-உண்மை இதழ், 1-15.4.17
- வை.கலையரசன்
பல்லாயிரம் ஆண்டுகாலமாக பிறப்பின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டில் நடைபெற்ற சமூகப் புரட்சிப் போராட்டங்களின் விளைவாக ஓரளவிற்கு கல்வி உரிமை கிடைத்தது.
அதிலும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கல்விகள் எட்டாக் கனியாகவே இருந்தன. மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றுகூட சமூக அநீதி, சட்ட விதிமுறை அமலில் இருந்தது. தந்தை பெரியாரின் போராட்டத்தால், திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சியாளர்களால் அது நீக்கப்பட்டது. தொடர்ந்து இந்தித் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், புதிய கல்வித் திட்டம், வகுப்புரிமைக்குத் தடை என்று பல உருவங்களில் வந்த தடைகளைத் தாண்டியே ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
இன்று சமூகநீதிக் கொள்கையை ஒழிக்க கொல்லைப்புற வழியாக ஆரியம் நுழைகிறது. அத்தகைய முயற்சிதான் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதித் தேர்வு எனப்படும் (‘நீட்’) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘கல்வி’ பொதுப்பட்டியலில் இருப்பதை வாய்ப்பாகக் கொண்டு இத்தேர்வு திணிக்கப்படுகிறது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் கடந்த ஓராண்டுக்கு மேல் போராடி வருகிறது. கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், ஆசிரியர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு மாநாடு, துண்டறிக்கைப் பிரச்சாரம் எனப் பல்வேறு முறைகளில் பிரச்சாரம் செய்து வரும் திராவிடர் கழக மாணவரணிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய வேலைத் திட்டத்தினைக் கொடுத்தார். அதுதான் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம்.
சென்னை, தருமபுரி, கோவை, தென்காசி, கடலூர் ஆகிய அய்ந்து இடங்களில் இருந்து, அய்ந்து குழுக்களாகப் புறப்பட்டு இரு சக்கர வாகனப் பரப்புரை பயணம், 21.03.2017 அன்று விருத்தாசலத்தில் அனைத்தும் சங்கமித்து நிறைவு விழா நடைபெறும் என்று அறிவித்தார். உடனே புலியெனப் புறப்பட்டது இளைஞர் மாணவர் படை.
‘விடுதலை’யில் இதற்கான அறிவிப்பே இப்பயணத்தின் தனித்தன்மையைக் காட்டும் வகையில் இருந்தது. பயணிக்கும் படைவீரர்களுக்கு தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம், வண்டிக்கான பதிவுச் சான்றிதழ், வண்டிக்கான காப்பீடு, பயணிப்போருக்கு காப்பீடு ஆகியவை கட்டாயப்படுத்தப்பட்டு, அனைத்தின் நகலும் புறப்படும் முன்பே பெறப்பட்டது. அதன் பின்னரே தோழர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முதல் குழு, சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம், வடசென்னை, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய கழக மாவட்டங்களைக் கடந்து 639 கிலோ மீட்டர் பயணம் செய்து 67 இடங்களில் பரப்புரை செய்து மங்கலம்பேட்டை வழியே விருத்தாசலத்தை வந்தடைந்தது.
இரண்டாம் குழு, தருமபுரியில் புறப்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், மேட்டூர், நாமக்கல், ஆத்தூர், பெரம்பலூர் ஆகிய கழக மாவட்டங்கள் வழியே பயணித்து 54 இடங்களில் பரப்புரை செய்து வேப்பூர் வழியே விருதாச்சலம் வந்தடைந்தது.
மூன்றாம் குழு, கோவையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபி, ஈரோடு, கரூர், இலால்குடி, அரியலூர் ஆகிய கழக மாவட்டங்களின் வழியே பயணித்து, 57 இடங்களில் பரப்புரை செய்து பெண்ணாடம் வழியே விருதாச்சலம் வந்தடைந்தது.
நான்காவது குழு, தென்காசியில் இருந்து புறப்பட்டு, இராஜபாளையம், விருதுநகர், உசிலம்பட்டி, தேனீ, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், குடந்தை, அரியலூர் ஆகிய கழக மாவட்டங்களின் வழியே 664 கிலோமீட்டர் பயணம் செய்து, 33 இடங்களில் பரப்புரை செய்து கருவேப்பிலைக்குறிச்சி வழியாக விருத்தாசலம் வந்தடைந்தது.
அய்ந்தாம் குழு, கடலூரில் புறப்பட்டு, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர், குடந்தை, அரியலூர் கழக மாவட்டங்கள் வழியே 731 கிலோ மீட்டர் பயணித்து, 54 இடங்களில் பரப்புரை செய்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலத்தை வந்தடைந்தது.
நிறைவு விழா விருத்தாசலம் வானொலித் திடலில் 21.03.2017 அன்று நடைபெற்றது.
இதில் எழுச்சியுரையாற்றிய தமிழர் தலைவர் தமிழ்நாடே சிறைக் கூடமாகும் என்று எச்சரித்தார். மேலும், “எங்கள் இளைஞர்கள் மேற்கொண்ட இந்தப் பயணம், அரும்பணி வீண் போகாது. தங்களுக்காக அல்ல; உங்களுக்காக, நமது கிராமத்துப் பிள்ளைகளுக்காக, - ஏர் பிடிக்கும் கைகள் ஸ்டெதஸ்கோப்பை ஏந்த வேண்டும் என்ற நோக்கிற்காக இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டனர் எங்கள் கருஞ்சட்டை வீரர்கள்.
கோரிக்கைகள் நிறைவேற கோடி கைகள் உயரும்; எங்கள் பயணம் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் - இலட்சியம் நிறைவேறும்வரை!
“எங்கள் தோழர்கள் பரப்புரைப் பயணம் செய்து வந்துள்ளனர். இப்பொழுது ஒரு இடைவெளிதான் அடுத்தடுத்துத் திட்டங்கள் தயார் - அவை செயல்படுத்தப்படும்.
நெடுவாசல் போய்
தெருவாசல் வரவில்லையா?
அடுத்து சிறைவாசல்தான்!
சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் ‘நீட்’ விலக்குச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவிக்கவேண்டும்; - கையொப்பம் இடவேண்டும்.
நாங்கள் கேட்பது பிச்சையல்ல - உரிமை! மாநில அரசும் சத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரை முடிவு வரவில்லை.
தமிழ்நாடே சிறையாகும்!
மோடி அரசே,
தாமதிக்காதே,
ஒப்புக்கொள்.
கையொப்பமிடு!
இல்லையென்றால்
தமிழ்நாடே சிறைக்கூடமாகும்.
சமூகநீதிக்காக ரத்தம் சிந்தவும் தயார்!’’
குலக்கல்வியை ஒழித்தவர்கள் நாங்கள்
பெரியார் கொடுத்த ‘ஆயுதம்‘ எங்களிடம் இருக்கவே இருக்கிறது. அலட்சியப்படுத்த நினைக்காதீர்கள்’’, என்று எழுச்சியுரையாற்றினார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக