திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி மூலமாக நேற்று (9.5.2021) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கடவுள் மறுப்பைக் கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.
தலைமை வகித்த கழகத் தலைவர் முன்னுரை வழங்கினார். தொடர்ந்து தத்தம் கருத்துகளை எடுத்துக் கூறினர் கழகப் பொறுப்பாளர்கள்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, விவசாய தொழிலா ளர் அணி மாநில செயலாளர் இராயபுரம் கோபால், தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி யன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மகாராட்டிர மாநில திராவிடர் கழகத் தலைவர் மும்பை கணேசன், கருநாடக மாநில திரா விடர் கழகச் செயலாளர் முல்லைக்கோ, விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் க.மு.தாஸ், தஞ்சை மண்டல கழக செயலாளர் குடந்தை குருசாமி, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூசி.இளங்கோவன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் உரையாற்றினர். சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (9.5.2021) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரங்கல் தீர்மானம் உட்பட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதிலே பார்ப்பனர்கள் கச்சை கட்டி நின்றனர். பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றியது. பா.ஜ.க. இடம் பெற்ற அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.
"பொதுவாக நம் நாட்டில் நடைபெறுவது அரசியல் போராட்டம் அல்ல, ஆரியர் - திராவிடர் போராட்டம்" என்பார் தந்தை பெரியார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது புரியாது; கடந்த கால வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால்தான் இந்த உண்மை புரியும்.
நடந்து முடிந்த தேர்தலில் பார்ப்பன ஊடகங்களால் நடத்தப்பட்ட ஒரு சார்புப் பிரச்சாரம் - மத்திய பார்ப்பன பா.ஜ.க. ஆட்சியின் தந்திரங்கள் இவற்றை எல்லாம் முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி - தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணே- திராவிட மண்ணே என்பதை வரலாற்றுக்கு மீண்டும் ஒரு முறை முரசடித்துப் பிரகடனப்படுத்தி விட்டது.
திமுகவின் மூன்றாவது முதலமைச்சராக தளபதி மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏராளமான சவால்கள் அவரை நோக்கித் தோள் தட்டி நிற்கின்றன. கஜானா காலி என்பதையும் கடந்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடன் என்ற நிலைதான்.
சரியான திட்டமிடலின் அடிப்படையில் இவற்றையெல்லாம் புறங்கண்டு தி.மு.க. ஆட்சி மக்கள் நலன் சார்ந்து, சாதனை மிக்க ஆட்சியாகக் கம்பீரமாகப் பவனி வரும் என்பதில் அய்யமில்லை.
"இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதில் திராவிடர் கழகம் வாளும் கேடயமுமாக இருக்கும்" என்று திராவிடர் கழகத் தலைவர் நேற்றைய காணொலியில் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.
எந்தவிதப் பிரதிப் பலனையும் எதிர்பார்க்காமல் மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு திராவிடர் கழகம் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் முக்கியமாக - தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த - அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நிறைவேற்றுவதற்கு திமுக ஆட்சி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. தந்தைபெரியார் மறைந்தபோது - முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது குறித்துக் கூறி இருக்கிறார். அந்த முள் என்பது இந்த அர்ச்சகர் பிரச்சினையை செயல்படுத்தாத நிலையைத்தான் குறிப்பிடும்.
203 பேர் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினை சந்தித்த நேரத்தில்கூட தமிழர் தலைவர் அதனை நினை வூட்டினார்.
இதனைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கான புத்தொளியைக் காணப் போகிறோம். ஜாதி ஒழிப்புத் திசையில் இது மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கப் போகிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் ஹிந்துக்கள்தான் என்று கூறும் பார்ப்பனர்கள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார்கள் இந்தப் பிரச்சினையில் சரியாக நடந்து கொள்ளவில்லையானால், மிச்ச சொச்ச நடமாட்டமும் பூண்டற்றுப் போகும் என்பது மிகப் பெரிய உறுதியாகும்.
அண்டை மாநிலமான கேரளாவில் பெரிய அளவில் இந்தப் புரட்சி நடந்தேறியுள்ளது. தமிழ்நாட்டிலும் இருவர் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர்.
முத்தமிழ் அறிஞர் நிறைவேற்றிய சட்டத்தை அவரது திருமகனார் முழு வெற்றியாக மலர்ச்சி அடையச் செய்வார் என்பதில் அய்யமில்லை.
இந்த 203 பேரையும் அர்ச்சகராக ஆக்குவதோடு, அர்ச்சகர் பயிற்சியையும் தொடர்ந்து நடத்தி - தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லாக் கோயில்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப் படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் அந்த நடப்பைப் பார்த்திட நம் அகமும் புறமும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறது.
பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்ட வடிவம் கொடுத்தார். அதுபோலவே இந்த அர்ச்சகர் சட்டமும் தமிழர்களின் தன்மான வரலாற்றில் முக்கிய பொன்னேடாக, கல்வெட்டாக அமையும். அந்த நாளை விரைவில் எதிர்ப்பார்ப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக