வியாழன், 14 டிசம்பர், 2017

நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களாட்சியா?

நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களாட்சியா?

உதயசூரியனுக்கே வாக்களிப்பீர்!

ஒளி பிறக்கட்டும் - இருள் ஒழியட்டும்!!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

அதிமுக ஆட்சியின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

 

சென்னை,டிச.14தமிழ்நாட்டில்தற்போதுநடப்பது ஆளுநர் ஆட்சியே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் ஆட்சியல்ல; அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களும் அறவேயில்லை. இந்த நிலையில், உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் என்று வாக்காளர்களுக்கு ஆதாரங்களை எடுத்துக்காட்டி வேண்டுகோள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைஆர்.கே.நகர்சட்டப்பேரவைத்தொகுதி யைச் சேர்ந்த செரியன் நகர், வ.உ.சி. நகர் (கொருக்குப் பேட்டை)  ஆகிய இரு இடங்களில் நேற்று (13.12.2017) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்பது இரண்டாவதுஇடைத்தேர்தல்! இதுவரை ஒரு இடைத் தேர்தல்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்; இந்தஆர்.கே. நகரில் ஒரு வித்தியாசம் - இது இரண்டாவது இடைத் தேர்தல்; முதல் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரலில் அறி விக்கப்பட்டு, அதற்கு தடை விதிக்கப்பட்டு மறுபடியும் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.



ஏன் இரண்டு இடைத்தேர்தல்?

கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட அந்த இடைத் தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது? அதற்கான காரணம் என்ன? அந்தக் காரணங்கள் சரி செய்யப்பட்டு மறு படியும் இந்தத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடக்கிறதா என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லவேண்டும்.

அப்படிப் பதில் சொல்லாமலேயே மறுபடியும் இடைத்தேர்தல் நடக்கிறது.

வாக்காளர்களுக்குப் பண பட்டுவாடா செய்யப் பட்டது என்று காரணம் கூறிதான் ஏப்ரலில் நடக்க விருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத் தியது.

பண பறிமுதல் செய்யப்பட்டதே - அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

யார் யார் எல்லாம் பண பட்டுவாடா செய்ததற்கான பொறுப்பாளர்கள்-அவர்களிடம்கைப்பற்றியபணம் எவ்வளவு என்பது விலாவாரியாக அன்று வெளியிடப் பட்டது. ரெய்டு செய்தவர்களே வெளியிட்டார்கள்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - ரூ.13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம்

அமைச்சர்கள்:

செங்கோட்டையன் - ரூ.13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம்

வைத்தியலிங்கம் - ரூ.11 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரம்

திண்டுக்கல் சீனிவாசன் - ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்

பி.தங்கமணி - ரூ.12 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரம்

எஸ்.பி.வேலுமணி - ரூ.14 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரம்

டி.ஜெயக்குமார் ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்.

மொத்தத் தொகை: ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம்.

பண பட்டுவாடா செய்யப்பட்டதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பண பட்டுவாடா செய்தவர்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இவை எதுவும் நடக்காமலேயே, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலேயே எந்தக் காரணத்துக்காகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதோ, அந்தக் காரணம் நிறைவேறாமலேயே மறுபடியும் இடைத்தேர்தல் என்றால், இதைவிட மோசடி ஒன்று இருக்க முடியாது.

இப்படி அடிக்கடி இடைத்தேர்தல் வரவேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கத்தான் செய்வார்கள் - ஏன்? வாக்காளர்கள்கூட எதிர்பார்ப்பார்கள்; கார ணத்தை நான் சொல்ல விரும்பவில்லை - உங்களுக்கே தெரியும் (பலத்த கரவொலி, சிரிப்பொலி).

45,000 போலி வாக்காளர்களைக் கண்டுபிடித்த தி.மு.க.வின் சாதனை!

தி.மு.க. செய்த சாதனைக்கு இத்தொகுதி வாக்காளர் கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோர் நன்றி தெரிவிக்கவேண்டும்; பாராட்டவும் வேண்டும்.

இந்தத் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர் களை தி.மு.க. கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. இந்தியாவிலேயே இத்தகைய சாதனையைச் செய்தது தி.மு.க.தான் (கரவொலி!).

தி.மு.க.வைப் பாராட்டிய உயர்நீதிமன்றம்

இன்றுகூட சென்னை உயர்நீதிமன்றம் தி.மு.க.வைப் பாராட்டியுள்ளது. கடைசியாக 5,000 போலி வாக்காளர் கள் இத்தொகுதியில் இருப்பது குறித்து தி.மு.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதனை ஏற்று 2,500 வாக்காளர்களை உடனே நீக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய கடமையைச் சரிவர செய்திருக்கிறது தி.மு.க.



செத்தவர்கள் உயிர் பெறுவதும், உயிருள்ளவர்கள் சாகடிக்கப்படுவதும் நமது ‘புண்ணிய’ பூமியில் நடக்கும் தேர்தலின்போதுதான்.

எதற்காகப் பிரச்சாரம் செய்கிறோம்?

நாங்கள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளோம் என் றால், அது தி.மு.க.வுக்காகக்கூட அல்ல- நாட்டு நலனுக் காக - வளர்ச்சிக்காக - அதனை தி.மு.க. செய்யும் என்பதால்தான் - இந்தத் தி.மு.க. ஆதரவுத் தேர்தல் பிரச்சாரம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் கட்சி தி.மு.க. - தாய் மண்ணுக்காகப் பாடுபடும் கட்சி தி.மு.க.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?

நன்மைகள் என்ன?

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது என்ன? என்பதை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டாமா?

ஊழலைத் தவிர இந்த ஆட்சி செய்தது என்ன? இந்த ஆட்சியை  வீட்டுக்கு அனுப்பவேண்டாமா?

ரேஷன் கடை என்று பெயருக்கு இருக்கிறது. எது கேட்டாலும் இல்லை, இல்லை என்ற பாட்டுதான். அம்மா உணவகங்களும் மூடப்படும் நிலைதான். அவர்களுக்குள் பங்காளி சண்டை நடந்துகொண்டு இருக்கிறதே தவிர, ஆட்சியைப் பயன்படுத்தி மக் களுக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணம் இல்லை; மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டியதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இல்லை.

நடப்பது கவர்னர் ஆட்சியா?

உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றார் கலைஞர். மாநில சுயாட்சிக்கு ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருந்தால் மட்டும் போதுமா?

இப்பொழுது தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா? அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியா? கவர்னர் ஆட்சியா? என்ற நிலைதானே! மறுக்க முடியுமா? புரோகிதர் ஒருவர் தமிழ் நாட்டுக்கு ஆளுநராக வந்திருக்கிறார். (பன்வாரிலால் புரோகித்)

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கெல்லாம் செல்லுகிறார் கவர்னர் - அதிகாரிகளை அழைக்கிறார். ஆய்வு நடத்துகிறார். இதற்குமுன்பு இப்படியெல்லாம் நடந்ததுண்டா?

புயலாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கவர்னர் செல்லுகிறார் - மக்களை சந்திக்கிறார்; நேராக டில்லிக்குச் செல்லுகிறார். நான்கு மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறார். தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைச் செய்யவேண்டியவர் கவர்னரா? முதலமைச்சரா? எதற்கெடுத்தாலும் “அம்மா, அம்மா’’ என்கிறார்களே,  அந்தம்மா முதலமைச்சராக இருந்தால் ஆளுநர் இப்படியெல்லாம் ஆட்டம் போட முடியுமா? தலைமைச் செயலகத்தில்தான் ரெய்டு நடந்திருக்குமா?

கவர்னருக்கு ஆளும் கட்சி சர்டிபிகேட்!

இப்பொழுது என்ன நடக்கிறது? கவர்னர் நன்றாகத்தானே செயல்படுகிறார் என்று சபாஷ் போடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியைப் பொருட்படுத்தாமல், ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதுபற்றிக் கவலைப்படுவதில்லை. இந்த நிலையில், இந்தத் தொகுதியில் ஆளும் கட்சிக்காரர் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பினாலும் என்ன பிரயோசனம்? கவர்னர்தானே ஆளப் போகிறார்? நடப்பது சரணாகதி மந்திரி சபைதானே!



‘நீட்’டைத் தடுக்காதது ஏன்?

இந்தியாவிலேயே 29 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது கலைஞர் ஆட்சி. வேறு எந்த மாநிலத்தில் இந்த சாதனை நடந்திருக்கிறது? ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. தந்தை பெரியார் போராடி, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அந்த நிலை ஒழிக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள்

மாவட்டந்தோறும் கலைஞர் ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து கிராமப்புற ஏழை, எளிய மக்களிடமிருந்து டாக்டர்கள் உருவாக முடிந்தது.

இன்றைய நிலை என்ன? மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்த வாய்ப்பை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டதே!

‘நீட்’டை ஜெயலலிதா ஆதரித்தாரா? இல்லையே! ‘நீட்’டை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதே - அதற்கு மத்திய அரசு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை? மூச்சுவிடவில்லையே அ.தி.மு.க. அரசு! முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்.சை நேரில் பார்த்து வேண்டுகோள் வைத்தோமே!

வாக்களிக்கும்முன் அனிதாவை நினையுங்கள்!

அனிதாக்கள் தற்கொலைக்கு விரட்டப்பட்டதற்குக் காரணம் இந்த ‘நீட்’தானே? வாக்களிக்கச் செல்லும்பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதாவின் முகம் உங்கள் நினைவில், கண்களில் தோன்ற வேண்டாமா? சமூகநீதிக்குக் குழிவெட்டிய மத்திய பி.ஜே.பி. அரசுக்கும், அதற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கும் வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பிக்கவேண்டாமா?

சட்டம் - ஒழுங்கு நிலை எந்த நிலையில்?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலை என்ன? திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் - இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு அய்ந்தாண்டுகள் கடந்த நிலையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையே! கடைசியாக சி.பி.அய்.யிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதே. இதுதான் அ.தி.மு.க. அரசின் திறமைக்கு அடையாளமா?

உங்கள் வீட்டில் விளக்கு எரிய என்ன செய்யவேண்டும்?

எனவே, இருள் நீங்கிட, உதயசூரியன் தேவைப்படுகிறான். 21 ஆம் தேதி காலை வாக்குச் சாவடிக்குள் செல்லுங்கள் - பெட்டி மறைவான இடத்தில் இருக்கும். வாக்களிக்கும் இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு எதிர்த் திசையில் இருக்கும் பொத்தானைக் கொஞ்சம் அழுத்தி அழுத்துங்கள். விளக்கு எரியும்; அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும். வெளிச்சம் பரவும் - இருள் அகன்று ஓடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.



====================


இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

ஓ.எஸ்!

இ.பி.எஸ்.ஸாக இருந்தாலும் சரி, அல்லது ஓ.பி.எஸ்.ஸாக இருந்தாலும் சரி டில்லி ஆணையிட்டால், எல்லாம் ‘‘ஓ.எஸ்.’’தான்; ‘நோ’ என்ற பேச்சுக்கே இடமில்லை!

 

====================


இடைத்தேர்தலா? எடைத்தேர்தலா?

இது இடைத்தேர்தல் என்கிறார்கள்; அதைவிட மக்கள் எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் இது. ஆளும் கட்சி என்ன செய்திருக்கிறது இந்தத் தொகுதியில்? எந்த வளர்ச்சிப் பணியைச் செய்து கொடுத்திருக்கிறது என்று வாக்காளர்கள் எடை போட்டுப் பார்க்கக் கிடைத்திட்ட நல்லதோர் வாய்ப்பு இது.

இடைத்தேர்தலை எடை போட்டுப் பார்த்து நீங்கள் ஆண்டது போதும் என்று கூறி, ஆளும் கட்சிக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது.

 

====================


சின்னம் முக்கியமா?

தேர்தலில் கட்சிச் சின்னம் முக்கியம் என்ற கருத்து உலா வருகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால், தங்களுக்கு வெற்றி உறுதி என்று ஆளும் தரப்பில் மார்தட்டப்படுகிறது.

இதே ஜெயலலிதா அம்மையார் இரட்டை இலை சின்னத்தில் நின்று பர்கூரில் தோற்கவில்லையா? எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோதே 1980 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வி அடையவில்லையா? அப்பொழுது இரட்டை இலை சின்னத்தில்தானே அ.தி.மு.க. போட்டியிட்டது?

சின்னம்தான்வெற்றிக்குத்தேவையானதுஎன்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது தான்.

====================


கொருக்குப்பேட்டைப் பகுதி எத்தகையது?

இந்தக் கொருக்குப்பேட்டைப் பகுதி தொழிலாளர் கள் அதிலும் குறிப்பாக நகர சுத்தித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன் றிய பகுதியாகும். சிங்காரவேலர், ஜீவரத்தினம் போன்றவர்கள் கால் பதித்த பகுதி. எலமந்தா என்ற ஆதி ஆந்திரா குடும்பத் தோழரை, மானமிகு கலைஞர் அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பின ராக அமர்த்தி மகிழ்ந்தார். உங்கள் வாக்கு உதய சூரியனுக்கே என்பதில் அய்யமில்லை. உதிக்கட்டும் உதயசூரியன், விலகி ஓடட்டும் காரிருள்.



- விடுதலை நாளேடு,14.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக