புதன், 19 பிப்ரவரி, 2020

‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயப்போவதில்லை - பிப்ரவரி 21 இல் திருச்சியில் தீர்மானிப்போம்!

நாகர்கோவில் முதல் சென்னை வரை - 11 நாள்கள் பெரும் பயணம் பிரச்சாரப் பயணத்தில் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டு - அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் பரிவு - பங்களிப்பு - பாராட்டு அனைத்திற்கும் நன்றி!

நாகர்கோவிலில் தொடங்கி - சென்னையில் நிறைவு பெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், அடுத்தகட்ட நமது நடவடிக் கைகள் திருச்சியில் வரும் 21 ஆம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

நம் மக்களின் அடிப்படைத் தேவை கல்வியாகும். பகுத்தறிவு - பட்டறிவு - ஒத்தறிவு - பொது அறிவு ஆகிய அனைத்து அறிவுகளையும் ‘‘சாணை தீட்டுவது'' கல்வியாகும்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடாது பறிக்கப்பட்ட கொடுமை, ஆரியத்தின் மனுதர்மப் படையெடுப்பின் காரணமாகவே! ஜாதி தர்மக் கொடுமையின் விளைவு இது!

நமது அரசர்களின் மனுதர்மப் பாதை

ஆயிரம் ஆண்டுகாலத்துக்குமுன் ஆண்ட அரசர்களின் ஆட்சி மனு மயமானதால், திராவிட சமுதாயம் கல்விக் கண்ணை இழந்தது! கல்வி ஆரியத்தின் ஏகபோகமாகியது!

இதனை மீட்டெடுக்கும் முயற்சி ஒரு தொடர் தடை ஓட்டப் பந்தயமாகவே இன்றுவரை நடத்தப்பட்டது - நடந்தும் வருகிறது!

நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சியில் தொடங்கிய கல்வி மறுமலர்ச்சி - தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சிகளின் போது தொடரவே செய்தது!

திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி என்று கருதப் பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் முன்னே போவதும், பின்னே வருவதுமான சில பல நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ஒரு தொடர் வளர்ச்சிக்கு அதிக பாதிப்பு அற்ற நிலை ஏற்பட்டு, பல போராட்டங்கள் மீட்டுருவாகி தொடர்ந்தன.

மோடி ஆட்சியும் -

தமிழகத்தின் சரணாகதி ஆட்சியும்!

ஆனால், கடந்த 3  ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி - மத்தியில் மோடி ஆட்சி ஏற்பட்டவுடன், டில்லியே சரணம் என்று ‘‘சாஷ்டாங்கமாக'' கீழே விழுந்து, மாநில உரிமைகளை - ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, கூட் டாட்சிக்கு (Federal) விடை கொடுத்து, ஒற்றை ஆட்சி  (Unitary) ஆட்சியாகவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடைமுறைபடுத்துகின்றனர். அதில் முதல் தாக்குதலுக்கான பலியாக (First Casualty) நம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி குலதர்மக் கல்வியாக மாற்றப்பட்டு, சமஸ்கிருத மொழி - கலாச்சாரத்தின் படையெடுப்பாகவே மாறிவருகிறது!

நமது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிக் கட்டுமான உறுதிகளான - சமூகநீதி உள்ளிட்ட அடிப் படை உரிமைகள் திட்டமிட்டே பறிக்கப்படுகின்றன.

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை

அழித்திட கண்ணிவெடி

நம் பிள்ளைகளின் ‘கல்விக் கண்' திட்டமிட்டே குத்தப்படுகிறது; நமது கல்வி வளர்ச்சி - குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி - நீதிக்கட்சி, காமராசர் ஆட்சி, பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் வளர்ந்த தொழிற்படிப்பிலிருந்து தொடக்கக் கல்வி வரையில் மண்ணைப் போட்டு, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிப் பாதையில், ‘நீட்' என்றும், புதிய மத்தியக் கல்விக் கொள்கை என்றும் கண்ணிவெடிகளை மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதைத்து வைத்துள்ள பேரபாயம் நீடிக்கிறது!

நமது இயக்கப் பெரும்

பயணத்தின் எழுச்சி!

இதைப் பெற்றோர்களுக்கும், வருங்கால சந்ததியின ருமான நம் மக்களுக்கும் உணர்த்தி, மனுதர்மக் கல்வியை மாற்றி, சமதர்ம - மனித தர்மக் கல்வியை - அறிவியல் மனப்பான்மையோடு கூடிய முற்போக்குத் தொழிற்கல்வியை அளிக்கும் முந்தைய பொற்காலத் தைப் புதுப்பிக்கச் செய்ய ஓர் விழிப்புணர்வு இயக்கமாக - நமது பரப்புரைக்கான பெரும் பயணம் அமைந்தது. கடந்த 2020 ஜனவரி 20 ஆம் தேதி கன்னியாகுமரி - நாகர்கோவிலில் தொடங்கிய நமது கல்வி மீட்டெடுப்பு கடமைப் பயணம்,

நாகர்கோவில்

திருநெல்வேலி

கோவில்பட்டி

சாத்தூர்

மதுரை

காரைக்குடி

புதுக்கோட்டை

திருச்சி (மறைவு நிகழ்ச்சி)

கரூர்

சேலம் (கமிட்டி)

பெத்தநாயக்கன்பாளையம்  (படத்திறப்பு - கொடி யேற்றம்)

ஆத்தூர்

கல்லக்குறிச்சி

பெரம்பலூர்

அரியலூர்

மயிலாடுதுறை

சிதம்பரம்

புதுச்சேரி (மாநிலம்)

திண்டிவனம்

செய்யாறு

காஞ்சிபுரம்

அரக்கோணம்

திருத்தணி

பிரச்சாரக் கூட்டங்கள்  வெற்றி முரசு கொட்டின! நிறைவு விழா சென்னையில் மிகப் பெருந்திரள் நிகழ்ச் சியாக சென்னை மாவட்டக் கழகங்களின் பொறுப் பாளர்களால் வெகுதிறம்பட பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நடத்தி வெற்றி வாகை சூட வைத்தார்கள்! சென்னை எம்.ஜி.ஆர். நகர் குலுங்கியது!

பயணத்தில் பங்கு கொண்டோரின்

மகத்தான பணிகள்

ஆங்காங்கே நமது மதச்சார்பற்ற முற்போக்கு அணிகளைச் சார்ந்தவர்களும், கிளைக் கழகங்களின் பொறுப்பாளர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் - இளைஞர்கள், வணிகர்கள் என்று பலதரப்பட்டோரும் நமது பரப்புரைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வரலாறு படைத்தனர்.

ஏழு வாகனங்கள் (நகர்வு புத்தகச் சந்தை) உள்பட

26 தோழர்கள்

பயணம் 2700 கிலோ மீட்டர்

11 நாட்கள்

சிறு சிறு வெளியீடுகளை மக்கள் வாங்கிய வகையில் ரூ.75,000.

அத்துடன் ஒவ்வொரு நாளும் நாம் தங்கியிருந்த இடங்களில்  நேரில் வந்து அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் பொழிந்ததும், நமது உடல்நிலைப்பற்றி எல்லையற்ற கவலையைத் தெரிவித்ததும், நமக்கு உறவுகள் உலக உறவுகள் - ‘‘யாவரும் கேளிர்'' என்பதை உறுதிப்படுத்தின!

இம்முறை இந்த ஏற்பாடுகளை நமது இயக்கப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட, நகர, கிராம, கிளைக் கழகப் பொறுப்பாளர் கள்வரை ஆர்வமும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் வண்ணம் மகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் கடமையாற்றி மக்களைத் திரட்டிய பணி மகத்தானது.

என்னுடன் வந்த பேச்சாளர்கள், அமைப்பினர் முதல் ஓட்டுநர் தோழர்கள், புத்தகப் பரப்புவோர், ஊடக உதவியாளர் உள்பட யாரும் சோர்வோ, களைப்போ, அலுப்போ இன்றி சுறுசுறுப்புத் தேனீக் களாகவே ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்பதற்கு இலக்கணமாகவே செயல்பட்டனர். மகிழ்ச்சிக் குடும்ப மாகவே ஒவ்வொரு நாளும் கடந்தது!

எல்லோருக்கும் நமது இதயம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

‘‘அந்த நாளும் வந்திடாதோ'' என்று பிரிந்து சென்ற பின் ஏங்கும் பயணம் இது!

சென்னை நிறைவு விழாவின் மாட்சியும் - அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பும்!

நிறைவாக, சென்னையில் நமது கழக மாமணிகளின் சிறந்த ஏற்பாடு - நமது வெற்றி மகுடத்தில் முத்துகள்!

நமது தோழமைக் கட்சிப் போராளித் தலைவர்கள்,

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க.,

தோழர்  கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி

தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,

வழக்குரைஞர் அழகுசுந்தரம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

- இப்படி கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய பல கட்சி தலைவர்களுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றி!

திருச்சியில் தீர்மானிப்போம்!

அடுத்த களத்திற்கான ஆயத்தத்திற்குத் தொடக்கம் சரியாகவே அமைந்தது.

திருச்சியில் பிப்ரவரி 21 இல் கூடுவோம்!

திடமான போராட்ட அறிவிப்புகள் வெளிவரும்,

எம் தலைவர் தந்தை பெரியார் என்றும் வாழ்வார்!

எப்போதும், எவருக்கும் தேவைப்படுவார்!

ஆம்! இது காலத்தின் கட்டளை, கடமையின் உயிர்ப்புடன் ஆயத்தமாவீர்,  ஆயத்தமாவீர் - தோழர்களே!

களம் காண, சிறைபுக ஆயத்தமாவீர்!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.2.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக