் சவால்கள் தோன்றியுள்ளன. இதனைக் கண்டிப்பாக சந்திப்போம் - சாதிப்போம் என்று சூளுரைத்துச் செயல்படுவோம்!

திராவிடர் கழகத்தின் கடவுள், மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது யாரையோ புண்படுத்துவது என்பது அசல் மாய்மாலமாகும். இவர்கள் நம்பும் கடவுளும், மதமும் ஜாதியைப் பாதுகாப்பதாகும். நான்கு வருணங்களையும் உண்டாக்கியது நானே - அப்படி உண்டாக்கிய நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது; வைசியர்களும், பெண்களும், சூத்திரர்களும், பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கிருஷ்ணன் என்ற கடவுள் சொல்லுவது கீதையில் இடம்பெற்றுள்ளது. இத்தகு கடவுள்மீதும், மதம்மீதும் விமர்சனம் வைப்பதுதான் யோக்கியமான மனிதத் தொண்டாகும். தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடாகும்.

மிகப்பெரிய கூச்சலாலும், ஊடகப் பலத்தாலும் இந்தப் பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் புரிந்துகொள்ளாமல், சுயஆதிக்கக்காரர்களின் கூச்சலுக்கு அரசியல்வாதிகள் பயந்து பணிந்தால், நூறு ஆண்டுகாலம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞர் போன்றோரும், திராவிட இயக்கமும் உருக்கிய உணர்வுகள் உருக்குலைந்து போகும் என்பது நமது அசைக்க முடியாத ஆணித்தரமான கருத்தாகும்.

முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைத்து இந்த வகையில் கூட்டு இயக்கத்தை நடத்துவது அவசிய மாகிறது. இதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கும் தகுதியும், நம்பகத்தன்மையும் தமிழர் தலைவர் அவர்களையே சார்ந்ததாகும்.

தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவது, அவமதிக்கும் வேலைகளில் ஈடுபடுவது என்பதெல்லாம் தொடர்கதையாகவே திட்டமிட்ட வகையில் நடந்து வருகிறது; ஆனால், குற்றவாளிகள்மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தற்காப்பு - பாதுகாப்பு என்கிற வகைகளில் நாம் மேற்கொள்ளவேண்டிய திட்டங்களையும்,  பிரச்சாரங்கள் பற்றியும் ஆலோசனைகளைக் கூறுமாறு கழகப் பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட அறிக்கையை கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அளித்தார்

- விடுதலை நாளேடு, 27.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக