செவ்வாய், 23 மே, 2023

திராவிடர் கழகத்தின் அமைப்பு - செயல்முறைத் திட்டங்கள்

 

 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களுள் நிறைவான தீர்மானம் கழக அமைப்பு - நிர்வாக முறையில் காலத்துக்கேற்ற வகையில் புதிய மாற்றங்களும் செயல்முறைகளும் வடிவமைத்துள்ளது. 

நடப்பில் இருந்து வந்த மண்டல தலைவர்கள், செயலாளர் என்ற அமைப்பு முறை நீக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று கழக மாவட்டங்களில் கழகப் பணிகளை முடுக்கி விடவும் மாவட்டக் கழக - ஒன்றிய நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, கழக செயல்பாடுகளில் புதிய இரத்தம் பாய்ச்சும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 

தலைமைக் கழகத்தைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள். (மானமிகு வீ. அன்புராஜ், டாக்டர் துரை. சந்திரசேகரன் ஆகியோர்) மற்ற மாநில பொறுப்பாளர்களுக்கும் - மாறி மாறி இதில் இணைந்து - மாதத்தில் இத்தனை நாட்கள் தலைமைக் கழகத்தில் இருக்கும் வகையில் திட்டமிடப்படும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்களாக தோழர்கள் தஞ்சை 

இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் பணியாற் றுவார்கள். அவர்களுக்கென்று பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தோழர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகிய இருவரும் துணைப் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

ஏற்கெனவே பொறியாளர் ச. இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறார்.

மற்றபடி ஏற்கெனவே இருந்த மாநிலப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குரிய பணிகளை மேற்கொள்வார்கள்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அரசியல், தேர்தலில் பங்கேற்காத மாபெரும் சமூகப் புரட்சி இயக்கம்.

அதே நேரத்தில் அரசியல் எக்கேடு கெட்டால் என்ன? என்று அலட்சியப் போக்கில் இயங்காமல், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் விழிப்புடன் கருத்து செலுத்தி, மக்கள் சிந்தனையைக் கூர் தீட்டும் பிரச்சார இயக்கம்.

இதன் அணுகுமுறை, பிரச்சாரம் - போராட்டம் என்பதாகும். இந்தியாவிலேயே சமூக விழிப்புணர்ச்சியில் தலை சிறந்த நிமிர்ந்த மாநிலமாக தமிழ்நாடு ஒளி வீசுகிறது என்றால், அதற்குக் காரணம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் அவரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து வீறுடன் செயல்பட்டு வரும் திராவிடர் கழகமுமேயாகும். 

மக்கள் பிறப்பின் அடிப்படையில் உயர்வு  - தாழ்வு என்று பேதப்படுத்தப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டுக் கிடக்கும் அவல நிலையை மாற்றி "பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்" என்ற தந்தை பெரியாரின் ('குடிஅரசு' 11.11.1944) சமத்துவக் கோட்பாட்டில் நின்று, அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை அடைய சுயநலம் பாராது, எந்த ஒரு நியாயமான உரிமையைப் பெறுவதாக இருந்தாலும், அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும் என்ற உறுதியோடு, தொண்டாற்றக் கூடிய கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு மறுபெயர்தான் திராவிடர் கழகமும், அதில் அணி வகுக்கும் கழகத் தோழர்களும்.

பேதங்களுக்கு மூல காரணமாக இருப்பது கடவுளாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், வேதங்களாக இருந்தாலும் சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களாக இருந்தாலும் சரி - ஏன் அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, அவற்றை எதிர்ப்பதும், எரிப்பதும் திராவிடர் கழகத்தின் நடைமுறை செயல்முறையாகும்.

இக்கொள்கையை ஏற்றுக் கொண்டு களத்தில் நின்று போராடுவோர் ஒருவகை, கருப்புச் சட்டை அணியாமல் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், அதே நேரத்தில் இந்த இயக்கத்திற்குக் கண்ணுக்குத் தெரியாமல் வேராக இருக்கக் கூடியவர்கள் இன்னொருவகை - இதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் Visible, Invisible Members  என்று வெகு நேர்த்தியாகக் கூறுவார். 

இந்துத்துவா என்றும் இந்து ராஜ்ஜியம் என்றும், ராமராஜ்ஜியம் என்றும் நாட்டில் ஒரே மதம் தான் என்றும் கூறக் கூடிய காவிக் கூட்டம் (சங்பரிவார்) ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து பார்ப்பனீய ஆதிபத்தியத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், திராவிடர் கழகத்தின் பணி, செயல்பாடு தமிழ் மண்ணையும் தாண்டி இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவையான ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குக்கிராமம் உட்பட கழகக் கொடி விடுதலை, பிரச்சாரம் என்பவை முகவரியாக இருக்க வேண்டும் என்று ஈரோடு தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

இதில் ஒரு வியக்கத்தக்க உண்மை என்னவென்றால் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத்தின் சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை வலுவாகப்பற்றிக் கொண்டு தந்தை பெரியாரை நெஞ்சில் நிறுத்திக் கொண்டு இருப்பதுதான்!

ஆம், தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி - வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் ஈரோட்டுப் பாதை.

இதன் அவசியத்தை உணர்ந்து தான் கழகம் இல்லாத ஊரே இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு இயக்க அமைப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை பதவிகள் அல்ல - கடமையாற்றும் பொறுப்புகளாகும்.

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - மானமும் அறிவும் மனிதனுக்கழகு - ஆண் - பெண் சரிநிகர் இவற்றை வேண்டாம் என்று யார்தான் கூற முடியும்?

கழகத்தில் புதிய பொறுப்பேற்றுள்ள கருஞ்சட்டையினரே பம்பரமாகச் சுழன்று, தேனீக்களாகப் பறந்து பறந்து பணியாற்றுவீர்! இது திராவிட பூமி, பெரியார் மண் என்பதை நிலை நாட்டுவீர்! நூறாண்டைக் கண்ட இயக்கம் இளமை இரத்தத்தோடு, துடிப்போடு தந்தை பெரியார் பணி முடிப்போம் தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுப்போம்!

ஈரோடுதானே எப்பொழுதும் வழிகாட்டக் கூடியது - இப்போதும் வழிகாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக