கடந்த 13.5.2023 சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பு வாய்ந்ததாகும்.
முதல் சுயமரியாதை மாநில மாநாடு செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்றது.
அம்மாநாட்டில் தான் "மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாநாடு பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அம்மாநாட்டிலேயே ஜாதிப் பட்டங்களைச் சேர்த்து அதுவரை அழைக்கப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் நாடார் பட்டத்தைத் துறந்தார்.
சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் சேர்வைப் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்.
மாநாட்டில் விருதுநகர் நாடார்கள் சமைத்துப் பரிமாறுவார்கள். அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு, அவ்வாறே நடத்தப்பட்டதே! அந்தக் கால கட்டத்தில் இது சாதாரணமானதா?
சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு இதே ஈரோட்டில்தான் - எம்.ஆர். ஜெயகர் தலைமையில் மாநாடு நடைபெற்றது (10.5.1930).
அம்மாநாட்டிலும் இதே நோக்கத்தைக் கொண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோதமென்று இம்மாநாடு கருதுவதுடன், ஜனசமூகத்தில் எந்த வகுப்பார்க்கும், பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டுமென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும், சகல உரிமைகளையும் வழங்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று இதே ஈரோட்டில் இன்றைக்கு 93 ஆண்டுகளுக்குமுன் முடிவு செய்யப்பட்டது.
வெறும் தீர்மானத்தோடு முடங்கிப் போய் விடவில்லை. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் (திராவிட இயக்க ஆட்சியில்) இந்த வகையில் பல ஆணைகளும் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டன.
ஈரோட்டில் (13.5.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த ஆணையையும் எடுத்துக் காட்டினார்.
"எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும். தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் - இருந்தாலும் இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது. (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924).
1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன. தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில் (பனகல் அரசர் முதன்மை அமைச்சர்) நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி பிற நகராட்சி மாவட்ட நாட்டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலுவோர் பட்டியலை அனுப்பும்போது, பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பனகல் அரசரைப் பிரதமராகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி (G.O.No.205 Dated: 11.2.1924 Law [Education] Department)
இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லுவதற்குக் காரணம் இந்த 2023ஆம் ஆண்டிலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலத்தை வீசிய கொடுமை நிகழ்வது கண்டு வெட்கப்பட வேண்டாமா!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் திட்டம் கழகத்தில் இருக்கிறது.
கடந்த சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் வைக்கம் நூற்றாண்டு விழா பற்றி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1925 நவம்பர் 29இல் வைக்கத்தில் நடைபெற்ற வெற்றி விழாவுக்குத் தந்தை பெரியார் தலைமையேற்க அன்னை நாகம்மையாரும் பங்கு கொண்டார்.
இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என்றால், இன்னும் ஜாதீய கொடுமைகள் தலை தூக்குகின்றனவே - அவற்றின் நச்சு ஆணிவேரை நசுக்கிப் பொசுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியாக செயல்பட வேண்டும் என்பதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக