புதன், 10 ஏப்ரல், 2024

தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை


சொன்னதை செய்வதும் – சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!

விடுதலை நாளேடு
Published April 10, 2024

நடக்கவிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும் – எதேச்சதிகாரத்திற்குமிடையே நடக்கும் தேர்தல்!
‘ஒரே தேர்தல்’ என்று மோடி கூறுவது – இதுதான் கடைசி ஒரே தேர்தல் என்று பொருளாகும்!
சொன்னதை செய்வதும் – சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை

‘எள் என்று சொன்னால், எண்ணெய்யாக’ நிற்கக்கூடிய அமைச்சர் மா.சு. அவர்கள்

சென்னை, ஏப்.10 நடக்கவிருக்கும் தேர்தல் ஜனநாயகத் திற்கும் – எதேச்சதிகாரத்திற்குமிடையே நடக்கும் தேர்தல்! ‘ஒரே தேர்தல்’ என்று மோடி கூறுவது – இது தான் கடைசி ஒரே தேர்தல் என்று பொருளாகும்! சொன் னதை செய்வதும் – சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தென்சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை

நேற்று (9.4.2024) இரவு 8 மணியளவில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வருகின்ற 18 ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் பெருமைப்படக்கூடிய சைதாப்பேட்டை உள்பட பல அருமையான தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட்பாளராகவும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட அவர்களால் உருவாக்கப்பட்டு, சிந்திக்கப்பட்டு, செயல் வடிவம் கொடுக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் சார்பாகவும் நிறுத்தப்பட்டு இருக்கின்ற வேட்பாளர் அன்பிற்குரிய எங்கள் ஆற்றல்மிகு தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களை ஏன் ஆதரிக்கவேண்டும்? ஏன் வெற்றி பெற வைக்கவேண்டும்? என்பதை விளக்குவ தற்காக வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றிதான் என்பதற்கு அடையாளமாக இங்கே திரண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
இங்கே நம்முடைய அமைச்சர் அவர்கள் ஒரு செய்தியை நினைவுபடுத்தினார்.

கடந்த தேர்தலில் இரண்டு லட்சம்
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நம்முடைய கொள்கைச் செல்வம் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்தான் வேட்பாளராக தி.மு.க. கூட்டணி வேட்பாளராக தலைவர் அவர்களால் நிறுத்தப்பட்டார்கள்.
அத்தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்றார். அவரே மீண்டும் இந்தத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகாலத்தில், நாடாளுமன்றம் எப்படி நடந்தது மோடி ஆட்சியில் என்பதை ஊர் அறியும், உலகறியும்.
ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்பட்டது – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 146 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரு தொடர் அல்ல – அடுத்த தொடருக்கும் வரக்கூடாது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் யாரும் அவர்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ராகுல் காந்தி அவர்களில் தொடங்கி, காங்கிரசாக இருந்தாலும், தி.மு.க.வாக இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களெல்லாம் ஜனநாயகத்தைக் காப்பவர்கள் என்பதற்கு நாடாளுமன்றம் ஒரு மிகப்பெரிய உதாரணம்.

அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு, பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால், சபாநாயகர் சொல்கிறார், அவர்களையெல்லாம் சஸ்பெண்ட் செய்கிறேன் என்று.
மரபுக்கு மாறாக உத்தரவிடப்பட்டது!

இதற்குமுன் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒரு தொடர் வரையில்தான் சஸ்பெண்ட் செய்வார்கள். ஆனால், இந்தத் தொடர் மட்டுமல்ல, நடைபெறக்கூடிய அடுத்த தொடரிலும் அந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று மரபுக்கு மாறாக உத்தரவிடப்பட்டது.

ஒருமுறை ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரலெழுப்பினார்கள். அப்பொழுது பிரதமர் நேரு அவர்கள் எழுந்து, ‘‘மாண்புமிகு உறுப் பினர் பெருமக்களே, நீங்கள் உரத்த குரலில் பேசு வதற்கோ அல்லது கேள்வி கேட்டாலோ அதற்கு நான் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதேநேரத்தில், ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உலகம் முழுவதும் இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றது; பார்த்துக் கொண்டிருக்கின்றது; நம்முடைய நாட்டின் மரியாதை, ஜனநாயகத் தன்மை என்னாகும் என்பதை கவலையோடு கொஞ்சம் சிந்தித் துப் பாருங்கள்; பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன் றைய நாடாளுமன்றத்தை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பதில் சொல்லியிருக்கிறாரா?

இந்தத் தொகுதியினுடைய வேட்பாளராக இருக்கக் கூடிய அருமை தமிழச்சி தங்கபாண்டியன், நம்முடைய கனிமொழி போன்றவர்கள், நம்முடைய இராசா போன்றவர்கள் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தால், பிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். இதுவரை அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமல்ல, வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக் கும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பதில் சொல்லியிருக்கிறாரா?
வித்தைகள் செய்வதில் பிரதமர் மோடி கில்லாடி, அதிலொன்றும் சந்தேகமேயில்லை. நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் அவர்மீது கோபமோ, வெறுப்போ, வருத்தமோ கிடையாது. ஆனால், அதேநேரத்தில், அவருடைய ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அதேநேரத்தில், எங்களிடத்தில், எங்கள் தோழர்களிடத்தில் கேள்வி கேட்டால், புள்ளி விவரத் தோடு பதில் சொல்லக்கூடிய ஆற்றல் சிறப்பான வகை யில் இருக்கிறது.
கலைஞர் அவர்களானாலும், இன்றைய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்களானாலும், அண்ணா அவர் களானாலும் பாரம்பரியமாக எடுத்துக்கொண்டாலும்கூட, கேள்விகளுக்குப் பதில்கள் உடனே வரும்.

இந்தத் தொகுதியில் நிற்கும் மருத்துவர் – மீண்டும் மருத்துவம் செய்ய மக்கள் வழிவகுப்பர்!

சற்று நேரத்திற்கு முன்பு நம்முடைய அமைச்சர் இங்கே சொன்னாரே, இந்தத் தொகுதியில் நிற்கின்ற பி.ஜே.பி. வேட்பாளர், ஒரு மருத்துவர்தான். ஆனால், மருத்துவம் அதிகமாக செய்யாமல், வேறு அரசியல் நடத் திக் கொண்டிருக்கிறார். அவர் நல்ல மருத்துவம் செய் தார், செய்வார் என்பதில் சந்தேகமேயில்லை. நம்மைப் பொறுத்தவரை மீண்டும் அவர் மருத்துவம் பார்த்து, மக்களுக்கு சேவை செய்யட்டும், செய்யவேண்டும்.

‘எள் என்று சொன்னால், எண்ணெய்யாக’ நிற்கக்கூடிய அமைச்சர் மா.சு.

நம்முடைய முதலமைச்சர் எடுத்துக்காட்டான முதலமைச்சர் இரண்டாண்டுகளுக்குள் கலைஞருடைய பெயரால் ஒரு பன்னோக்கு மருத்துவமனையை சிறப் பாகத் தொடங்கியிருக்கிறார்கள். ‘எள் என்று சொன்னால், எண்ணெய்யாக’ நிற்கக்கூடிய அமைச்சர் நம்முடைய அமைச்சர் அவர்கள். அதன் காரணமாகத்தான், வேக வேகமாக இவ்வளவு பெரிய மருத்துவமனை – ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இருக்கக்கூடிய மருத்துவமனை இங்கே வந்திருக்கிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறது. மற்றவர்கள் போன்று எதை எதையோ சொல்லி வாக்குக் கேட்பவர்கள் அல்ல.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள்!

பிரதமர் மோடி அவர்கள் இங்கே வரும்பொழுது, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் இன்னின்ன சாதனைகளைச் செய்திருக்கின்றோம். ஆகவே, மீண்டும் எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று கேட்கக்கூடிய அளவில் இருக்கிறாரா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.


‘திராவிட மாடல்’ ஆட்சி எத்தகைய சாதனைகள் செய்திருக்கின்றன என்பதற்கு அடையாளம், தி.மு.க. தேர்தல் அறிக்கை என்று சொன்னாலே, நாடு ஒன்றைப் புரிந்துகொண்டிருக்கிறது. அதுதான் இந்தியாவின் கதா நாயகன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருக்கிறது.
செய்த சாதனைகளைச் சொல்லி நாங்கள் வாக்குக் கேட்கிறோம். வாக்காளப் பெருமக்களே, எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்பினால், அது எங்களுக் காக அல்ல – உங்களுக்குப் பயன்படும் என்று சொல்வதற்காகத்தான் வந்திருக்கின்றோம்.
உங்களுக்கெல்லாம் தெரியும், திராவிடர் கழகத்துக் காரர்கள் தேர்தல் பரப்புரைப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றோம்.

மிகப்பெரிய ஆபத்தான ஒரு காலகட்டம் இந்திய அரசியலில்!

என்னுடைய வயதைக் குறிப்பிட்டு நண்பர்களும், ஏன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்கூட உரிமையோடு என்னிடத்தில் சொன்னார், ‘நீங்கள் ஏன் வெய்யிலில் இப்படி அலையவேண்டுமா? அறிக்கைகள் எழுதினால் போதுமே” என்றார்.

ஆனால், இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை என்ன? மிகப்பெரிய ஆபத்தான ஒரு காலகட்டம்! இந்திய அரசி யலில். இதுவரை 17 தேர்தல்கள் நடைபெற்று இருக் கின்றன என்றாலும், எந்தத் தேர்தல்களையும்விட, இப்பொழுது நடைபெறப் போகின்ற தேர்தலில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய ஒரு போர்க் களத்திலே நாம் நிற்கிறோம் – அறப்போர்க் களத்திலே நிற்கிறோம் என்பதற்கான அடையாளமாகும்.

ஆகவேதான், தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது – ‘‘சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல் வோம்” என்பதையும் தாண்டி, கூடுதலாக ‘‘சொல்லாத தையும் செய்வோம்” என்பதுதான் மிகவும் முக்கியம் கொண்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சிறப்பான திட்டங்களை செயல்படுத்திய ஓர் அரசு இதுபோன்று உண்டா? நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார். அவர் செய்த சாதனைகளை சொல்லட்டும்.

பல நேரங்களில் ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது ஒரு முதலமைச்சராக இருக்கும்; அந்தத் திட்டம் முடிவடைவதற்குள் வேறொரு ஆட்சி வந்து, இன்னொரு முதலமைச்சர்தான் அதனைத் திறந்து வைப்பது வரலாறு.

அடிக்கல் நாட்டுவதும் அவரே – திறப்பதும் அவர்தான்!

ஆனால், திராவிட இயக்க வரலாறு இருக்கிறதே, திராவிட மாடல் ஆட்சி இருக்கிறதே – அடிக்கல் நாட்டு வதும் அவரே – திறப்பதும் அவரேதான் என்று சொல் லக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்றால், அவருடைய செயல்திறனைப் பார்த்து நீங்கள் பாராட்டவேண்டாமா? அவர்கள் பாராட்டுகிறார்களோ, இல்லையோ, அந்தத் திட்டங்களினால் மக்கள் பயனடைகிறார்கள்.
இப்போது, நம்முடைய அமைச்சர் அவர்களின் மூலமாக, நம்முடைய முதலமைச்சருக்கு ஒரு வேண்டு கோளை வைக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

புதிதாக ஒரு மனநல மருத்துவமனையை உருவாக்குங்கள்!

நீங்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறீர்கள். தயவு செய்து தேர்தலுக்குப் பிறகு, புதிதாக ஒரு மனநல மருத்துவமனையை உரு வாக்குங்கள். ஏனென்றால், நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது.
யாராவது ஒரு மாதிரியான செயலை செய்துவிட்டால், ‘‘கீழ்ப்பாக்கத்திற்குப் போகிறாயா?” என்று சொல்வார்கள். கீழ்பாக்கத்தில் இருக்கின்ற மக்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை. அந்தப் பகுதியில் உள்ள மனநிலை மருத்துவமனையைக் குறிப்பிட்டுத்தான் அப்படி சொல்கிறார்கள்.
மனநிலை மருத்துவமனைக்கு முன்பை விட, இப்போது அதிகமான தேவை இருக்கிறது. முக்கியமாக, பல அரசியல்வாதிகளுக்கு, பதவி வெறியர்களுக்கு, ஜாதி வெறியர்களுக்கு, பண வெறியர்களுக்குத் தேவைப் படுகிறது.

ஜனநாயகத்திற்குப் பதிலாக, பண நாயகத்தை இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் நீங்கள் எல்லாம் பார்த்திருப் பீர்கள் – நெல்லை தொகுதி வேட்பாளருக்காக, சென்னை யிலிருந்து கோடி கோடியாக சென்ற பணம் பிடிபட்டது என்று.
மக்களை நம்புவதற்குப் பெயர் ஜனநாயகம் – அவர்கள் பணநாயகத்தை நம்புகிறார்கள்!

நாம் மக்களை நம்புகிறோம்; அவர்கள் பணத்தை நம்புகிறார்கள். மக்களை நம்புவதற்குப் பெயர் ஜனநாயகம். பணத்தை நம்பிக்கொண்டு தேர்தலை சந்திப்பதற்குப் பெயர் பண நாயகம்.
எதிர்க்கட்சியினர்மீது அழிவழக்குகளைப் போடு கிறீர்கள் – எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்மீது பொய்வழக் குகள் போட்டு சிறைச்சாலையில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் – சிபுசோரன், கெஜ்ரிவால் போன்றவர்களையெல்லாம்.

இன்னுங்கேட்டால், எங்கள் அமைச்சர்மீது அவர்கள் போட்ட வழக்கில்கூட உச்சநீதிமன்றம் என்ன சொல் லியிருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக நினைத்துப் பாருங்கள்.
இங்கே ஓர் ஆளுநர் இருக்கிறார் – அவர் சைதாப் பேட்டை தொகுதியில்தான் இருக்கிறார். அவரும் அந்தத் தொகுதி வாக்காளர்தான்.

ஜனநாயகப் படுகொலை என்று சொல்வது; வெறும் வார்த்தை ஜாலமல்ல!

ஓர் ஆளுநரைப் பார்த்து, ‘‘ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறோம்; அதற்குள்ளாக மீண்டும் பழைய அமைச்சர், பதவியேற்பதற்கு அரசமைப்புச் சட்டப்படி, முதலமைச்சருக்குள்ள அதிகாரப்படி அனுமதிக்க வேண்டும் என்று முனைவர் பொன்முடி வழக்கில் உத்தரவு போட்டது உச்சநீதிமன்றம்.
ஜனநாயகப் படுகொலை என்று சொன்னோமே, அது வெறும் வார்த்தை ஜாலமல்ல. உண்மையான சூழ்நிலை தான் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் ஊராட்சி மன்றத் தலைவரிலிருந்து குடியரசுத் தலைவர்வரையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில், அய்ந்து அம்சங்கள் மிக முக்கியமானவை.
அப்படிப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் யார் கொடுத்தது? மேலே இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்தது அல்ல. மேலே இருப்பவர்கள் சொல்லுவதுதான் சட்டம் என்றால், அதுதான் எதேச்சதி காரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சொன் னால், அதுதான் ஜனநாயகம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அய்ந்து அம்சங்கள்!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அரசமைப்புச் சட்ட பீடிகையில், ‘‘இந்தியாவினுடைய குடிமக்களாகிய நாம்” என்றுதான் தொடங்குகிறார். ‘‘இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொள்ளக்கூடியதில், முழு இறையாண்மை பெற்ற, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” என்றுதான் அதில் உள்ளது. இதைக் காப்பாற்ற வேண்டிய கடமை தானே குடியரசுத் தலைவரிலிருந்து, ஆளுநரிலிருந்து, அமைச்சர்களிலிருந்து, முதலமைச்சர்வரை உரியது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநரால் தலைகுனிவுதான்!

அந்தக் கடமையை ஆளுநர் பின்பற்றினாரா என்பது தான் உச்சநீதிமன்றம் கேட்டக் கேள்வி. அரசமைப்புச் சட்டத்தையே நீங்கள் படிக்கவில்லையா? என்று உச்சநீதிமன்றம் கேட்டது. இப்படி ஓர் ஆளுநரைப் பார்த்து, அரசமைப்புச் சட்டத்திற்கு வகுப்பெடுத்தது தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கின்ற இந்த ஆளுநர் ஒருவரிடம் மட்டும்தான். இதைவிட தலைகுனிவு வேறு என்ன இருக்க முடியும்?
ஜனநாயகம் இன்றைக்குக் குற்றுயிரும் கொலை உயிருமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. ஜனநாயகத்தை மீட்டெடுப்பதுதான் – ஏனென்றால், மருத்துவத் துறை அமைச்சர் இங்கே இருக்கிறார் – அதற்குரிய மருத்துவர்கள்தான் நம்முடைய எடுத்துக் காட்டான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களானா லும், இந்தியா கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தி போன்றவர்களின் கடமையாகும்.
இந்தியா கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும்.
குறைவான நேரத்தில், எல்லா செய்திகளையும் சொல்ல முடியாது என்பதற்காகத்தான் நான்கு சிறிய புத்தகங்களை அச்சடித்துக் கொண்டுவந்திருக்கின்றோம்.

தேர்தல் பரப்புரைக்காக நான்கு சிறிய புத்தகங்கள்!

‘‘2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் ஏன்?’’
புள்ளி விவரத்தோடு அதனைச் சொல்லியிருக்கின் றோம். நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்கிறோம்; எங்களை நம்பி நீங்கள் வாக்களித்தீர்கள்; ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தீர்கள். அதேபோன்று, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி யைக் கொடுத்தீர்கள். அதுபற்றிய தகவல்களையெல்லாம் இந்தப் புத்தகத்தில் வெளியிட்டு இருக்கின்றோம்.

நம்முடைய நாடு, மக்கள், எதிர்கால சந்ததியினர் வாழவேண்டும்; அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் என்ன நடந்தது? மோடி வருகிறார், ஓடி வருகிறார், தேடி வருகிறார் என்றெல்லாம் சொல்லி வித்தை காட்டு கிறார்கள்.
அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!’’ என்ற புத்தகத்தில் உள்ளவற்றை விளக்கி சொன்னாலே போதுமானதாகும்.
அதேபோன்று, ‘‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக் காரனின் திறந்த மடல்!’’ என்ற ஒரு புத்தகம்.

ஊழலை ஒழிக்கிறோம், ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 10 ஆண்டு களுக்குமுன்பும் இதையே சொல்லித்தான் பதவிக்கு வந்தார். நேற்று கூட வடநாட்டிற்குச் சென்று மோடி அதையேதான் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க.விற்கு பிரச்சாரகரே அவர் மட்டும்தான். அதனால்தான், எல்லா மாநிலங்களுக்கும் அவரே செல்கிறார். அதற்கு வசதி யாகத்தான், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்து கிறார்கள். முதல் தேர்தலுக்கும், கடைசி தேர்தலுக்கும் 50 நாள் இடைவெளி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், இதுவரையில், இதற்கு முன் எந்தத் தேர்த லுக்கும் இவ்வளவு இடைவெளியைக் கொடுத்தது கிடை யாது. மோடியின் வசதிக்காகத்தான் இதைச் செய்திருக்கிறார்கள்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தாரே, மோடி, ஊழலை ஒழித்தாரா?

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ‘‘தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்” என்று சொல்கிறார்.
இப்படி சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள் என்பதுதான் வரலாறு.

தி.மு.க. அமைச்சர்கள்மீது ஊழல் என்று சொல்லி, வழக்குப் போட்டார்களே, அதில் யாராவது தண்டனை பெற்றிருக்கிறார்களா? பழிவாங்குவதற்காகப் போடப் பட்ட ஊழல் வழக்குகள் என்பதை நிரூபித்து வெளியே வந்திருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால், உலகமே வியந்து பார்க்கக் கூடிய அளவிற்கு பா.ஜ.க. செய்த ஊழல் நுணுக்கமான ஊழலாகும்.

‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்’’பற்றி ஒரு சிறிய புத்தகம்.
இதுவரையில், யாரும் இப்படிப்பட்ட ஊழலை செய்தது கிடையாது.

தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த சட்டத் திருத்தம்!

தேர்தல் பத்திரத் திட்டம் என்கிற பெயராலே 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய். இது ஒரு பகுதிதான். இன்னும் வெளியில் நிறைய செய்திகள் வந்துகொண் டிருக்கின்றன. தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு, சட்டத் திருத்தத்தைச் செய்திருக்கிறது.

அதேபோன்று, கடந்த 2019 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாம் முறையாக பதவியேற்கும்பொழுது, மேடையிலிருந்து திடீரென்று இறங்கி வந்தார். யாரையோ வணங்குவதற்காக போகிறாரோ என்று நினைத்த நேரத்தில், ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்டப் பதாகைப் போன்ற போர்டின்மீது தலை வைத்து அப்படியே கொஞ்ச நேரம் நின்றார்.
அரசமைப்புச் சட்டத்தை நான் காப்பாற்றுவேன் என்று வாயால் சொல்வதைவிட, நடித்துக் காட்டினார். அதுபோன்று இன்றைக்கு நடந்திருக்கிறதா? தயவு செய்து சொல்லுங்கள்.

மீண்டும் பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பதே இருக்காது!

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நாங்கள் ஏன் சொல்கிறோம் தெரியுமா? அப்படி வந்தால், கடைசி தேர்தல் இதுதான். இனிமேல், இந்த நாட்டில் தேர்தல் என்பதே இருக்காது.
முதல் முறையாக 18 வயது நிறைந்தவர்கள் இப் பொழுதுதான் வாக்களிக்கவிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்; 18 வயது இளைஞர்களே, உங்களுக்கு சில ஆசைகள் இருக்கலாம். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று சொல்லித்தான் 2014 இல் இளைஞர்கள் வாக்களித்தார்கள். அவர்கள் நினைத்ததுபோன்று வந்தது மாற்றம் அல்ல – ஏமாற்றம்தான். அதனுடைய விளைவுகளை இன்றைக்கு எல்லோரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் ‘ஜூம்லா’தான்!

2014 இல் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன தெரியுமா?
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம்.
வெளிநாட்டில் உள்ள இந்தியாவின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்.
புதிதாக வேலைவாய்ப்பைத்தான் அவர்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால், ஒன்றிய அரசு அலு வலகங்களில் இருக்கின்ற காலிப் பணியிடங்களைக்கூட அவர்கள் நிரப்பவில்லை.
அதேபோன்று, 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடி மகன்களுக்குரிய வங்கிக் கணக்கில் போடுவோம் என்று சொன்னீர்களே, போட்டீர்களா? என்றுகேட்டால், அதெல்லாம் ‘ஜூம்லா’ என்று சொல்கிறார்கள்.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு என்னவென் றால், ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுப்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி அவர்களுடைய வீட்டிற்கே சென்றனர் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர்.

குடியரசுத் தலைவரை நிற்க வைத்திருக்கிறார்கள்!

பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொண்டார்களே, அவரை எங்கே நிற்க வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

அத்வானி அமர்ந்திருக்கின்றார், அவருக்குப் பக்கத்தில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கின்றார். ஆனால், நாட்டின் முதல் குடிமகளாகிய குடியரசுத் தலை வரை, நிற்க வைத்திருக்கிறார்கள்.
இதுதான் மகளிரை மதிக்கின்ற மாண்பா?

அரசமைப்புச் சட்டத்தை மதித்தால், இப்படி நடந்து கொள்வார்களா? அந்தப் படம் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.
எந்த அளவிற்கு பிரதமர் மோடி, அரசமைப்புச் சட்டத்தை மதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தேர்தலுக்கே நிற்காத ஓர் இயக்கம் திராவிடர் கழகம். சென்னையில் நடந்த ஒரு நிகழ்வை சொல்கிறேன்.

திராவிட இயக்கம் என்றால், பண்பட்ட இயக்கம், ஜனநாயகத்தை மதிக்கின்ற இயக்கம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலருக்காக வாழ்த் துச் செய்தி அனுப்பிய இராஜாஜி, ‘‘பெரியாரும், விடு தலையும் என் அன்பார்ந்த எதிரிகள்!” என்று எழுதியிருந்தார்.
இராஜாஜி அவர்கள் மறைந்தபொழுது, நம்முடைய கலைஞர் முதலமைச்சராக இருந்தார். இராஜாஜியின் உடலை சுடுகாட்டிற்குக் கொண்டு போனார்கள். இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகில் முதலமைச்சர் கலைஞர், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோர் இருந்தனர்.
அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்களும் இராஜாஜியின் இறுதி நிகழ்வில் பங்கேற்ப தற்காக வந்திருந்தார். அவரும் அங்கே வந்து நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள், ‘‘வி.வி.கிரி அவர்கள், குடியரசுத் தலைவர், அவர் நிற்கக்கூடாது; என்னுடைய சக்கர நாற்காலியை நான் கொடுக்கிறேன்; அவரை உட்காரச் சொல்லுங்கள்” என்றார். இந்த நிகழ்வை ‘துக்ளக்’ பத்தரிகையும் பாராட்டியது.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, திராவிட இயக்கம் என்றால், பண்பட்ட இயக்கம், ஜனநாயகத்தை மதிக்கின்ற இயக்கம் என்பதற்காகத்தான்.
இன்னுங்கேட்டால், வி.வி.கிரிக்கு வாக்களிக்கக் கூடாது என்று தந்தை பெரியார் சொன்னார். அப்படிப் பட்ட சூழலில்கூட, அரசியல் மாச்சரியங்கள் இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டே இந்நிகழ்ச்சி ஆகும்.

ஸ்வீடன் நாட்டு ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள்!

ஸ்வீடனில் உள்ள ஒரு பெரிய ஆய்வு நிறுவனத் திற்குப் பெயர் ‘Varieties of Democracy’ – பல்வகையான ஜனநாயகம்; ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் எப்படி மதிக்கப்படுகிறது என்பதற்காக ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது அந்த நிறுவனம்.

170 நாடுகளில், இந்தியா 104 ஆம் இடத்தில் இருக் கிறது. இதுதான் பிரதமர் மோடிக்குப் பெருமையா?
இதை அப்பட்டமாக மறைத்துவிட்டு, என்ன சொல் கிறார்கள் என்றால், உலகத்தின் விஸ்வகுருவாம்; உலகத் திற்கே அவர்தான் வழிகாட்டப் போகிறாராம். அப்படி வழிகாட்டுகிறார் என்றால், ஏன் இந்தப் புள்ளிவிவரம் இப்படித் தெரிவிக்கிறது?

அதேபோன்று, மனிதவள மேம்பாட்டில் 134 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.

மனிதவள மேம்பாட்டை, நம்முடைய திராவிட மாடல் அரசு எப்படி செய்கிறது என்பதற்காக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி, அமெரிக்காவில் மிகப் பிரபலமான ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் எழுதுகிறது; அதனால்தான், தமிழ்நாட்டை நோக்கி வெளிநாட்டு முதலீடுகள் போகின்றன என்று பொருளா தாரத்திற்கு உதாரணம் காட்டியிருக்கின்றது.

நண்பர்களே, இந்தத் தேர்தல் ஏதோ இரண்டு கட்சி களுக்கிடையே என்று நினைக்கக் கூடாது. இரண்டு பெரிய தத்துவங்களுக்கு இடையே நடைபெறுகின்ற தேர்தல் இது.
ஜனநாயகமா? எதேச்சதிகாரமா? என்று சொல்லக் கூடிய அளவில் இருக்கிறது.

நாங்கள் சொல்கிறோம், இதுதான் பா.ஜ.க.விற்குக் கடைசி தேர்தல்!

எதேச்சதிகார ஆட்சியில் என்ன நடக்கும்?
எதிர்க்கட்சிகளே கூடாது என்பதுதான்.
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொன்னார்கள். இப்பொழுது நாங்கள் சொல்கிறோம், இதுதான் அவர் களுக்கும் ஒரே தேர்தல் – ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, அவர்களை வீட்டிற்கு அனுப்புகின்ற தேர்தல். இதுதான் உங்களுடைய ஆட்சியில் கடைசி தேர்தல். மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வரலாம் என்று நினைக் காதீர்கள்.
நீங்கள் எல்லாம் நினைக்கலாம்; இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதி 543 இருக்கிறது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதுமா? என்று கேட்கலாம்.
‘விஸ்வகுரு’ தமிழ்நாட்டிற்கு வந்தால் மவுனகுருதான்!
நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல் கிறேன். ‘விஸ்வகுரு’ என்று தன்னை சொல்லிக் கொள்கிறவர், தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது அவர் ‘மவுனகுரு’வாகத்தான் இருக்கிறார்.
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி, எதிர்ப்பவர்கள்மீது அழிவழக்குகளைப் போடுகிறார்கள். மற்ற கட்சிக்காரர் கள், தங்கள் கட்சியில் சேரவேண்டும். அப்படி சேரவில்லையானால், அவர்கள்மீது திரிசூலம் பாயும்.
திரிசூலம் என்றால் என்ன தெரியுமா?
அதில் ஒருமுனை சி.பி.அய்.
இன்னொரு முனை – வருமான வரித் துறை
மற்றொரு முனை – அமலாக்கத் துறை.

பா.ஜ.க. வேட்பாளரின் 4 கோடி ரூபாய் பிடிபட்டது!

ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? பா.ஜ.க. வேட்பாளரின் 4 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு போன மூன்று பேரை பிடித்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பணத்திற்கும், எங்களுக்கும் சம் பந்தமில்லை. சதிவேலை நடக்கிறது என்று சொல் கிறார்கள்.
ஊழலை ஒழிப்போம் என்று அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அடுத்த நிமிடமே அந்த வேட்பாளரை பார்த்து, ‘‘உங்களால் எங்கள் கட்சிக்குக் கெட்ட பெயர் வருகிறது” என்று சொல்லி, நீக்கியிருக்க வேண்டும் அல்லவா!
இதுவே எதிர்க்கட்சிகாரர்களின் பணமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? ஊழல், ஊழல் என்று சொல்லியிருப்பார்கள் அல்லவா!
ஆனால், இப்போது பிடிபட்ட பணத்தைப்பற்றி எவ்வளவு தூரம் பேச முடியாமல் இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு பேசாமல் இருக்கிறார்கள்.
முதலில் 400 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சொன்ன பிரதமர் மோடி, இப்போது அப்படி சொல்வது கிடையாது. அடிக்கடி தமிழ்நாட்டிற்குப் படையெடுக்கிறார்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்புகள் பிரதமர் மோடியை அச்சுறுத்துகிறது!

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் எந்த மாநிலத்திற் குச் சென்று அவர் பேசினாலும், தி.மு.க. ஆட்சியைப் பற்றித்தான் பேசுகிறார். அந்த அளவிற்கு, நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்புகள் அவரை அச்சுறுத்துகிறது.
இரண்டு பேரை பார்த்துத்தான் பிரதமர் மோடி கோபமடைகிறார்.
ஒருவர், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இன்னொருவர், இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்கள்.
பழிவாங்குகிற ஓர் ஆட்சி ஒன்றியத்தில் நீடிக்கலாமா?
‘‘புதிய இந்தியா என்னும் கோணல் மரம்!”
‘‘புதிய இந்தியா என்னும் கோணல் மரம்‘’ என்கிற புத்தகத்தில்,
‘‘சிதைந்துவரும் முரண்பாடுகளுக்குக் காரணம் ஜனநாயகத்தில், மொத்த வாக்குகளில் 37 சதவிகிதம் மட்டுமே பெற்று இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. கட்சி. ஆனால், இதை வைத்துக்கொண்டு, அதில் ஒரு முஸ்லிம் உறுப்பினர்கூட இல்லாது, பா.ஜ.க. நாட் டையே பிரதிநிதித்துவப்படுத்துவதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும்?
மக்கள் தொகையில் 15 சதவிகிதமாக இருக்கும் ஒரு சமூகத்திற்கென்று ஒரு பிரதிநிதிகள்கூட இல்லாமல், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களிலும் இதே கதைதான்.
20 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களைக் கொண்டிருக் கும் உத்தரப்பிரதேசத்தில், 2017, 2022 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு முஸ்லிமைகூட நிறுத்தவில்லை என்ற போதிலும், பெரும் வெற்றி பெற்றது.”

இதை சொல்வது யார்? இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார் தெரியுமா?

ஒன்றிய நிதியமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடைய கணவர் பர்கலா பிரபாகர் அவர்கள்தான்.
‘இந்து’ பத்திரிகை வெளிவந்த செய்தி!
‘இந்து’ பத்திரிகை உள்பட பல பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.
‘‘எரியற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்! நஷ்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் அடித்துப் பிடுங்கிய பா.ஜ.க.’’ – தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்கள் அம்பலம்.’’
லாபத்தில் நடக்கின்ற நிறுவனம் நன்கொடை கொடுக்கும். ஆனால், நட்டத்தில் இயங்கும் நிறுவனம், ‘‘வங்கியில் கடன் வாங்கி உங்களுக்கு நன்கொடை கொடுக்கிறோம்” என்று சொல்லுமா?

பா.ஜ.க. பெற்றது நன்கொடை அல்ல; வன்கொடை தான். புதிய வார்த்தையை நான் சொல்கிறேன்.
இதுவரை நன்கொடையைப்பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள் – ஆனால், மோடி அரசினுடைய கைங்கரியத் தினால், தமிழுக்கு ஒரு புதிய வார்த்தையை வன்கொடை என்று உருவாக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

எதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கு நன் கொடை கொடுக்கிறார்கள்? முழுக்க முழுக்க அவர் களிடம் பயனை எதிர்பார்த்துத்தானே!
அதிலும் முக்கியமாக அதானிகள், அம்பானிகள், டாட்டாக்கள், பிர்லாக்கள், பெருமுதலாளிகள்தானே உங்கள் ஆட்சியில் பயனடைந்திருக்கிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், புதிய தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பில்லை!

எப்படி தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வாய்ப்பில்லையோ, அதுபோன்றுதான், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், புதிய தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பில்லை.
ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு இருக்கின்றன.

2ஜியில் அபாண்டமாக இராசாமீது, கனிமொழிமீது பழி சுமத்தி அழிவழக்குப் போட்டார்கள். அவர்கள் சொல்வதில் ஆதாரமில்லை என்று சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
இப்பொழுது 5ஜி அலைவரிசை யாரிடம் இருக்கிறது என்றால், அம்பானிகளிடம்தான்.

பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று சொல்கிற பிரதமர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
140 கோடி மக்களும் என் குடும்பம் என்று பேசுகிறீர் களே, மணிப்பூர் உங்கள் குடும்பத்தைச் சார்ந்ததுதானே! அது என்ன ஒதுக்கி வைக்கப்பட்டதா? அங்கே பழங்குடி யின சமுகத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத் தெருவாக ஓடவிட்டார்களே- பாதிக்கப்பட்டவர் களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லியிருக் கிறீர்களா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘திராவிட மாடல்’ அரசு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது!

தமிழ்நாட்டில் மழை, புயல், வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறினீர்களா?
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘திராவிட மாடல்’ அரசு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது.

மக்கள் நலம் சார்ந்த அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு அடையாளம் – கரோனா தொற்று கால கட்டத்தில், கரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை, நேரில் சந்தித்து ஆறுதல் சொன் னவர்கள் இரண்டு பேர் – ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; இன்னொருவர் நம்முடைய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்.

கரோனாவும் – பிரதமரின் செயல்களும்!

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, அந்தக் கரோனா காலகட்டத்தில் நீங்கள் சொன்ன வழிமுறைகள் என்ன?
எல்லோரும் கைதட்டுங்கள் – கரோனா ஓடிவிடும்!
வீட்டில் விளக்கேற்றுங்கள் – கரோனா ஓடிவிடும்!

பூ போடுங்கள் – கரோன ஓடிவிடும் என்றெல்லாம் சொல்லியதைப் பார்த்து, வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் சிரித்தனர்.

தமிழ்நாட்டில் ஒரு தொழிற்சாலையையாவது தொடங்கியிருக்கிறாரா? அந்த அளவிற்குத் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

கரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காப்பான ஆக்சிஜன் தேவைப்பட்டது. நாடு முழுவதும் ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது.

அப்பொழுது மூடப்பட்டு இருக்கின்ற ஒன்றிய தொழிற்சாலையை, நாங்கள் அதைப் பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கிறோம் என்று சொல்லி – நம்முடைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சு. அவர்கள், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் அனுமதி கேட்டார். இன்றுவரையில் அதற்கு அனுமதி கொடுத்தார்களா?
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஜி.எஸ்.டி. வரியாக ஒரு ரூபாய் ஒன்றிய அரசு பெற்றால், திரும்ப 29 காசுதான் கொடுக்கிறது.
எனவேதான், ஒன்றிய அரசு ஜனநாயகத்தையோ, மக்கள் நலத்தையோ அவர்கள் மதிப்பதற்கு இல்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு இராமர் பாலம் என்று சொல்லி முட்டுக்கட்டை போட்டார்கள்.
அப்படி ஒரு பாலம் இல்லை என்பதை ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்வோம் என்று சொன்னார்கள்.
அதன்படி செய்தார்களா? அந்தத் திட்டம் நிறைவேறி னால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ளவர்கள் பயன்பெற்று இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை !

ஒன்றிய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபொழுது, ஓராண்டிற்கு மேலாக விவசாயிகள் போராடியதால், அந்த சட்டங்கள் திரும்ப்ப பெறப்பட்டன.
அப்பொழுது, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்போம்; விவசாயிகளின்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று சொன்னது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஆனால், அதை ஒன்றரை ஆண்டுகளாகியும் செய்ய வில்லை என்பதற்காக டில்லி நோக்கி வருகின்ற விவசாயிகளைத் தடுக்க முள்வேலி அமைத்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடுக்கிறார்கள்.

வேளாண்மைக்காகவே தனி பட்ஜெட்!

அதேநேரத்தில், எங்களுடைய தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி, இந்தியாவில் வேறு எங்குமில் லாத ஒன்றான – வேளாண்மைக்காகவே தனி பட்ஜெட் போடுகிறது. ஆகவே, எங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறோம். ஒன்றிய ஆட்சியின் வேதனையைச் சுட்டிக்காட்டி, மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்கிறோம்.
எந்தத் தொழிற்சாலையையும் புதிதாக தொடங்காத பிரதமர் மோடி அவர்கள், இரண்டு புதிய தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கிறார்.

மோடி நடத்தும் இரண்டு தொழிற்சாலைகள்!

ஒன்று, தினசரி பொய்யைத் தயாரிப்பதற்காக 20 ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுத்து பொய்த் தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கிறார்.
‘‘பீகார் மாநிலத்துக்காரர்களை, தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டி அடிக்கிறார்கள் என்கிற பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள். அதற்குப் பிறகு அதன் உண்மையை நிலை உணர்த்தப்பட்டது. அந்தப் பொய்ச் செய்தியை யார் பரப்பியது என்றால், பா.ஜ.க.வின் பொய்த் தொழிற்சாலையினுடைய அமைப்பினர்தான்.
அதற்கடுத்து இன்னொரு தொழிற்சாலை எது தெரியுமா?

கிரிமினல் குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் பா.ஜ.க. கட்சியில் சேர்த்து, அவர்களை தூய்மையான வர்களாக ஆக்குவது. வாசிங் மிஷன் – தூய்மைப்படுத்தும் தொழிற்சாலையாகும்.
யார் வெற்றி பெறுவது? யார் தோல்வி பெறுவது? என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சர் சொன்ன தத்துவப்படியேதான், இந்தியா கூட்டணி இன்றைக்கு உச்சக்கட்டத்திற்கு வந்திருக்கிறது.

எனவே, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – மீண்டும் தெளிவாகக் கூறுகின்றோம் – ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகின்ற ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சிதான்.
குஜராத்தில் பா.ஜ.க.வினர் ஆடிப் போயிருக்கிறார்கள். அங்கே ஜாதிக்கலவரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மணிப்பூர் போன்றே அங்கே ஆர்.எஸ்.எஸ். தலைவர் சென்றிருக்கிறார் என்று நேற்றைய பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.

இருட்டு விலகும், வெளிச்சம் பரவும்!

எனவே, ஜாதி வெறி, மதவெறி, அதிகார வெறி இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வருகின்ற 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள், வாக்குப் பெட்டி இயந் திரத்தில், முதலிடத்தில் இருக்கின்ற தமிழச்சி தங்கபாண் டியன் பெயர் இருக்கும்; உதயசூரியன் இருக்கும் – அதற்க நேரே இருக்கின்ற பொத்தானை அழுத்துங்கள். நன்றாக அழுத்துங்கள். விளக்கு எரிகிறதா என்று பாருங்கள்; பச்சை விளக்கு எரியும் – அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும் – நாட்டில் விளக்கு எரியும். இருட்டு விலகும், வெளிச்சம் பரவும்.

இந்தத் தொகுதியில், நிச்சயமாக வெற்றி நமதே என்பதில் சந்தேகமேயில்லை. எத்தனை முறை தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வந்தாலும், ‘‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது” என்கிற கிராமப் பழமொழியை நினைவுபடுத்தி, சிறப்பாக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த அத்துணை பேருக்கும் நன்றி கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக