• Viduthalai
சென்னை, செப்.21 ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தையொட்டி, நேற்று (20.9.2021) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நுழைவு வாயிலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
மக்கள் விரோத பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
மறுக்காதே! மறுக்காதே! ரத்து செய்ய மறுக்காதே! மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே!
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே!
மோடி அரசே! மோடி அரசே! உயருது! உயருது! கேஸ் விலை உயருது! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து! கேஸ் விலையைக் கட்டுப்படுத்து!
ஒன்றிய அரசே! மோடி அரசே! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து! பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து!
மோடி அரசால்... மோடி அரசால்.... பொருளாதாரச் சீரழிவுத் திண்டாட்டம் அதனால்... அதனால்.. வேலையில்லாத் திண்டாட்டம்!
மோடி அரசே! ஒன்றிய அரசே! விற்காதே! விற்காதே! பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே!
ஆகிய முழக்கங்கள் உணர்ச்சிகரமாக இப்போராட்டத்தின் போது ஒலிக்கப்பட்டன.
பங்கேற்றோர்
இப்போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகு, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் சி.காமராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், கோ.வீ.இராகவன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வழக்குரைஞர்கள் வீரமணி, துரைசாமி, பகுத்தறிவாளர் கழக வடசென்னை அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், கூடுவாஞ்சேரி ராஜூ, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் ஜெஜெ நகர் ராஜேந்திரன், பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், திராவிட மாணவர் கழக தோழர்கள் மங்களபுரம் பார்த்திபன், செந்தமிழ் சேரன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர் தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி மதுராந்தகம் கவுதமன், அண்ணா நகர் ஆகாஷ், வி.ரவிக்குமார், திராவிடர் மகளிர் பாசறை த.மரகதமணி, கோடம்பாக்கம் கோடீஸ்வரி, 100ஆவது வட்ட திமுக பிரதிநிதி சதீஷ்குமார், அரும்பாக்கம் அருள்தாஸ், கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், மதுராந்தகம் நகரச் செயலாளர் அறிவுக் கடல் செல்வம், ஓட்டுநர்கள் ஆனந்த், மகேஷ், இளங்கோ உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம்! எதேச்சதிகார ஆட்சியை மக்கள் மன்றத்திலிருந்து - ஜனநாயக முறைப்படி அகற்றுகின்ற வரையில் போராட்டங்கள் தொடரும், தொடரும், தொடரும்!
• Viduthalaiசெய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர்
ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண் டித்து நேற்று (20.9.2021) காலை சென்னை பெரியார் திடல் வாயிலில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது பேட்டி வருமாறு:
திருமதி.சோனியா காந்தியின் வழிகாட்டுதலில்...
இந்தியத் தலைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களின் வழிகாட் டுதலில், 19 கட்சிகள் சிறப்பாக இணைந்தன. அதிலே திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து - இந்தியா முழுவதும் இப்பொழுது இருக்கக்கூடிய மக்கள் பிரச்சி னைகளை முன்னிலைப்படுத்தி, ஒன்றிய அரசினுடைய கவனத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் - அதற்கான ஆர்ப்பாட்டங்களையும், கண்டனப் போராட்டங்களையும் அமைதி வழியில், அறவழியில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தொடங்கி, 30 ஆம் தேதிவரை நடத்துவது என்று முடிவெடுத்ததற்கு ஏற்ப, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி - அதனுடைய ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளான 10 கட்சிகளும், இயக்கங்களும், மற்ற ஆதரவாளர்களும் இணைந்து, தமிழ்நாடு முழுக்க அமைதி வழியில் - கரோனா காலகட்டத்தில் - கரோனா விதிகளை மீறாமல், ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும், ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, விவசாயிகளுடைய நலனுக்கு விரோதமாக, முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று - தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்முடைய முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்து - ஒரு சில கட்சிகளைத் தவிர, அனைவரும் மிகத் தெளிவான அளவிற்கு வழிமொழிந்தார்களே - அதையே வலியுறுத்தக் கூடிய மக்கள் போராட்டமாக இந்தப் போராட்டம் ஆகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிக்கு வழிவகுப்போம் - குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்.
ஜனநாயக உரிமைகள் பறி போனதுதான் மிச்சம்
ஆனால், 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்னார்.
அதோடு, ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்று சொன்னார்.
அவர் கணக்குப்படி பார்த்தால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வந்திருக்கவேண்டும் - 5 ஆண்டுகளுக்கு.
இப்பொழுது இன்னும் 3 ஆண்டுகள் கழிந்தால், மொத்தம் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும். அப்படியானால், வேலை இல்லா திண்டாட்டமே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், நீரிலே எழுதப்பட்ட எழுத்துகளாக, அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டு, முழுக்க முழுக்க ஜனநாயக உரிமைகள் பறிபோனதுதான் மிச்சம்.
புதிதாக வரவேண்டாம் ‘‘நரி வலது பக்கம் போனாலும் சரி, இடது பக்கம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்'' என்று சொல்வதுபோல, இவர்கள் மிகப்பெரிய அளவிற்கு உரிமைகளைப் பறிக்க ஆரம்பித்தார்கள். கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் ஒரு பக்கம் விற்பது - இன்னொரு பக்கம் அடமானம் போடுவது.
இல்லத்தரசிகளின் உள்ளமெலாம் எரிகின்ற சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது
அதேநேரத்தில், இல்லத்தரசிகளையெல்லாம் நாங்கள் மகிழ்விப்போம் - பெண்களுக்கு வாய்ப்புகளைக் கொடுப் போம் - அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பதவிக்கு வந்தவர்கள் - சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எத்தனை முறை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் எரிவது அடுப்பு மட்டுமல்ல - அவர்களுடைய உள்ளமெல்லாம் எரிகின்ற அப்படிப்பட்ட சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கா விட்டாலும் - தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு குறைத்துள்ளது!
அதுபோலவே, சாதாரண மக்கள், நம்முடைய தோழர்கள், நம்முடைய வெகுமக்கள் இன்றைக்கு அதிகமாகப் பயன்படுத்துவது இரண்டு சக்கர வாகனம். அந்த இரண்டு சக்கர வாகனத்தைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு, இந்தக் கரோனா காலகட்டத்தில், வருமானம் குறைந்திருக்கின்ற காலத்தில், வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு இருக்கிற காலத்தில், பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதில் கொஞ்சம்கூட கருணை காட்டுவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 3 ரூபாய் குறைத்தார்கள். இத்தனைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி உண்டு. அப்படி இருந்தும் இதை செய்திருக்கிறார்கள். எனவேதான், இவற்றையெல்லாம் முன்னிறுத்தக் கூடிய அளவிற்கு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நண்பர்களே, ஒரு செய்தியை நாம் கவனிக்கவேண்டும்; ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, மாநில உரிமைகளைப் பறிமுதல் செய்கிறது; மாநில உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.
கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்கூட...
என்னவென்று சொன்னால், விவசாயத்தைப் பொறுத்தவரை சட்டங்களை செய்கின்ற முன்னுரிமை - முதல் உரிமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மாநில அரசு பட்டியலில் இருந்ததை எடுத்து, மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், எதேச்சதிகார மனப்பான்மையுடன் மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு - முழுக்க முழுக்க மூன்று சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்து, கொதித்துப் போய், ஏறத்தாழ 9 மாதங்களாக விவசாயிகள் டில்லயில் கடுமையான குளிரிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்கூட இன்றைக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான், ஒன்றிய ஆட்சி - மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது என்கிறோம்
இந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது
இவர்கள் ஜனநாயகத்தில் மக்களுடைய வாக்குகளைப் பெற்று வந்தோம் என்று சொல்லி, இன்றைக்கு எதேச்சதி காரமாக சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து, இந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது.
கட்சிகளால் பிரிந்திருந்தாலும், இந்த அடிப்படைக் கோரிக்கைகளால் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவேதான், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அறப் போராட்டத்தை - மக்கள் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த இயக்கம் - இன்றைக்குக் கரோனா காலகட்டம் என்பதால், மிகப்பெரிய அளவிற்கு மக்களைத் திரட்டக்கூடாது என்பதற்காக, அவரவர் இல்லத்தின் வாசலில் நின்று, அவரவர் அலுவலக வாசலில் நின்று, அவரவர் கட்சி அலுவலக வாசலில் நின்று இந்தப் பணியை செய்கிறோம்.
இந்தப் போராட்டம் முதல் கட்டம்தான் - இதோடு முடிவதல்ல - ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் சட்டம் அகற்றப்படுகின்ற வரையில், இப்படிப்பட்ட எதேச்சதிகார ஆட்சி - மக்கள் மன்றத்திலிருந்து ஜனநாயக முறைப்படி அகற்றப்படுகின்ற வரையில், நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும்! தொடரும்!! தொடரும்!!!
வாழ்க பெரியார்!
வாழ்க ஜனநாயகம்,
ஒழிக அடக்குமுறைகளும், எதேச்சதிகாரமும்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக