செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழக அரசின் அவசரப் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் * மூன்று உயிர்களைப் பறி கொடுத்த அச்சம் தீராத கச்சநத்தம் கிராமம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு  அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் பாதிக்கப்பட்ட இளைஞர் தமிழர் தலைவரிடம் கோரிக்கை




சிவகங்கை, ஜூன் 12 ஜாதிய அடக்குமுறை  காரணமாக மூவர் படுகொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது நாட்டையே உலுக்கும் வண்ணம் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த தூத்துக்குடி ஆகிய ஊர் களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறிட ஒரு நாள் பயணமாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (11.6.2018) காலை  5.30 மணியளவில் மதுரை வந்தடைந்தார்கள்.

அச்ச உணர்வில் கச்சநத்தம்



தமிழர் தலைவர் அவர்கள் அண்மையில் ஜாதிய அடக்குமுறை காரணமாக மூவர் படுகொலை செய்யப்பட்ட கச்சநத்தம் கிராமத்திற்கு சென்றார். அந்த சின்னஞ்சிறிய கிராமம் மொத்தமும் ஒருவித அச்ச உணர்வோடு சோகமாக காட்சியளித்தது. அனைவரையும் வாட்டியது.

படுகொலை செய்யப்பட்ட சந்திரசேகர் (வயது 37), சண்முகநாதன் (வயது 29), ஆறுமுகம் (வயது 85) ஆகியோர் இல்லங்களுக்கு சென்ற கழகத் தலைவர் அந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி  நடந்த மிக துயரமான சம்பவத்தை கேட்டறிந்தார். மொத்தமே 40 குடும்பங்களை கொண்ட அந்த குக்கிராமமான கச்சநத்தம் இப்போது மேலும் இறுகிப் போய் நிற்பது கொடுமையிலும் கொடுமை.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வேதனைக் குரல் எழுப்பிய சகோதரி ஒருவர் தமிழர் தலைவரிடம் கூறும்போது இரண்டு முறை காவல் நிலையத்தில் சென்று புகார் மனு அளித்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் இன்றைக்கு மூன்று பேரை இழந்து நிற்கிறோம். 15க்கும் மேற்பட்டவர் இரவு  9 மணிக்கு கிராமத்தில் நுழைந்து மின்சார இணைப்பை துண்டித்து விட்டு வீடுகளில் புகுந்து இளைஞர்கள் பெரியவர்கள் என்று பாராமல் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிவீசினர். மொத்தம் எட்டு பேரை வெட்டிப் போட்டு விட்டு

9.30 மணிக்குள் போய் விட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றோம். ஆம்புலன்சு வாகனமோ 5 மணி நேரம் தாமதமாகத்தான் வந்தது. எங்கள் ஊரின் பக்கத்து ஊரான ஆவாரங்காட்டை சேர்ந்தவர்கள்தான் இந்தப் படுகொலையை செய்தவர்கள். காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த எங்கள் சமூகத்தில் இந்த தலைமுறையை சார்ந்தவர்கள்தான் நன்கு படித்து அரசுப் பதவிகளில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க ஜாதியினர் இப்படி பல நாள் திட்டமிட்டு ஒரு கொடிய சம்பவத்தை ஈடேற்றியுள்ளனர்.

இத்தனையையும் கேட்டறிந்த கழகத் தலைவர் அவர்கள் மிகவும் துயரப்பட்டதுடன் அந்த கிராம மக்களிடையே ஆறுதல் கூறியதுடன் அரசுக்கு இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய முறையில் தெரிவிப்பதுடன் சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவிகள் செய்ய முடியுமோ அதைச் செய்வோம் எனக் கூறினார்.  அந்த கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதை முன் கூட்டியே அரசும் காவல்துறையும் செய்திருந்தால் இவ்வளவு பெரிய படுகொலைச் சம்பவம் நடந்திருக்காது. கொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளின் வாசலில் இரத்தக் கறை இன்னும் மறையாமல் பார்க்கவே கொடூரமாக இருந்தது. இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.  சரியாக 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட கழகத் தலைவர் மதியம் 1.30 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யத்திற்கு சென்றடைந்தார்.

13 உயிர்களைக் குடித்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு



2 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு உள்நோயாளிகள் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 5ஆவது தளத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தனித் தனியாக சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். அவர்களில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் நான் செல்லும் வழியில் எந்தக் கூட்டமும் இல்லை என்று சொன்னதால்தான் போனேன். ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குண்டடிபட்டதில் என் கால் எலும்பு நொறுங்கிப் போனது என்றார்.

அதேபோல படுகாயமடைந்த இளம்பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கத்தான் நாங்கள் போனோம். திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். கூட்டத்தை கலைக்க லத்தியால் அடித்து விரட்டியதுடன் மிக மோசமான அநாகரிகமான முறையில் காவல்துறையினர் நடந்துகொண்டார்கள்.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் குண்டு அடிபட்ட ஒரு சிறுமி கழகத் தலைவரை கண்டவுடன் அய்யா எப்படி நீங்கள் கருப்புச்சட்டை போட்டு உள்ளே வந்தீங்க? காவல்துறையினர் எப்படி உங்கள உள்ள விட்டாங்க? ஏன்னா கருப்புச் சட்டை போட்டு வந்தாலே அடிச்சு விரட்டுறாங்க இங்க! அதனால கேட்டேன். குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த எங்களை சந்திக்க வந்த ஒரு அக்கா கருப்புடை போட்டிருந்தாங்க! ஆனா அவங்கள காவல்துறையினர் கருப்புச் சட்டையை கழட்டச் சொல்லி உள்ளாடையோடு நிற்க வச்சுட்டாங்கையா! இவ்வளவு கீழ்த்தரமா காவல்துறையினர் நடந்து வருவதெல்லாம் கேக்க ஆளில்லையா? ஆனா உங்களை பார்த்ததில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை வருதுங்கையா!  நாங்க தொடர்ந்து போராடுவோம்! விட மாட்டோம். இந்த அரசு மக்களால் நான்! மக்களுக்காக நான்! என்று சொல்லி ஏமாற்றி வராங்க! உண்மையில இந்த அரசு கார்ப்பரேட்டுகளால் நான்! கார்ப்பரேட்டுகளுக்காக நான்! என்று சொல்வதுதான் சரி! என்று அந்த இளந்தளிர் தனக்கு ஏற்பட்ட கொடுமையைகூட எண்ணாமல் போர்க் குணத்தோடு சொன்னபோது தமிழர் தலைவர் அவர்கள் அந்த சிறுமியின் கையை பிடித்து வாழ்த்துக்களை சொன்னார்.



மேலும் வேடிக்கை பார்த்தவர்கள், அந்த வழியாக போனவர்கள். அப்பாவி பொது மக்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் குண்டடிப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமையின் உச்சம் பிரின்ஸ்டன் என்ற இளைஞர் குண்டடிப்பட்டதில் வலது காலை இழந்து மிக அநியாயமாக பரிதாபமாக தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் படுக்கையில் பேசவே முடியாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தனக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கியதை பெற்றுக் கொண்ட ஆசிரியர் அவர்கள் அரசுக்கு உரிய முறையில் அதை தெரியப்படுத்துவோம் என்று சொல்லி ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான மணிராஜன் வீட்டுக்குச் சென்ற தமிழர் தலைவர் அவரது தாய், தந்தை, சகோதரி ஆகியோரிடம் ஆறுதல் கூறி, தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திவிட்டு வந்தார். அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்த மற்றொருவரான தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா இல்லத்திற்குச் சென்றார். அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறி, நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார். சிலோன் காலனியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழர் தலைவரிடம் நடந்த கொடுமைகளைப் பற்றி விவரமாக எடுத்துக் கூறினர்.

3 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் உணவை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் குறுக்குச் சாலை என்னும் இடத்தில் வசித்துவந்தவரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான தமிழரசன் அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மரியாதை செய்த தமிழர் தலைவர், வயதான அவரது தாயார் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

மொத்தத்தில் ஜாதிய அடக்குமுறை காரணமாக கச்சநத்தத்தில் நடந்த படுகொலையும், தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அரசின் முதலாளித்துவ சிந்தனையையும் எதிர்த்துப் போராடுவது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும், ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையை போராடும் மக்களுக்கு தமிழர் தலைவரின் கள ஆய்வுப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது.





- தி.என்னாரெசு பிராட்லா,

செய்தியாளர்

முழு சிகிச்சை தேவை

கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்லுங்கள் என வற்புறுத்துவதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட அவர்கள் முழு சிகிச்சை பெற்று பூரண நலமடைந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்ய உதவ வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த தகவலை அரசுக்கும், உரியவருக்கும் எடுத்துச் செல்வோம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.

 

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் நேரில்  ஆறுதல்
- விடுதலை நாளேடு, 12.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக