வியாழன், 21 டிசம்பர், 2017

நமது இனமானப் பேராசிரியர் நூறாண்டும் கண்டு நீடு வாழ்க வாழ்கவே!

ஒரு மாலைப் பொழுதில் உயர் எண்ணங்களின் ஊர்வலம்!

மின்சாரம்
"நாம் திராவிடர்கள் ஆம், நாம் திராவிடரே! இந்த உணர்வுதான் நம்மை தலை தூக்கச் செய்யும் - நமது உரிமைகளை மீட்டுத் தரும். திராவிடன் என்றால் அதில் தமிழர் வாழ்வும், உரிமையும் அடங்கியதுதான்.

திராவிடர் என்றால் நாம் மூத்த குடிகள். நாம் திராவிடர் என்பதை மறந்து விட்டால் நாம் பெற்றது எல்லாமே பறிப் போய்  விடும். இன்றைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி திராவிடர் இனம் தலை தூக்கக் கூடாது என்பதை இலட்சிய மாகக் கொண்டு மக்களின் மனதைத் திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிக் கொண்டா லும் அவர்களின் உள் மனச் சிந்தனை வேறுவிதமாக உள்ளது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுருக்கமாக அதே நேரத்தில் சுருக்கென்று நெஞ்சில் தைப்பது போலப் பேசினார் இனமானப் பேராசிரியர்.

இதனை தனது பிறந்த நாள் பெருந் செய்தியாக நமது இனமானப் பேராசிரியர் அறிவித்ததாக நாம் எல்லோரும் கருத வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன பொழுது பலத்த கரவொலி.

திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் 96ஆம் ஆண்டு பிறந்த நாளும், அதனையொட்டி பழி வாங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமை முழக்கக் கருத்தரங்கமும் நடைபெற்றன. 60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மூன்று நூல்கள் மறுபதிப்பாக திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக இவ்விழாவில் வெளியிடவும் பட்டது. எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் நூல்கள் வெளியீடு என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனி முத்திரைச் சிறப்பாகும்.

நூல்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டுமானால் இத்தகு நூல்கள் வெளிவர வேண்டியது அவசியமல்லவா?

விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாளவன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் ஆகியோர் எடுத்து வைத்த கருத் துகள் இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான சூரணங்கள்.

தோழர் முத்தரசன்

தோழர் முத்தரசன் கூறினார். நாம் யார்? ஆண்டாண்டுக் காலமாய் மனுதர்மத்தின் பெயரால் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்த மக்கள்.

கல்வி கற்பதே குற்றம் என்று ஆக்கப்பட்டவர்கள். இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்பட்டது. தேவைப்படுகிறது. இதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்ட தற்கும் காரணம் தந்தை பெரியார் அல்லவா?  திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை இது! இதனை யார் தான் மறுக்க முடியும்? என்று உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கூறினார்.

அவர் அடையாளம் காட்டிய கருத்தும், தகவலும் மிகவும் முக்கியமானவை. இன்றைக்கு மத்தியில் மோடி தலைமை யிலானது அசல் மனுதர்ம ஆட்சியே! அதனை நாம் மறந்து விடக் கூடாது என்று சொன்னது கவனிக்கத்தக்கதாகும். ஏதோ மேம்போக்காக தோழர் முத்தரசன் கூறவில்லை வரலாற்று களை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தினால் அதன் உண்மை வெளிச்சமாகவே தெரியும்.

மண்டல் குழுப் பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி -  வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு தருவதாக சமூக நீதிக் காவலராக இருந்த பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்திலே அறிவித்தபோது அதுவரை வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பிஜேபி, தன் ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்ததே! 27 ஆண்டுகளுக்குமுன் நமது கண்ணெதிரே நடந்த இந்த அநீதியை நினைவுபடுத்திக் கொண்டால் தோழர் முத்தரசன் அவர்கள் அடையாளப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி  வகையறாக்களின் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் தாத்பரியம் என்ன என்பது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே பளிச் சென்று தெரியுமே!96ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பேராயர் எஸ்றா. சற்குணம் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (சென்னை பெரியார் திடல் --18.12.2017)


இந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இந்திரஜித்குப்தா அவர்கள், மண்டல் குழுப் பரிந்துரை அமல் செய்யப்படுவது தொடர்பான விவாதத் தின்போது (6.9.1990) நாடாளுமன்றத்தில் பேசியதை மிகவும் பொருத்தமாக எடுத்துக் காட்டினார் இதோ இந்த உரை:

"* 52 விழுக்காடாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வருக்கு தற்பொழுது வழங்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடே போதாது.

*  இடஒதுக்கீட்டை எதிர்க்கின்ற ஒரு 15லிருந்து 17 விழுக்காடு மக்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என வீட்டோ செய்வதற்கு அனுமதிக்க முடியாது.

* முதன் முறையாக, முதல் கட்டமாக இந்த இடஒதுக் கீட்டை வெறும் 27 விழுக்காடாக துவங்கும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டிலும் ஒரு பொருளாதார அளவுகோலை திணிப்பது சரியல்ல என எனது கட்சி கருதுகிறது.

* இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விடும் என்ற வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

* இடஒதுக்கீட்டை எதிர்த்து பல இளம் பெண்கள், தகுதி செத்து விட்டதாக பாடைகட்டி ஊர்வலம் நடத்துகின்றனர். திறமை இறந்து விட்டதாக சிதைக்கு தீ மூட்டுகின்றனர். எங்கள் வருங்காலக் கணவர்கள் வேலையில்லாத் திண்டாட் டத்தால் தவிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்கின்றனர். ஆனால், இப்பொழுதே கோடிக்கணக்கான இளைஞர்கள் எந்தத் தவறும் செய்யாமலே வேலையில்லாமல் இருக் கின்றனர். அவர்களைப் பற்றி இந்த இளம் பெண்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் தங்களது வருங்காலக் கணவர்களுக்கு வேலை கிடைக்காது என கவலைப்படுகின்றனர். இது என்ன சமூகப் பார்வை? கல்வி, வேலை வாய்ப்பை இதுவரை அனுபவித்து வந்தவர்கள் சமூக உணர்வின்றிப் பேசலாமா?"

தோழர் இந்திரஜித் குப்தாவின் இந்த நறுக்குத் தெறித்த உரையைத் தான் மிகப் பொருத்தமாக எடுத்துகாட்டினார் தோழர் முத்தரசன் அவர்கள்.எம்ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் ரூ.9000க்கு மேல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற ஆணை பிறப்பித்தஅந்தத் தருணத்திலேயே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அந்த ஆணை ஒழிக்கப்படும் வரை பல களங்களை உருவாக்கியது திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி. வீரமணி  அவர்களும் ஆவார்கள்.

அந்த ஒருங்கிணைப்பில் கடைசி வரை கல்தூண்போல் உறுதியாக நின்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இந்த இடத்திலே நினைவூட்டுகிறோம்.

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளும் இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற நாளும் ஒன்றாக இருந்ததால், அது குறித்த அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்தார் முத்தரசன்.

குஜராத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பிஜேபி பெற்ற இடங்கள் குறைவுதான். உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெரும் சரிவை பிஜேபி  சந்தித்தவரையில்  என்று முகத்தில் அறைத்தது போல் பதிவிட்டார் தோழர் முத்தரசன்.

மற்றொரு முக்கிய கருத்துண்டு. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால் கொலை வரை கொண்டு செல்லும் பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கான கருத்தாக்கம் அது.

பார்ப்பனக் குடும்பங்களில் ஜாதி மாறி திருமணமும் ஒரு  சில இடங்களில் நடப்பதுண்டு. ஆனால் அவர்கள் இந்த விடயத்தில் எப்படி  நடந்து கொள்கிறார்கள்? அடிதடியில் இறங்குகிறார்களா? கத்தியைத் தூக்குகிறார்களா? சில நாட்கள் அமைதியாக இருந்து பின்னர் அடங்கிப் போய் விடவில்லையா?பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வராத ஜாதி ஆவணக் கோபம் பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தவர்களே (அட சூத்திரர்களே) உங்க ளுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது என்பதுதான் தோழர் முத்தரசன் கேட்ட வினாவுக்கான விளக்கமாகும்.

எழுச்சித் தமிழரின் "இலக்கண சுத்தமான" கருத்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களின் உரை ஆற்றோட்டமாக அமைந்திருந்தது. 96ஆம் ஆண்டு காணும் இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் சிறப்பை சிலாகித் தார். தன்னைவிட வயது குறைந்த கலைஞர் அவர்களைத் தலைவராக அன்பழகனார் ஏற்றுக் கொண்டது எப்படி?

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து கழகத்தைக் காப்பாற்றிய கலைஞருக்குத் துணை நின்றவர் பேராசிரியர்.

'கலைஞரைப் போல உழைக்க முடியாது; கலைஞரைப் போல பேச முடியாது; கலைஞரை போல எழுத முடியாது; கலைஞரைப் போல தந்தை பெரியாரின் கருத்துக்களை வேறு யாராலும் எடுத்துக் கூற முடியாது, அதனாலே என்னைவிட ஒரு வயது குறைந்த கலைஞரை என் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்ன பேராசிரியரின் பெருந்தன்மை யையும், கழகத்தைக் கட்டிக் காக்கும் கடமை உணர்வினையும் துலாக் கோலில் நிறுத்திப் பார்ப்பது போல் துல்லியமாக எடுத்துரைத்தார் எழுச்சித் தமிழர். கலைஞர் அவர்களிடம் பேராசிரியர் கொண்டிருந்த தோழமை உணர்வினை வெறும் பாராட்டுக்காக நான் எடுத்துக் கூறவில்லை - நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது என்று சொன்னதுதான் எத்தனைத் துல்லியம்!

மாணவனாக இருந்த காலத்திலிருந்தே பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், வியாழன் தோறும் நடை பெறும் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டங்களில் எல்லாம் பார்வையாளராக இருந்து தன்னைத் தானே தந்தை பெரியார் அவர்களின் கொள்கையில் செதுக்கிக் கொண்ட மலரும் நினைவுகளையும் பதிவு செய்தார்.

திராவிடர் கழகத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டையும் தோலூரித்தார் தொல். திருமா வளவன் ஆரிய எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியத்தால் என்ன பலன்? ஆரிய எதிர்ப்பினை கொள்கையாக உடையது தான் திராவிடம்.

ஆரிய எதிர்ப்பு இல்லாத தேசியம் தமிழர்களுக்கு எதிராகத் தான் திரும்பும் - ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு  எதிராகத்தான் திரும்பும் - ஜாதி ஒழிப்பிலும் அவர்களுக்குத் தெளிவு ஏற்படுவதில்லை.

இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில் 70 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெறும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது மிகப் பெரிய அநீதி.

அந்த 27 சதவீத இடஒதுக்கீடும் முழுமையாக அளிக்கப் படுவதில்லை. 50 சதவீதத்துக்குமேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.
இடஒதுக்கீடு என்பது நீதித் துறையிலும் கொண்டு வரப் பட வேண்டும்; அதுவரை நம் போராட்டமும் தொடர வேண்டும்.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் வேலை வாய்ப்பு என்பது வெறும் 15 விழுக்காடுதான் 85 சதவீத இடங்கள், வேலை வாய்ப்புகள் தனியார் துறைகளில்தான் உள்ளன.

பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்த்துறைக்குத் தாரை வார்க்கவே ஒரு தனித்துறை மத்திய அரசிடம் இருக்கிறது அதுதான் Dept of Dis Investment பொதுத்துறையின் பங்கு களைத் தனியாருக்கு விற்றுக் கொண்டு இருக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் திராவிடர் கழகம் வீதியில் இறங்கிப் போராடி வருகிறது. சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பதவி உயர் விலும், இடஒதுக்கீடு என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் எழுச்சித் தமிழர் விரிவாக எடுத்துரைத்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத் திலும் பின் தங்கியவர்கள்தான் ஆனாலும் அவர்களே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுடன் கை கோப்பது தான் விபரீதம். எதிரிகளின் வில்லுக்கு அம்பாகப் பயன்படலாமா?

ஜாதி, மத வெறியைத் தூண்டி அரசியல் நடத்துபவர் களுக்குப் பலியாகி விடலாமா? வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்த போதுகூட அங்கும் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அவருக்கு எதிராகத் தூண்டி விடப்பட்டனர். தோழர் முத்தரசன் சொன்னதுபோல ஜாதி மாறிக் காதல் செய்தால் வன்முறை தாண்டவமாடுவது சரியானதுதானா? என்ற வினாவை எழுப்பினார் திருமா. அவர்களின் இந்தக் கருத்தினை விழாவுக்குத் தலமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வழிமொழிவது போல கருத்தினைப் பதிவு செய்தார்.

குஜராத்திலே சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை ஏவி விடப்பட்டபோதுகூட மதவாத சக்திகளுக்குக் கருவி யாகப் பயன்படுத்தப்பட்டது மலைவாழ் மக்கள் என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆதிக்கப் பிரிவினர் எப்படி எல்லாம் காய்களை நகர்த்திக் குளிர் காய்கின்றனர்.

மதச் சார்பின்மை, சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பிரச்சாரம், களப் பணி, போராட்டங்களில் ஈடுபட வேண்டும் குறிப்பாக திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பணியில் ஈடுபட்டே வருகின்றன. மற்றவர்களும் ஒருமுகமாக இணைந்து போராடும்போது களமாடும்போது இதற்கான தீர்வு கிடைக்கும் எனும் பொருளில் எழுச்சித் தமிழர் அடுக்கடுக்கான கருத்துக்களை அழகாகப் பதிவு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை உரையில் நாட்டில் வகுப்புவாரி உரிமை கடந்து வந்த பாதையினை நேர்த்தியாக எடுத்துக் கூறினார். நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமை ஆணை செயல்படுத்திய வரலாற் றைத் தொடங்கி மண்டல் குழுப் பரிந்துரையின் நெடிய வரலாறு வரை நிகழ்ச்சி நிரல் போல விளக்கினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் காகாகலோல்கர் நடத்து கொண்ட நேர்மைற்ற செயலை எல்லாம் விரிவாக விளக்கி னார் ஆணையத்தின் அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டு, அதற்கு முரணாக பிரதமர் நேருவுக்குத் தனியாகக் கடிதம் எழுதிய அந்தப் பார்ப்பனிய அறிவு நாணயமற்ற செயலை அம்பலப்படுத்தினார்.

மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்த வைக்க 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் நடத்திய வரலாற்றைக் கூறினார்.

இரண்டாவது பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்திற்குத் தலைமை வகித்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) அவர்களையும், குழு உறுப்பினர்களையும் பெரியார் திடலுக்கு அழைத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச் சியில் பி.பி. மண்டல் சொன்ன வார்த்தைகளையும் எடுத்துக் கூறினார்.

எங்களால் அரசுக்கு அறிக்கையைத்தான் அளிக்க முடியும் அதனைச் செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் கையில் தானிருக்கிறது. திராவிடர் கழகம்தான் அதற்கான வழி முறைகளை வகுக்க வேண்டும் என்று பி.பி. மண்டல் சொன்னதையும் எடுத்துச் சொல்லத் தவறவில்லை திராவிடர் கழகத் தலைவர்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கேகூட திராவிடர் கழகம் மாநாடு நடத்தியதுண்டு. சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய அந்த மாநாட்டில் தேவராசு அர்சு அவர்களும் பங்கு கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். தாழ்த்தப் பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர் என்றார்.

எவ்வளவோ அரும்பாடுபட்டு, போராடி பெற்ற பிற்படுத் தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு - அது அமலுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகியும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்ற சோகத்தை எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர்.

குரூப் ஏ பிரிவில் 17 விழுக்காடு, குரூப் பி பிரிவில் 14 விழுக்காடு, குரூப் சி பிரிவில் 11 விழுக்காடு, குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் 24 மத்திய அமைச்சகங்களின் பணிகளில் உள்ளதாக  மத்திய அரசின்  பணியாளர் பயிற்சித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி பிரிவில் 15 விழுக்காடு, குரூப் சி பிரிவில் 17 விழுக்காடு, குரூப் டி பிரிவில் 18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசின் 57 அமைச்சகங்கள், துறைகள், அரசமைப்பு அதிகாரம் பெற்ற துறைகளுக்கான பணிகளில் உள்ளதாக மத்திய அரசின்  பணியாளர் பயிற்சித்துறை தகவல் 1.1.2017 அன்று வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர்களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்படவில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத் தப்பட்டவர்களாக உள்ளனர்.

மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24இலும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும் மண்டல் பரிந்துரை யின்படி, பிற்படுத்தப்பட்டவர்களுககான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, கடந்த 24 ஆண்டுகளாக அரசமைப்பை செயல் படுத்தவேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவல கம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில்  நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசின் துறைகளில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பயன்பெறாதநிலை இருந்து வருகிறது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகள் தனியார்த் துறைக்கு மாற்றப்படுவதிலும் "சமூக நீதி" பிரச்சினையும் உள்ளடக்க மாகவே உள்ளது. தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டால் அங்கு இடஒதுக்கீடு கிடையாது அல்லவா? இடஒதுக்கீடுக்கு எதிராக திரை மறைவில் சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன என்று விளக் கமாக கருத்துகளையும் தகவல்களையும் அடுக்கடுக்காக சொன்னார் ஆசிரியர். (முழு உரை பின்னர்).

மாலை 6.30 மணிக்குத் தொடங்கப்பட்ட கூட்டம் இரவு 8.30 மணிக்கு நிறைவுற்றது. மாலை 6 மணிக்கே மக்கள் திரள் மண்டபத்தில் கூடி விட்டது. பொதுக் கூட்டம் அல்லாமல் கருத்துச் செறிவு மழையாக வீசும் பல்கலைக் கழக வகுப்பறை போல அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.  ஆம் ஒரு மாலைப் பொழுதில் நடைபெற்ற உயர் எண்ணங்களின் ஊர்வலம் என்று சொன்னால் அது மிகையாகாது ஆகவே ஆகாது!

(96ஆம் அகவை காணும் இனமான பேராசிரியர்

க. அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை கழகத் தலைவர் தெரிவித்தவை முதல் பக்கம் காண்க).


- விடுதலை நாளேடு, 19.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக