செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122 ஆவது கலந்துரையாடல் -

திராவிடர் கழக மகளிருக்கு எங்கெங்கும் வெற்றியே! சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122 ஆவது கலந்துரையாடல் - பாராட்டு சிறப்புக் கூட்டம்


சென்னை, ஆக.5 சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூலை மாதம் 21ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக வெவ்வேறு தளங்களில் விருது பெற்ற கழக மகளிர் பாராட்டப்பெற்றனர்.

ஆவடி மாவட்ட மாணவர் கழக தலைவர் தொண்டறம் கடவுள் மறுப்பு கூற மாலை 6 மணி அளவில் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. பெரியார் சுயமரியாதை திருமண நிலை யத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  நிகழ்ச் சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற வழக்குரைஞர்  வீரமர்த் தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மகளிர் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமுதாய நலனில் அக்கறை கொள்ள முழுமுதற் காரணம் தந்தை பெரியார் அவர்களே. தேவதாசி முறையை ஒழிக்க அயராது உழைத்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவந்த டாக்டர் முத்துலட்சுமியும் தந்தை பெரியாரின் பெண்ணடிமைத்தன ஒழிப்பிற்குப் பாடுபட்டவர்களே. இன்று பாராட்டு பெறும் மூவரும் தந்தை பெரியார் விழைந்தப் புரட்சிப் பெண்களே என்று வாழ்த்தினார்.

பாராட்டு பெற்ற மூவர்



க.பார்வதி (முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர்) அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) மற்றும் கலைமணி பழனியப்பன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.

க.பார்வதி அவர்கள் சென்னை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் மகளிரணியில் பொறுப்பிலிருந்தவர். தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் கட்டளைக்கிணங்க நடை பெற்ற பல போராட்டங்களிலும் பங்கேற்று சிறையும் சென் றிருக்கிறார். மறைந்த பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் இறையன், ஏபிஜே மனோரஞ்சிதம் மற்றும் கழக மகளிருடன் இணைந்து தமிழ் நாட்டின்  பல பகுதிகளுக்கும் கால்நடை சுற்றுப்பயணமாகச் சென்று கழகத்தின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிய வர். இயக்கப் பணிகளுடன் தன் வாழ்விணையர் கணேசன் அவர்களுடன் இணைந்து தன் குடும்பத்தையும் கொள்கை குடும்பமாக்கியிருக்கிறார். இவரது இயக்கப் பணிகளையும் தொண்டறத்தையும் பாராட்டி சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் இவருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டுள்ளது.

அ.கலைச்செல்வி இவர் தஞ்சை மாவட்ட, மண்டல திராவிடர் கழக மகளிரணியில் பல பொறுப்புகளிலிருந்தவர். தற்போது மாநில மகளிரணி செயலாளராக செவ்வனே பணி யாற்றி வருகிறார். இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். இவரது வாழ்விணையர் வழக் குரைஞர் அமர்சிங் அவர்களும் கழகப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இருவரும் தங்கள் குடும்பத்தினையும் கொள்கை குடும்பமாக வார்த்திருக்கின்றனர். கலைச்செல்வி அவர்களின் கொள்கை பிடிப்பையும் சமூகத் தொண்டறத்தை யும் பாராட்டி 26.5.2018 அன்று தஞ்சாவூர் பல்கலைக்கழக இலக்கியத்துறை, மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம், திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ஆகியவை இணைந்து மொரிசியசு நாட்டில் கடந்த மே மாதம் நடந்த அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாட்டில் அவருக்கு "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது" அந்நாட்டின் குடி யரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கலைமணி பழனியப்பன் கழக வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளரான இவர் பொதுக்குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவரது விருந்தோம்பல் பலராலும் பாராட்டப்பட்டதாகும். தனது குடும்பத்தினரையும் தந்தை பெரியாரின் சீரியக் கொள்கை வழிப் பற்றாளர்களாக வளர்த்தெடுத்துள்ளார். தனது இல்ல விழாக்கள் அனைத்தையும் எவ்வித சடங்குகளுமற்ற கொள்கை பாதையில் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஊற்றங் கரையில் தாழ்த்தப்பட்டவர்களை வீடுகளில் பணிக்கமர்த்த பலரும் மறுத்த நிலையில் முதல்முதலாய் அவர்களைத் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்திய பெருமை இவரையும் இவரது இணையர் மானமிகு பழனியப்பன் அவர்களையுமே சாரும். வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று கூறி உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய 1979 ஏப்ரலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ஊற்றங் கரையில் இவ்விணையர்களால் நடத்தப்பட்டது. தன் கையா லேயே மாட்டுக்கறி சமைத்து ஊர் பொதுமக்களுக்குப் பரிமாறிய பெருமை அம்மையாரையே சாரும். இவரின் தொண்டைப் பாராட்டி கல்வி கலை இலக்கிய பண்பாட்டு உரையாடல்களுக்கான சமத்துவ மேடையாகச் செயல்படும் கற்பி அமைப்பு இவருக்கு "பே பேக் டூ சொசைட்டி அவார்ட்" (Pay Back to Society Award) என்ற விருதினை வழங்கியுள்ளது.

பாராட்டு

விருது பெற்ற மூவரையும் பாராட்டி சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பு செய்யும் வகை யில் ஒவ்வொருவருக்கும் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆசிரியர் வீரமணி ஆகியோரின் உருவம் பதித்த வாழ்த்து கேடயமும் ஒரு சேலையும் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களுக்கு ந.தேன்மொழி, சி.லதா, திருமகள் -இறையன் குடும்பத்தினர், பன்னீர்செல்வம், தாம்பரம் முத்தையன், செந்துறை இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.

ஏற்புரை

பாராட்டு பெற்ற மூவரும் தங்கள் ஏற்புரையின் போது தாங்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கும், விருதுகள், பாராட்டுகள் பெறுவதற்கும் தாங்கள் தெளிவு பெற்று விரும்பி ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரின் கொள்கைகளே காரணம் என்றும் இவை அனைத்தும் தந்தை பெரியாரின் வெற்றி என்றும் அழுத்தமாகப் பதித்தனர். தவிர, தங்கள் அனைவரின் வெற்றிக்கும் தங்கள் இணையர்களின் சலிக்காத ஒத்துழைப்பே முழுக்காரணம் என்று கூறி இணையர்களின் பங்கிணையும் பதிவு செய்தார்கள். பாராட்டு பெற்ற தோழர் களில் பார்வதியும், கலைமணி பழனியப்பனும் தங்கள் இணையர்களை இழந்த பின்னும் இயக்கக் கொள் கைகளி லிருந்து சற்றும் பிறழாமல் முன்பைவிட அதிக முனைப் புடனும் உறுதியுடனும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் பெற்ற விருதைவிட சென்னை பெரியார் திடலில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் மற்றும் மகளிர் தோழர் களின் பாராட்டுதல்களே தங்களை மேலும் தொண்டறத்திற்கு ஊக்குவிக்கின்றன என்று ஒருமித்துக் கூறினர்.

பாராட்டுரைகள் வருமாறு:

ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்): திராவிடர் கழக மகளிர் அணி சார்ந்த மகளிர் சாதனை சாதாரணமானது அல்ல; இந்த மதச்சார்பான சமூ கத்தில் சாதியையும் மதத்தையும் எதிர்த்து பெண்கள் போராடு வது மிகச்சிறந்த சாதனை! விருது பெற்ற கலைச்செல்வி அம்மா;  பார்வதி அம்மா, கலைமணி அம்மா  மூவருமே இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டவர்களே....நூற்றில் 99 சதவீதம் பெண்கள் கடவுள் இருக்கு என்று தீச்சட்டி எடுத்தால் ஒற்றை ஆளாய் தீச்சட்டி ஏந்தி கடவுள் இல்லை என்று முழக்கம் இட்டவர்கள்,கலைமணி அம்மா அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவை ஏராளம். அருமையான மாமியார் மருமகள் உறவு & யாரிடமும் காணாத ஒன்றை கலைமணி அம்மாவிடம் கண்டேன், கற்றேன்!

ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்): சமூகத் தொண்டறத்தில் மகளிர் ஈடுபடுவதே அபூர்வம். அப்படி ஈடுபட்ட மகளிர் பாராட்டப்படுவது அதைவிட அதிசயம். சமூகத்தால்  "கடவுள் இல்லை ஜாதி இல்லை" என்று கூறும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கழகத்தவர் அதிலும் தொண்டறத்தில் ஈடுபடும் மகளிர் தூற்றப்படாமல் விருது அளித்து பாராட்டப்  படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. மகளிராகிய நம் அனை வருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இம்மூவரும் மேலும் விருதுகளைப் பெற்று தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகறியச் செய்வர் என்பது உறுதி என்று பாராட்டினார்.

தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்): தந்தை பெரியார் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையின், முழு உதாரணமாக வாழ்ந்தார். தனக்கு பின் இயக்கத்தை அன்னை மணியம்மையார் தலைமை ஏற்கும்படி செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 5 மகளிரை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆக்கி ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை நம் இயக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறார். நம் துணைத்தலைவர் கவிஞர் அய்யா அவர்கள், தன் வாழ்விணையரை, வாங்க, போங்க என்று தான் அழைக்கிறார். இதனை இன்றைய இளைய தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும். பெண்ணுரிமை கொள்கை பட்டொளி வீசிப் பறக்கும் இயக்கம் திராவிடர் கழகமே என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

கோ.செந்தமிழ்ச்செல்வி (திராவிட மகளிர் பாசறை, மாநில செயலாளர்): விருது பெற்ற மகளிர் தோழர்களை பாராட்டு வதோடு நிற்காமல் அவ்விருதுகளை சரியானபடி நம் அமைப்புத் தோழர்களுக்கு வழங்கிய அந்த அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு அரசியல் உட்பட அனைத்து நிலைகளிலும் வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமே பெண் களை வைத்துள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆனால் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அப்படிப் பட்டதல்ல. முற்றிலும் களப்பணிகள், மாநாடுகள், கருத்தரங் குகள், மகளிர் சந்திப்புகள் போராட்டங்கள் என ஏராளம்.

விருது பெற்றஇந்த தோழர்கள் முற்றிலும் கடவுள் மறுப் பாளர்கள். சமுதாயத்தை சீரழிக்கும் நச்சுகளான சாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, தீண்டாமை போன்ற அனைத்துக்கும் அடிப்படையான கடவுள் என்னும் கற் பனையை ஏற்காது. சுயமரியாதையோடு வாழ்வதே பெரிய புரட்சி. இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் பெண்ணு ரிமைக்கான களங்களில் தந்தை பெரியாரை மறைத்து பேசிட முயல்கிறார்கள். ஏனென்றால் முழுமையான சுயமரியாதை பெண்ணியம் என்பது கடவுள் மறுப்பே என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். நான் சொல்கிறேன் "சமூக விஞ்ஞானி" என்பதையும் கடந்து "பெண்ணுரிமை விஞ்ஞானி" பெரியார்! ஏனென்றால் பெண்களுக்கான அத்தனை மாற்றங் களையும் சிந்தித்தவர் பெரியார் என்று நமது விளக்க உரையில் குறிப்பிட்டார்.

கழகத் துணைத் தலைவர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

நான் பார்வையாளராகத்தான் வந்தேன். இப்போது மேடையில் ஏற்றப்பட்டிருக்கிறேன். இது ஒரு அருமையான நிகழ்ச்சி. எங்கும் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி. இங்கு மூவர் பாராட்டப் பட்டிருக்கின்றனர். அந்த விருதுகளுக்குப் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்த அந்தக் குழுவினருக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். இந்த மூவரின் பூர்வீகமும் எனக்குத் தெரியும். முதலாவதாக, பார்வதி. அவர் முதலில் மேடையேறிய நாளிலிருந்தே எனக்குத் தெரியும். இன்று அவர் நம் இயக்கக் குடும்பங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு வித்திட்டவர் அவரது இணையர் கணேசன் அவர்கள். சாதாரணமாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாகக் கூறுவர். ஆனால் திராவிடர் இயக்கத்தின் சிறப்பு ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆண் இருப்பதுதான். மகளிருக்கு வேறு எந்த சிறப்பும் தேவையில்லை. தந்தை பெரியார் அவர்களுக்கு "பெரியார்" என்று பட்டமளித்தார்களே அதுவே சிறப்பு. இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் "திராவிடர் கழக மகளிரணியினர் தனித்தன்மை பெற்றவர்கள்" என்று கூறியுள்ளார். அதற்கு அன்னை மணியம்மையாரே உதாரணம். நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு இந்திரா காந்தி அம்மையார் சென்னை வந்த போது ஆசிரியர் தலைமை யில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்தது. அந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மறுத்தபோது அந்த நிகழ்ச்சிக்கு நானே தலைமை தாங்குவேன் என்று கூறி தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் திருச்சி மருத்துவ மனையிலிருந்து வந்து கருப்புக்கொடி காட்டி சிறை சென்றவர் அன்னை மணியம் மையார். தன்னுடைய இராவணலீலா நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அம்மையாரின் நூற்றாண்டை அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாக நடத்தி நம் கொள்கை எதிரிகளை வியக்க வைக்க வேண்டிய கடமை கழக மகளிருக்கு உள்ளது. பார்வதி எதையும் தாங்கக்கூடிய "ஷிலீஷீநீளீ றிக்ஷீஷீஷீயீ" ஆனவர்.

அடுத்ததாக கலைச்செல்வி. இவருடையத் தந்தை பூண்டி கோபால்சாமியை நான் நன்கு அறிவேன். ‘குமுதம்' வார இதழில் கிருபானந்த வாரியார் அவர்கள் எழுதிய வாரியார் விருந்துக்கு மறுப்பாக நான் எழுதிய வாரியாருக்கு மருந்து எனும் கட்டுரையைப் பாராட்ட பூண்டியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். அதற்கு அய்யாவும் வந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் ‘விடுதலை' மலரில் நான் எழுதிய ஒரு பாடலுக்குக் கலைச்செல்வி நடனமாடினார். கோபால்சாமி அவர்களின் புனைப்பெயர் செங்குட்டுவன். இவர் திராவிட மாணவர் கழகம் ஆரம்பித்த மூவரில் ஒருவர். அவருக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. நம் ஆசிரியர் சிறுவராக இருந்த போது அவரை தன் தோளில் உப்புமூட்டை தூக்கியுள்ளார். அவரது மற்றொரு சிறப்பு இராவண லீலாவில் கொளுத்தப் பட்ட இராமன், இலக்குமணன், சீதை ஆகிய மூவரின் சிலையையும் செய்தவர் இவர்தான். இப்போது கலைச்செல்வி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதின் காரணம் அவர் அவ்வாறு வளர்க்கப்பட்டார்.

அடுத்ததாக கலைமணி. இவரது துணைவர் பழனியப்பன் அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர். ஒரு காலகட்டத்தில் அந்தக் குடும்பம் துயரில் தத்தளித்த போது உறுதியுடன் நின்று தன் குழந்தைகளை நல்ல முறையில் ஒரு தந்தை யாகவும் இருந்து கொள்கை கோட்பாட்டுடன் வளர்த்தவர் கலைமணி. சமீபத்தில் அவருடைய மகன் ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவர் என்ற விருது வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய விருந்தோம்பல் அனைவரும் அறிந்தது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி சொல்லியாக வேண் டும். தேவதாசி முறை ஒழிப்புக்கு காரணமாக இருந்தவர். அவர் சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டு வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர் சத்தியமூர்த்தி அய்யர். இது கடவுள் காரியம். இதனால் அவர்கள் இறந்த பின் நேரடியாக சொர்க்கத்திற்குச்  செல்வார்கள். இந்த மசோதாவை இப்போது அனுமதித்தால் இராமசாமி நாயக்கர் பிறகு கோவிலில் மற்ற ஜாதியினரையும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சொல்வார் என்று நம்முடைய இக்கால போராட்டத்தை அப்போதே கூறினார். அப்போது தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி முத்துலட்சுமி அம்மை யார் சட்டசபையில், இவ்வளவு நாட்கள் இதைச்செய்து எங்கள் குடும்பத்து பெண்கள் சொர்க்கம் சென்றார்கள். இனிமேல் இந்த தேவதாசி காரியங்களை உங்கள் குடும்பத்து பெண்கள் செய்து அவர்களே சொர்க்கத்திற்குச் செல்லட்டும் என்று கூறினார். முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் டாக்டர். அவர்கள் இந்த மசோதாவைக் கொண்டுவந்தது  ஆச்சரியமில்லை.

ஆனால் இதற்கு அடித்தளத்திலிருந்து வித்திட்டவர்கள் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள். அதில் முக்கியமானவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இந்தி எதிர்ப்பின் போது 1938 ஆகஸ்டு 1ஆம் நாள் 100 பேர் கொண்ட தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்துத் துவங்கியது. அதன் தலை வர் தஞ்சாவூர் குமாரசாமி பிள்ளை. சேனாதிபதி பட்டுக் கோட்டை அழகிரி. படையில் அனைவரும் ஆண்கள். அதில் ஒரே பெண் இராமாமிர்தம் அம்மையார். ஒரே பெண்ணாக இருந்தும் அவர் கலந்து கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவருடையத் துணிவு. மற்றொன்று திராவிடர் கழக ஆண்களின் ஒழுக்கம். இப்படி சரித்திரம் கொண்ட நம் இயக்கத்திலிருந்து இன்று மும்மூர்த்திகள் பாராட்டப் படுகிறார்கள். இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்திய மகளிருக்கு வாழ்த்துகள். பாராட்டு கூட்டங்கள் எங்கும் நடத்தப்பட வேண்டும். அது அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கும். விருது பெற்றவர்களைப் பாராட்டி & எங்களுக்கும் சிறப்பு செய்ததற்கு என் சார்பிலும், என் வாழ்விணையர் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உரையாற்றினார்.

முன்னதாக கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் & அவரது இணையர் சி.வெற்றிச்செல்வி ஆகியோரின் பொன் விழா இணையேற்பு நாளை முன்னிட்டு இருவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துரைகளும் தெரிவித்து, பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பாராட்டு பெற்ற மூவரும் மற்றும் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களும் சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்கு நன்கொடையாக ரூபாய் அய்நூறு வீதம் அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாலை சிற்றுண்டியும். தேநீரும் சி.வெற்றிச்செல்வி அவர் களால் வழங்கப்பட்டது. சுமதி கணேசன் அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



தொகுப்பு:

ச.இன்பக்கனி

(தலைமை செயற்குழு உறுப்பினர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக