சனி, 22 பிப்ரவரி, 2020

சென்னை பரப்புரை நிறைவுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!

‘நீட்'டை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்

எங்களோடு சிறைக்கு வாருங்கள்; வர முடியாதவர்கள்

எங்களை வழியனுப்பிட வாருங்கள்!

சென்னை, பிப்.5  ‘நீட்'டை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்; எங்களோடு சிறைக்கு வாருங்கள்; வர முடியாதவர்கள் எங்களை வழியனுப்பிட வாருங்கள் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 30.1.2020 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பய ணத்தின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘நீட்' தேர்வு என்ற ஒரு கொடுமை!

புதிய கல்வி கொள்கை என்ற நவீன குலதர்மக் கல்வித் திட்டம்; அதைப் போலவே, ஆரம்பப் பள்ளியிலிருந்து படிக்கக் கூடியவர்கள், குலக்கல்வி என்பதை எப்படி 66 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ கோபாலாச்சாரியாருடைய காலத்தில் கொண்டு வந்தார்களோ, அதையே ‘‘பழைய கள்- புது மொந்தை'' என்ற அளவில், புதிதாகக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு, ‘நீட்' தேர்வு என்ற ஒரு கொடுமையால், நம்முடைய பிள்ளைகள் இனிமேல் மருத்துவர்களாக ஆகக் கூடிய கனவேகூட காண முடியாது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் அறவே மருத்துவர்களாக ஆக முடியாது; கிராமப்புற பிள் ளைகள் மருத்துவர்களாக ஆக முடியாது; சிறுபான்மை சமுதாய மக்கள் மருத்துவர்களாக ஆக முடியாது என்று சொல்லக்கூடிய அந்தக் கொடுமையான ஒரு கல்வித் திட்டம் என்ற வகையில், மீண்டும் மனு தர்மத்தை இங்கே கொண்டு வருகிறார்கள். இதுதான் அதனுடைய அடிப்படையாகும்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பதுதான் அசல் மனுதர்மம் நூல். இந்த மனுதர்மத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

உங்களுக்காகத்தான், உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான்!

இங்கே வந்திருக்கின்ற தலைவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்து, என்னை உற்சாகப்படுத்த வந்திருக்கிறார்கள் என்று மட்டும் நீங்கள் நினைக்காதீர்கள். உங்களுக்காகத்தான், உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தான் நாங்கள் எல்லாம் இங்கே வந்திருக்கின்றோம்.

ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி என்று ஒரே, ஒரே என்று சொல்லி, ஒரு ஆரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக் கலாம்; மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வரலாம் என்று நினைப்பதை முறியடிக்கக் கூடிய ஒரே அணி நாட்டில் உருவாகிறது. அது இமயம்முதல் குமரிவரை உருவாகிறது. வழக்கம்போல், தமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டுகிறது என்பதற்காக இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

என்னுடைய வயதைப்பற்றியெல்லாம் இங்கே குறிப்பிட்டார்கள், வயதைப் பொருட்படுத்தவில் லையே என்று சொன்னார்கள். அதற்கு வேறு ஒரு காரணமோ, ரகசியமோ இல்லை - சுருக்கமாக சொல்கிறேன்.

95 ஆம் ஆண்டிலும் மூத்திரப் பையை சுமந்துகொண்டு போராட்டக் களத்திலே நின்றவர்

நம்முடைய தலைவர் 95  ஆம் ஆண்டிலும் மூத்திரப் பையை சுமந்துகொண்டு போராட்டக் களத்திலே நின்றவர். அதைப் பார்க்கும்பொழுது, 87 வயது என்பது இளமை. இது முதுமையே அல்ல.

‘‘வயது ஒரு பொருட்டல்ல என்று அவர் இருக் கிறார்'' என்று சொன்னார்கள். ஏனென்றால், நாம் எதிர்க்கவேண்டியவர்கள் - கொள்கை ஒரு பொருட் டல்ல என்ற ஒரு கூட்டம் இன்றைக்கு சேர்ந்து கொண் டிருக்கிறது. அதனை எதிர்க்கின்ற இந்த மாபெரும் ஒரு அணி- நிறைவு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தென்சென்னை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வில்வநாதன் அவர்களே, வரவேற்புரையாற்றிய வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பெருமதிப் பிற்குரிய சகோதரர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் முத்தரசன் அவர்களே,

அதுபோல, எங்கள் மாவட்டம், அவர் சொன்னார், அந்தப் பற்று போகாது என்று.  ஒரே அணிதான், ஒரே மண் என்று சொன்னார். ஒரே கொள்கையும்கூட -வண்ணங்கள் வேறாக இருந்தாலும், எங்கள் எண் ணங்கள் என்றைக்கும் ஒன்று என்று சொல்லக்கூடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை  விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் அவர்களே,

கருமத்திற்குரியவர்கள்

கடைசி வரைக்கும் இருப்பார்கள்

எனது அருமை சகோதரர், சில பேர் இங்கே நினைத்துக் கொண்டிருந்தார்கள், அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று. வந்தாலும், வராவிட்டாலும், எங்களுடைய அங்கங்களில் அவர் ஒருவர். ஆகை யால், விழுப்புரத்திலிருந்து அவர் வந்து சேரவில்லை என்றாலும், சேர்ந்ததாகத்தான் கணக்கு வைப்போம். கருமத்திற்குரியவர்கள் கடைசி வரைக்கும் இருப்பார்கள்.

அந்த அடிப்படையில், அருமைச் சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் சமூகநீதி போராளி பலராமன் அவர்களே,

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தோழர் கோபண்ணா அவர்களே,

கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, கழகத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் இன்பக்கனி அவர்களே, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,

மற்றும் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய தோழர் களே,

பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்புள்ள ஒரு குடும்பம்

தொடர்ந்து காங்கிரசில் இருக்கிறார் என்று சொல் வதைவிட, பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்புள்ள ஒரு குடும்பம், டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய காலத்திலிருந்து நான்காவது தலை முறையில் இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அவர்கள்.

அவருடைய தாத்தாவினுடைய தேர்தல் பிரச் சாரத்திற்கு, தந்தை பெரியாரும், நானும் சென்றிருந் தோம். அப்படிப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே,

நன்றியுரைக் கூறவிருக்கக்கூடிய தோழர் பார்த்த சாரதி அவர்களே, நண்பர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார சதவிகிதம் 4.5 சதவிகிதமாக கீழிறங்கி இருக்கிறது

உங்களுக்கு அதிகமாக சொல்லவேண்டிய அவசி யம் இல்லை. இப்பொழுது இருக்கிற போராட்டம், மத்திய அரசால் பல பிரச்சினைகள் உருவாகியிருக் கின்றன. சப்கா சாத், சப்கா விகாஸ்  எல்லாம் என்னா யிற்று என்று தெரியும். பொருளாதார சதவிகிதம் 4.5 சதவிகிதமாக கீழிறங்கி இருக்கிறது.

இதுவரையில் ஏழு துறைகளில், மூன்றரை கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். புதிதாக வேலை கேட்கவில்லை. ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். இன்றைய நிலை என்ன?

அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ் வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்னாரே பிரதமர் மோடி - வங்கியே இப்பொழுது இல்லை.

காந்தியார் படத்தை ரூபாய் நோட்டிலிருந்து எடுக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம்

இங்கே இருந்து சென்ற ஒரு பொருளாதார மேதை என்ன சொல்கிறார்  என்றால், இன்றைக்குக் காந்தியார் நினைவு நாள்; காந்தி படத்தை ரூபாய் நோட்டிலிருந்து எடுக்கவேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம். அதற்காக அவர் என்ன சொல்கிறார் என்றால்,

ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தைப் போட்டால், லட்சுமிகரமாக பொருளாதாரம் சரியாகிவிடும் என்கிறார்.

அட, அதிபிரகஸ்பதியே, லட்சுமி விலாஸ் வங்கியே, நலிந்து போன வங்கியாக இருக்கிறது. அந்த லட்சுமிவிலாஸ் வங்கியே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அது நிலைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய திட்டம் ரூபாய் நோட்டிலி ருந்து காந்தி படத்தை எடுக்கவேண்டும் என்பதுதான்.

இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பதற் காகத்தான் நண்பர்களே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை தொழிற்சாலைகள் மூடப் பட்டு இருக்கின்றன. எதிர்காலம் இன்னும் எவ்வளவு கீழே போகும்? இவையெல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் ஒரு பக்கத்தில் நினைவூட்டுகிறோம்; ஆனால், எங்களை திசை திருப்ப முடியாது.

அதேநேரத்தில், ஒன்றை உங்களுக்குச் சொல்கி றோம். எல்லாவற்றிற்கும் அடிப்படை கல்வி. அந்தக் கல்வியில் தெளிவு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.  அதனால்தான் நம் மக்களை கல்வி கற்கக் கூடாது என்றார்கள்.

மனுதர்மத்தினுடைய அடிப்படை என்ன? ஆரம் பத்தில் மனுதர்மம் கிடையாது.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

‘நக்கீரன்'  வெளியீட்டில், மிகத் தெளிவாக அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்  - அவர்களுக்கு 100 வயது. அவர் ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் எழுதியிருக்கிறார்,

‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண் களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங் கேயே இருக்கலாம்' எனப்பட்டது.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண் களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக் கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''

அதற்கு முன், குறள் செழித்த நாடு - தொல்காப்பியம் வளர்ந்த நாடு - பல பெண்கள் புலவர்களாக  இருந்த கல்வி உயர்ந்த நிலையில் இருந்தது. கல்வி  கண் என்று கருதப்பட்டது.

அதனைக் குத்தினால் ஒழிய வேறு வழியில்லை என்பதற்காக, வந்தவர்கள் சூழ்ச்சியினாலே, திறத்தி னாலே மனுதர்மத்தை அமல்படுத்தினார்கள். இன் றைக்கும் போராட்டம், அண்ணல் அம்பேத்கர் எழு திய அரசமைப்புச் சட்டம் - அதைக்கூட முழுமையாக அவரை எழுதவிடவில்லை. ஆனால், என்ன செய்யவேண்டுமோ, அதை செய்துவிட்டார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - சமூகநீதி, அடிப்படை உரிமை  இவை அத்தனையையும் உண் டாக்கினார்.

இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால், வரலாற்றையே தலைகீழாக செய்கிறார்கள்.

காந்திமீது அவனுக்குப் பற்று - அம்பேத்கர் என்னவோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்ததுபோன்று, அவரை இன்றைக்கு அணைத்துப் பார்க்கிறார்கள்.

திராவிடர் கழகம் என்பது

ஸ்கேன் சென்டர்

எதிர்த்து அழிக்க முடியாததை - அணைத்து அழிப் பதுதான் ஆரியத்தினுடைய  காலங்காலமாக செய்து வந்திருக்கின்ற வேலை - அந்த வேலை இங்கே நடக்காது. நாங்கள் எல்லாம் பெரியார் கண்ணாடி போட்டு பார்க்கிறவர்கள். அதுமட்டுமல்ல, திராவிடர் கழகம் என்பது ஸ்கேன் சென்டர்.

இது போட்டோ கிராபி அல்ல; ஓவியம் அல்ல; போட்டோ கிராபர் கொஞ்சம் டச் செய்வார்; ஓவியர் கொஞ்சம் மெருகேற்றுவார். ஆனால், ஸ்கேன் என்பது, உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகவே காட்டும்; ஓட்டை போட்ட இதயத்தை, ஓட்டையாகவே காட்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றவாறு சிகிச்சை செய்ய முடியும்.

நாங்கள் ஸ்கேன் செய்தவுடன், டாக்டர்களாகிய (மேடையில் அமர்ந்திருப்பவர்கள்) இவர்கள் எல்லாம் ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏனென்றால், மருத்துவத் துறையில் ஸ்கேன் செய்தவுடன், அடுத்ததாக மருத்துவர்களிடம் போக வேண்டும்; அந்த மருத்துவர்கள் வராமல் இருப்பதற் காகத்தான் நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில், கல்விக் கண்ணை குத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

ஒரே ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

பேராசிரியர் க.ப.அறவாணன் எழுதிய புத்தகத்தில் உள்ள ஒரு தகவலை சொல்கிறேன்.

‘‘1901 இல், எடுக்கப்பட்ட முதல் சென்சசில், ஒரு சதவிகிதம்கூட தமிழர்கள் படித்தவர்கள் இல்லை'' என்று எழுதியிருக்கிறார்.

காரணம் என்ன?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கீழ்ஜாதிக் காரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வி அறிவைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் மனுதர்மம்.

அந்த மனுதர்மத்தை எதிர்த்துப் போராட்டம் - அதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கம் போராடி தான், சரியாக  ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு திரா விட இயக்கம் வந்த காரணத்தினால்தான் நண்பர்களே உங்களுக்குச் சொல்கிறோம், படியுங்கள் என்று.

கல்வி நமக்கு எட்டாக் கனியாக இருந்தது

மனுதர்மத்தாலே மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்வி நமக்கு மறுக்கப்பட்டது.  கல்வி நமக்கு எட்டாக் கனியாக இருந்தது.

படித்த சூத்திரன்

குளித்த குதிரை

மதம் பிடித்த யானை

இவை யாவும் ஆபத்தானவை. இவைகளை விட்டு வைக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய மனுதர்மம்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு சரசுவதி பாட் டிக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. ஆனால், பேத்தி சரசுவதி இன்றைக்கு டாக்டர் சரசுவதி; பொறி யாளர் சரசுவதி, வழக்குரைஞர் சரசுவதி, நீதிபதி சரசுவதி.

இவையெல்லாம் சரசுவதி பூஜை கொண்டாடி யதினால் வந்ததா? சரசுவதி அன்றைக்கும் இருந்தாள்; இன்றைக்கும் இருக்கிறார்.

பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

ஆனால், அதற்குக் காரணம், ‘‘பெரியார்! பெரியார்!! பெரியார்!!!''

திராவிடர் இயக்கம்! திராவிடர் இயக்கம்!! திராவிடர் இயக்கம்!!!

பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர்! காமாராசர்!! காமராசர்!!!

அதைத் தொடர்ந்து அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம்.

நம் மக்கள் இப்பொழுது ஏராளமாகப் படித்து விட்டார்கள். மனுதர்மத்தைத் தாண்டிவிட்டார்கள். அதைத் தடுக்கவேண்டும் - அதற்கு என்ன வழி? என்றுதான், மீண்டும் குழிதோண்டுகிறார்கள்.

நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையில்

சமூகநீதிக்கே இடமில்லை

அதனால்தான், நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை; இதில் சமூகநீதிக்கே இடமில்லை. யாராவது வந்து வாதிடச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு நம்முடைய அடிப்படை உரிமை. அதைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

மோடி அவர்கள் பதவியேற்கும்பொழுது ஒரு காட்சியை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியின்போது, எல்லா அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள். மோடி மட்டும் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்து வந்தார்.

நான்கூட நினைத்தேன், மோகன் பாகவத்தை வணங்கப் போகிறார் போல இருக்கிறது; ஏனென்றால், அவர்தானே எஜமானர். அப்படியில்லையென்றால், ஏதோ ஒரு சாமியாரை வணங்கப் போகிறாரோ என்று பார்த்தால்,

ஒரு கல்வெட்டு போன்று அங்கே  ஒன்று இருந்தது. அது என்னவென்று தொலைக்காட்சி ஊடகத்தினர் அதனை தெளிவாகக் காட்டினர்.

எழ முடியாத அளவிற்கு

மக்கள் அவரை ஆக்குவார்கள்

அரசமைப்புச் சட்ட கல்வெட்டுதான் அது. அங்கே சென்ற மோடி அவர்கள், விழுந்து கும்பிட்டார். மோடி விழும் வித்தை இருக்கிறதே, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியே தரையோடு விழுவார். எதிர்காலத்திலும் அதுதான், அதிலொன்றும் சந்தேக மேயில்லை. இப்பொழுது விழுந்து எழுந்தார், ஆனால், அடுத்தபடியாக விழுந்தார் என்றால், எழ முடியாத அளவிற்கு மக்கள் அவரை ஆக்குவார்கள். அதற்கு வேறு யாரும் காரணமல்ல, அவர்களேதான்.

அரசமைப்புச் சட்டத்தை அவ்வளவு குனிந்து வணங்குகிறாராம். என்னுடைய அரசு, என்னுடைய அமைச்சரவை, அரசமைப்புச் சட்டம்;  அந்த அரச மைப்புச் சட்டப்படிதான், இன்றைக்கு இஸ்லாமியர் களைப் பழிவாங்கக் கூடிய திட்டமா? அந்த அரச மைப்புச் சட்டப்படிதான், குலக் கல்வித் திட்டம் - சமூகநீதிக்கு அப்பாற்பட்ட மத்திய கல்விக் கொள்கைத் திட்டமா?

அந்த அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கின்ற, சமூகநீதி, வாய்ப்புகள், அனைவருக்கும் கல்வி என்ற அந்த அடிப்படை உரிமையைப் பறிக்கிறீர்களே, அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசம்!

5 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப் பிலே பொதுத் தேர்வு - இதனை மத்திய அரசாங்கமே இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இங்கே இருக்கிற ஆளுங்கட்சியினர், ‘‘ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசம்!''

எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடுகிறார்கள். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஆனால், நீட் தேர்விற்கு பயிற்சி கொடுப்போம் என்கிறார்கள்.

எனவே, நண்பர்களே, இந்த மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது இருக்கிறதே, மீண்டும் மனுதர்மக் கொள்கைதான் அது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், 66 ஆண்டு களுக்கு முன்பு, இராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட் டின் பிரதமராக வந்த நேரத்தில், பிள்ளைகள் அரை நேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் - குலதர்மக் கல்வித் திட்டம் - அதுதான் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டம்.

‘‘கோவிலைக் கட்டுகிறவன் கதியெல்லாம் இதுதான்''

சமஸ்கிருத மொழித்திணிப்பு - அதனுடைய விளைவுதானே சில நாள்களில்  நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு. இராஜராஜன் கட்டிய பெரிய கோவில் அது. கலைஞர்தான், இராஜ ராஜனுக்கு சிலை செய்தார், அந்த சிலையை கோவி லுக்குள் வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். நல்லதாகப் போயிற்று என்று, கோவிலின் வெளியே வைத்தார் அந்த சிலையை.

கோவிலுக்கு வெளியே இராஜராஜ சோழன் சிலை இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை கலைஞர் சொன்னார், ‘‘கோவிலைக் கட்டுகிறவன் கதியெல்லாம் இதுதான்'' என்றார்.

கோவிலைக் கட்டிய நீ வெளியே நிற்பாய்; உனக்கு சம்பந்தமில்லாதவன் சின்ன மணியை ஆட்டிக் கொண்டு உள்ளே சென்றுவிடுவான் என்று சொன்னார்.

‘‘குடமுழுக்கா? கும்பாபிசேகமா?''

இப்பொழுது நம்மாட்கள் பட்டிமன்றம் நடத்து கிறார்கள், ‘‘குடமுழுக்கா? கும்பாபிசேகமா?'' என்ற தலைப்பில்.

குடமுழுக்கு என்றால் செம்மொழி

கும்பாபிசேகம் என்றால், சமஸ்கிருதம்

குடமுழுக்கு என்றால், திராவிடம்

கும்பாபிசேகம் என்றால் ஆரியம்.

இதனை முக்கியமாக  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் சட்டப்படி நடக்கின்றவர்கள். 10 மணி வரைதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள்; அந்த உத்தரவை நாங்கள் மீற மாட்டோம்.

மீற வேண்டிய அவசியம் வரும்பொழுது, மீற வேண்டிய சட்டங்களை மீறுவோம். அது அக்கிரம சட்டங்கள்.

இங்கே வந்துள்ள தலைவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுக்க மக்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறோம்!

அடுத்த போராட்டம், இந்த ஒரே அணியைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு முழுக்க மக்களை ஆயத் தப்படுத்தியிருக்கிறோம்.

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு வருகின்ற பிப் ரவரி 21 ஆம் தேதியன்று திருச்சியில் கூடவிருக்கிறது.

மாநிலத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன!

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

10 ஆம்வகுப்பில் பொதுத் தேர்வு,

11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு

இவ்வளவு தேர்வு இருந்தாலும், இதற்குப் பிறகு நீட் தேர்வு தனித் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை கணக்கில் ஏற்கமாட்டார்களாம்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதற்குப் பிறகு நெக்ஸ்ட் தேர்வு.

பிறகு எதற்கு மாநிலக் கல்வி? மாநிலத்தின் உரிமை கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது எங்கள் உரிமையா என்றால், உங்களுடைய உரிமை. உங்களுக்கு சூடு, சொரணை, வெட்கம் இருந்தால், நீங்கள் போராடவேண்டும். ஆனால், நாங்கள்தான் அந்தப் பணியை செய்துகொண்டிருக்கின்றோம்.

எங்கள் அனிதாக்கள் சாதாரணமா? ஒரு தாழ்த் தப்பட்ட, மூட்டை தூக்குகின்ற என்னுடைய சகோத ரனுடைய மகள். தாயில்லாப் பிள்ளை. நானும், திருமா வளவன் அவர்களும் சென்று பார்த்தோம். இந்த மேடை அளவிற்குக்கூட அவர்களுடைய வீடு இல்லை.

அந்த சூழ்நிலையில் படித்த அந்தப் பிள்ளை 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்களை வாங்கியி ருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியுமா? அந்தப் பிள்ளை என்ன கோட்சிங் வகுப்பிற்குச் சென்று படித்தவரா? இல்லை.

அந்தப் பிள்ளையினுடைய கனவு என்னவென் றால், தான் மருத்துவராகி, கிராமப்புறங்களில் சேவை செய்யவேண்டும் என்பதுதான்.

ஆனால், நீட் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் வெறும் 87 தான். அதனால்,  மனம் உடைந்தது அந்தப் பிள்ளை.

அதற்குக் காரணம் என்ன? அந்தப் பிள்ளைக்கு அறிவு குறைவா? என்றால், இல்லை.

நீட் தேர்வில் மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள்

மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்வியினால்தான். மாநிலப் பாடத் திட்டத்தில் 1176 மதிப்பெண்கள் வாங்கிய பிள்ளைக்கு மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேள்வி கேட்டு தேர்வு வைக்கி றார்கள்.

எப்படி முடியும்?

புவியியல் தேர்வு அன்று, வரலாறு பாடத்திலிருந்து கேள்வி கேட்டால், பதில் எழுத முடியுமா?

எனவே நண்பர்களே, நம்முடைய மாணவர்களின் கல்விக் கண்ணை குத்துவதுதான் அவர்களுடைய  பணியாக இருக்கிறது.

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, காமராசர் அவர்கள் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு அளித்து, இலவசப் படிப்பு - கலைஞர் இதுவரை செய்த சாதனை சாதாரணமல்ல - தேர்வில்தான் இதுவரை பிள்ளைகள் முட்டையைப் பார்த்திருப் பார்கள் -  கலைஞர்தான், சத்துணவாக இரண்டு முழு முட்டையைப் போடுகிறேன் என்ற சாதனையை செய்தார்.

பழைய காட்டுமிராண்டித்தனத்திற்கு, இருண்ட இடத்திற்கு அழைத்துப் போக நினைக்கிறார்கள்

இப்படியெல்லாம் செய்த நேரத்தில், நம்முடைய பிள்ளைகளின் கல்வியை தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு பேரபாயம், மீண்டும் பழைய காட்டுமிராண் டித்தனத்திற்கு, இருண்ட இடத்திற்கு அழைத்துப் போக நினைக்கிறார்கள். இதனை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் அத்தனை பேரும், பெற்றோர்களே, எங்கள் பிள்ளைகளது பிரச் சினையல்ல இது. உங்கள் பிள்ளைகளுடைய பிரச் சினை, உங்கள் பேரப் பிள்ளைகளுடைய பிரச்சினை. அந்தப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்கவேண்டும்.

அப்படி நீங்கள் வராவிட்டால்,

கடைசியாக ஒன்றை சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,

‘‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர்ஆகிவிடுவார் உணரப்பா நீ'' என்றார்.

நீங்கள் உதையப்பர் ஆகவேண்டாம்; நாம் வன் முறையை செய்யவேண்டாம்; வன்முறையில் நமக்கு நம்பிக்கையில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறிய திருத்தம். ஓடப்பர்தான் நாமெல்லாம் - ஏழைகள்தான்.

அம்பானிகள், அதானிகளுக்கு சொந்தக்காரர்கள் அல்ல. இன்றைய  மத்திய ஆட்சியின் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எல்லாம், முதலாளிகளுக்கு, கார்ப்பரேட்டுகளுக்கு.

வாக்குகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால்....

ஆனால், ஓடப்பராக இருக்கிற உங்களுக்கு நினை வூட்டுகிறோம்,  நீங்கள் ஓட்டப்பர்களும்கூட. அது தான் மிகவும் முக்கியம். ஓட்டு இருக்கிறது உங்களு டைய கைகளில். அந்த ஓட்டை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், ஒரு ஆண்டுதான் உள்ளது.

நீட், நீட்டாகப் போகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. நீட், நீட்டாகப் போகவில்லை, நீட், பூட்டாக இருக்கிறது. பூட்டுப் போட்டு இருக்கிறீர்கள்.

சிறைச்சாலைகளை

நிரப்பக் கூடிய போராட்டம்

எனவேதான், இந்தப் பயணம் இன்றைக்கு முடி வடையவில்லை. இன்றைக்கு விரிந்திருக்கிறது. எங்க ளுடைய பயணம், அது எங்கே போனாலும், சிறைச் சாலைகளை நிரப்பக் கூடிய போராட்டமாக, இந்தப் போராட்டம் நடைபெறும்.

இந்தத் திட்டங்கள், சூழ்ச்சி, கண்ணிவெடிகளுக்கு முடிவு கட்டும்வரை எங்களுக்கு ஓய்வில்லை - ஆதரவு தாரீர்!

சிறப்பாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், தவறாமல் வந்து ஊக்கப்படுத்திய நம்முடைய  தோழமை கட்சித் தலைவர்களுக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, எங்களோடு சிறைக்கு வருவதற்கோ அல்லது நேரிடையாக வர வாய்ப்பில்லாதவர்கள் எங்களை வழியனுப்புவதற்கோ வாருங்கள் என்ற அழைப்பை உங்களுக்குக் கொடுத்து, விடை பெறுகிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

ஒழிப்போம், ஒழிப்போம்!

நீட் தேர்வை ஒழிப்போம்!!

ஒழிப்போம், ஒழிப்போம்!

நீட் தேர்வை ஒழிப்போம்!

ஒழிப்போம், ஒழிப்போம்!

ஒழிப்போம், ஒழிப்போம்!

விரட்டுவோம், விரட்டுவோம்,

புதிய கல்விக் கொள்கையை விரட்டுவோம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

 - விடுதலை நாளேடு,5.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக