வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்திய மாணவர் சங்கக் கருத்தரங்கில் திராவிடர் கழகப் பொருளாளர் பங்கேற்பு

சென்னை, பிப்.25 இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தமிழ்நாடு மாநில குழுவின் சார்பாக சென்னையில் 22.2.2020 அன்று கல்வி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கரூர் வைஸ்யா வங்கி தொழிற்சங்க அரங்கில் 'தேசம் காக்க பல்கலைக் கழகங்களைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் அமைப்பினைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ.குமரேசன் பிற்பகல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் தமது உரையில் குறிப்பிட்டதாவது: ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் இரண்டு தளங்களில் கிடைக்க வேண்டும். ஒன்று - கல்வி கற்கும் உரிமை, அடுத்து - கல்வியைப் புகட்டும் நிலையங்களான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உரிமை.

இந்திய நாடு அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தென்பகுதியில் - குறிப்பாக சென்னை மாகாணத்தில் கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு அரசு ஆணை மூலம் கல்வி கற்க அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சி. கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்கள் - அந்தக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகள் படிப்படியாக படிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். கல்வி கற்கும் மக்கள் பிரிவினர் பரந்து பட்டு வந்த நிலையில் நாடு விடுதலை பெற்று அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அனைவரும் கல்வி கற்றிட வழி அமைத்த வகுப்புரிமை ஆணை செல்லாது என மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் போடாமலேயே தனக்கு மருத்துவக்கல்வி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை என ஒரு பார்ப்பனப் பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மக்கள் அனைவரும் சமம்; பாகுபாடுகூடாது' எனும் அரசியலமைப்பு சட்ட விதியை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வகுப்புரிமை ஆணை செல்லாது என தீர்ப்பு அளித்தது. தந்தை பெரியார் தலைமையில் தமிழகமே ஒட்டு மொத்தமாகத் திரண்டு, நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் வகுப்புரிமை ஆணையின் நடைமுறையினை ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்திடும் வகையில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக அரசமைப்புச் சட்ட முதல் திருத்ததின் மூலம் புதிய விதியினை 15(4) சேர்க்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட விதிகள் எழுத்துப் பூர்வமாகவும், அதனுள் அடங்கிய பொருள் விளக்கத்தின் மூலமாகவும் அனைவரும் கல்வி பெற்றிடும் வகையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், முழுமையாக அனைவரும் கல்வி கற்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் தடைகளை ஆதிக்க சக்திகள் இன்றளவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீட், நெக்ஸ்ட் என பல்வேறு தடைத் தேர்வுகளை நடத்தி கல்வி கற்கும் வாய்ப்பினை சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய நீதிமன்றங்களே மறுத்து வருகின்றன. ஆட்சியாளர்களும் அதற்கு ஏதுவாக கல்வி அனைவருக்கும் கிடைக்கூடிய வாய்ப்பினை தடுத்து வருகின்றனர்.

அடுத்து கற்பிக்கும் கல்வி நிலையங்கள் சுதந்திரமாக கல்வி வழங்கிடுவதிலும் தடைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களை பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை முடக்கிடும் வகையில் மத்திய அரசு தனது அதிகார வரம்பினை தொடர்ந்து மீறிக்கொண்டே வருகிறது. கல்வி என்பது மாநில ஆட்சியின் உரிமை எனும் நிலையிலிருந்து மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து  நடைமுறைப்படுத்தும் அதிகாரமாக கடந்த காலத்தில் மாற்றப்பட்டதே கல்வி நிலையங்களின் உரிமையினை பறிப்பதாக அமைந்துவிட்டது. ஆனால் குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாக கல்வி அதிகாரத்தை இன்று மத்திய அரசே தன்னிச்சையாகக் கையாளும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உண்மையான ஆளும் அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அந்த மக்கள் தங்களது நலன்களை, உரிமைகளை - கல்வி கற்கும் உரிமையினை தட்டிப்பறிக்கின்ற எந்தப் போக்கினையும் தட்டிக்கேட்காவிட்டால் உரிமை இழந்து வாழும் சூழ்நிலை உருவாகிவிடும். அந்த நிலையி¬னை தடுத்து கல்வி உரிமை பற்றிய விழிப்புணர்வை, போரிடும் வல்லமையினை மக்களிடம் உருவாக்க வேண்டும். அனைத்து மக்களும் கல்வி கற்க தடை விதிக்கும் எந்த ஆட்சியாளரையும் பதவியில் இருந்து இறக்குவதை தங்களது வாக்கு பலத்தின் மூலம் அவ்வப்போது நிரூபித்துக் கொள்ள வேண்டும். உரிமை மறந்தால் உரிமை இழப்பு உறுதி எனும் எச்சரிக்கை உணர்வினை மக்களிடம் தொடர்ந்து விளக்கி, பிரச்சாரம் செய்திட மக்கள் அமைப்புகள், சமூக அமைப்புகள் முன் வரவேண்டும். இது குறித்த களப்பணிகள் மேலும் பலப்பட வேண்டும். இந்த கல்வி கருத்தரங்கள் அதற்கு வழிகோறும். பிரச்சார பணியினை முடுக்கி விடுவோமானால் கல்வி கற்கும் உரிமை காப்பாற்றப்பட்டுவிடும்.

இவ்வாறு வீ.குமரேசன் குறிப்பிட்டார்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற கருத்தரங்கில் கல்வியாளர் பேராசிரியர் வசந்திதேவி, திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் பால.சசிக்குமார் மற்றும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் அயிஷி கோஷ் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.

கருத்தரங்கில் திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கலைமணி, தீபிகா மற்றும் பல தோழர்களும் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு 25 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக