திங்கள், 23 டிசம்பர், 2019

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்

தந்தை பெரியார் நினைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.  24.12.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு  சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை வழியாக பெரியார் திடலை அடைகிறது. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்  உள்ளிட்ட பலரும் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள 21அடி உயர பெரியார் முழு உருவச்சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமையில் மாலை அணிவிக்கப் படுகிறது.

பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம், சுயமரியாதை சுட ரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.

மாலை நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் விருது வழங்கும் விழா, புத்தக வெளியீட்டு விழா 24.12.2019 அன்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்று நூல்களை வெளியிட்டு, விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றுகிறார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்கிறார்.

நூல் வெளியீட்டு விழா

புலவர் பா.வீரமணி தொகுப்பில் ஆசிரியர் கி.வீரமணியை பதிப்பாசியராகக் கொண்டு, ‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்கள் வெளியிடப்படுகின்றன.

‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.750. பெரியார் நினைவு நாளில் சிறப்புத்தள்ளுபடியில் ரூ.600க்கு வழங்கப்படுகிறது.

பெரியார் விருது வழங்கும் விழா

பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன், புதுக் கோட்டை மருததுவர் சூ.செயராமன், தோழர் திருமுருகன்காந்தி ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, முனைவர் மு.நாக நாதன், புலவர் பா.வீரமணி ஆகியோர் உரையாற் றுகின்றனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி நன்றி கூறுகிறார்.

பெரியார் மணியம்மை மருத்துவமனையில்

இலவச பொது மருத்துவ முகாம்

24.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் பெரியார் நினைவு நாளையொட்டி நடைபெறுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக