தொல்.திருமாவளவன், மு.வீரபாண்டியன் பங்கேற்புசென்னை,பிப்.11- உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று (11.2.2023) கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 7.2.2023 அன்று அறிக்கை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் இன்று (11.2.2023) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேக ரன் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளில் ஒருவர் வழக்குரைஞர் மற்றவர்கள் மாவட்ட நீதிபதிகள். ஒன்றியத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஆதிக்க ஜாதியினரான பார்ப்பனர்கள் மட்டுமே நியமிக்கப் படுகிறார்கள். நீதிபதிகளின் நியமனங்களில் விகிதாச்சாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பங்கு குறைந்து கொண்டே போகிறது என்று குறிப்பிட்டார்.
மு.வீரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையில், தந்தை பெரியார்தான் நீதிமன்றத்தையே கேள்விக்குள்ளாக்கியவர். 'ஹிந்து', 'எக்ஸ் பிரஸ்' ஏடுகளைவிட 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார்தான் நீதிமன்றத்தைக் கண்டித்தார். ஜாதி மறுப்பு, மத மறுப்பாளராக மட்டுமல்லாமல், சமத்துவ, வாழ்வியல் கோட்பாடுகளை அளித்தவர் தந்தை பெரியார். அவர் மறைந்து 40ஆண்டுகளுக்கும் மேலானாலும், சமூகநீதிக்கான போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்காக திராவிடர் கழகம் நடத்துகின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கடைசி தொண்டனாக நானும் கலந்துகொள் கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள் வதுடன், போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கழகத் துணைத் தலைவர்
கவிஞர் கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில், நீதிமன்றங்களைக் கண்டித்து இதற்கு முன்னரும் பல போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. எப்போதெல்லாம் ஆதிக்கம் தலைதூக்கு கிறதோ அப்போதெல்லாம் திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியுள்ளது. பெரியார் திடலிலிருந்து உயர்நீதிமன்றம் வரை ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தியதுண்டு. இறுதியில் கழகம் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நான்கு நீதிபதிகள் நியமனத்தின்போது நால் வரையும் பார்ப்பனர்களாக நியமித்தபோது தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது.
தந்தை பெரியார்மீது அவதூறு வழக்கு விசாரணை யின்போது இரண்டு நீதிபதிகளும் பார்ப்பனர்கள். அப்போது நீதிமன்றத்திலேயே தந்தை பெரியார் சொன்னார் ''பார்ப்பான் நீதிபதியாக உள்ள நாடு கடும் புலி வாழும் காடு'' என்றார்.
இந்த நாடு விடுதலை அடைவதற்கு முன்பே 1925இல் சேலத்தில் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசும்போது, ''வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்காது பார்ப்பன நாயகம்தான் இருக்கும்'' என்றார். அண்மைக்காலத்தில்கூட நீதிபதி ஒருவர் பகுததறிவுக்கு எதிரான கருத்துகளைக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை ஏற்படும் என்று அப்போதே தந்தை பெரியார் எச்சரித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் 10 பேர் நீதிபதிகளாக இருந்த நிலை போய் தற்பொழுது 52 நீதிபதிகளில் 11 பேர் பார்ப்பனர்களாக உள்ளனர்.
அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் போராட்டத்தை அறிவித்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். தடையை நீக்கிவிட்டு நிகழ்ச்சிக்கு நீதியரசர் அரிபரந்தாமன் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். இரவில் தடை நீக்கப்பட்டதற்கு பின்னர் காலை 8 மணிக்கு தலைமை நீதிபதியின் வீட்டிற்கே சென்று அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்தார்கள். காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் வந்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றெல்லாம் கூறினார். அப்படி சட்டத்தில் எங்கே உள்ளது என்று கேட்டதும் போய்விட்டார். வழக்கு விசாரணைக்கு முன்பாகவே அந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவியையே கொளுத்திய இயக்கம் இந்த இயக்கம். அந்தப் போராட்டங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைதாகியுள்ளார்.
நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோருகிறார். ஒன்றிய சட்ட அமைச்சர் நீதித்துறையில் இடஒதுக்கீடு இல்லை என்கிறார்.
இந்தப் போராட்டம் வீண் போவதில்லை. நேற்றைக்கும் இன்றைக்கும் இந்த இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்குரிய விலையையும் கொடுக்கின்ற இயக்கமாக உள்ளது என்றார்.
தந்தை பெரியார் ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்ததின் 100 ஆம் ஆண்டு விழாவில் ஒரேயொரு நீதிபதிகூட ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரவில்லையே என்று கூறி, முதலமைச்சர் கலைஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் கலைஞர் உடனே நடவடிக்கை எடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் கடலூர் மாவட்ட நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி வரதராஜனை அடையாளங்கண்டு உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமித்தார். அவர்தான் உச்சநீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் நீதிபதியாவார். இன்னமும் சமூக நீதிக்காக போராடும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்றார்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் தனது கண்டன உரையில், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று படாமல் தனித்தனி ஜாதிகளாக சிதறிக்கிடக்க வேண்டும் என்று செய்து வருகிறார்கள்.
ஹிந்துக்கள் பெயரால் ஜாதியின் பெயரால் பிளவு படுத்துகிறார்கள். இந்தியா முழுவதும் மதத்தின் பெயரால் பிளவு படுத்துகிறார்கள்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி என அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் பாஜகவில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
சமூக நீதிப்போராட்டத்தை தமிழர் தலைவர்தான் முன்னெடுக்கிறார். திராவிடர் கழகம்தான் முதலில் போராட்டம் நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதில் இணைந்து கொள்கிறது என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆர்ப்பாட்ட நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையில், சமூக அநீதிக் கொடியை இறக்கி சமூக நீதிக் கொடியை ஏற்றுவதற்குத்தான் இந்தப் போராட்டம். தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் சமூகநீதியைத்தான் முதலில் வலியுறுத்துகிறது. அது வெறும் அறிவுரையாக இல்லாமல் கட்டளையாக உள்ளது. அதனை மீறுகிறார்கள் என்பதற்குத்தான் இந்தப் போராட்டம். இந்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1928இல் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இடஒதுக்கீடு இருந்தது. 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கு 16 விழுக்காடு 5 மடங்காக தரப்பட்டது.
மனுவே போடாத ஓர் அம்மையாரின் வழக்கில் முறைப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வகுப்புரிமைக்கு எதிராக அன்றைய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனாலேயே முதல் சட்டத்திருத்தம் 15(4) தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தால்தான் உருவானது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதற்கும் வகுப்புரிமை கிடைத்தது.
சமூகநீதியில் தமிழ்நாடு மாநிலம்தான் முன்னோடியாக உள்ளது.
இந்தப் போராட்டம் முடிவல்ல. ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும் வரை போராடுவோம் என்றார்.
ஆர்ப்பாட்ட நிறைவாக வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.