கூட்டாட்சித் தத்துவத்திற்குத் தேவை மாநில சுயாட்சி!
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை
சென்னை, செப்.22- கூட்டாட்சித் தத்துவம் என்றால் அங்கு மாநில சுயாட்சிக்கு முக்கிய இடம் இருக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
21.9.2017 அன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
சரியான நேரத்தில், சரியானவர்களை அழைத்து, சரியான முடிவுகளை எடுத்து...
சரியான நேரத்தில், நேரம் தாண்டிக் கொண்டிருந்தாலும்கூட, மாநாடு நடத்துகின்ற காலத்தைச் சொல்கின்றேன். சரியான நேரத்தில், சரியானவர்களை அழைத்து, சரியான முடிவுகளை எடுத்து, சரியான லட்சியத்தை அறிவுறுத்தி வழிநடத்தவேண்டிய - வள்ளுவருடைய குறளை நினைவூட்டக்கூடிய வகையில்,
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
என்ற அந்த வகையில், இந்த சிறப்பான மாநாட்டை அருமையாக ஏற்பாடு செய்து, இரவானாலும் நாங்கள் கலைய மாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உறுதியோடு இருக்கக்கூடிய - பாய்ச்சலுக்கு எப்பொழுதுமே பயப்படாத சிறுத்தைகளைக் கொண்ட அருமை சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
நிறைவுரை - நிறைவான உரை
இந்த சிறப்பான மாநாட்டில் கலந்துகொண்டு, இறுதியில் நிறைவுரை - நிறைவான உரையை அளிக்கவிருக்கக்கூடிய, அடுத்து நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து, பதில் தரக்கூடிய ஆற்றல்மிகுந்த தளபதி ஸ்டாலின் அவர்களே,
இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், நாளைய முதல்வர் - இதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவம். உலகமெங்கும் ஜனநாயகத்தினுடைய தத்துவம் இதுதான்.
அதைவிட இன்றைக்கு அவர்கள் ஆளுங்கட்சியினுடைய வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார், பல நேரங்களில் - எதிர்க்கட்சியாகவும் நடந்துகொண்டிருக்கிற பெருமைக்குரிய தளபதி அவர்களே,
முதுகெலும்புள்ள முதலமைச்சர்கள்
இந்நிகழ்ச்சியில் பெருமையோடு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே வந்து, சிறப்பான உரையாற்றி சென் றிருக்கக்கூடிய கேரளத்தினுடைய முதுகெலும்புள்ள முதலமைச்சர் திரு.பினராயி அவர்களே,
அதேபோல், மற்றொரு முதுகெலும்புள்ள முதலமைச்சர் பக்கத்தில் இருக்கக்கூடிய புதுச்சேரியைச் சார்ந்த அருமை மாண்புமிகு மானமிகு அய்யா திரு.நாராயணசாமி அவர்களே,
நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள் சொல்லும்பொழுது, அவர் துணை நிலை ஆளுநரோடு புதுச்சேரியில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இல்லை, ஒரு சிறிய திருத்தம்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர், இவரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார், எனவேதான், இவருக்குப் பக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள். அதுதான் மிகச் சிறப்பானது. அப்பேர்ப்பட்ட ஒரு அற்புத மானவர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து கருத்துகளைக் கூறவிருக்கிற புதுச்சேரி முதலமைச்சர் அவர்களே,
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் அன்புச் சகோதரர் திருநாவுக்கரசர் அவர் களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,
நம் அனைவரையும் வரவேற்று, தொடக் கவுரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்களே,
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நம்முடைய பாசறையிலிருந்து தயாரானவருமான சிந்த னைச் செல்வன் அவர்களே,
முழுக்க முழுக்க இந்த மாநாட்டின் நிறைவில் நன்றியுரை கூறவிருக்கின்ற விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப் அவர்களே,
இவ்வளவு சிறந்த ஒரு எழுச்சித் தமிழ ரைச் சுமந்து பெற்ற புறநானூற்றுத் தாய் பெரியம்மா அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தாய்மார்களே, பெரி யோர்களே, நண்பர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
தென்னாடுதான்,
வடநாட்டிற்கு வழிகாட்டக் கூடியது
நீண்ட நேரம் உரையாற்றத் தேவை யில்லை; இப்பொழுது. மற்றவர்கள் உரை யாற்ற காத்திருக்கும் வேளையில், என்னு டைய உரை மிகவும் சுருக்கமாகத்தான் இருக்கும்.
நாம் எல்லோரும் சேரவேண்டிய நேரத் தில், சேர்ந்திருக்கிறோம், இது தொடர வேண்டும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது. எப் பொழுதுமே தென்னாடுதான், வட நாட்டிற்கு வழிகாட்டக் கூடியது.
ஏன் இந்திய அரசியல் சட்டத்தினுடைய முதல் சட்டத் திருத்தமே தந்தை பெரியா ரால்தான் நடைபெற்று, இந்தியா முழுவதுமே கிடைத்தது. இன்றைக்கு சமூகநீதிக் கொடி இந்தியா முழுவதும், அம்பேத்கர் உள்பட பாடுபட்டதின் விளைவாகத்தான் பறந்து கொண்டிருக்கிறது.
பெரியாரும் - பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
அம்பேத்கர் அவர்களுடைய பெய ராலே, அவர் பிறந்த மண்ணில், பாபா சாகேப் அவர்களுடைய பெயராலே ஒரு கல்லூரி தொடங்கிய நேரத்தில், எதிர்ப்பு வந்தது. இங்கே அதற்கு முன்பே கல்லூரியைத் தொடங்கியது திராவிட இயக்கம் - நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்.
காரணம் என்ன? பெரியாரும் - பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆகவேதான், இந்த மாநாடு - பல தீர்வுகளைக் கொண்டிருக்கிறது.
மத்தியில் நடப்பது
ராமராஜ்ஜிய ஆட்சி!
14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன - அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்துவதையும் சேர்த்து - இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற மத்திய ஆட்சி - ராம ராஜ்ஜிய ஆட்சி.
ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? சூத்திர சம்பூகன் கடவுளைக் காணுவதற்காக தவம் செய்தபோது, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டான் என்று ஒரு போலி காரணம் சொல்லி, புகார் செய்த நேரத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ள உத்திரகாண்டம் பகுதியில் இருப்பதைத்தான் நான் இங்கே சொல்லுகிறேன். நம்முடைய கற்பனையல்ல -
‘‘முரசொலி’’யிலோ, ‘‘விடுதலை’’யிலோ அச்சடிக்கப்பட்டதல்ல - அல்லது தொல்.திருமாவளன் அவர்கள் உருவாக்கியதோ, இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள் உருவாக்கியதோ அல்ல -
அந்த ராமராஜ்ஜியத்தில் விசாரணையே கிடையாது - தவம் செய்த சம்பூகனின் தலையை ராமன் வெட்டுகிறான்; உடனே செத்துப்போன பார்ப்பன சிறுவன் எழுந்து நிற்கிறான். இதுதான் மனுதர்ம ராமராஜ்ஜியம்.
அந்த ராமாயணக் கதைப்படி, நடந்ததா இல்லையா என்பது வேறு - தத்துவங்கள் மிக முக்கியம். ராமனைக் காட்டுக்கு அனுப்பி னார்கள். எவ்வளவு ஆண்டுகாலம் தெரி யுமா? 14 ஆண்டுகாலம்.
ராமனை, காட்டுக்கல்ல - வீட்டுக்கு அனுப்பவேண்டிய தீர்மானங்கள்
எனவே, இங்கே நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களும் இப்போது இருக்கிற ராமனை, காட்டுக்கல்ல - வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தீர்மானங்களாகும்.
எனவே, ராமராஜ்ஜியமோ, மனுதர்ம ராஜ்ஜியமோ தேவையில்லை. அனை வருக்கும் அனைத்தும். எல்லாருக்கும் எல் லாமும் கிடைத்திடவேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் நண்பர்களே, இந்த மாநில சுயாட்சி என்பது இருக்கிறதே, இதில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டி யாக இருப்பது இந்தத் தமிழ் மண்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அதேபோன்று இந்த நாட்டில், தேசிய தலைவராக இருந்தாலும்கூட பெருந்தலை வர் காமராசர் அவர்கள், இந்தக் கருத்தை ஏற்றார்கள். இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது.
இந்தியைத் திணித்த நேரத்தில், காமராசர் முழங்கினார் - ‘‘இந்த நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லையா?’’ என்று கேட்டார்.
தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் மிகத் தீவிரமாகப் போராடிய நேரத்தில், மிரட்டினார்கள், மறை முகமாகப் புகுத்திய நேரத்தில், பெரியார் எப்பொழுதுமே ஒரு கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுப்பார். தேசிய கொடியை எரிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அவர்கள் ஆத்திரப்பட் டார்கள், வேதனைப்பட்டார்கள்.
உடனே பிரதமர் நேரு அவர்கள், காம ராசர் அவர்களைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார். அப்பொழுது காம ராசர் அவர்கள் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு.
ராமசாமி நாயக்கர் பெரியார் உங்கள் நண்பர்தானே - நீங்கள் சொல்லித் தடுக்கக் கூடாதா? என்று காமராசரிடம் நேரு கேட் டார்.
காமராசர் அதற்குப் பதில் சொன்னார். அவர் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் - தன்மானமுள்ள முதலமைச்சர்கள்தான் இந்தத் தமிழ்நாட்டில், அண்மைக்காலம் தவிர, இருந்திருக்கிறார்கள்.
பெரியார் எனக்கு நண்பர்;
இந்திக்கு நண்பர் இல்லையே!
அப்போது, தொலைபேசியில் பிரதமர் நேரு கேட்கிறார், முதலமைச்சர் காமராசரிடம், ‘‘பெரியார் உங்களுக்கு நண்பர்; உங்களை ஆதரிக்கிறவர். அவர் ஏன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்; அதனை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாதா?’’ என்று கேட்கிறார்.
காமராசர் மிக அழகாக, மென்மையாக பதில் சொல்கிறார். ‘‘பெரியார் எனக்கு நண்பர்; இந்திக்கு நண்பர் இல்லையே, என்ன செய் வது?’’ என்று.
ஒரு மொழித் திணிப்பு, அல்லது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் இவைகளையெல்லாம் திணிக்கவேண்டும் என்று நினைப்பதற்குப் பதில்தான், இந்த மாநில சுயாட்சி மாநாடு.
பூட்டாட்சியை ஒழிக்கத்தான், கூட்டாட்சித் தேவை என்பதற்கு மாநில சுயாட்சி மாநாடு
இந்த மாநில சுயாட்சி மாநாடு என்பது ஏதோ அரசியல் சட்டத்தில் இருக்கிற 10 விதிகளை மாற்றுவதற்காக அல்ல. இங்கே அமர்ந்திருக்கின்ற லட்சக்கணக்கான மக்கள், வெளியில் நின்று கொண்டு காத்திருக்கின்ற மக்களுடைய உரிமைகள், உண்ணும் உரிமை - நான் மாட்டுக்கறி சாப்பிட்டால், உனக்கேன் புரையேறுகிறது - முட்டுகிறது.
உழைக்கின்ற மக்களின் உணவு மாட் டுக்கறி - உனக்கும், உழைப்பிற்கும் சம்பந்த மில்லை. நீங்கள் மனுதர்மக் கூட்டம். நாங்கள் உழைக்கின்ற மக்கள் - எங்களின் எளிமை யான மாட்டுக்கறிதானய்யா! அதை முடிவு செய்ய நீ யார்? அதைச் சாப்பிடாதே! இதைச் சாப்பிடாதே என்று சொல்வதற்கு.
உண்ணுகின்ற உணவு - உடுத்துகின்ற உடை - சிந்திக்கின்ற உணர்வு - இவற்றுக் கெல்லாம் நீ பூட்டுப் போட நினைக்கிறாய் - உரிமைகளுக்குப் பூட்டுப் போடுகிறாய். பூட்டாட்சியை ஒழிக்கத்தான், கூட்டாட்சித் தேவை என்பதற்கு மாநில சுயாட்சி மாநாடு.
இதற்கு ஒரு வரலாறு உண்டு தோழர் களே! இப்போது நீங்கள் முகநூல் இளை ஞர்கள்; டுவிட்டர் இளைஞர்கள்; வாட்ஸ்அப் இளைஞர்கள் - உங்களுக்கு வரலாற்றைச் சொல்லவேண்டும் என்பதற்காக சுருக்கமாகச் சொல்கிறேன்.
முதல் முறையாக, காங்கிரசு நண்பர் களுக்கு சங்கடங்கள் இங்கே அவசியமில்லை. திராவிட இயக்கத்திற்குப் புகழ் சேர்ப்பதற்காக, இவர் தேசியத்தை மறந்துவிட்டார் என்று உங்களை யாரும் விமர்சனம் செய்துவிட முடியாது.
காரணம் என்ன தெரியுமா? இந்திய அரசியல் நிர்ணய சபை இருந்தபோது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கூடாது என்று சொன்னவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் எல்.கிருஷ்ணசாமி பாரதி - சோமசுந்தர பாரதியாருடைய மருமகன். பழுத்த காங்கிரசுக்காரர். லட்சுமிகாந்தன் பாரதியாருடைய தந்தை. அதுபோலவே, கே.சந்தானம்.
கன்கரண்ட் லிஸ்ட் என்று சொன் னார்களே, இந்தக் கன்கரண்ட் லிஸ்டே கூடாது என்பது சந்தானத்தினுடைய பதிவு. அரசியல் சட்டத்தில் இருக்கிற ஆதாரத்தோடு சொல்கிறோம். யாரும் மறுக்கமுடியாத ஆதாரத்தைச் சொல்கிறோம்.
அதேபோலத்தான் பிரமுகர் எம்.ஜி.ரங்கா, சோசலிஸ்ட்டில் இருந்து காங்கிரசுக்கு வந்த வர். பிறகு விவசாய அமைப்புக்குப் போனவர்.
அவர்கள் எல்லாம் திராவிடர் இயக்கத் தைச் சார்ந்தவர்களா? அம்பேத்கர் அவர் களின் துணைகொண்டுதான், ஓரளவிற்கு அவர்கள் சமாளித்தார்கள். அது முதல் கட்டம்.
மாநிலங்களவையில் அண்ணாவின் உரை!
இரண்டாவது கட்டம், மாநிலங்கள வையில் அண்ணா பேசினார்.
ஏன் ஆங்கிலத்தை நாங்கள் விரும்புகி றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம், என்னுடைய தாய்மொழியின்மீது பற்றுதல் என்பதல்ல - இருமொழிக் கொள்கையை நாங்கள் ஏன் சொல்கிறோம் என்று சொன் னால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான்.
இந்தியா முழுவதும் பல மொழிகள் இருக்கிற இடத்தில்,
பிரதிகூலங்கள், அனுகூலங்கள் என்று வருகின்றபொழுது, எல்லோருக்கும் சேர்ந் தது; ஒருவருக்கு அனுகூலம், இன்னொரு வருக்குப் பிரதிகூலம் என்று இருக்கக் கூடாது Disadvantage என்பது பொதுவாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் ஆங்கிலம் தேவைப்படுகிறது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அண்ணா அவர்களுடைய ஆட்சியில், இந்தக் கருத் துகளை எடுத்துச் சொல்லி, மிகத் தெளிவாக ஒன்றை சொன்னார்.
பாகிஸ்தானிடமிருந்து நம்மைப் பாது காக்கவேண்டும் என்று சொல்கிறாய்; ஒப்புக் கொள்கிறோம். மனமார அதனைக் கேட் டுக்கொள்கிறோம். பாதுகாப்புத் துறை உங்களிடம் தாராளமாக இருக்கட்டும்; நாங்கள் பிரிவினையை கைவிட்டோமே தவிர, பிரிவினைக்கான காரணங்கள் இன்ன மும் அப்படியே இருக்கிறது, அதைப்பற்றி யோசித்தீர்களா? யோசிக்க வேண்டாமா? என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,
பாதுகாப்புத் துறை சரி - சுகாதாரத் துறை உங்களிடத்தில் ஏன் இருக்கவேண்டும்? இந்தக் கேள்வியை கேட்டார் அண்ணா அவர்கள். தெளிவாக அது பதிவாகியிருக் கிறது மாநிலங்களவையில்.
அதுபோல நண்பர்களே, மாநில சுயாட்சி என்பதை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் ஆட்சி முடிந்த நிலையில், கெட்ட வாய்ப்பாக அண்ணா அவர்கள் நம்மிடையே நீண்ட காலம் இல்லாத சூழ்நிலையிலே, சரியான இடத்தில், என்னுடைய கடமையை முடிப்பார் என்று அடையாளங் காட்டப்பட்டவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாட்டினை நடத்தினார்கள். 1968-1969 ஆம் ஆண்டு நடந்தது. மேற்கு வங்கத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டிற்கு தந்தை பெரியார் அவர்களையும் அழைத் தார்கள்.
மாநில சுயாட்சி மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை
அய்யா அங்கு பேசியது, இன்னமும் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக் கிறது.
அய்யா சொன்னார், ‘‘என்ன பெரிய ஆட்சி - மத்திய ஆட்சி, மாநில ஆட்சி என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக் கிறீர்கள். இரண்டு பேரும் கணவன் - மனைவி போன்றவர்கள்தானே. ஒரு கண வன் எஜமானன் போன்று இருந்து, மனை வியை தினமும் அடித்து, என்னிடம் ஆசை யாக இரு, ஆசையாக இரு என்று சொன் னால், எந்த மனைவி இருப்பாள்’’ என்று பெரியார் கேட்டார்.
இதுதான் மாநில சுயாட்சியினுடைய அடிப்படைத் தத்துவம். கேட்பதினுடைய நோக்கமே அதுதான்.
நம்முடைய நாட்டில் பழமொழி என்ன? உருது மொழி பேசக்கூடாதா? சாதாரண மக்களுக்குத் தெரியுமே!
தாயும், பிள்ளையும் ஒன்று என்று சொன் னாலும், வாயும், வயிறும் வேறு. அதுபோல, என்னதான் ஒருமைப்பாடு பேசினாலும், அவரவர்களுடைய உரிமைகள், அவரவர் களுக்கு இருக்கவேண்டாமா?
என்னுடைய மொழி உரிமை - என்னு டைய பண்பாட்டு உரிமை - என்னுடைய கல்வி உரிமை - இந்த உரிமைகளையெல்லாம் நீங்கள் பறித்த காரணத்தினால்தானே அனி தாக்கள் பலியிடப்பட்டு இருக்கிறார்கள். இதுதானய்யா, மாநில சுயாட்சி நமக்குத் தேவை.
நாங்கள் எல்லோரும் மதவெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள்
எனவே, நண்பர்களே, இந்த மாநாடு ஒரு தீயணைப்பு நிலையம் போன்றது. இங்கே இருக்கின்ற அத்துணைப் பேரும் தீயணைப் புக்காரர்கள். இங்கே யார் என்ன சட்டைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; யார் என்ன கொடியைத் தாங் கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கிய மல்ல. நாங்கள் எல்லோரும் மதவெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள். ஜாதி வெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக் கிறவர்கள். பதவி வெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள்.
அண்ணா பெயரை சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி உண்டா?
இன்றைக்குத் தமிழ்நாட்டில் என்ன சூழல்? ஒரு பக்கம் காவி; இன்னொரு பக்கம் ஆவி. விளைவுகள் ‘பாவி’. அதனுடைய விளைவுதான், தண்ணீரே இல்லாத ஆற்றில் தண்ணீரை விட்டு, அந்தத் தண்ணீர் கருப் பாக, அழுக்கு அழுக்காக வருவதை தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக் கலாம். அந்தத் தண்ணீரைத் தலையிலே தெளித்துக்கொள்கிறார்கள்.
82 பிறழ் சாட்சியங்களால் தப்பித்து வந்த சங்கராச்சாரியிடம் நீங்கள் ஆசீர்வாதம் வாங் குகிறீர்களே, அண்ணா பெயரை சொல்வ தற்கு உங்களுக்குத் தகுதி உண்டா? நினைத்துப் பார்க்கவேண்டாமா?
எரிவதை இழுத்தால்,
கொதிப்பது தானே அடங்கும்
எனவேதான் நண்பர்களே, எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து - சர்வரோக நிவாரணி என்று ஒரு வார்த்தை சொல்வார் கள். அந்த சர்வரோக நிவாரணிதான் இந்த மாநில சுயாட்சி உரிமை மாநாடு மட்டுமல்ல - மத்தியில் இருக்கின்ற ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் - மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான். அதனை அகில இந்தியா முழுவதும் ஒரே குடையின்கீழ், ஒரே அணியின்கீழ் சொல்வதுதான். அதனை செய்தாலே, இங்கே இருக்கிற பினாமி ஆட்சிகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.
எனவே, அதற்குத் தயாராவோம்! தயா ராவோம்!! தயாராவோம்!!! இந்த மாநாடு ஒரு பொது முழக்கத்தை முழங்கச் செய்யும்!
நான் முதலிலேயே சொன்னேன், கொக்கொக்க கூம்பும் பருவத்து என்று,
ஆனால், ஏதேதோ வித்தைகள் செய்து, மேலே இருக்கிறவர்கள் வித்தைகள் செய்து, நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களே, அவர்களுக்குச் சொல்கி றோம், காவிகளுக்குச் சொல்கிறோம்.
கடல் வற்றி, மீன் கருவாடாகும் என்று உடல்வற்றி செத்த கொக்குகளாக நீங்கள் ஆவீர்கள்.
எனவேதான், இறுதிவரையில் கொக்கு களைப் பார்க்கிறோம்; சரியான தருணத்தைப் பார்க்க கொக்கும் இங்கே இருக்கிறது; உடல்வற்றி சாகக்கூடிய கொக்கும் இங்கே இருக்கிறது. எக்காரணம் கொண்டும், எந்தக் கொக்கு எப்படி ஆகும் என்பதை விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.
மாநில சுயாட்சி மாநாடு வரலாற்றை உருவாக்கும்
இந்த மாநில சுயாட்சி மாநாடு; அந்த வரலாற்றை உருவாக்கும். அதில் எல்லாக் கட்சிகளிலும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரளுகிறார்கள். கிரிக்கெட் மைதானத்திற்குள் கருப்புச் சட்டையே நுழையக்கூடாது என் கிறார்கள். கருப்புச் சட்டையைக் கண்டால் பயப்படுகிறீர்கள். கருப்புச் சட்டையைக் கண்டால், அய்யோ, கருப்புச் சட்டையா? என்று கேட்கிறான்.
ஒரு காலத்தில் நாங்கள் மட்டும்தான் கருப்புச் சட்டை அணிந்திருப்போம். இன் றைக்குப் போராட்டம் நடத்துகின்ற அத் துணை கட்சிக்காரர்களும் கருப்புச் சட் டையை தைத்துக் வைத்துக்கொண்டிருக் கிறார்கள். இதை இல்லை என்று யாராவது மறுக்கமுடியுமா?
ஆகவே நண்பர்களே,
கருப்புடைத் தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள் - என்ற கலைஞரின் கவிதை வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!
நாம் வேடிக்கைக்காக கூடவில்லை - விடுதலை பெறுவதற்காகவும் கூட்டப்பட்டி ருக்கிறோம்
மாநில சுயாட்சி முழக்கம் என்பது இருக்கிறதே, ஒரு திருப்பம் - ஒரு காலகட்டம் - ஒரு மாற்றம் - அந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம் - இளைஞர்களே, ஆயத்தமாகுங் கள்! நாம் வேடிக்கைக்காக கூடவில்லை - விடுதலை பெறுவதற்காகவும் கூட்டப்பட்டி ருக்கிறோம் என்கிற உணர்வோடு வீடு திரும்புங்கள்! நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்! வளர்க போராட்ட உணர்வு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,22.9.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக