Published February 3, 2024, விடுதலை நாளேடு
ஜனநாயகம்- மதச்சார்பின்மை – சமூகநீதி – சோசலிசம் – மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட
‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற வாக்களிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
கழகக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
இன்று (3.2.2024) கடலூர் வள்ளி விலாஸ் செல்வ மகாலில் (இம்பீரியல் சாலை) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முன்மொழிதல்: திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
மாணவர் பருவம் முதல் – குடும்பப் பாரம்பரியத்தைச் சார்ந்து, தந்தை பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டும், அரசு பணியில் இருந்தபோதும் அதே கொள்கை வழியில் பயணித்தும், பணி ஓய்வுக்குப் பிறகும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், திராவிடர் கழக செயலவைத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்து அருந்தொண்டாற்றியவரும், சிறந்த எழுத்தாளரும், மேடைப் பேச்சாளருமான கடலூர் மானமிகு சு.அறிவுக் கரசு அவர்களின் (வயது 84, மறைவு 22.1.2024) மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் இயக்கத் தொண்டிற்கு வீர வணக்கத்தையும், திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளராகப் பொறுப்பேற்று இறுதி மூச்சு அடங்கும்வரை மகளிரணி கட்டமைப்பைப் பலம் வாய்ந்ததாக உருவாக்குவதில் அரும்பணியாற்றியவரும், ஒருங்கிணைத்தவரும், திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று பலமுறை சிறை சென்றவரும், கடைசி மூச்சு அடங்கும்வரை ‘‘கழகம், கழகம்” என்று வாழ்ந்தவருமான க.பார்வதி (வயது 77, மறைவு 8.11.2023),
திராவிடர் கழகக் காப்பாளரும், திராவிடர் கழக தொழிலாளரணியின் மேனாள் மாநில செயலாளரும், தஞ்சை மண்டல திராவிடர் கழக மேனாள் தலைவரும், இறுதி மூச்சு அடங்கும்வரை கழகப் பணிகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்தவருமான நெய்வேலி வெ.ஜெயராமன் (வயது 82, மறைவு 22.12.2023), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை க.கண்ணன் (வயது 84, மறைவு 2.1.2024) ஆகியோர் மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் (சி.பி.எம்.) தோழர் என்.சங்கரய்யா (வயது 102, மறைவு 15.11.2023), தமிழர் பெருமை கொள்ளும் நாகசுர மேதை மதுரை சேதுராமன் பொன்னுசாமி (வயது 91, மறைவு 27.11.2023), திரைப்படக் கலைஞரும், ‘பெரியார் விருதாளரும், தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் (வயது 71, மறைவு 28.12.2023), மாயவரம் நடராசன் என்ற தந்தை பெரியாரின் மெய்க்காப்பாளரின் அருமை மகனும், பிரபல ஆடிட்டரும், நமது இயக்கத்தின்பாலும், பொதுவுடைமை இயக்கத்தின்பாலும் மாறாப் பற்றுக்கொண்டவருமான சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 91, மறைவு 19.1.2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு கழகத் தலைமைச் செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இச்செயற்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தீர்மானம் எண் 2:
திராவிடர் கழகத்துக்குப் புதிய செயலவைத் தலைவர்
திராவிடர் கழக செயலவைத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிய மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் மறைவுற்ற காரணத்தால், அந்த இடத்திற்கு வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களை செயலவைத் தலைவராக இக்கூட்டம் ஒருமனதாகத் தெரிவு செய்கிறது.
முன்மொழிதல்: திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
தீர்மானம் எண் 3:
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் – நமது கடமையும்!
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்றுவரும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி- ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும், மதச்சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் என்ற அடிக்கட்டுமானங்களைத் தகர்க்கும் வகையிலும், தன்னாட்சி நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து சர்வாதிகாரப் போக்கிலும், ஜாதி, மதக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டும் வகையிலும், விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக பிற்போக்குப் பாதையில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதிலும், மாநில சுயாட்சியின் அடிவேரை வெட்டி வீழ்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் வகையிலும், எதிலும் வெளிப்படைத் தன்மையற்ற வகையிலும், பொதுத்துறைகளைத் தனியார்வசம் தாரைவார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தும் போக்கும், ஏழைகளை வஞ்சித்து, அதேநேரத்தில், பெருமுதலாளிகளுக்கு வாராக் கடன் என்ற பெயரில் பெருந்தொகைகளைத் தள்ளுபடி செய்து அவர்களுக்கு வெண்சாமரம் வீசி அடைகாப்பதும், வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முதலியவற்றில் பெரும் வீழ்ச்சியை நோக்கி மேலும் மேலும் வேகம் காட்டும் தன்மையிலும், கடும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகும் கொடுமையிலுமாக நடைபெற்றுவரும் மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கும் ஒரே மார்க்கம்தான் – மக்கள் நல்வாழ்வுக்கும், சுய உரிமைக்கும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், சமத்துவத்துக்கும், மக்கள் நல்லிணக்கத்துக்கும் உகந்தது ஆகையால், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ‘‘இந்தியா கூட்டணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும்” ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு வாக்காளர்ப் பெருமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது – வலியுறுத்துகிறது.
மக்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்தல் களப் பணிகளை ஆற்றி, இருள்சூழ்ந்த ஆட்சி அதிகார நெடிவீசும், சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவதையே முக்கிய ஒரே குறிக்கோளாகக் கொண்டு, திட்டமிட்ட வகையில் பணியாற்றுவது திராவிடர் கழகத்தின் முக்கிய கடமை என்பதைத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டி வற்புறுத்துகிறது – முக்கியமான கட்டளைத் தீர்மானமாகவும் ஒருமனதாக நிறைவேற்றுகிறது!
முன்மொழிதல்: திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
தீர்மானம் எண் 4:
கழகக் கட்டமைப்பை
வலுப்படுத்தும் கடமை!
திராவிடர் கழக இயக்கப் பணிகளை எல்லா வகையிலும் வேகப்படுத்துவது – நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிரச்சார யுக்திகளை மேற்கொள்வது, இயக்க ஏடுகள், இதழ்களுக்கான சந்தாக்களைச் சேகரிப்பதைத் தொடர் பணியாகவே செய்வது, மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், அதன் இணை அமைப்புகள் முதலியவற்றைப் பலப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கமாகக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது என்றும், பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சிப் பெற்றவர்களோடு நெருக்கமாக தொடர்பிலேயே வைத்து, கழக செயற்பாட்டாளர்களாக அவர்களை உருவாக்குவது என்றும், கழக அமைப்புகளில் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும், பெரியார் படிப்பகம், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரால் உள்ள நூலகங்களை சரிவரப் பராமரித்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்துவது என்றும், ‘‘பெரியார் பேசுகிறார்”, ‘‘பெரியார் வாசகர் வட்டம்” என்ற பெயர்களில் மாதாந்திர அரங்குக்கூட்டங்களை நடத்துவது என்றும், மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்றும், அணிகளின் பொறுப்பாளர்கள் இதற்கான முழுப் பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் என்றும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக