‘‘விரட்டுவோம், விரட்டுவோம் - புதிய கல்வி திட்டத்தை விரட்டுவோம்!''
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெடித்த போர்க்குரல்!
நமது சிறப்புச் செய்தியாளர்
ஜனவரி 20 ஆம் தேதி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு விழாப் பொதுக்கூட்டம் நேற்று (30.1.2020) சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போராட்டக் குணத்துடன் நிறைவு பெற்றது.
‘‘ஒழிப்போம்! ஒழிப்போம்!! ‘நீட்'டை ஒழிப்போம்!''
‘‘விரட்டுவோம்! விரட்டுவோம்!! தேசிய கல்வி திட்டத்தை விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தைத் தமிழர் தலைவர் கூட்டத்தின் இறுதியில் தொடுத்தபோது, மேடையில் இருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் தொடுத்து முழங்கியது இக்கூட்டத்தின் முத்தாய்ப்பான நோக்கத்தை முரசடித்து அறிவித்தது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் - மக்கள் திரள்- தலைவர்களுடையே முழக் கங்கள் - ‘நீட்' என்னும் கொடுவாளின் கூர்மையை மழுக்கிப் பறிமுதல் செய்யும் என்பதற்கான அச்சார மாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
பேராசிரியர் ஜவாஹிருல்லா
நிறுவனர், மனிதநேய மக்கள் கட்சி
இன்று காந்தியார் நினைவு நாளில் பொருத் தமாக சமூகநீதிக்கான பெரு விழா நடைபெறு கிறது.
காந்தியார் படுகொலை யின் பின்னணியில் கோல் வால்கர் இருக்கிறார்.
காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோது, தந்தை பெரியார் ஒரு மாபெரும் பொறுப்புமிக்க தலைவராகப் பரிணமித்தார்.
காந்தியாரைக் கொன்றவன் முசுலிம் என்று பரப்புரை செய்தபோது - அதனை மறுத்தும், மக்களை அமைதி காக்கக் கூறியும் - திருச்சி வானொலியில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - அவரின் பெரும் பண்பாட்டுக்கு உரை கல்லாகும்.
(காந்தியாரைக் கொன்றவன் மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனன் என்று சிலாகித்து, கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால், மகாராட்டிரத்தின் பல பகுதிகளிலும் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தனவே - அவற்றைவிடத் தமிழ்நாட்டில் அதிக மாகவே நடந்திருக்க வாய்ப்புண்டு - அதனைத் தடுத் தாட்கொண்டவர் தந்தை பெரியார்).
இன்றைக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு - குடியுரிமை தொடர்பாகக் கொண்டு வந்துள்ள சட்டங்கள் இவரின் குருநாதரான கோல்வால்கர் எழுதிய ‘‘We or Our Nation hood Defined'' எனும் நூலில் குறிக்கப்பட்டிருப்பதுதான். (சிறுபான்மை யினர் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் பிரஜா உரிமையின்றியும், வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது).
‘நீட்', புதிய கல்வி திட்டம் என்று நம் மக்களின் தலை யில் கைவைத்ததோடு, பொது சுகாதார துறையையும் மாநிலத்திலிருந்து கபளீகரம் செய்ய முடிவெடுத்துவிட்டது மத்திய பி.ஜே.பி. அரசு.
இதில் திராவிடர் கழகத்தின் பணி, ஆசிரியரின் பணி மகத்தானது.
வழக்குரைஞர் அழகுசுந்தரம்
ம.தி.மு.க. கொள்கைப் பரப்பு அணி செயலாளர்
நான் வழக்குரைஞர்; எனது மகள்கள் மருத்துவக் கல்லூரிகளில் - இவை எல்லாம் பெரியார் போட்ட பிச்சை.
பெரியார் பிறந்த தமிழ் நாடு சமூகநீதிப் போரில் தோற்காது - நம் போரைத் தொடர்வோம்!
தோழர் இரா.முத்தரசன்
மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நாம் நடத்துவது கோரிக்கைப் பொதுக்கூட்டமல்ல - இலட்சியத்தை நோக்கிய பயணம்.
மீண்டும் பழைய மனுதர்மத்திற்கு நம்மைத் தள்ளி விடப் பார்க்கிறார்கள்.
மதச் சார்பற்ற கொள்கையைச் சொன்னதற்காக மதவெறியர்களால் கொல் லப்பட்டவர் காந்தியார் - அந்நாள்தான் இந்நாள்!
1947 ஆகஸ்டு 15 இல் சுதந்திரம் என்றால், 1948 ஜனவரி 30 இல் சுதந்திரத் திற்காகப் பாடுபட்ட காந் தியார் சுட்டுக் கொல்லப் பட்டார். 5 மாதங்களுக்கு மேல் அவரை உயிரோடு விட்டு வைக்காத கூட்டம், நாட்டை ஆள்கிறது.
5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கெல்லாம் அரசு தேர்வு என்றால், இதன் பொருள் மேல்நிலைப்பள்ளியோடு உன் கல்வியை முடித்துக்கொள் - கல்லூரிக்குள் நுழையாதே என்பதற்கான ஏற்பாடுதான் - இதுதான் அவாள் திட்டம்!
உங்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருப்போம் - எங்கள் நாற்காலிகளை ஆட்டாதே என்பதுதான் மத்திய பி.ஜே.பி.க்கு தமிழக அ.தி.மு.க. அரசின் எழுதப்படாத ஒப்பந்தம்.
இந்த யுத்தத்தில் நாம் வென்றே தீருவோம்.
87 வயதிலும் சமூகநீதிக்காகப் பாடுபடும் - பெரும் பயணம் மேற்கொண்டு மக்களிடத்திலே விழிப்புணர் வைச் செய்த ஆசிரியர் அவர்களுக்கு நாடு கடமைப் பட்டுள்ளது - வாழ்த்துகள், பாராட்டுகள்!
தோழர் கே.பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர், சி.பி.எம்.
87 வயது இளைஞராக நமது ஆசிரியர் அவர்கள் 11 நாள்கள் பெரும் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நமது வாழ்த் துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக!
‘நீட்' என்பது நமது மக்களை மருத்துவக் கல் லூரி பக்கம் தலை வைக் காதே என்பதற்கான சதித்திட்டமே!
இந்த ஆண்டு ‘நீட்' தேர்வுக்காக விண்ணப்பித்த வர்களின் எண்ணிக்கையும் 17 விழுக்காடு குறைவு. ஏன்? ‘நீட்' எழுதி நாம் வெற்றி பெறப் போவதில்லை என்ற முடிவுதான்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கே வரவில்லை என்று கைவிரித்துவிட்டார்கள் - தமிழக அரசு அதனைக் கொண்டுகொள்ளவேயில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல- அதில் யாருக்குப் படிக்க வாய்ப்பு என்பதுதான் முக்கியம்.
பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். பின் எதற்கு 12 ஆண்டுகள் படிக்கவேண்டும்?
பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோச்சிங் வகுப் புக்குச் சென்றவர்களுக்குத்தான் 80 சதவிகித மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைத்துள்ளன.
எல்லோரும் லட்சக்கணக்கில் செலவு செய்ய வாய்ப்பு உண்டா?
12 ஆம் வகுப்புக்குள் நான்கு அரசு தேர்வுகள் என்றால், இதன் பொருள் - விரைவில் நாடு கைநாட்டுப் பேர்வழிகள் நிறைந்த பழைய நாடாக மாறப் போகிறது என்பதுதான்.
இது தந்தை பெரியார் பிறந்த நாடு - பன்முகத் தன்மையையும், மதச்சார்பற்ற தன்மையையும் வளர்த்த நாடு, ரஜினிகாந்த் அவர்களே தந்தை பெரியார் இல்லாமல் இருந்தால் உங்கள் நிலை என்ன?
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,
தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர்
கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டத் துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, உரு வாக்கப்பட்டது. 26 மருத் துவக் கல்லூரிகள் உள்ளன; இவை அல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வேறு; வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை கிடையாது.
நம் மக்கள் வரிப் பணத்தில் நம் மக்கள் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி களில், யார் யாரோ வந்து படித்துவிட்டுப் போகிறார்கள்; வடநாட்டுக்காரர்கள் குவிகிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி, பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார்; அதற்குப் பிறகு அடுத்த கல்லை எடுத்து வைக்கவில்லையே - யாரை ஏமாற்றிட!
இந்தியாவில்தான் நாங்களும் வாழ்கிறோம். நாங்கள் புத்தர், வர்த்தமானர், மகாவீரர், திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், அண்ணா சிந்தனைகளை ஏற்று வாழ்கி றோம்.
கைபர் கணவாய் வழியே வந்த உங்கள் சிந்தனைகளை பிறவியில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வருண தர்மத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தால், அதுதான் நடக்காது, நடக்கவும் விடமாட்டோம்!
1971 இல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டையும், ஊர்வலத்தையும் இப்பொழுது நினைவு படுத்துகிறார்கள்.
அந்த 1971 ஆம் ஆண்டோடு ராஜாஜியின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிட்டதே.
பெரியாரை எதிர்த்து - பெரியார் ஆதரித்த தி.மு.க.வை எதிர்த்து சேலம் மாநாட்டைக் காரணம் காட்டி ‘சோ' தலைமையில் பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே - தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு என்னவென்பது மறந்துவிட்டதா? 1967 இல் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க. 1971 ஆம் ஆண்டில் 183 இடங்களையல்லவா பெற்று சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றது.
திராவிட இயக்கத்தை, தந்தை பெரியாரை சீண்ட சீண்ட நீங்கள் முகவரியில்லாமல் போய்விடுவீர்கள்.
கே.எஸ்.அழகிரி
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
உடலிலும் உள்ளத் திலும் உறுதி இருப்பதால், 87 வயதிலும் நமது ஆசி ரியர் ஓய்வில்லாது உழைக் கிறார் - பிரச்சாரம் செய் கிறார் - அவர் மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தமிழ்நாட்டுக்குத் தொண்டு செய்யவேண் டும்.
திராவிடர் கழகம் ஓட்டுப் பக்கம், பதவிப் பக்கம் செல்லக்கூடிய அமைப்பு அல்ல - அது ஒரு சமூகப் புரட்சி இயக்கம். நம் மக்களின் உரிமைத் திசையில், சமூகநீதித் திசையில் பயணிக்கும் இயக்கம்.
நமது கடந்த கால வரலாறு மக்களிடையே பிளவு படுத்தப்பட்ட, ஏற்ற தாழ்வுகள் உருவாக்கப்பட்டதாகும்.
இத்தகைய சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாத ஒரு நாட்டில் சமூக அமைப்பில் தகுதி - திறமை பேச முடியுமா - பேசலாமா? சம நிலை உண்டாகட்டும் - அதற்குப் பின் தகுதி - திறமையைப்பற்றிப் பேசலாம்!
உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் சமூகநீதி அவசியம் தேவை - அதற்கு உலை வைப்பதுதான் ‘நீட்.' அதனை எப்படி அனுமதிக்க முடியும்?
12 வகுப்புக்குள் ஒரு மாணவன் ஆறு அரசுத் தேர்வுகளை எழுத வேண்டுமா?
தகுதி - திறமை என்கிறார்கள்; மேலோட்டமாகப் பார்த்தால், அது சரிதானே என்று கூடத் தோன்றலாம். உண்மை நிலை என்ன?
ஒரு கட்டடத் தொழிலாளியின் மகன், சாக்கடை சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளியின் மகன் இவர்கள் கூறும் அந்தத் தகுதியை அடைய முடியுமா? ‘நீட்' தேர்வு எழுதித் தேர்வு பெற்றிட முடியுமா?
முதலில் சமமற்ற தன்மையை மாற்று - சமநிலையை உருவாக்கு, உண்டாக்கு. அதுவரை தேவையான வாய்ப்புகளை, இட ஒதுக்கீட்டைக் குளறுபடியில்லாமல் செயல்படுத்து - இதனைத்தான் தந்தை பெரியார் கூறினார் - பாடுபட்டார்.
ஏழை, எளியவர்களும், கல்விச் சூழல் இல்லாதவர் களும், மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் அது கனவாகி தற்கொலையில்தான் முடியும் என்பதுதான் எதார்த்த நிலை. அனிதாக்களின் தற்கொலைகள் - இதனைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.
எங்கள் தந்தையார் திராவிடர் கழகத்தவர். நான் சத்தியமூர்த்தி பவனில் நுழையும்போது, தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தேன். அவர் தலைவராக இருந்த காங்கிரஸ் அல்லவா என்று எண்ணிப் பார்க்கிறேன்.
திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும், எங்களுக்கும் ஒன்றும் அதிக வேறுபாடுகள் கிடையாது. சமுதாய, சமத் துவ, சமூகநீதியில் யாருக்குத்தான் உடன்பாடு இருக்க முடியாது?
எழுச்சித் தமிழர்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
இன்றைக்கு அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி - அதன் பிரதமர் மோடியின் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கக்கூடிய, துரத்தக் கூடிய நிலையில்தான் இருக்கிறது.
‘நீட்'டை மறந்து திசை திருப்பப்படும் பிரச்சினைகளில் பயணிக்க வேண்டியதாகிறது.
ஆனால், நமது ஆசிரியர் அய்யா அவர்களின் கவனம் மட்டும் சிதறுவதில்லை; அவரைத் திசை திருப்பவும் முடியாது.
இந்த 87 வயதில் குமரி யில் தொடங்கி தலைநகர் சென்னைவரை தொடர் பிரச்சாரப் பெரும் பய ணத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.
நாம் மந்தமாக இருக் கக்கூடாது - தொய் வடைந்துவிடக் கூடாது - மக்களிடம் போராட்ட உணர்வு குன்றிவிடக் கூடாது - சமூகநீதியில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக சதா மக்களிடம் செல்லுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
தந்தை பெரியார் கடைபிடித்த அதே அணுகு முறையை - அவரின் கொள்கை வாரிசான நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கொஞ்சம்கூடத் தொய்வு இல்லாமல் சுழன்றபடியே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.
தமிழர் தலைவரிடம் உள்ள அந்தப் போராட்டக் குணத்தை நாம் கற்கவேண்டும், ஏற்கவேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் இப்பொழுது தந்தை பெரியார் சிலைகளை உடைக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பின்னணியை நாம் அடையாளம் காணவேண்டும்.
எந்த பெரியாரால் உரிமை பெற்றார்களோ - அப்படி பலன் பெற்றவர்களே யாருக்கோ கருவியாகப் பயன்படு கிறார்கள். உரிய நேரத்தில் அவர்களை அடையாளம் காணவேண்டும் - காட்டுவோம்!
திராவிடர் கழகம்தான் நமக்குத் தாய்க்கழகம் - எல்லோரையும் ஒருங்கிணைக்கும் இடத்தில் தாயாக இருந்து வருகிறது. அந்த வழியில் நாமும் பயணிப்போம்!
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார் (சென்னை, 30.1.2020).
அன்று ஆச்சாரியார் குலக்கல்வியைக் கொண்டு வந்தார். பழைய கள் - புதிய மொந்தை அதுதான் தேசிய கல்வி, ‘நீட்' என்பன.
இவற்றை எதிர்க்கத்தான் நாம் அனைவரும் இங்குக் கூடியிருக்கிறோம். இது ஒரே அணிதான் - சமூகநீதிக்கான அணிதான்.
மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படைக் கல்வியாகும். அந்த அடிப்படையைத் தகர்ப்பதே ஆரியத்தின் மனுதர்மம்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் கூறு கிறார்,
‘‘ஆரியர்கள் இங்கு வந்தபோது கையோடு மனுதர் மத்தைக் கொண்டு வந்தார்கள்'' என்று எழுதுகிறார்.
அவர்களுக்கானது மனுதர்மம் - நமக்கானது குறள்.
இரண்டுக்கும் இடையிலான போராட்டம்தான் இன்றுவரை.
அண்ணல் அம்பேத்கர், அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமதர்மம், சமத்துவத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு அச்சுறுத்தல் இன்று ஏற்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று எல்லாம் ‘‘ஒரே, ஒரே'' என்று கூச்சல் போட்டாலும், எல்லோரும் ஒரே ஜாதி - சரி நிகர் என்று சொல்லத் தயங்குவது ஏன்?
சமத்துவத்தைப் போதித்த அண்ணல் அம்பேத் கரையே அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். அவர்மீது ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்தப் பார்க்கிறார்கள் - நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஆனால், இங்கு அது நடக்காது.
தந்தை பெரியார் பார்வை என்பது ‘ஸ்கேன்' - அது போட்டோகிராபி அல்ல - ஓவியமும் அல்ல - உடைந்த எலும்பை அப்படியே உடைந்ததாகக் காட்டும் ‘ஸ்கேனுக்குப்' பெயர்தான் தந்தை பெரியார்.
நாம் இன்னும் எத்தனை அனிதாக்களை இழக்கப் போகிறோம் - அருமைப் பெற்றோர்களே, உங்களுக்குப் பொறுப்பு இல்லையா? உங்கள் பிள்ளைகளின், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் இல்லையா?
சமூகநீதியை வென்றெடுக்க வீட்டை விட்டு வெளியே வாருங்கள்! வாருங்கள்!
வரும் 21 ஆம் தேதி திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக்குழு - மாலையில் சமூகநீதி மாநாடு.
போராட்டத் திட்டம் வகுப்போம்! சிறைச்சாலைகளை நிரப்புவோம்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார், ‘‘ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர் எல்லாம் உதையப்பர் ஆகி விட்டால், ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ'' என்றார்.
உதையப்பர் ஆகவேண்டாம்; வன்முறையில் நம்பிக் கையில்லை.
ஓட்டப்பர் ஆகிவிடலாம் அல்லவா? தேர்தலில் உங்கள் ஓட்டு என்பதுதான் அந்த ஓட்டப்பர். அந்த ஆயுதத்தைப் பொறுப்போடு, சமூகநீதி உணர்வோடு பயன்படுத்திடவேண்டும் என்று கூறினார்.
- விடுதலை நாளேடு 31 1 20
'எழுச்சியுடன் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணம் நிறைவு பொதுக்கூட்டம்
'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவர், துணைத் தலைவருடன்
(சென்னை பெரியார்திடல், 30-1-2020)
சென்னை,ஜன.31, ‘நீட்’ தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து, நேற்று 30.1.2020 மாலை சென்னையில் பரப்புரைப் பெரும்பயணத்தை நிறைவு செய்தார்.
20.1.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தொடங்கிய நீட் எதிர்ப்புப் பெரும்பயண நிறைவு பொதுக் கூட்டம் நேற்று (30.1.2020) மாலை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கலைஞர் கருணாநிதி சாலையில் மார்க்கெட்பகுதியில் நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களின் மருத்துவக்கல்வி கனவை கேள்விக்குறியாக்கிய ‘நீட்’ நுழைவுத் தேர்வு தமிழகத்தில் விரும்பாத நிலையில் மத்திய அரசால் திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தொடங்கி திருத்தணி, சென்னை வரை நடைபெற்ற பெரும்பயணம் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஒவ்வொரு பகுதியிலும் அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஆர்வமுடன் வரவேற்றார்கள்.
நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரைப் பயணங்களின் பொதுக்கூட்டங்களில் மக்கள் திரண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையைக் கேட்டு பயன்பெற்றனர். உணர்ச்சிப் பெருக்குடன் போர்க்குணம் பெற்றனர். நீட் தேர்வை ஒழித்தே தீருவோம் என்கிற உறுதி யான நம்பிக்கையுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
'நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பெரும்பயண
நிறைவுப் பொதுக்கூட்டம்
நேற்று (30.1.2020) மாலை 6 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் கலைஞர்கருணாநிதி சாலையில் மார்க்கெட் பகுதியில் தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பெரும் பயணம் -நிறைவுப் பொதுக்கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், எம்.பி.பாலு, ப.முத்தையன், மு.ந.மதியழகன், செங்குட்டுவன், மு.இரா.மாணிக்கம், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், கு.அய்யாத்துரை, மு.சேகர், ச.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவு பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்பட வேண்டும், 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு கூடாது, ஒத்திசைவுப்பட்டியலிலுள்ள கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இப்பரப்புரைப் பெரும்பயணத்தில் முன் வைக்கப்பட்டன.
கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன் ஆகியோர் நீட் எதிர்ப்பு விளக்க பரப்புரைப்பயணத்தின் நோக்கம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தமிழகத்துக்கு நேர்ந்துவரும் கேடுகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். சமஸ்கிருதத்திணிப்பு, நீட் தேர்வால் விளைந்த கேடுகள், அவலங்கள், முறைகேடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
தமிழக மக்களின் உரிமைகள், மாணவர்களின் கல்வி உரிமைகள், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஒழிப்பு, சமூக நீதியைக் காப்பதில் திராவிடர் கழகம் கண்ட களங்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பு, அயராதத் தொண்டாற்றி வெற்றி பெற்ற செயல்பாடுகள் குறித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்கவுரையில் விளக்கிக் கூறினார்.
நீட் எதிர்ப்புப் பெரும்பயணம் மேற்கொண்டு, வெயில், பனி பாராமல் தொடர்பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பாராட்டி தலைவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களுக்கு இயக்க நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்து சிறப்பு செய்தார். தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தலைவர்களுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
நீட் தேர்வு எதிர்ப்பு பெரும்பயணம் பெற்றுள்ள வெற்றி குறித்தும், தமிழர் தலைவர் வழிகாட்ட, அனைவரும் அவரைப்பின்பற்றி தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம் என்று நீட் எதிர்ப்புப் பெரும்பயண நிறைவுப் பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் உறுதி கூறினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) கட்சி மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் மதுரை க.அழகுசுந்தரம், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை சிறப்புரை ஆற்றினார்.
கலந்து கொண்டவர்கள்
திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஎம் ஆகிய கட்சிகளின் பொறுப்பாளர்கள், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்சென்னை, வட சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், செய்தி தொடர் பாளர் கோபண்ணா, எஸ்.எம்.குமார், நாஞ்சில் இராஜேந்திரன், சேலம் மணி, மதிமுக பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் மற்றும் வட்டச் செயலாளர்கள் சதாசிவம், அரி, பாபு, விடுதலைசிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள் வீ.கோ.ஆதவன், எஸ்.எஸ்.பாலாஜி, கரிகால்வளவன், விக்ரம், செந்தில், விஜயக்குமார், ஜெயகரன், சரவணன் மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணேசுவரி, கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டல இளைஞரணி செயலாளர்சிவசாமி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ. கணேசன், பெரியார் வீரவிளை யாட்டுக்கழகம் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், நெய்வேலி கனகசபாபதி, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் ராமண்ணா, சீனுவாசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆவடி தமிழ்மணி, வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம், புரசை அன்புச்செல்வன், பெரியார்மாணாக்கன், தமிழ்சாக்ரட்டீஸ், தென்சென்னை இளைஞரணி மு.சண்முகப் பிரியன், மயிலை ஈ.குமார், அடையாறு மணித்துரை, கொடுங்கையூர் கோ.தங்கமணி, சூளைமேடு இராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், சைதை தென்றல், பெரம்பூர் கோபாலகிருஷ் ணன், தொழிலாளர் கழகம் கூடுவாஞ்சேரி ராசு, நங்கநல்லூர் க.தமிழினியன், மகிழ்க்கோ, சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பூங்குழலி, பசும் பொன்செந்தில்குமாரி, பவானி, மாணவர் கழகம் தொண்டறம் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
'நீட்' எதிர்ப்புப் பெரும்பயணத்தில் கலந்துகொண்ட குழுவி னருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் உரையாற்றிய ஊர்கள்
'நீட்' எதிர்ப்பு பெரும்பயணத்தில் பொதுக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றிய பகுதிகள் வருமாறு:
நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு விழாப் பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்தோர் (எம்.ஜி.ஆர். நகர், 30.1.2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக