செவ்வாய், 12 ஜூன், 2018

குருகுலக் கல்வி என்னும் பெயரில் குலக்கல்வி திட்டமா?


தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் துவக்க ஏற்பாடா?

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
சென்னை, ஜூன் 10-  குருகுலக்கல்வி என்ற பெயரால் மீண்டும் குலக்கல்வியைக் கொண்டு வரத் திட்டம் தீட்டி விட்டார்கள். தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் கொண்டு வரவும் ஏற்பாடாகி இருக்கிறது. மனுதர்ம ஆதிக்கத்தை முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

"குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?"


6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு திட்டம்


குருகுலக் கல்வி என்ற பெயராலே மீண்டும் சமஸ்கிருத படையெடுப்பு, மனுதர்ம ஆட்சி இவைகளுக்கு அடிகோலக்கூடிய மிக ஆபத்தான போக்கை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், பெண்கள், கிராமப்புறத்து இளைஞர்கள் ஆகியோரின் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த திட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பால், ஆரிய அமைப்பால் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய மோடி அரசு, பா.ஜ.க.வினுடைய அரசு எவ்வளவு பெரிய கொடுமையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறது என்பது இன்னும் நாட்டுக்குத் தெரியவில்லை.

முதல் எச்சரிக்கை மணி


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை திராவிடர் கழகம் அம்பலப்படுத்தவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்கள் அத்துணை பேருக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று முதல் எச்சரிக்கை மணி அடித்து, எல்லோருக்கும் விழிப்புணர்வை உருவாக்குகின்ற அதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனக்குப் பணிகள் இருந்து, இந்தப் பொது க்கூட்டத்திற்கு வேறொருவரை அனுப்பலாம் என்று சொன்ன நேரத்தில், இது மிக முக்கியமான பணி என்று சொன்னபொழுது, அன்பு சகோதரர், நாங்கள் உரிமை எடுத்துக்கொண்டு, இன்றைக்கு திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெரிய போர் வாளாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய சகோதரர் வைகோ அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்கிற, கலந்துகொள்ள வரவிருக்கின்ற அருமை ஏனைய தோழமைக் கட்சித் தலைவர்களே,

இந்த மழையில் கூட்டம் நடக்குமா? என்று பல பேருக்கு அய்யம். தோழர் பாண்டியன் அவர்களுக்கு உடல்நலக் குறைவின் காரணமாக, பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்.

கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும்...


அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு இது மிக முக்கியமான ஒரு பணி. கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும், சமுதாய பணி செய்யக்கூடிய நாங்கள், அந்தப் பணியில் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கிற அத்துணை இயக்க நண்பர்களும், இதில் அரசியல் இல்லை - இது நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தது - வாழ்வைப் பொறுத்தது - பெற்றோர்களுடைய நலனைப் பொறுத்தது. எனவேதான், இந்த இயக்கமே அதற்காகத்தான் தொடங்கப்பட்டது.

திராவிடர் இயக்கம் என்பது அரசியலுக்குச் சென்றிருக்கிறது என்று சொன்னால், அரசியலுக்காக அல்ல - இதுபோன்ற சூழ்நிலைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காகத்தான் - இந்தப் பணியை செய்வதற்காக சென்றிருக்கிறது.

நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு...


இன்றைக்கு சுதந்திரம் வந்து 72 ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கு சொல்கிறார்கள். இந்த 72 ஆண்டுகள் சுதந்திரத்தில், ஜாதி, தீண்டாமை எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அதனைப் போக்கவேண்டும் என்ற முயற்சி எடுக்கக்கூடிய தலைவர்கள் ஓரணியில் நின்று, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் போராட்டமாக நடத்தி அதில் பெரிய அளவிற்கு அவர் வெற்றி கண்டார். ஜாதியினுடைய அஸ்திவாரத்தை மிகப்பெரிய அளவிற்கு கலகலக்கச் செய்திருக்கிறார்.

மேலே இருக்கிற இடிபாடுகள், அர்ச்சகர் போன்ற அந்தப் பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான், நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு அவர்கள் அந்தப் பணியை எடுத்துச் செய்தார்கள்.

இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!


அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எளிமையாக மக்கள் மத்தியில் கேட்டார், தாழ்த்தப்பட்டவரை, என்னுடைய சகோதரரை, எங்கள் இனத்து உழைப்பாளியை நீங்கள் கேவலமாக நடத்தியது மட்டுமல்ல, படிக்கின்ற உரிமையை மறுத்தீர்கள்; படிக்க வைத்தோம். பதவியில் அமரக் கூடாது என்று சொன்னீர்கள்; பதவியில் அமர வைத்தோம். அய்க்கோர்ட் ஜட்ஜாக முடியவில்லையே என்கிற குறை இருந்தது - அதை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்களுடைய ஆட்சி என்னுடைய அறிவுரைகேற்ப செய்தது என்றார்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இன்றைக்கு ஏராளமான ஆதிதிராவிட சமுதாயத் தோழர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஜாதி முக்கியமல்ல; பங்கேற்பு இருக்கிறது - சமத்துவம் இருக்கிறது- சம வாய்ப்பு இருக்கிறது  - இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!

அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது;


அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்?


அப்படிப்பட்ட தந்தை பெரியார் கேட்டார், ஒரு ஆதிதிராவிட சகோதரனால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக முடிகிறது; அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது; ஆனால், அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்? ஜாதியினுடைய பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்; எனவே, அதனைத் தகர்த்து எறியவேண்டாமா? என்றார்.

இன்னுங்கேட்டால், திருப்பதி வெங்கடாசலதி பதியையே அர்ச்சகர்தான் கண்ட்ரோல் செய்கிறார். மோடி அதையும் விட்டு வைக்க விரும்பவில்லை. திருப்பதியையும் தன்வசம் எடுக்கவேண்டும் என்று மோடி முயற்சிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக


சட்டம் கொண்டு வரவேண்டும்


எனவேதான், இந்த மண்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண். அந்த வகையில், தந்தை பெரியார் சொன்னார், நான் வைக்கத்தில் தொடங்கிய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இன்றைக்கு எங்கே வந்திருக்கிறதென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. காரணம், கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று சொல்கிறார்கள். இது மனித உரிமை - இது ஆணுக்கும் இருக்கவேண்டும்; பெண்ணுக்கும் இருக்கவேண்டும். அந்த உரிமைகள் வரவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லி, அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொன்ன நேரத்தில்தான்,

கலைஞர் சொன்னார், இதற்காக நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆட்சி - உங்களுக்காக இந்த சட்டத்தை நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, சட்டத்தைக் கொண்டு வந்தார்.

உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தோற்றார்கள்;


நாம் வென்றோம்!


வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத் திற்கு ஓடினார்கள். உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தோற்றார்கள்;  நாம் வென்றோம்; திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது; பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடிய சட்டம் செல்லும் என்று.

பார்ப்பனர்கள் அதற்கடுத்தபடி என்ன செய்தார்கள் என்றால், நாத்திகர்கள் எல்லாம் அர்ச்சகர் ஆகிவிடுவார்கள்; எனவே, அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னார்கள்.

அப்படியா? என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் கலைஞர்.

ஆகமங்கள் தனித்தனியே இருக்கின்றன; சடங்கு, சம்பிரதாயம் கெட்டுப் போகும் என்றனர் பார்ப்பனர்.

அப்படியா, சரி! ஆகம விதிகளின்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கட்டும் என்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இன்னொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள்.

பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்


சகோதரர்கள் வரையில்...


ஆகம விதிகள்படி இரண்டு பள்ளிக்கூடங்கள். ஒன்று வைணவ முறைப்படி; இன்னொன்று சைவ முறைப்படி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சகோதரர்கள் வரையில் 210 பேர் பயிற்சி முடித்து இருக்கிறார்கள்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பத்தாண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று, தி.மு.க. கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

ஒரு ஆட்சி, அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர். உறுதிமொழி கொடுத்து, அதற்குப் பிறகு ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்த பிறகும் அதை நிறைவேற்றவில்லை. காரணம் என்ன? அந்த ஜாதியினுடைய பிடிப்பு.

அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலகட்டத்தில், செவ்வாய்க்கிரகத்திற்குப் போய் மனிதன் இறங்கிவிட்டான். ஆனால், இங்கே இருக்கிற கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதை நாங்கள் சொல்லும் பொழுது, என்ன இந்தப் பிரச்சினையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சிலர் நினைக்கலாம்.

அருமை நண்பர்களே, அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்கு நான் செல்ல விருக்கிறேன்.

மோடி பல வித்தைகளைக் காட்டுவார்!


நாளைக்கு ஒரு போராட்டம்! என்ன போராட்டம்? மோடி பல வித்தைகளைக் காட்டுவார்; மோடி வித்தை என்ன என்பது ஏற்கெனவே நமக்குத் தெரியும். மற்ற வித்தைகள் எல்லாம் பிரதமர் மோடி வித்தைக்குமுன் நிற்க முடியாது. ஆகவே, அவர் என்ன செய்தார் என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நாட்டின் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று. அதற்காக பொம்மை ஆட்களைப் பிடிப்பார்கள். அதற்குமுன் அவர் யார் என்று யாருக்குமே தெரியாது. ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவரானார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை!


இவர், பா.ஜ.க. ஆளுகின்ற ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள  அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே இவரை அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்றால், தாழ்த்தப்பட்டவரை இந்தக் கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். இவர் குடியரசுத் தலைவர் என்றார்கள்; எந்தத் தலைவராக இருந்தால் எங்களுக்கு என்ன? இந்து மதம், அர்த்தமுள்ள இந்து மதத்தினுடைய ஆதிக்கம் இதுதான். ஆகவே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள்.

வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? சரி பரவாயில்லை,  படிக்கட்டுகளில் அமர்ந்து நான் கடவுளை வணங்கிவிட்டுப் போகிறேன் என்று, படிக்கட்டில் அமர்ந்துவிட்டு வந்தார்.

முப்படைக்கும் தலைவரான குடியரசுத்


தலைவருக்கு நேர்ந்த அவமானம்!


2018 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ஒருவர் - இவருடைய பதவிக்கு மேல், உயர் பதவியே கிடையாது என்ற நிலை. இவர்தான் முப்படைக்கும் (தரைப்படை - வான்படை - கப்பற்படை) சுப்ரீம் கமாண்டர் குடியரசுத் தலைவர்தான் - அரசியல் சட்டப்படி. இந்த மூன்று படைகளும் இவருடைய உத்தரவுப்படிதான் நடக்கவேண்டும். எந்த நாட்டின்மீது வேண்டுமானாலும் படையெடுக்கச் சொல்லும் அதிகாரம் படைத்தவர். ஆனால், இவ்வளவு படைகள் இருந்தாலும், பூணூல் படைக்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா நண்பர்களே, ஜாதி - தீண்டாமை - வருணாசிரம தர்மம் - மனுதர்மம் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதற்காகத்தான் நாளைக்கு தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த செய்தியையே மறைத்துவிட்டார்கள். அதையும் மீறி இந்த செய்தி வெளியில் வந்தவுடன், மிக சாமர்த்தியமாக அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மனைவிக்கு மூட்டு வலி. அதனால் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து பூஜை செய்துவிட்டு வந்தார்கள் என்று ஒரு சமாதானத்தை சொல்கிறார்கள். கோவிலுக்குள் விடாமல் அவமானப்படுத்தினார்களே, அதைவிட கொடுமையானது இவர்கள் சொல்கின்ற விளக்கம்.

சரி, அந்தம்மா மூட்டு வலி காரணமாக கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றாகத்தானே நடக்கிறார், இவர் ஏன் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்தார்.

ஆர்ப்பாட்டம் ஏன்?


ஆகவேதான், நாம் ஒருபக்கம் படி, படி என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம் அவர் எனக்கு இருப்பது படி, படிதான் அதற்குமேல் ஏறி வர முடியாது என்கிற நிலைக்கு ஆக்கி விட்டார். இதையெல்லாம் எதிர்த்துத்தான் நாளைக்கு (7.6.2018) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இப்பொழுது குருகுலக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தினுடைய அட்டையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாக விளங்கும்படியான விளக்கங்கள் இருக்கின்றன.

குருகுலக் கல்வி என்றால் என்ன? வீட்டுத் தொழுவத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அமர்ந்திருக்கவேண்டும். ஞானாசிரியராக இருக்கின்ற பார்ப்பனர் வேதத்தை சொல்லிக்கொடுக்க அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் அழைப்பார். இதுதான் குருகுலக் கல்வி. இதுதான் வேதக் கல்வி.

அவர் வாயால் சொல்வார்; அதனை இவர்கள் திருப்பிச் சொல்லவேண்டும். உபாத்தியாயர் என்கிற வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், அத்தியாயனம் என்றால் சொல்வது; உபாத்தியாயர் என்றால், அவர் சொல்வதை திரும்பச் சொல்வது. இதிலிருந்துதான் வாத்தியார் என்ற சொல் வந்தது.

அரசர்களாக இருந்தாலும்,


படிப்பதற்குத் தகுதி கிடையாது


குருகுலக் கல்வியைத்தான் அறிவு என்று சொல்லி வைத்திருந்தான். அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது; கல்வியைக் கொடுக்கக் கூடாது. மனுதர்மம் நடைமுறையில் இருந்ததினால்தான், ராஜாக்கள்கூட படிக்காதவர்களாக இருந்தார்கள். அவர்கள் அரசர்களாக இருந்தாலும், படிப்பதற்குத் தகுதி கிடையாது அவர்களுக்கு.

அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையை மீண்டும் மோடி அரசு இங்கே கல்வித் திட்டமாகக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்து - வேகமாக அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ஆர்கனைசர் ஆகும். மே மாதம் வெளிவந்த இந்தப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.. என்று சொன்னால், அது ரகசிய இயக்கம். அவர்கள் கூட்டம் போடுவது ரகசியமாக இருக்கும். ஊர்வலம் ஒன்றைத்தான் வெளியில் காட்டுவார்கள்.

உஜ்ஜயினியில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் முதலில் வெளிவரவில்லை. நாம்தான் அதனை வெளியிட்டோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் மடாதிபதிகள், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?

நாம் மீண்டும் பழைய குருகுலக் கல்வியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அத்தீர்மானம்.

ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ,


அதைத்தான் மோடி செய்வார்


இந்த மாநாடு முடிந்து ஊருக்குச் சென்றதும், அந்தத் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் மோடி செய்வார். ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் என்னவென்று சொன்னால், முழுவதும் வேத கணித பாடம், சமஸ்கிருதம்தான். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.

இந்தச் செய்தியை நாங்கள் வெளிக் கொணர்ந்து, அது மக்களிடம் போய்ச் சேருவதற்குள், அவர்கள் வேக வேகமாக திட்டத்தைப் போட்டு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி விட்டார்கள். இந்தத் தகவல் பலருக்குத் தெரியாது. ஏற்கெனவே கல்வித் திட்டத்தை சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் என்றவுடன், நம்முடைய எதிர்ப்பைக் காட்டினோம்.

உஜ்ஜயினியில் பார்ப்பனர்கள்


நடத்திய மாநாடு


குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,

1. வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)

2. பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)

3. சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)

4. சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)

5. சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்

இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் (X Standard) வகுப்பில் சேரலாம் (பழைய கால Private Study என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.

மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும்  33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.

10 ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (Vedic Mathematics).

மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப் படும்.

சமஸ்கிருத பாரதி


கல்வியை சமஸ்கிருத மயம், வேத மயம் ஆக்கிவரும், பெரிதும் சமஸ்கிருதத்தைப் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் சமஸ்கிருத பாரதி பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மானிய உதவி (Grant) மக்கள் வரிப் பணத்தில் திருப்பி விட்டுப் பயன் பெறச் செய்யவும், பார்ப்பன சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஆசிரியர் வேலை வாய்ப்பைப் பெருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டமே இது!

சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தை


உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை,


ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!


முன்பு இந்தியைத் திணித்து, இந்திப் பண்டிதர்கள் வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோன்று பார்ப்பனர்கள்தான் சமஸ்கிருத பண்டிதர்கள். புதிதாக இப்பொழுது சமஸ்கிருத கல்லூரியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வைப்பதைவிட, சமஸ் கிருதப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை, ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலிருந்து எனக்கு இந்தச் செய்தி இன்றைக்குக் கிடைத்திருக்கிறது. மீண்டும் மனுதர்மம் வருகிறது.

சமஸ்கிருதம்தான் எல்லாமும் என்று சொல்லக் கூடிய, அந்தக் கலாச்சாரத்தைப் பேணக்கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

ராஜாராம் மோகன்ராய்!


இந்தியாவில் முதன்முதலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கு, பெண்களை உயிரோடு எரிப்பதைத் தடுப்பதற்கு முதல் முயற்சி எடுத்த மாமனிதர் அவரே ஒரு பார்ப்பனர்தான் - அவர்தான் வங்காளத்தைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் அவர்கள்.

அவருடைய காலத்தில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்தவேண்டும் என்பதற்காக மிகச் சாமர்த்தியமாக சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுத்தால், பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களைத் தன்வயப்படுத்துவதற்காக இதனை செய்தபொழுது, முதல் எதிர்ப்புக் குரல், சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்காதே! புராணங்களில் ஒன்றும் கிடையாது என்று எதிர்ப்புக் கொடுத்தவர், ராஜாராம் மோகன்ராய் அவர்கள்தான். இவர் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது.

அறிவியல் மனப்பான்மையை அது கொன்றுவிடும் - அது வெறும் நம்பிக்கைதான் என்றார்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இதுதான் திருவள்ளுவருடைய முறையாகும்.

புத்தருடைய முறை என்னவென்று தெரியுமா?

முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக அதேபோன்று நீ நடக்கவேண்டும் என்று நடக்காதே!

முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக, நீ சிந்திக்காமல் அதனை ஏற்காதே!

முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்காதே நீ!

உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்! என்றார்.

அதை அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் சொன்னவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள்; நம்பாதீர்கள். உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைப் பாருங்கள் என்றார்.

நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய


அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு!


குடியாத்தம் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை அளித்தபொழுது, அங்கே அய்யா உரையாற்றினார்.

நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். யார் சொல்வதையும் நம்பவேண்டும் என்பதில்லை. நாடு நாசமாகப் போனதற்கே  அதுதான் காரணம் என்று அய்யா ஆரம்பித்து, இளைஞர்களே நம்புங்கள்! என்று தொடங்கி, பரமாத்மா சொன்னார், ஜீவாத்மா சொன்னார், பகவான் சொன்னார், இறைவன் சொன்னார் என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.

கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு இளைஞர், யார் சொல்வதையும் நம்பவேண்டாம் என்று சொல்கிறீர்களே அய்யா, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று கேட்டார்.

உடனே அய்யா அவர்கள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல், நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு! என்றார்.

இப்படி அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த நாட்டில், அதற்கு நேர் எதிராக அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே, நம்பு! நம்பு!! ஏனென்று கேட்டால், உனக்கு நரகத்தில் தண்டனை கிடைக்கும். ஆகவே, நம்பு! நம்பு!! என்கிறார்கள்.

எது ஆரியம்? எது திராவிடம்?


திராவிடம் என்றால் என்ன? என்று நிறைய பேர் இப்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். திராவிடமா? தமிழா? தமிழ்த் தேசியமா?திராவிடமா? என்று.

பார்ப்பானா? தமிழனா? என்று ரத்தப் பரி சோதனை வைத்துப் பார்க்கவில்லை. கலந்து போய் நீண்ட நாள்களாகின்றன என்பது உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் இரண்டு பண்பாடுகள், அடிப்படையிலே இரண்டு பண்பாடுகள். எது ஆரியம்? எது திராவிடம்? என்றால், இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்து, விவாதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஆரியம் என்றால் என்ன?

கண்ணை மூடிக்கொண்டு நம்பு என்று சொல்வது ஆரியம்.

திராவிடம் என்றால் என்ன?

நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைக் கேள் என்று சொல்வது திராவிடம்.

திருவள்ளுவர் இதைத்தானே சொன்னார்; புத்தர் இதைத்தானே சொன்னார்; பெரியாரும் இதைத்தானே சொன்னார்.

திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது!


எனவே, திராவிடம் என்பது இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது. திராவிடம் என்பது ஒரு தத்துவம். திராவிடம் என்பது ஒரு ஆய்வு செய்து கண்டுபிடிக்கின்ற விஷயம் அல்ல.

எல்லோரும் சமம் என்றால், அது திராவிடம்!

தொடக்கூடாதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், எட்டி நில் என்றால், அது ஆரியம்!

வேதம் என்றால், அறிவு என்று அந்தக் காலத்தில் வைத்திருந்தார்கள்.

அந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடையாது. நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரர்கள்தான் பிரிண்டிங்கைக் கண்டுபிடித்தார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களால் ஒரு பயலுக்காவது அச்சாபீஸ் தெரியுமா? எழுத்து தெரியுமா? எழுத்துத் தெரியாததினால்தானே, அவர்கள் வாயால் சொன்னார்கள். அப்படி சொல்லும்பொழுது, அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே! அந்த முறையில் இருந்ததுதான் அத்தியாயனம். அத்தியாயனம் என்றால் வரைப்படுத்துவது.

சமஸ்கிருதம் நமக்குப் புரிவதில்லை. இன்னமும் நம்முடைய ஆட்கள், அவருடைய இல்லங்களில் பார்ப்பனரைக் கொண்டு வந்து திருமணங்களை நடத்துகிறார்கள்.

அவர்கள் புரியாத மொழியில் மந்திரங்களை சொல்லுகிறான். புதுப்பணக்காரனான நம்மாள், சாமி, மந்திரங்களை நன்றாகச் சொல்லுங்கள் என்று.

மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா?


பெரியார்தான் கேட்டார், திருமண விழாக்களில் பார்ப்பனர்கள் சொல்லுகின்ற மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா? என்று.

சோமஹ ப்ரதமோ

விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே

மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கெனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

இந்த மந்திரத்தைத் தமிழில் சொன்னால், மந்திரம் சொன்னவர் வெளியில் போக முடியுமா? சமஸ்கிருதம் புரியாததினால், அதனை இப்பொழுது திணிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இங்கே உரையாற்றிய குமாரதேவன் ஒரு கேள்வியை கேட்டாரே, அது நியாயமான கேள்வி!

இப்பொழுது சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்களே, எந்தப் பார்ப்பானாவது வீட்டில் சமஸ்கிருத மொழியில் பேசுகிறார்களா? என்று.

சங்கராச்சாரி வேண்டுமானால், சமஸ்கிருத மொழியில் பேசுவார். அவருக்கும், அவருடைய சீடருக்கும் தெரியும். சமஸ்கிருத மொழியில் மந்திரத்தை தவறாக சொன்னால்கூட யாருக்காவது புரியுமா?

நாவலர் சோமசுந்தர பாரதியார்


ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் வைதீகத் திருமணத்தில் கலந்துகொண்டார்.

அந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு, ஒரு குட்டிப் புரோகிதர் வந்திருந்தார். சடங்கு சம்பிரதாயத்தை செய்துவிட்டு, தீ வளர்த்து, சுற்றி வாருங்கள், சப்தி என்றான், மந்திரத்தை சொல்லிக்கொண்டே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சோமசுந்தர பாரதியார், ஏ, நிறுத்து! என்று சொன்னார்.

ஆனால், அந்த குட்டிப்  புரோகிதன், மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.

உடனே எழுந்து போய், அந்தக் குட்டிப் புரோகிதன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தில் கடைசியாக இந்த நிகழ்வை பதிவு செய்திருப்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

உடனே அங்கே கூடியிருந்தவர்கள் சோமசுந்தர பாரதியாரைப் பார்த்து, ஏங்க, உங்களுக்கு அவர் சொல்கிற மந்திரம் பிடிக்கவில்லை என்றால், இப்படி நடந்துகொள்ளலாமா? இது நாகரிகமானதா? என்றெல்லாம் சொன்னார்கள்.

பொறுங்கள், பொறுங்கள்! நீங்கள் எல்லோரும் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நடந்தது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நான் இப்பொழுது சொல்கிறேன். இங்கே இருக்கிற உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு சமஸ்கிருதம் தெரியும். அவன் மந்திரம் சொன்னானே, அது என்ன மந்திரம் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மந்திரம் கருமாதி மந்திரமாகும் என்றார்.

அப்படியா என்று சொன்ன சிலர், அந்தக் குட்டிப் பார்ப்பானுக்கு இரண்டு அறை விட்டார்கள்.

உடனே அந்தக் குட்டிப் பார்ப்பான், அய்யா நிறுத்துங்கள்! என்னை அடிக்காதீர்கள். உண்மை என்னவென்றால், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. என்னுடைய தகப்பனார், இரண்டு மந்திரங்களை சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தார். அதை நான் மாற்றி மாற்றி சொல்கிறேன்.  இதுவரையில் யாரும் நானும் அப்படியே செய்கிறேன். இனிமேல் நான் இப்படி செய்யமாட்டேன் என்றான்.

சமஸ்கிருதம் புரியாத மொழி என்கிற காரணத்தினால் நம்பு என்கிறார்கள். இதனால்தான் அவர்கள் வேத வாக்கு என்கிறார்கள்.

இங்கே ஆட்சி செய்பவர்களோ, எதற்கெடுத் தாலும் தலையாட்டுகிறார்கள் - பூம் பூம் மாடு போன்று. நான் அவர்களை மாடு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால், எங்கள் சகோதரர்கள் அவர்கள். அந்த மாட்டிற்குக்கூட சில நேரங்களில் சுயமரியாதை வந்து முட்ட ஆரம்பிக்கிறது. எப்படியென்றால், மாட்டிடம் சென்று ஏதாவது வம்பு செய்தால், அந்த மாட்டிற்குக் கொம்பு இருக்கிறதோ, இல்லையோ அது முட்டுவதற்கு வரும்- அதைப் பார்த்து பயந்துவிடுவார்கள்.

நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்;


எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது!
ஆனால், இங்கே நடைபெறுகின்ற ஆட்சி இருக்கிறதே, எதுவுமே செய்யாது. அதற்குமுன் மாடுகள் எல்லாம் கருப்பைக் கண்டுதான் பயப்படும். ஆனால், இந்த மாடுகள் இருக்கிறதே, காவியை கண்டால், அணைத்துப் பிடிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமானது, வேதனையானது. நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது.

எங்களை விட்டால் இதை யார் சொல்வார்கள் - எத்தனை பேருக்கு இந்தத் துணிச்சல் வரும்?

தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுக்கவேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்கிறார்கள். எனவேதான், ஒரு பெரிய ஆபத்து வரவிருக்கிறது.

தி இந்து ஆங்கில நாளிதழில் (18.5.2018) ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நாங்கள் எடுத்து நாடு முழுவதும் பரப்புகின்றோம். நாங்கள் தவறாகப் பரப்பினால் எங்கள்மீது வழக்குப் போடு. அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன முன் ஜாமீன் கேட்கிறவர்களா?

சகோதரர் வைகோமீது கோபப்பட்டு, அவரிடம் சொன்னேன், எங்கோ ஒருவர் தேவையில்லாமல் ஒரு வழக்கைப் போட்டார். அவர் சந்திக்காத வழக்கே கிடையாது; அவர் போகாத சிறைச்சாலையே கிடையாது. நிறைய அவர் அனுபவித்திருக்கிறார். அதைக் கண்டு கலைஞர் கலங்கியிருக்கிறார்; நாங்களும் கலங்கியிருக்கிறோம். எல்லோருமே கலங்கியிருக்கிறோம்.

திடீரென்று எங்கோ ஒரு நீதிமன்றத்தில் வைகோ, வைகோ என்று மூன்று தடவை அழைத்திருக்கிறார்கள். இவருக்கே தெரியாது அது. அதை செய்தியில் பார்த்தவுடன், நான் இருக்கிறேன் என்று சிறைச்சாலைக்குள் போய் உட்கார்ந்துவிட்டார்.

நாங்கள் முன்ஜாமீன்


கேட்பவர்கள் அல்ல!


நான் கேட்டேன், நாமெல்லாம் வழக்குரை ஞர்களாக இருக்கிறோம். ஏன் தேவையில்லாமல் சிறைச்சாலைக்குள் போய் உட்காரவேண்டும், நேரத்தை வீணாக்கவேண்டும் என்றேன். தேவை என்றால், சிறைச்சாலைக்குப் போவோம். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. நாங்கள் ஒன்றும் முன்ஜாமீன் கேட்பவர்கள் அல்ல; காவல்துறையினரின் தயவால் இருக்கக்கூடியவர்கள் அல்ல.

சிறைச்சாலை எங்களை என்ன செய்யும்?

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை

எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை

இந்தப் பாடம் பெரியாருடைய பள்ளிக்கூடத்தில் படித்த பாடமாகும்.

ஆகவேதான், இந்த அளவிற்கு இன்றைக்கு இந்தக் கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வில் நாளுக்கு நாள் பலி. நேற்று ஒரு இளந்தளிர் பிரதீபா தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

நீட்டை ஒழிப்பது முக்கியமா? அதைவிட ஆபத்தான குருகுலக் கல்வியை தடுப்பது முக்கியமா? என்றால், எத்தனை களங்கள்? எத்தனை போராட்டங்கள்? காவிரி பிரச்சினையா? அதற்காகப் போராடவேண்டும்.

நம் தலைவர்கள் சந்தித்த எதிரிகள்


நாணயமான எதிரிகள்!


இன்னுங்கேட்டால், எங்களுக்கு முன் இருந்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்ற தலைவர்கள் காலத்திற்கும், இன்றைக்கும் என்ன வேறுபாடு என்றால், அவர்கள் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். அதனால், அதை ஒரு முறையாக அவர்கள் சந்தித்தார்கள்.

ஆனால், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற எதிரிகள் இருக்கிறார்களே, கொஞ்சம்கூட நாணயம் இல்லாதவர்கள்.

ஆனால், நீங்கள் எத்தனை வித்தைகள் செய் தாலும், அத்தனை வித்தைகளையும் கருவறுக்கக்கூடிய அந்த உணர்வினை, எங்கள் தலைவர்கள், எங்கள் ரத்த நாளங்களிலே வைத்திருக்கிறார்கள்.

எனவே நண்பர்களே! இந்தத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

இன்றைய விடுதலையில் நீட்டைப்பற்றி எழுதிய அறிக்கையை ஒரு துண்டறிக்கையாகப் போட்டு மக்களிடம் பரப்பவேண்டும் என்று நண்பர் வைகோ அவர்கள் சொன்னார்.

நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக


வாதாடக் கூடியவர்கள்


இது எங்களுக்காக அல்ல நண்பர்களே! உங்களுக்காகத்தான்! வைகோ அவர்கள் வழக்குரைஞ ராக பிராக்டீஸ் செய்தால், நன்றாக சம்பாதித்திருப்பார். அவர் செலவில் அல்லவா நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடுகிறார். நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக வாதாடக் கூடியவர்கள்.

எனவேதான், எங்களுக்கு வருமானம் முக்கிய மல்ல நண்பர்களே! தன்மானம்தான் முக்கியம்.

வருமானமா? தன்மானமா? என்று பார்க்கும் பொழுது, தன்மானம் முக்கியம்.

தன்மானமா? இனமானமா? என்று பார்க்கும் பொழுது இனமானம்தான் முக்கியம்.

எனவே, தோழர்களே, நீங்கள்  எந்தக் கட்சியினராக வேண்டுமானாலும் இருங்கள்; அரசியலுக்காக அல்ல நண்பர்களே, தயவு செய்து அடுத்த தேர்தலைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தத் தலைமுறையைப்பற்றி நினையுங்கள்! ஆனால், அடுத்த தலைமுறையினர் சரியாக வரவேண்டுமானால், அடுத்த தேர்தலும் சரியாக அமையவேண்டும், இன்றைய காலகட்டத்தில். இதைத் தான் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு செய்தி.

நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன்


என்றார் சகோதரர் வைகோ!


எனவேதான், இந்த அறிவுறுத்துகிற கூட்டம், தாணா தெருவில் இன்றைக்குத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல இடையூறு இருக்கும்; அந்த இடையூறுகள் வந்தது. மதியம் கடுமையான மழை பெய்தது. நம்முடைய தோழர்களான பொறுப் பாளர்கள்கூட என்னிடம் கேட்டார்கள், மழை வருகிறதே என்று. சகோதரர் வைகோ அவர்களிடம் நான் கேட்டேன், நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

ஆகவே, தாணா தெரு என்பது வரலாறு படைக் கின்ற இடமாகும். அதற்காகத்தான் இங்கே தொடங்கியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மிகப்பெரிய அளவிற்கு உணர்வுகள் இங்கே இருக்கின்றன. கூட்டம் முடிந்து திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் இந்த உணர்வோடு திரும்புங்கள்.

என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது!


எனக்கு அய்ந்து முறை இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது. யாரும் குத்தவில்லை, அந்தக் கத்தித்தான் என் உடலில் படவில்லை. அது எப்பொழுது படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

ஒரு மனிதன் நோயினால் சாகக்கூடாது; விபத்தினால் எத்தனை பேர் இறந்து போகிறார்கள். கோவிலுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், திடீரென்று வாகனம் பாலத்தின்மீது மோதி இறந்து போகிறார்கள். பகவான் கைவிட்டுவிட்டான். ஆனால், மீண்டும் அதை மறந்து பலர் கோவிலுக்குப் போகிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில்...


கோவிலுக்குப் போய் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களே, அந்தக் கடவுளை - விசா வாங்காமல், பாஸ்போர்ட் வாங்காமல் சென்ற கடவுள்களை எல்லாம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதே நம்மாள்தான். அய்.ஜி. பொன்மாணிக்கவேல் அவருடைய கைகளில்தான் இருக்கிறது.

கடவுளை மற - மனிதனை நினை!

திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில்,  அய்.ஜி. பொன்மாணிக்கவேலை நினை!

ஏனென்றால், சிலை தடுப்புப் பிரிவு என்று ஒரு பிரிவையே காவல்துறையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்ற கடவுள் சிலைகளை மீட்டு வந்து கோவிலுக்குள்ளேயே வைக்கிறார்கள்.

பக்திக்காக அல்ல நண்பர்களே, புத்திக்காக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்.

இந்த சமுதாயத்திலுள்ள மக்கள் கல்வியைப் பெறவேண்டும். நம் தமிழ்நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள், நிறைய பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்றைக்கு முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் குப்பன் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்கிறார்கள்; சுவிட்சர்லாந்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதற்குமுன் அமெரிக்கா எங்கே இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற


கூட்டம்தான் இந்தக் கூட்டம்!


இதெல்லாம் எப்படி முடிந்தது? படிப்பு பெருகியதினால்தானே! குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததினால்தானே - எங்கே பார்த்தாலும் கல்லூரிகள் - எங்கே பார்த்தாலும் மருத்துவக் கல்லூரிகள் - காமராசர் ஆட்சிக் காலத்தில், கலைஞர் ஆட்சிக்காலத்தில்.

இவை அத்தனையையும் தலைகீழாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, குருகுலக் கல்வித் திட்டம். இதனைத் தடுக்கவேண்டும். அதற்கு முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

அடுத்து நம்முடைய சகோதரர் வைகோ அவர்கள் மிகத்தெளிவாக இதைப்பற்றி உரையாற்றுவார்.

நீங்கள் கவனத்துடன் இதைப் பயன்படுத்த வேண்டும். இது முக்கியம் என்று கூறி, உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இது முடிவல்ல - தொடக்கம்!


நீங்கள் ஒவ்வொருவரும், பத்து பேரிடம் இந்த ஆபத்தைப்பற்றி சொல்லுங்கள். இது முடிவல்ல - தொடக்கம்! என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 10.6.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக