திங்கள், 26 ஜூன், 2017

முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்..

சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  ஆனால், பழைய ராமாயணம் இனி வராது!
இது கூட்டணியாக மாறினால் என்ன தவறு?
ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஏப்.23- இங்கே  சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது என்றும், இது அரசியல் கூட்டணிக்கான ஒன்றா என்று கேட்கிறார்கள் - ஏன் கூட்டணியாக மாறினால் அது என்ன பஞ்ச மாபாதகமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, ஏப்ரல் 25 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி அனைத்துக் கட்சிகள் சார்பில் நேற்று (22.4.2017) மாலை, சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விவசாயிகளின் துயர் துடைக்க - மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய தென்சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அருமைத் தோழர் ஜெ.அன்பழகன் அவர்களே,
மானம் காக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு!
இந்நிகழ்ச்சியில் இத்தனை மக்களுடைய உணர்வுகளையும் சரியான தருணத்தில், ஒன்றாக அத்துணை அமைப்புகளையும் அழைத்து, ஆளும் கட்சி செய்யத் தவறிய பணியை, ஜனநாயகத்தில் அடுத்தபடியாக செய்யக்கூடிய கடமையும், பொறுப்பும் அரசியல் சட்ட ரீதியாக எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் உண்டு என்ற பெருமையை, தான் இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக மட்டும் இல்லை - ஆளும் பொறுப்பையும் நாங்கள் ஏற்று இருக்கிறோம் என்கிற அந்த உணர்வுக்கு முன்னோட்டமான பணி இந்தப் பணி. பதவிக்காக அல்ல - மக்களின் உணர்வுக்காக. மானம் பார்த்த பூமி என்று விவசாயிகள் ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால், தமிழகத்தில் இப்பொழுது, மானம் காக்கவேண்டிய கடமை நமக்கு  இங்கே குழுமியிருக்கக்கூடிய அத்துணை பேருக்கும் உண்டு.
தமிழகத்தைக் காப்பாற்றவேண்டிய
கடமை இருக்கிறது
எனக்கு முன் உரையாற்றிய அருமை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய அத்துணை கருத்துகளையும் அப்படியே நான் வழிமொழிகிறேன். இங்கே உள்ள அத்துணைத் தலைவர்களும் உருவத்தால் மாறுபட்டவர்கள் - வண்ணத்தால் மாறுபட்டவர்கள் - எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல - தமிழகம் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது  25 ஆம் தேதி நடைபெறக்கூடிய போராட்டத்திற்கான விளக்கக் கூட்டம் மட்டுமல்ல - அடுத்து தமிழகத்தைக் காப்பாற்றவேண்டிய கடமை இருக்கிறது என்கிற எச்சரிக்கையைத் தரவேண்டியவர்கள் - புரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அறிவிக்கவேண்டிய மிக முக்கியமான தருணம்.
நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் தளபதி
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆளும் கட்சி  செய்யத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர்தான் அந்தப் பொறுப்பை ஏற்று செய்வார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய நம்பிக்கையை நாங்கள் நிரந்தரப்படுத்துவோம் - நியாயப்படுத்துவோம் என்று காட்டக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய செயல்தலைவர் - செயல்படக் கூடிய தலைவர் - செயலை நிறைவேற்றி வெற்றிகரமாக நடப்பேன் என்கிற அளவிற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
டில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது
இந்த மேடையில் இருக்கக்கூடிய அத்துணைக் கட்சி தோழமைத் தலைவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற திராவிடப் பெருங்குடி மக்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான கடமை இங்கே ஒரு ஆட்சி இருக்கிறதா என்று தெரியாது! அதேநேரத்தில் இந்த ஆட்சியை ஏதோ ‘‘ராமா, ராமா ஆடு’’ என்று சொல்லுவதைப்போல, டில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.
நாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல
எந்த உரிமை பறி போனாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. முதலில் அவர்களுக்குள் இருக்கின்ற போட்டி நாற்காலியைப் பிடிக்கவேண்டும் என்பதுதான். இது வெறும் நாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல - தமிழர்களுடைய மானத்தை, உரிமையை, தமிழ்நாட்டினுடைய வளமையை நிலை நிறுத்தி மீட்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இன்றைக்கு எல்லாவற்றிலும் டில்லி வெளிப்படையாகவே இறங்கியிருக்கிறது. காவிரி பிரச்சினையா? நாங்கள் அலட்சியப்படுத்துவோம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று சொன்னால், குறுக்குசால் ஒட்டுவதைப்போல, அதை அப்படியே தட்டிவிட்டு, வேறொரு ஆணையத்தை நாங்கள் உருவாக்குவோம் - இன்னொரு சட்டத்தின் மூலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் - தமிழகத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.
இது தேர்தலுக்கான  அச்சாரக் கூட்டணியா?
தமிழனின் மானத்தை அவர்கள் அறைகூவல் விட்டுப் பார்க்கிறார்கள். எனவே, அந்த சவாலை  தமிழகம் ஏற்கும்; அதனை ஏற்று சிறப்பாக செயல்படுவோம் என்று காட்டுவதற்குத்தான், இங்கே அத்துணைத் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். சில ஊடக நண்பர்கள் - தளபதி அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவுடன், அவர்களுக்கே உரிய அந்த விஷம பாணியில், இது என்ன தேர்தலுக்கான அச்சாரக் கூட்டணியா? என்று.
தேர்தல் கூட்டணியானா என்ன, பஞ்ச மாபாதகமா? அது என்ன பெரிய தவறா?
நான் அவர்களைத் திருப்பிக் கேட்கிறேன், பெரியார் தொண்டன், எதையும் மறைக்கத் தெரியாது. ஒப்பனைகள் இல்லாமல் பேசக்கூடியவர்கள் நாங்கள் - எனவே, அந்த வகையில் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஊடகக்கார்களைப் பார்த்து, இங்கே கூடியிருக்கிறவர்கள் ஒன்றாகி விட்டார்கள் என்று ஆதங்கத்தோடு எழுதுகிறார்களே, அவர்களைப் பார்த்து கேட்கிறேன், இதுவே தேர்தல் கூட்டணியானால் என்ன, பஞ்ச மாபாதகமா? அது என்ன பெரிய தவறா? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். மக்களுக்காகத்தானே ஜனநாயகம்.
இதுவரையில் நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல - தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள். எது நம்மை இணைக்கிறதோ, அதனை அகலப்படுத்துங்கள்; எது நம்மை பிரிக்கிறதோ, அதனை அலட்சியப்படுத்துங்கள் என்கிற உணர்வோடுதான், இங்கே இருக்கின்ற அத்துணை நண்பர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.
21 ஆண்டுகள் போராடி பெற்றி உரிமை!
ஆகவே, தெளிவாகச் சொல்கிறோம், விவசாயிகளுடைய பிரச்சினைகள் மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமைகள், சமூகநீதி, நீட் என்கிற நுழைவுத் தேர்வினை எதிர்த்து - திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வினை கொண்டு வந்தபோது, 21 ஆண்டுகள் போராடி - பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அதற்குரிய சரியான சட்டம் அமைக்கப்பட்டு, நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு - கிராமத்துப் பிள்ளைகள் இன்றைக்கு படிக்கக்கூடிய வாய்ப்பு பெற்றார்கள்.
நீதிக்கட்சி வருவதற்கு முன்னால், மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மனு போட முடியும் என்கிற வரலாறு இன்றைய மருத்துவர்களில் பல பேருக்குத் தெரியாது. அந்தப் பழைய வரலாற்றை, பழைய மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு டில்லி முயற்சிக்கிறது. அதற்கு இங்கே சில  தந்திரங்களைக் கையாளுகிறது - வருமான வரித்துறையைப் பயன்படுத்துகிறது - அவரவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம்
ஆனால், நெருக்கடி காலத்திலேயே அதனை எதிர்த்து நின்ற மாபெரும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
கலைஞர் அவர்கள் தீர்மானம் போட்டார் - கலைஞர் அவர்களுக்கு டில்லியிலிருந்து நெருக்கடி கொடுத்தார்கள் - அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. அப்படிப்பட்ட பழைய வரலாறு உள்ள மாநிலம் தமிழ்நாடு. எனவே, டில்லிக்கு சொல்லிக் கொள்கிறோம்,  நீங்கள் சொந்தக் காலை ஊன்ற முடியாதவர்கள் - மிஸ்டு காலிலேயே கட்சியை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கின்றவர்கள். இங்கே கூடியிருப்பவர்கள் சொந்தக் கால்கள் மட்டுமல்ல, அந்தக் கால்களை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம் இந்த கூட்டியக்கம். எனவே, இந்த இயக்கத்தை சீண்டிப் பார்க்காதீர்கள்.
இந்த உணர்வு படைத்தவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் - மாநில உரிமைகளைப் பறிக்கிறீர்கள் - விவசாயிகளை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் -அதுபோலவே, மருத்துவர்களைப் படிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் - கல்வி வாசலை மூடுகிறீர்கள்.
இது முடிவல்ல - இதுதான் தொடக்கம்
எங்களுக்கு அரசியல் சட்ட ரீதியாக இருக்கின்ற உரிமைகளைக் கேட்கின்றோம். அந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்ற உரிமைப்படி, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து - எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புதல் கொடுத்தால், அதனை வலியுறுத்தக் கூடிய தெம்பும், திராணியும் ஒரு அரசுக்கு இருக்கிறதா? காரணம், அவர்கள் நடுங்கிப் போயிருக்கிறார்கள். எனவே, அந்தப் பணியை செய்வதற்கு இந்தக் கூட்டுத் தலைமைதான், கூட்டியக்கம்தான் சிறப்பான முறையில் இது ஒரு நல்ல தொடக்கம். காலத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்கம். எனவே, இது முடிவல்ல - இதுதான் தொடக்கம். வேடிக்கையல்ல - கேளிக்கையல்ல.
ஃபேஸ்புக் இளைஞர்களே, டுவிட்டர் இளைஞர்களே, வாட்ஸ்அப்பிலேயே தங்களுடைய காலத்தைக் கழித்து வேடிக்கைப் பார்க்கக்கூடிய இளைஞர்களே, நீங்கள், உங்களை மறந்தீர்களேயானால், உங்கள் முதுகைப் பாதுகாப்பதற்கு திராவிட இயக்கத்தைத் தவிர, இந்த இயக்கத்தைத் தவிர, இந்த அணியை தவிர வேறு கிடையாது என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
இது மனித தர்மத்திற்கானப் போராட்டம் - மனுதர்மத்தினை வீழ்த்துகின்ற போராட்டம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், காவிகளோ அல்லது காலித்தனம் செய்தோ அரசைப் பிடிப்போம்  என்று நினைக்க முடியாது.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லக்கூடிய அந்த மறைந்த நிலையை உருவாக்குவோம் -
25 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற முழு அடைப்புப் போராட்டம் இருக்கிறதே, அது தடுப்புப் போராட்டம் - ஒரு எச்சரிக்கை - ஒரு முன்னோட்டம் - அதுமட்டுமல்ல, அந்தப் போராட்டத்திற்குப் பிறகு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக் கூடியவர்!
நண்பர்களே, இந்த இயக்கம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியாரால், அறிஞர் அண்ணாவால், கலைஞரால் - இப்படி வாடிக்கையாகக் கொண்டு, இன்றைக்கு அந்தத் தலைவர்களின் பங்கையும் இந்த அணி எடுத்துக் கொண்டிருக்கிறது - இந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக்கூடியவர் - தலைமை தாங்குகிறார். எனவே, தமிழகம் திரளட்டும். நமக்குள் என்ன வேறுபாடு என்று நினைக்காதீர்கள் - நமக்குள் எதை எதிர்க்கவேண்டும் என்று நினைக்கவேண்டும். ஆபத்து நெருங்கி விட்டது - போர்க்களத்தில் இருந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது - கேளிக்கைக்கு அல்ல.
டில்லியினுடைய சதித்திட்டத்தை முறியடிப்போம்!
ஆகவேதான், முழுக்க முழுக்க டில்லியினுடைய சதித்திட்டத்தை முறியடிப்போம், முறியடிப்போம், முறியடிப்போம் என்கிற உணர்வோடு திரளுங்கள் என்று கேட்டு,
25 ஆம் தேதிமட்டுமல்ல, அதற்குப் பிறகு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அத்தனை உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.
எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது
எனவே, இந்த அணி தமிழ்நாட்டில் உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய உரிமைப் பாதுகாப்புப் பேரணியாகும் - எனவே, இந்த அணியினுடைய ஒற்றுமைதான் - எதிரிகளுக்குப் பாடமாகத் திகழவேண்டும். நேரிடையாக வந்தாலும் சரி, கொல்லைப்புற வழியாக வந்தாலும் இந்த மண்ணை எந்தக் கொம்பனும் காவி மயமாக்கிவிட முடியாது என்று எச்சரிக்கின்றோம். 50 ஆண்டுகள் அல்ல - பல நூறாண்டுகள் தலைகீழாக நின்றாலும்கூட தமிழகத்தை உங்களால் தொட்டுப் பார்க்க முடியாது- விஷமம் செய்து பார்க்கலாம் - தடுத்துப் பார்க்கலாம் - ஒரு  அய்யாக்கண்ணு அல்ல - நம்மில் ஆயிரம் அய்யாக்கண்ணுகளாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள் - புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.
இந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம்
எனவே, இந்தக் கூட்டம் விளக்கக் கூட்டமல்ல - எச்சரிக்கைக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு முன்னோட்டக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம் - இந்தக் கூட்டத்திற்கு - ஒத்தக் கருத்துள்ளவர்கள் இன்னும் ஏராளம் வரவிருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம் என்று சொல்லி, பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்ற காரணத்தால், என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.
வெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல!
திராவிடர் இயக்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் அடிபட்டுப் போகாது - இது ஆயிரங்காலத்துப் பயிர் - இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது - அந்த வேரையே கண்டுபிடிக்க முடியாத நீங்கள் - இங்கே  சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது. வெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல, ராமனல்ல, ராமனல்ல என்று கூறி முடிக்கிறேன்.
வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க தமிழின உணர்வு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.



மாங்கொல்லை முழக்கம்!
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

அந்த மயிலை மாங்கொல்லையில்தான் பாபு ஜெகஜீவன்ராம் முழங்கினார் (1978). வாரணாசி என்ற காசியில் சம்பூர்ணானந்து சிலையை  இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவிருந்த பாபு ஜெகஜீவன் ராம் திறந்து வைத்தார்.
அவர் திறந்து வைத்த சில நிமிடங்களுக்குள்ளேயே சம்பூர்னானந்து சிலை கங்கை நீரால் கழுவப்பட்டது. கங்கை நீரைக் கொண்டு அந்தச் சிலையைக் கழுவியவர்கள். காசி பல்கலைக் கழக மாணவர்கள்.
எதற்காக? பாபு ஜெகஜீவன்ராம் தாழ்த்தப்பட்டவராம்; ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர் ஜாதிக்காரரான சம்பூர்ணானந்து சிலையை எப்படி திறக்கலாம்? உயர் ஜாதிக்காரரின் சிலை தீட்டுப் பட்டு விட்டதாம், அதனால் தான் கங்கை நீரைக் கொண்டு சுத்திகரித்தார்களாம். (அதே காசி பல்கலைக் கழக மாணவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பது காலத்தின் மலர்ச்சி!)
அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மறு நாளே பாபுஜீ மயிலை மாங்கொல்லையில் "வெடி குண்டுகளை" வீசினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த எனக்கே இப்படிப்பட்ட அவமானம். இன்னும் பார்ப்பனீயம் உயிர்த் துடிப்போடு, தன் கோர ரூபத்தைக் காட்டிக் கொண்டு தானிருக்கிறது. பெரியார் பிறந்த இந்த மண்ணில்தான் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்று தீயாய்ப் பொங்கி எழுந்து எரிமலையாக வெடித்தார்.
அந்த மயிலை மாங்கொல்லையில்தான் நேற்று ஒரு அனைத்துக் கட்சிப் பொதுக் கூட்டம் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
தி.மு.க. அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது. காவிரியில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது, விவசாயம் பொய்த்துப் போனதால்  விவசாயிகள் படும்பாடு, விவசாயக் கடனைத் தீர்க்க முடியாமல் தற்கொலைகள், வறட்சி நிலை, குடிநீர்த் தட்டுப்பாடு இவைபற்றி மத்திய பிஜேபி தலைமையிலான ஆட்சியின் அலட்சியம், பாராமுகம், மாநில அரசின் செயலற்ற தன்மை ஒடுக்கப்பட்ட மக்களையும் கிராமப்புற மக்களையும், மருத்துவக் கல்வியில் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் நீட் என்னும் சதி. முழு மது விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அறிவிக் கப்பட்டுள்ள முழு கடையடைப்புப் பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் தான் அது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே தமிழ்நாட்டு விவசாயத்தின் அச்சாணி நொறுக்கப்பட்டு விட்டது. காவிரி நதி நீர் தடைப்பட்டது.  தொடர் போராட்டங்கள் தான் என் றாலும் விளக்கெண்ணெய்க்கு கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை.
நியாயம் சட்டம், நீதிமன்ற ஆணைகள், தீர்ப்புகள் எல்லாம் தமிழ்நாட்டின் பக்கம் நிலை கொண்டும், அவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே தவிர கறிக்குப் பயன்படவில்லை.
போராடுகிறோம் போராடுகிறோம் - போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
எம் மக்கள் டில்லி வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டினிப் போராட்டம், மண்சோறு தின்னும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம்,  முழு நிர்வாணப் போராட்டம் வரை நடத்தியாயிற்று. சிறுநீர் குடிக்கும் போராட்டம் வரை அறிவித்து விட்டார்கள்.
எதைப்பற்றியும் மத்திய அரசு - அதன் பிரதமர் சட்டை செய்யவில்லை. இந்த நாட்டுக்குப் பெயர் ஜனநாயக நாடாம் - மக்கள் போராடினால் - மந்திரி துரைமார்கள் பேச்சுக்குக்கூட அழைக்க மாட்டார்களாம்.
'சாலையோரத்திலே வேலையற்றுதுகளை' எல்லாம் அழைத்துப் பேசினால் அவர்களின் கவுரவம் என்னாவது! அப்படியொரு நினைப்பு ஆள வந்த துரைமார்களுக்கு.
தந்தை பெரியார் ஒன்றைச் சொல்லுவார்கள். மானமுள்ளஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கடினம் என்று சொல்வார்களே... அடடே அதுதான் எத்தகைய 'அக்மார்க்" முத்திரை உண்மை! இதோ நாடு அதனைக் கண்டு கொண்டு இருக்கிறது.
தலைநகரிலே இந்நாட்டுக் குடி மக்கள் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தினால், மானம் மரியாதை கப்பலேறுவது யாருக்கு? இந்நாட்டு அரசுக்குத்தானே!
அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்னும் அவமான மகாபாரத கலாச்சாரத்தைக் காதுகளில் குண்டலமாக  மாட்டிக் கொண்டு அலையும் இந்துத்துவ வாதிகளுக்கு மானமாவது, மண்ணாங் கட்டியாவது - அய்யகோ வெட்கக்கேடு!
வறட்சி நிவாரண நிதி  40 ஆயிரம் கோடி (ரூ.39,565 கோடி) ரூபாய்க் கேட்டால் மத்திய பிஜேபி ஆட்சியோ கிள்ளிக் கொடுக்கிறது (ரூ.1,748.28 கோடி) மாநில அரசோ மடிப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து கடனிலே சாகிறான் என்பது நிரந்தரமாகி விட்டது.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், கூட்டுறவுக் கடன்களை மட்டும் அதுவும் சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும்தான் தள்ளுபடியாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்கள் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லையாம். அம்பானியின் சகலை ரிசர்வ் வங்கியின் ஆளுநரோ இதோ பதேசம் செய்கிறார். அப்படியெல்லாம் கடனைத் தள்ளுபடி செய்வது ஒழுக்கக் கேட்டை வளர்த்து விடுமாம்.
அப்படி என்றால் பிஜேபி ஆளும் உ.பி.யில் ரூ.36,359 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது - உத்தமப்புத்திரன் பட்டியலில் சேருமோ! 1990ஆம் ஆண்டில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் ரூ.10 ஆயிரம் கோடி (27 ஆண்டுகளுக்குமுன் அத் தொகை என்பது மிக மிகப் பெரியதே!) மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 60 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படவில்லையா - 7000 கோடி ரூபாயை முதல்வர் கலைஞர் தள்ளுபடி செய்தாரே! 2008இல் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது - அப்பொழுது இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்றைய ஆளுநர் உர்ஜித் படேல் போலவா உளறினார்? ஒய்.வி. ரெட்டி அப்பொழுது கூறினார். 'இந்தியாவில் 50 சதவிகித மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம் தான். மற்ற துறைகளில் இரட்டை இலக்க வளர்ச்சி வரும்போது, விவசாயம் மட்டும் ஏன் ஒற்றை இலக்கத்தில் தன் வருகிறது' என்று கேட்டாரே!
ஆமாம். விவசாயிகளுக்குத்தான் இந்த உபதேசம் எல்லாம். 2016ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்த மத்திய பிஜேபி ஆட்சி அளித்த சலுகை எவ்வளவு தெரியமா? 5,51,200 கோடி ரூபாய்! கடந்த 11 ஆண்டுகளில் இத்தொகை ரூ. 47,11,519 கோடி! இப்பொழுது தள்ளுபடி செய்யப்படக்கோரும் விவசாயிகளின் வங்கி கடன் தொகையோ வெறும் 72 ஆயிரம் கோடி ரூபாய்தான்.
கார்ப்பரேட்டுகளுக்குத் தள்ளுபடி செய்தால் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிக்கும் போனஸ் ஆகாதாம். அதெல்லாம் பாவப்பட்ட விவசாயத் தொழிலைச் செய்யும் சாமானிய மக்களுக்குத்தான் இதோபதேசங்கள் எல்லாம்.
நேற்றைய பொதுக் கூட்டத்தில் இந்தப் புள்ளி விவரங்கள் எல்லாம் புகுந்து விளையாடின.
இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், தாண்டி மிக முக்கியமானதோர் பிரச்சினை மயிலை மாங்கொல்லைப் பொதுக் கூட்டத்தில் 'பூதாகரமாக' வெடித்தது. அதுதான் மாங்கொல்லைப் பொதுக் கூட்டத்தின் உச்சக்கட்ட சிறப்பு (Climax)..
மதவாத பிஜேபியின் கபாலத்தைப் பிளந்த சங்கதிகள் அவை! மாட்டுக்காக இந்த இந்துத்துவா கூட்டம் கசிந்து உருகுமே தவிர மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாது.
ராஜஸ்தானில் பால் வியாபாரியைக் கொன்ற வழக்கில் மேல் நிலைப் பள்ளி மாணவன் விபின்பாபு முக்கிய குற்றவாளி. சிறையிலிருந்து +2 தேர்வு எழுத சிறைக் காவல்துறைப் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டவனுக்கு உள்ளூர் பிஜேபிகாரர்கள் மேளதாளத்தோடு வரவேற்பு அளித்துள்ளனர். மாலைகள் என்ன... மரியாதைகள் என்ன பள்ளி வளாகத்துக்குள்ளேயே கல்வி அதிகாரிகள் முன்னிலையே பாராட்டு! 'பசுவுக்காக தியாகம் செய்த மாணவன்  இந்தியாவின் தவப் புதல்வன்! பகவத் சிங், சுகதேவ் போன்றவன்' என்று உள்ளூர் பிஜேபி பிரமுகர்கள் புகழாரம் சூட்டினார்கள் என்றால் நாடு எதை நோக்கிப் போகிறது? சிறையில் அவன் இருந்தாலும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுமாம்.
வடக்கே பிஜேபியின் கழுதைக் கூத்துக் களேபரம் கொஞ்சம் நஞ்சமல்ல!
இந்தியா முழுவதும் காவிக் கொடியைப் பறக்கவிட பிஜேபி திட்டமிட்டு அலைகிறது. எப்படியும் தமிழ்நாட்டில் காலூன்ற கஜ குட்டிக் கரணம் போட்டு வருகிறது.
தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள தமிழ்நாட்டில் நிலவும் - அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் காரியத்தில் கனகச்சிதமாகக் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது.
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா நோய்ப் படுக்கையிலிருந்த நாள் முதல் பிஜேபியின் பார்ப்பனிய மூளை மிக வேகமாக தனக்கே உரித்தான வகையில் செயல்பட ஆரம்பித்து விட்டது.
முதலில் அதிமுகவை இரண்டாகப் பிளப்பது என்பதில் ஆரம்பக் கட்ட வெற்றி கிடைத்து விட்டது.
இந்த நிலையைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு அறுதியிட்டுக் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான்.  போகப் போகப் புரியும் என்றும் தொலை நோக்கோடு கூறினாரே! அன்று அவர் கணித்தபோது அதனை சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிய தமிழ்நாட்டு அரசியல்  உலகம் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதே!
50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்பவைதான் மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றன. மற்றொரு கட்சி என்ற நினைப்பே தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருப்புக் கொள்ளவில்லை.
தி.மு.க.வைப் பலகீனப்படுத்த முடியாது; காரணம் அமைப்பு ரீதியாக அனைத்துப் பகுதிகளிலும் ஆழமாக ஆணி வேர் பதித்த அமைப்பு அது. நெருக்கடி கால நெருப்பையே உண்டு வளர்ந்த, சமூகநீதியையும் உள்ளடக்கிய மதச் சார்பின்மைக் கொள்கையை தாங்கிய அரசியல் கட்சி அது
அ.இ.அ.தி.மு.க. அத்தகையது அல்ல - ஒரு தனி மனிதத் தலையைச் சுற்றிச் சுற்றிப் படரும் படர் தாமரை!
தலைமை சாய்ந்தால் தத்தளித்துப் போய் விடும் - அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. நல்ல சமயமடா - நழுவ விடலாமோ என்ற கோதாவில் பிஜேபி குதித்து இருக்கிறது.
அதிமுகவை உடைத்தாயிற்று.  ஒரு பகுதியை தன் கைக்குள் போட்டுக் கொள்வது - நாளடைவில் ஆட்சியையும் கவிழ்த்து அஇஅதிமுகவை முற்றிலும் அடையாளமில்லாமல் உருக்குலைத்து அந்த வெற்றிடத்தை பிஜேபியைக் கொண்டு நிரப்பி விடுவது என்று, ஆண்டி மடம் கட்டும் திட்டம் பிஜேபியினுடையது.
பலகீனப்படுத்த பல வழிகள் உண்டு. சகல அதிகாரங்களும் பிஜேபியின் கையில் இருக்கிறதே - சும்மா இருப்பார்களா? இருக்கவே இருக்கிறது வருமான வரித்துறை எம்.ஜி.ஆரையே பதம் பார்க்கக் கத்தி தீட்டியதாயிற்றே!
அதுவும் மடியில் கனம் இருந்தால் கேட்கவா வேண்டும்? வருமான வரித்துறை, தன் வாலை நீட்டியதுதான் தாமதம் அஇஅதிமுகவின் வால் எல்லாம் சுருட்டிக் கொண்டு விட்டது.
'நாவாய் வேட்டுவன் நாயடியேன்!' என்று குகன் சொன்னதாக கம்பன் சொல்கிறான் - அந்த நிலைக்கு அ.இ.அ.தி.மு.க. பிரமுகர்கள் பம்மிப் போய் விட்டனர்.
தோப்புக் கரணம் என்று சொன்னதுதான் தாமதம்! - இதோ எண்ணிக் கொள்ளுங்கள்! என்று காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட ஆரம்பித்து விட்டனர்.
எந்த உரிமையையும் மத்திய அரசிடமிருந்து கேட்கும் தைரியத்தில் அஇஅதிமுக ஆட்சியில்லை; அண்டை மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்களே, எங்களை ஏன் மாற்றாந் தாய் பிள்ளையாக நினைக்கிறார்கள் என்று கேட்கும் திராணி எதுவும் இல்லை.
பிஜேபியின் பினாமி அரசு என்று மாங்கொல்லைக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் சொன்னார்.
திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்தார். 'அதிமுக அரசை பினாமி அரசு என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார். இனி பிஜேபியின் பினாமி அரசு என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்' என்பதுதான் அந்த வேண்டுகோள்.
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் ஆம் - இனி அப்படியே சொல்லுவேன் என்றும் அறிவித்தபோது பலத்த கரஒலி!
அஇஅதிமுக ஆட்சியை பிஜேபியின் பினாமி ஆட்சி என்று திமுக சொல்லும் பொழுது அதற்கு அழுத்தமும் அர்த்தமும் அதிகக் கூடுதலாகி விடும்.
திராவிட இயக்க சித்தாந்தத்தை அழித்து, அதன் மேல் பார்ப்பனிய இந்துத்துவா விஷக் காடுகளை வளர்ப்போம் என்று தொடை தட்டி பிஜேபியும் அதன் பரிவாரங்களும் கிளம்பும்போது - அதனைத் துடைத்தெறிய, தோள் உயர்த்துவது திமுகவின் சித்தாந்தக் கடமையாகி விட்டதே!
அந்தக் கடமை உணர்வை மாங்கொல்லைக் கூட்டத்தில் - அதுவும் மயிலையில் பிரகடனப்படுத்தி விட்டார் தளபதி - அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தளபதியின் உரை தீர்க்கமாக இருந்தது - திராவிட உணர்வு தீயை மூட்டியது! டில்லியில் போராடும் விவசாயி களை அவசர அவசரமாக முதல் அமைச்சர் சந்திப்பதன் மர்மத்தின் முடிச்சியையும் நேற்றைய கூட்டத்திலே அவிழ்த்து விட்டார் தளபதி. 25ஆம் தேதி போராட்டத்தின் அழுத்தமே இதற்குக் காரணம்.
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் போர்ச் சங்கு ஊத, திராவிட இயக்கத்தின் தாய்க் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் போர்வாளை எடுத்துக் கொடுக்க 'இடதுசாரிகள் சாட்டையைச் சுழற்ற, களம் கண்டாகி விட்டது - கனல் ஏறி விட்டது.'
மதவாத மத்தகத்தை முறித்து மதச் சார்பின்மைக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்! சமூகநீதி சங்கீதத்தைத் தாளம் தப்பாமல் இசைப்போம்! மாநில உரிமை காக்கும் பீரங்கி முழக்கத்தோடு நமது அணியின் ராஜபாட்டை தொடங்கப்பட்டு விட்டது!
வெற்றி நமதே! மாங்கொல்லை மார்ச்சு ஃபாஸ்ட்!
மாளட்டும் மதவாதம்!
மலரட்டும் மனிதநேயம்!
ஏப்ரல் 25 முழு கடையடைப்பு எல்லா வகைகளிலும் தமிழ்நாட்டு மக்களின் உரிமை மீட்புக்கான வெற்றி முரசின் அறிவிப்பு!
மாங்கொல்லையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார் 50 ஆண்டுகள் அல்ல நூறாண்டு கழிந்தாலும் மதவாதமே தமிழ்நாட்டு மண்ணைக் காவியாக்கலாம் என்று கனவு காணாதே என்று எச்சரித்தார்.
மாங்கொல்லை ஊட்டிய உணர்வினை - தமிழ் மண்ணெல்லாம் பரவும் வகை செய்வோம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!


-விடுதலை,23.4.17
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக