புதன், 11 ஜனவரி, 2023

தமிழர் தலைவருக்கு டாக்டர் மீனா முத்தையா குமாரராணி செட்டிநாடு அவர்கள் வாழ்த்து ("விடுதலை" நன்கொடை)

 

ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

தமிழ்நாடு அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமையாக, பெரியாரின் தளபதியாக, நூறு ஆண்டு கால திராவிட ஆட்சியின் நிகழ்கால சாட்சியாக, அண்ணா முதல் இன்று வரை நாட்டை ஆளும் முதலமைச்சர்களுக்கும்  ஆலோசனை தந்தவராக - தந்து கொண்டு  இருப்பவராக விளங்குபவர் பெருமதிப்பிற்குரிய அய்யா கி. வீரமணி அவர்கள்.

பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட "விடுதலை" நாளேடு - ஒரு கால கட்டத்தில் நடத்த முடியாமல் போக, நடத்தாமல் விட்டு விடலாம் என்று பெரியார் நினைத்தபோது வழக்குரைஞர் படிப்பு படித்த அய்யா கி. வீரமணி அவர்கள் நான் நடத்துகிறேன் என்று வந்தார்.

வழக்குரைஞர் தொழிலோடு, நாளேட்டையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் போது, பெரியாரோ அது முடியாது, முழு நாளும் நாளேட்டுப் பணியில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று சொல்ல, அதிகமான வருமானத்தைத் தரும் வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு கடந்த 60 ஆண்டு காலமாக முழு ஈடுபாட்டோடு "விடுதலை" நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்றுவரை அப்பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருவது ஒரு வரலாற்று சாதனையாகும். E-Paper  என்ற முறையில் ஆன்லைனில் நாளேடுகள் வந்தபோது, வெளி வந்த முதல் நாளேடு "விடுதலை" என்பது போற்றுதலுக்குரியது.

ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளை வெளியிட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இவருடைய ஈடுபாட்டையும் செயல்திறனையும் கண்ட தந்தை பெரியார் அவர்கள் சொன்ன வாக்கு -  "விடுதலை நாளேட்டினை நடத்தும் ஏகபோக உரிமையை ஆசிரியர் கி.வீரமணிக்கு நான் வழங்குகிறேன்" - என்பது தான் இன்றும் நினைவு கூரத்தக்கது. 

ஓர் அரசியல்வாதி, திராவிடர் கழகத் தலைவர், வழக்குரைஞர் என்ற எல்லாவற்றையும் விட அய்யாவுக்கு மனநிறைவைத் தந்து கொண்டு இருப்பது "விடுதலை நாளேட்டின் ஆசிரியர்" என்ற பணி என்றால் அது மிகையாகாது. 

"அய்யாவின் பணி மேன்மேலும் சிறக்க, எனது அன்பளிப்பாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை இத்துடன் இணைத்துள்ளேன்."

'வாழ்த்துகள்'.

- மீனா முத்தையா - குமாரராணி செட்டிநாடு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக