செவ்வாய், 12 ஜூன், 2018

அரசும் - காவல்துறையும் மனிதாபிமானத்துடன் நடக்கட்டும்!

தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கிவிட்டது  சுற்றுச்சூழல் கேட்டை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுத் தள்ளுவதா? போராட்டம் நடத்தியவர்கள் சமூக விரோதிகளா? அவர்கள்மீது வழக்கா - சிறையா?


தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி




தூத்துக்குடி,ஜூன் 12 ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறி, காவல்துறை சுட்டுத் தள்ளியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காகப் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளுவது தவறான முடிவு - அதனைத் தமிழக அரசு மாற்றிக் கொள்ளவேண்டும் என்று செய்தியாளர்களுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரத்தில், அவர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாகி 13 பேர் உயிர் இழந்தனர். பலர் குண்டடியாலும், தடியடியாலும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக் களை நேரில் பார்த்து ஆறுதல் கூற நேற்று (11.6.2018) தூத்துக்குடிக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கி இருக்கிறது


தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கியிருக்கிறது. வரலாற்றில் படியக் கூடாத ஒரு கறை படிந்திருக்கிறது. தங்களை சுற்றுச்சூழல் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தூய காற்று - நோய் நொடி இல்லாத வாழ்க்கை இவைகளைப் பெறவேண்டும் என்பதற்காக முயற்சித்து அதற்கு எத்தனையோ முறை நீதிமன்றங்களாலும், பசுமைத் தீர்ப்பாயங்களாலும் தடுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது அது  முழுமையாகப் பாதுகாப்புடன் நடப்பதற்கு மாற்று வழிகளை சொல்லவேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து, மக்கள் தொடர்ந்து 100 நாள் களாகப் போராட்டம் நடத்தியபொழுது, அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, கடைசியில் துப்பாக்கிப் பிரயோகம் வரையில் சென்றிருப்பது, இதுவரையில் தமிழகம் காணாத ஒரு மிகப்பெரிய அவலமாகும், கண்ட னத்திற்குரியதாகும்.

காவல்துறையின் நடவடிக்கை


விரும்பத்தக்கதல்ல - கண்டனத்திற்குரியது


அதில் இறந்தவர்கள் 13 பேர் என்ற பட்டியல், ஒரு சோகத்தை இந்த நகரத்தில் உருவாக்கியது மட்டுமல் லாமல், இவ்வளவு பெரிய துப்பாக்கிப் பிரயோகம் தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்றிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல. உங்கள் நண்பன் என்று இதுவரையில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய

காவல்துறை - மக்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டிய அளவிற்கு வந்தது மிகப்பெரிய கேடு - அது விரும்பத்தக்கதல்ல - கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மக்கள் அச்சத்தின்


பிடியில் உள்ளனர்!


ஒரு ஜனநாயகத்தில் தங்களுடைய நியாயமான கருத்துகளை எடுத்து வைப்பதற்கு உரிமை உண்டு. அதேநேரத்தில், அவர்கள் வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனைக் கண்டிப்பதற்கு இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்பட்ட, காசி போன்ற இடங்களில், வடமாநிலங்களில், வெளிநாடுகளில் கூட இத்தனை உயிர்களைப் பலி வாங்கக்கூடிய சூழல் இல்லை. அதைவிட இன்னும் கொடுமை, 20 பேர்களுக்குமேல் குண்டடிபட்டு, தடியடிபட்டு பாதிக்கப்பட்டு நோயாளிகளாக இருக்கின்றவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் பேசவே பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு அச்சத்தின் பிடியில் அவர்கள் இருக்கிறார்கள்.

அழுதுகொண்டே ஒரு தாய் சொன்னார், இறந்த வர்களைப் போல நாங்களும் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தால், இவ்வளவு அவதி எங்களுக்கு இல்லை. அவர்கள் உடனே இறந்து போனார்கள். ஆனால், நாங்கள் நித்தம் நித்தம் இறந்துகொண்டு இருக்கிறோம் என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, உள்ளமெல்லாம் பதறுகிறது; நெஞ்சமெல் லாம் கசிகிறது ரத்தக்கண்ணீரால்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ பணம் கொடுத்துவிட்டோம்,  பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைக்காமல், போன உயிர்களை எந்தக் காலத்திலும் மீட்க முடியாது என்கிற சூழ்நிலையில், எதற்காக அவர்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதோ, அது மீண்டும் ஏற்படக் கூடாது. எதற்காக இந்தப் போராட்டத்தினை அவர்கள் நடத்தினார்களோ, அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. அந்தப் போராட்டத்தில் சமூக விரோதி களும், விஷக்கிருமிகளும் வந்தார்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது.

அன்றாடக் கூலிகள்;


இந்த மண்ணின் மைந்தர்கள்


அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் அன்றாடக் கூலிகள்; இந்த மண்ணின் மைந்தர்கள். அப்படிப்பட்டவர்கள் யாரும் சமூக விரோதிகள் அல்ல. ஆகவே, அவர்களை சமூக விரோதிகள் என்று வழக்குப் போடுவதும், சிறையில் தள்ளுவதும் முறையற்றதாகும்.

இப்பொழுதுகூட யாராவது அவர்களை சந்தித்துவிட்டு வந்தால்,  எங்களுக்கு இப்பொழுது கிடைக்கும் இந்த சிகிச்சை கூட கிடைக்காதோ என்கிற அச்சம் இருக்கிறது என்று அவர்கள்  சொல்வதைக் கேட்டு, கண்ணீர் வடிப்பதா? அல்லது வேதனையால் துடிப்பதா? என்று எங் களுக்குத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் இதுவரையில் எப்படி நடந்திருந்தாலும், பொறுப்பேற்பதற்கு நீங்கள் தயங்கியிருந்தாலும், இருக்கின்ற உயிர்களைக் காப்பாற்றுங்கள். தூத்துக்குடி மக்களைக் காப்பாற்றுங்கள். தேவையில்லாமல், அச்சுறுத்தல்கள்மூலமாகவும் அதேநேரத்தில், அதீதமான மறைமுகமான வித்தைகள் மூலமாகவும் நீங்கள் பெருமுதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளி களுக்கு உதவக்கூடிய அளவிற்கு இந்த மக்களுடைய வாழ்வோடு விளையாடாதீர்கள் என்பதைத்தான் வேண்டுகோளாக வைத்து, இதையே மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் சொல்லுவோம்.

ரத்தக் கண்ணீர் வடிகின்ற அளவிற்கு...


நேரிலே பார்க்கவேண்டும், கொஞ்சம் அமைதி திரும்பிய காலகட்டத்தில் சென்றால்தான், களத்தில் பலியாகக் கூடிய உண்மைகள் நமக்குத் தெரிய வரும் என்கிற உணர்வினால் இன்றைக்கு வந்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அவர்களை நேரில் பார்த்தபொழுது, எந்த உணர்வோடு நாங்கள் வந்தோமோ, அவர் களைவிட மோசமான மனநிலையைப் பெறக்கூடிய அளவிற்கு, உள்ளத்தில் ரத்தக் கண்ணீர் வடிகின்ற அளவிற்கு இருக்கிறது.

அன்றாடத் தொழிலாளிகள், கல்லூரிகளில் படிக்கக் கூடியவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக் கின்ற இளந்தளிர்கள் எல்லாம் அடிபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கிக் குண்டால் காயப்பட்டவர்களை, கல்லெறி காரணமாக காயப்பட்டவர்களைப் போல காட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது கொடுமையல்லவா - உண்மைக்கு மாறானதல்லவா!ஆக, இதையெல்லாம் செய்யாமல், கொஞ்சம் மனிதநேயத்தோடு காவல்துறை நடந்துகொள்ளவேண்டும்;அரசும் நடந்துகொள்ளவேண்டும். இதில் அரசியல் பார்க்கக்கூடாது. இதில் எந்த அரசியலும் இல்லை. மனிதா பிமானம்தான் இப்பொழுது தலை யானதாக இருக்கவேண்டும்.

மக்களுக்கு உரிய நம்பிக்கைகளை அளிக்கவேண்டும்


எனவே, தூத்துக்குடி மக்கள் காப்பாற்றப் படவேண்டும். அதைவிட ஜனநாயக உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். மக்கள் உரிமைகளை மதிக்காத அரசு நீடித்ததாக வரலாற்றில் என்றைக்குமே ஒரு சம்பவம் தொடர்ந்ததில்லை. இதையும் நன்றாக நினைவுபடுத்தி, மீண்டும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஏதோ பணம் கொடுத்துவிட்டோம், தீர்ந்துவிட்டது என்று தயவு செய்து நினைக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை, மற்ற மற்ற மாற்று வழிகள், அவர்களுக்கு உரிய நம்பிக்கைகளை அளிக்கவேண்டும். அமைதி திரும்பிவிட்டது என்றால், வெளியுலகத்தில் இருக்கிற அமைதி, நகரத்தில் இருக்கிற அமைதி முக்கியமல்ல - பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் அமைதி திரும்பவேண்டும். அந்த அமைதி திரும்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி,

ஜனநாயக உரிமைகளை ஒருபோதும்


நசுக்கிவிட முடியாது!


வன்மையான கண்டனத்திற்குரிய விலையைக் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்கவேண்டிய காலகட்டத்தைத் தவிர்க்க முடியாது. ஜனநாயகத் தில் இந்த உரிமைகளை ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. இன்றைக்கு நசுக்கிவிட்டதாக மனப்பால் குடிக்கிறவர்கள், அவர்கள் நாளைக்கு கடுமையான விலையைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை - அதை மறந்துவிடக்கூடாது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

- விடுதலை நாளேடு, 12.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக