திங்கள், 5 பிப்ரவரி, 2018

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்




தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான

இரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால்

அடுத்த கட்ட போராட்டத்தை

மாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்!

சென்னை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி



சென்னை, பிப்.5 ‘நீட்’ தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை மாணவர்கள் கையில் எடுப்பார்கள்  என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்  இன்று (5.2.2018) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால்...

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி ஓராண்டிற்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி கொண்டுவந்த இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகள் உள்பட தி.மு.க., காங் கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து ஆதரித்தன. அந்த இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால், விலக்கு தானே கிடைத்திருக்கும்.

அரசியல் சட்டப்படி இது மாநில அரசிற்கு இருக் கிற உரிமை. நீட் தேர்வைப்பற்றிய அந்த சட்டம்  நாடாளு மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டபொழுதே, விலக்குக் கோரு கின்ற மாநிலங்களுக்கு விலக்குத் தரவேண்டும் என்பது அந்த சட்டத்திற்குள் இருக்கக்கூடிய பார்லிமெண்டரி ஸ்டேண்டிங் கமிசனுடைய பரிந்துரையை உள்ளடக்கிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல,  கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு, அது யூனியன் லிஸ்ட்டுக்கே போய்விட்டது போன்று - மத்திய அரசுக்கே முழுக்க முழுக்க கல்வி உரிமை என்பது போன்று நடந்துகொண்டிருக்கிறது.

சமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கம்

98 சதவிகிதம் மாநிலக் கல்வி முறை - 1.6 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ. முறை. இதிலிருந்துதான் நாங்கள் கேள்வி கேட்போம் என்று சொன்னால், நம் பிள்ளைகள் தேர்வாகக் கூடாது - நீட் தேர்வில் தேர்வடையக்கூடாது - தமிழ்நாட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், சமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கமாகும்.

அது உயர்ஜாதிக்காரர்களுக்கும், நகர வசதியாளர் களுக்கும், இன்னுங்கேட்டால், நீட் பயிற்சி வகுப்பு என்ற பெயரால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வசதியாக ஒரு தொழிலை உருவாக்குவதற்கும் பயன்பட்டு இருக்கிறது. ஆகவே, இது கூடாது. அதனை ரத்து செய்யவேண்டும் என்பதற்காக, அந்த நீட் தேர்வை எல்லோரும் எதிர்க் கிறார்கள்.

பி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், ‘‘நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்‘’ என்று இன்றைக்குக்கூட கல்வி அமைச்சர் சொல்கிறார். ஆனால், இந்த நீட் தேர்வை ஆதரிப்பவர்கள், பி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதுதான் உண்மை.

ஆகவே, ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்றாகத் திரட்டி, இன்றைக்கு இந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் முதல் கட்டமாக, மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ஓராண்டு நீட் தேர்வு நடந்துவிட்டதால், இது ஏதோ முடிந்துவிட்டது, நிலைத்துவிட்டது என்ற எண்ணம் இருக்கவேண்டிய அவசியமில்லை.

21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம்

நுழைவுத்தேர்வை எதிர்த்து, 21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வைரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு. இன்னும் அந்த சட்டம் அப்படியே இருக்கிறது.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீட் தேர்வு விலக்குக் கோரியும், அதேபோல, மருத்துவக் கவுன்சிலை நீக்கிவிட்டு, தேசிய மருத்துவத் தேர்வாணையம் என்று ஒன்றை உருவாக்குகின்ற மசோதா நிறைவேற்றப்படக் கூடாது - அது கைவிடப்படவேண்டும். அதன்மூலம், மருத்துவர்களின் உரிமை, மாநிலங்களின் உரிமை, சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.



தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும்

மூன்றாவது கோரிக்கை, உயர்மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும் என்பது மிக முக்கிய தீர்மானமாகும்.

அதேபோல, அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்லூரியில், 50 சதவிகித இடங்கள் வழங்கவேண்டும் போன்றவைகளையெல்லாம் தீர்மானங்களாக நிறைவேற்றி, அதனையொட்டி இன் றைக்கு முதல் கட்டப் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இது அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற போராட்டம்.

வருகிற 10 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ அமைப்புகள், மாணவப் பிரதிநிதிகள் கூடி, மேற்கண்ட நிலையை வலி யுறுத்த உள்ளார்கள். இதனைப் பெற்றோர்களுக்கும் தெளிவாக்கவேண்டும்; அரசினருக்கும் தெளிவாக்க வேண்டும் என்பதற்காக போராட்டங்களை மேற்கொள்ள  இருக்கிறார்கள்.

இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது

செய்தியாளர்: ஒருபக்கம் தமிழக அரசு நீட் தேர்வு விலக்குக்கோரி இரு மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், மறுபுறம் 412 பயிற்சி மய்யங்களை ஏற்படுத்தி, நீட் நுழைவுத் தேர்வுக்காக என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்கிறார். இந்த இரண்டு நிலைப்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: உங்கள் கேள்வி வரவேற்கப்பட வேண்டியது. பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன் என்கிற இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அதில் தெளிவாக இருக்கவேண்டும். ஒன்று, அந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லது இந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும். இதனை மக்கள் உணரக்கூடிய அள விற்கு வருகிறார்கள். அவர்களே தங்களைத் தெளிவாக்கிக் கொள்வார்கள், அதனை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்.

மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரையில் அந்த சட்டத் திருத்தங்கள் என்னாயிற்று என்று மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை.

அந்த சட்டங்களில் என்ன குறைபாடு? அல்லது ஏன் அவர்கள் மறுக்கிறார்கள் என்று ஏதாவது காரணங்களை சொல்லியிருக்கிறார்களா என்றால், அப்படி எதுவும் கிடையாது.

இந்த சூழ்நிலையில், அதை வலியுறுத்தி, அந்த சட்டத் திருத்த மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறவேண்டிய கடமை அரசியல் சட்டப்படி, தமிழக அரசுக்கு உண்டு. தமிழக அரசு முதுகெலும்போடு அதனை வலியுறுத்தவேண்டும்.

மாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டு

மூன்றாவதாக, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்பது இருக்கிறதே, இது கருணையோ, பிச்சையோ, சலுகையோ அல்ல. மாறாக, இந்திய அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற உரிமை. பொதுப் பட்டியலில் இருக்கிறது கல்வி. அப்படி இருக்கும்பொழுது, அதனை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொன்னால், மாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டே!

எனவே, இது மோடியினுடைய விருப்பத்தைப் பொறுத்ததோ, குடியரசுத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்ததோ அல்ல. அவர்கள் பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டப்படி அவர்கள் செயல்படவேண்டிய கடமை உண்டு.

அப்படியானால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, அவர்கள் அரசியல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்; தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அரசியல் சட்டத்தின் பெயரால், ஒரு  மோசடி அரசியல் நடக்கிறது என்று அதற்குப் பொருள்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

சென்னையில் கிளர்ந்து எழுந்த மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 5- ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் Ôநீட்Õ தேர்வை ரத்துசெய்யக்கோரி பெருந் திரள் ஆர்ப்பாட்டம் இன்று  (5.2.2018)  காலை 11 மணியளவில் சென்னை சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலை மையில் அனைத்துக்கட்சித் தலைவர் கள், பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.

ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட் டமைப்பின் சார்பில் 27.1.2018 அன்று சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலை வர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோச னைக் கூட்டம் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முடிவு செய்தபடி,  இன்று (5.2.2018) நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்  நடை பெற்றது.

திராவிடர் கழகம், திமுக, காங்கிரசு கட்சி, மதிமுக, சிபிஅய், சிபிஎம், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று போராட்டத்தின் நோக்கம்குறித்து உரை யாற்றினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்,  சிபிஅய் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.பாக்கியம், காங்கிரசு கட்சி மூத்த தலைவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், மாநில துணைத் தலை வர் தாமோதரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந் திய சமூகநீதி இயக்க நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின்சார்பில் ஏராளமானவர் கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றி னார்கள்.

மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

நாடு முழுமைக்கும் Ôநீட்Õ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட் டுக்கு Ôநீட்Õ தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதை மத்திய அரசு செய்யவேண்டும். மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.  இது கரு ணையோ, சலுகையோ அல்ல. அரச மைப்புச்சட்டத்தின்படி மாநில அரசின் உரிமையாகும். தமிழக அரசு குறைந்த பட்சம் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி இருக்கவேண்டும். மாநில உரிமை, ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கட்சி, ஜாதி, மத பேதங்களின்றி ஒரே உணர்வு படைத்த மேடை இது. நீட்¢ தேர்விலிருந்து விலக்கு பெறும்வரை கலையாத மேடை இது.

1.6 விழுக்காடு மட்டுமே சிபிஎஸ்இ படிப்பவர்கள். 98.4 விழுக்காடு மாண வர்கள் மாநிலப் பாடத் திட்டத்தின்படி படிக்கிறார்கள். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசமைப்புச்சட்டத்தின் படி உரிமை உள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்து ரையில் விரும்பாத மாநிலங்களக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்ப்பே இல்லாமல் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.  இந்திய மருத்துவ கவுன்சி லைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவருகின்ற திட் டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.

முதுநிலை மருத்துவக்கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நூறு விழுக்காடு இடம் அளிக்கப்பட வேண் டும். பணிபுரியும் அரசு மருத்துவர்க ளுக்கு 50 விழுக்காடு அளிக்கப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும். அடுத்து மாணவர்களின் கிளர்ச்சி தொடரும். மக்களின் போராட் டங்களைக் கொண்ட வீதிமன்றங்களைப் போல், நீதிமன்றங்களிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் வழக்கு தொடுப் போம். வெற்றி பெறுவோம். சட்டப்படி உரிமைகளை நிலை நிறுத்துவோம்

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம், திமுக, சிபிஅய், சிபிஎம், மதிமுக, காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முசுலீம் அமைப் புகள், சமூகநீதிக்கட்சிஉள்ளிட்ட பல் வேறு அமைப்புகளின் சார்பிலும் கொடி களுடன் ஏராளமானவர்கள் மக்கள் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

- விடுதலை நாளேடு,5.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக