வியாழன், 2 ஆகஸ்ட், 2018

“திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு



“திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!’’ என்ற எழுச்சி முழக்கத்தோடு 12.05.2018 சனிக்கிழமை மாலை சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ‘இளைஞர் எழுச்சி மாநாடு’ மிகப் பிரம்மாண்டமாய் பொன்னேரியில் நடைபெற்றது.

மிகச் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டையொட்டி புழலில் தொடங்கி பொன்னேரி வரை கண்ணில்படும் இடமெல்லாம் மாநாட்டின் குறிக்கோள்களை விளக்கும் சுவர் எழுத்து விளம்பரங்களும் பளிச்சிடும் பதாகைகளும் வண்ணவண்ண சுவரொட்டிகளும் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தன. சாலையின் இரு புறங்களிலும் கழகக் கொடி கம்பீரமாய் பறந்துகொண்டிருந்தன.

மூடநம்பிக்கை ஒழிப்புப்பேரணி

 


மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன் தலைமையில், சென்னை மண்டலக் கழகச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் கொடி அசைத்து துவக்கிட மாலை 5.30 மணியளவில் பொன்னேரி பேரூராட்சி அலுவலகம் அருகில் பேரணி மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கியது.

கழக கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு பெரியார் பிஞ்சுகள் முன்வரிசையில் முழக்கமிட,  அவர்களைத் தொடர்ந்து மகளிர் அணியினரும், இளைஞரணி, மாணவரணி மற்றும் கழகத் தோழர்களும் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர். அனைவரது கைகளிலும் கழகக் கொடிகள், தந்தை பெரியார் படங்கள், கொள்கை வாசகம் அடங்கிய பதாகைகள் இருந்தன. கோடை இடியென கொள்கை முழக்கத்துடன் பேரணி தொடர்ந்து செல்ல “தீச்சட்டி இங்கே! மாரியாத்தாள் எங்கே?’’ என்று மகளிர் அணியினர் தீச்சட்டியை ஏந்தி முழக்கமிட்டனர்.

கடவுள் சக்தியெல்லாம் சுத்தப் பொய். பக்திக்கும் அலகு குத்திக் கொள்வதற்கும் சம்பந்தமில்லை. “இதோ பாருங்கள்! கடவுள் நம்பிக்கை இல்லாத நாங்களும் முதுகில் அலகுக் குத்தி கார் இழுக்கிறோம்’’ என்று சொல்லி தோழர்கள் பொழிசை கண்ணன், மதுரவாயல் சரவணன் ஆகிய இருவரும் கார் இழுத்து பொதுமக்களை அதிசயிக்க வைத்தனர்.

தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தி கார் இழுத்தும் தங்களையே வருத்திக்கொண்டு சமூகத்துக்கு பகுத்தறிவு உணர்வு ஊட்டிய தோழர்களை பொதுமக்கள் பாராட்டி கரவொலி எழுப்பி உற்சாக மூட்டினர்.

தலைவர் சிலைகளுக்கு மரியாதை

 


பேரணி வந்த வழியில் இருந்த அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பறையிசை மற்றும் சிலம்பாட்ட சாகசம்

பேரணியில் ‘புத்தர் கலைக் குழுவினர்’ அதிரடியாய் இசை நிகழ்ச்சி தந்தனர். ‘பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின்’ சார்பில் சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டு சிலம்பாட்ட சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

பேரணி பொன்னேரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மிகுந்த கட்டுப்பாட்டோடு அமைதியான முறையில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்த அரிஅரன் கடைவீதியை வந்தடைந்தது.

கலை நிகழ்ச்சிகள்

 


 


ஆசானப்புதூர் ஆ.திராவிடமணி நினைவரங்கம், பொன்னேரி ஆசிரியர் ச.சந்திரராசு நினைவு மேடை என்ற பதாகையோடு, கலைநயமிக்க பொலிவோடு காட்சியளித்த மாநாட்டு மேடையில் “கலைமாமணி’’ திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம்--, -அறிவுமானன் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை மக்களிடம் சிந்தனையையும் எழுச்சியையும் உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தினரின் சிலம்பம் மற்றும் சாகச விளையாட்டுகளும், புத்தர் கலைக்குழுவினரின் பறையிசையும் அனைவரையும் சிலிர்க்கவும், ரசிக்கவும் வைத்தது.

களைகட்டிய கருத்தரங்கம்

இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்ட பேரணியைத் தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடந்து முடிய கருத்தரங்கம் தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.நாகராசு வரவேற்புரையாற்ற, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி மாநாட்டுத் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி கழகக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, திராவிட மாணவர்  கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் “திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

“பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம்’’ எனும் தலைப்பில் கா.அமுதரசன், “பகுத்தறிவு சுடர் ஏந்துவோம்’’ எனும் தலைப்பில் ம.வீ.அருள்மொழி, “தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம்’’ எனும் தலைப்பில் பா.மணியம்மை ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நூல் வெளியீடு

மாநாட்டு மேடையில் “தேசப்பற்றா? மனிதப்பற்றா?’’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை அறிமுகம் செய்து,  வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்  பேசினார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டில் காவி ஊடுருவ முடியாததற்கு பெரியார்தான் காரணம். திராவிட இயக்கத்தால்தான் தமிழ்நாட்டில் ஏராளமான அளவில் மருத்துவர்கள் தோன்றினார்கள். ‘நீட்’ என்ற பெயரில் இதனை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டிவிட்டனர். கடந்த ஆண்டு நீட்டுக்காக ஓர் அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு மூன்று தந்தையர்களை இழந்திருக்கிறோம்’’ இவ்வாறு வேதனையுடன் பேசினார்.

ஏகமனதாய் நிறைவேறிய தீர்மானம்!

கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முத்தான 12 தீர்மானங்களை முன்மொழிய கழகத் தோழர்கள், பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாய் நிறைவேறியது. 

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

வீ.அன்புராஜ் அவர்கள் தமது உரையில், “இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் சம்பிரதாயமானவை அல்ல. வருங்காலத்தில் அரசின் சட்டங்களாக வரக் கூடியவை. பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை என்பவை எல்லாம் திராவிடர் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான்’’ என்று சுருக்கமாய் பேசி அமர்ந்தார்.

 திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தனது உரையில், “இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டு 71 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றைய மாநாட்டில்கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றியும், ஜாதி ஒழிப்பைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

ஜாதி இருக்கும் இடத்தில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியுமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதிதான் இருக்கலாமா? என்று தந்தை பெரியார் கேட்டாரே அது எத்தனை உண்மை?’’ என்று கூறியதோடு மேலும், இந்திய அரசின் அத்தனை துறைகளிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார்.’’

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

நிறைவாய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். “தன்னை இந்த இயக்கத்துக்கு மாணவர் பருவத்தில் ஆற்றுப்படுத்தி, ஊக்கப்படுத்திய பொன்னேரியை அடுத்த ஆசானப்புதூர் ஆ.திராவிடமணி அவர்களையும், இந்தப் பகுதியில் பகுத்தறிவாளர்கள் கழகத்தை வளர்த்த ஆசிரியர் சந்திரராசு அவர்களையும், பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

“திராவிடர் கழகம் ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்கு தோழர்கள் பதவியை எதிர்பார்த்து வருவதில்லை. கடைசி மூச்சு அடங்கும்வரை எங்களின் சமூகப்பணி தொடர்ந்து கொண்டிருக்கும். ஜாதி ஒழிப்புதான் எங்கள் இலட்சியம்.

மத்தியிலே ஒரு காவி ஆட்சி _ மாநிலத்திலோ ஓர் ‘ஆவி’ ஆட்சி _ இரண்டையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் நாட்டுக்கு விடிவுகாலம்.

நம்முன் இப்பொழுது இருக்கும் பிரச்சனை ‘நீட்’ தேர்வு எங்கே நடத்துவது என்பதல்ல; ‘நீட்’டே கூடாது என்பதுதான். “என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’ என்று சொன்னார் தந்தை பெரியார். ஆனால், இன்றைக்கு பக்தியென்ற பெயரில் துறவியாக இருப்பவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள். ‘நீட்’டை ஒழித்துக்கட்ட, காவிரி உரிமையை மீட்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உத்தரவாதத்தை பெற்றிட, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, மதவெறியை வீழ்த்த, மனிதநேயம் காப்பாற்றப்பட, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க, சாமியார்கள் இல்லாத, ஜாதியில்லாத நாட்டை உருவாக்கிட நமது பயணம் தொடரும்! பணிகள் தொடரும்! போராட்டங்கள் தொடரும்!’’ என்று அலைகடலென திரண்டிருந்த மக்களின் கரவொலிக்கிடையில் தனது உரையை நிறைவு செய்தார்.

மாநாடு நிறைவு

இளைஞர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்களின் ஆதரவோடு மாநாடு மிகச் சிறப்பாய் நடந்தேறியது. கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.கார்த்தி நன்றி கூற இரவு 10 மணி அளவில் மாநாடு இனிதே நிறைவுற்றது!

 பொது வாழ்வில் பவள விழா

கருத்தரங்க நிறைவில், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள், இன்றைய நாள் வரலாற்று பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்று கூறினார்.

 “தந்தை பெரியாரின் மாணவராய் - கொள்கை பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், இந்த அரங்கம் யார் பெயரில் அமைக்கப்பட்டுள்ளதோ, அந்த பொன்னேரி ஆசானபுதூரைச் சேர்ந்த ஆசிரியர் திராவிடமணி அவர்கள் தந்த ஊக்கத்தில் மேசை மீது ஏற்றி வைக்கப்பட்டு சிறுவன் வீரமணி என்ற பெயரில் கடலூர் நகரில் உரையாற்றியது இதே மே மாதம் 12ஆம் தேதிதான்!

1944ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, 74 ஆண்டுப் பொது வாழ்க்கைப் பயணம் நிறைவுற்று பொதுவாழ்வில் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடங்கும் வரலாற்றுப் பெருநாள் இன்று!’’ என்று சொன்னவுடன் பெரும் ஆரவாரம்!

 - உண்மை இதழ், 1-15.6.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக