வியாழன், 14 மே, 2015

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?

மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் அவர்கள் கட்டுரை  -விடுதலை ஞாயிறு மலர் 28.3.15ல் வெளியானது

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?
·         19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் அன்றைய மவுண்ட்ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் (Hotel and  Mess) பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள்.
·         பிராமணரல்லாத தமிழர்கள் - அதாவது பஞ்சம, சூத்திர மாணவர்கள் விடுதிகளில் தங்கிப்படிக்க அனுமதி கிடையாது.
·         அடையாளம் தெரியாத நபர் என்று ஒருவரைக் குறிப்பிடுவது போல் பிராமணரல்லாதார் என்பது தான் தமிழரின் அடையாளமாக இருந்தது.
·         1915 - ஆம் ஆண்டில் தமிழர்கள் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே படித்திருந்தனர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழன் இப்படித்தான் வாழ்ந்தான்.
·         2000 ஆண்டு காலமாக நீடித்த இந்த பிறவி பேதத்தை மனித நேயமற்ற கொடுமையை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவத்தை உருவாக்கவே திராவிடர் இயக்கம் தோன்றியது. தந்தை பெரியார் போராடினார்; வெற்றிவாகை சூடினார்.
·         தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் எனும் கொடையால் கன்னித்தமிழ் இன்று கணினித்தமிழாக வளர்ந்திருப்பதும் சுட்டுரையில் (டுவிட்டர்) இந்திய அளவில் # தமிழ் வாழ்க முதலிடம் பிடித்துள்ளதும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பற்றியதும், திருக்குறளை உலகறியச் செய்திருப்பதும், தமிழ் இன்று செம்மொழியாக பெருமைப்படுத்தப் பட்டிருப்பதும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளே.
·         1) தமிழ் பெண்கள், 2) தாழ்த்தப்பட்ட தமிழர்கள், 3) பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் என வகைப்படுத்தி தனித்தனியே அவரவர்கள் வளர்ச்சியைக் கவனித்தால் திராவிடர் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் போராடிய பின் தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
·         தமிழும், தமிழரும் வளர்ந்துள்ளனர் என்பதற்குத் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழே தக்க ஆதாரமாகும். 100 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழில் தமிழ் தமிழாக இருக்காது. அழைப்பிதழில் ஒரு தமிழர் கூட பட்டதாரியாக இருக்கமாட்டார். இன்றுள்ள அழைப்பிதழில் தமிழன் உயர்படிப்பும், உயர் பதவியும் பெற்றிருப்பதைக் காணலாம்.
·         தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழரை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தியது திராவிடர் இயக்கம்.
·         லோக குரு குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது தமிழன் நீதிபதி ஆசனத்தில் உட்காரும் நிலைக்கு உயர்த்தியதும் திராவிடர் இயக்கமே!
·         இன்றுள்ள தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஆண்களை விட பெண்கள் அதிக சதவீதம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெறுகின்றனர். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அந்த மாணவிகள் அளிக்கும் பேட்டியே பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதற்குத் தக்க ஆதாரமாகும்.
·         ஆண்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் இன்று பெண்களுக்குக் கிடைத்துள்ளன. தமிழ் வாழ்கின்றது, தமிழன் வாழ்கின்றான், தமிழ் வளர்ந்துள்ளது, தமிழனும் வளர்ந்துள்ளான். பெரியாரின் விருப்பமும், போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. வாழ்க பெரியார்.-மு.ந.மதியழகன் (சென்னை-33)

-                -விடுதலை ஞாயிறு மலர் 28.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக