புதன், 27 டிசம்பர், 2017

தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளில்

தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘‘நினைவிடத்தில் நின்று முழங்குவோம்‘’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:



*அறியாமை இருட்டை அகற்றிய அய்யா தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் மறைந்த நாள் (24.12.1973)

*இன்று 44 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், அவர்தம் இயக்கம் - அவர் தந்த தத்துவங்கள் வீறு கொண்டு வெற்றி நடைபோடுகின்றன என்பது வியக்கத்தக்க ஒன்றல்லவா? காரணம்,

*தந்தை பெரியார் என்பவர் தனி மனிதரல்ல! ஒரு தத்துவம் - ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம்  - வரலாற்றில் என்றும் வாழும் பேரொளி! போராளி! கட்டுப்பாடுமிக்கது கருஞ்சட்டை இராணுவம்!!

*கட்சிகள் மறையும்; இயக்கங்கள் மறையா; பதவிகளுக்கு மரணம் உண்டு; இலட்சியங்கள் சாகாத சரித்திரம் படைக்கும் வற்றா ஊற்றுக்கள்!

* மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று மானுடத்திற்கு அறிவுரைத்த ஆசான் அவர்.

*‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக் காகவும் பிறக்கவில்லை’’ என்று சமுதாயப் பற்றுடன் வாழ்ந்து, மனித குலத்திற்கே தொண்டு செய்வது, சுயமரியாதையைச் சொல்லிக் கொடுப்பது, அவனது அவசியப் பணியாக வேண்டும் என்று அகிலத்திற்கும் பாடம் எடுத்த பகுத்தறிவுப் பேராசான் அவர்!

*மானுடப் பார்வையால் அவரது இலட்சியங் களுக்கு எல்லைக்கோடு கட்ட முடியவில்லை. எனவேதான் அவரது ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்‘ என்ற நிலையில் நாடு  பின்பற்றி நின்று பெருமை அடைகிறது.

* ‘ஈரோடு’ என்ற ஊரே இவரால் இன்று பேரழகும், பேரேடும் பெற்று, பெருமைக்குரியதாகி அகிலத்தின் அகலப் பார்வையால் விழுங்கப்படுகிறது!

* ‘விடுதலை’யின் வெளிச்சமும், ‘குடிஅர’சின் கோலமும், ‘பகுத்தறிவி’ன் பாங்கும் பட்டொளி வீசி பறக்க வித்திட்ட மண் அது!

* ‘பெரியாருக்கு முன்?’ - ‘பெரியாருக்குப் பின்’ என்றே இங்கே வரலாற்றுக் காலங்களும், மாற்றங்களும், மவுனப் புரட்சிகளும் காலக் கணக்கில் கருத்தோட்டம் செலுத்தவேண்டிய கட்டாயத்தை வரலாறு பெற்றுள்ளது!

* அய்யாவையும், அவர் கண்ட இயக்கத்தைப் பரப்பிட்ட, பாதுகாத்து பவனி வர உழைத்த அன்னை யர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும் அய்யா வின் அருந்தொண்டர்கள்!

அன்று எதிர்நீச்சலில் அவருடன் போர்க்களத்தில் நின்று வென்று காட்டிய விழுப்புண் ஏற்ற வீரர்களாம் எம் சுயமரியாதைச் சுடரொளிகள் எல்லாம் அவர்தம் நினைவின் அங்கங்கள் - கொள்கைச் சிங்கங்கள்!

வீரவணக்கத்தை நாம் வெற்றுச் சொற்களால் கூறவில்லை; அவர்கள் நடத்திய போரினைத் தொடர்ந்து, களங்களில் வெற்றிப் பாதையை நட்டுவிட்டுத்தான் நாம் தலையைத் தாழ்த்தி வீரவணக்கம் கூறிய வண்ணம் நேரிய பயணத்தை நெஞ்சம் நிமிர்த்தி நடைபோடுகிறோம்!

சமூக நீதிக்கான வெற்றி சட்டங்களால் உறுதி செய்யப்பட்டும், சாகாத சரித்திரம் படைக்கும் வண்ணம் உலகம் முழுவதும் சுயமரியாதைச் சூரியனின் கதிரொளிகள் காரிருளை விரட்டவும்,

ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை கள் அற்ற புதியதோர் உலகு அமைக்கும் பெரும் போரின் அடுத்தடுத்த கட்டங்களை, வென்றெடுக்கவும் விலை மதிப்பற்ற வீரர்களின் கோட்டமாம் இவ்வியக்கம் வீறுகொண்டு வெற்றி நடைபோட்டு நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் அரும் பணியில்  அவர் வழிவந்த நிலையில் முழுமை அடையும் வண்ணம் வெற்றி பெற்று அடுத்தாண்டுக்குள் நினைவிடத்தில் மலர் வளையமாய் வைப்போம் என்ற திடச் சித்தத்துடன் தொடருகிறோம் எம் தந்தை விட்ட பணியினை!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை 
24.12.2017



- விடுதலை நாளேடு,24.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக