வெள்ளி, 12 மே, 2017

குன்றத்தூரில் கனிமொழி - விஜயகுமார் - மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை


மனிதன், தானாகப் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை தந்தை பெரியார் ‘தொண்டறமே’ வாழ்வின் இலக்கணம்குன்றத்தூர், மே 9- மனிதன் தனக்காக மட்டும் வாழக்கூடாது தந்தை பெரியார் வாழ்ந்து காட்டிய அந்தத் தொண்டற வாழ்வே சிறந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
30.4.2017 அன்று மாலை குன்றத்தூரில் விஜயகுமார் - கனிமொழி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா வினை நடத்தி வைத்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது உரை வருமாறு:

மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய அருமை நண்பர்கள் அன்பழகன் - வனிதா ஆகியோருடைய செல்வன் திராவிடச்செல்வன் விஜயகுமார் அவர்களுக்கும்,

அதேபோல, நம்முடைய அருமை இயக்கப் பொறுப்பாளர் தோழர் ஆறுமுகம் - சந்திரா ஆகியோருடைய மகள் செல்வி கனிமொழி அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்திய, பாராட்டிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மணவிழா முற்றிலும் ஒரு 
புதுமையான மணவிழா!

அருமைத் தோழர் ஆறுமுகம் - சந்திரா ஆகியோருடைய செல்வி கனிமொழி அவர்களுக்கும், அருமை நண்பர்கள் அன்பழகன் - வனிதா ஆகியோரின் செல்வன் விஜயகுமாருக் கும் நடைபெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா குன்றத்தூரில் ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றது.

இது முற்றிலும் ஒரு புதுமையான மணவிழா. என்ன புதுமை என்றால், எல்லா திருமணங்களும் காலையில்தான் வைத்திருப்பார்கள். ஆனால், இந்தத் திருமணத்தை நம் முடைய தோழர் ஆறுமுகம் அவர்களும், அவருடைய வாழ்விணையர் சந்திரா ஆகியோரும் மிகத் தெளிவானவர்கள் கொள்கையில். அவர்கள் பெற்றோர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்களோ, அதைவிட தெளிவானவர்கள்  மணமக்கள்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்...

எனவே, எல்லோரும் தெளிவாக இருப்பதினால், துணி வோடு இந்த மணவிழாவினை மாலையில் வைத்திருக்கிறார் கள். அப்படி மாலையில் வைப்பதினால் என்ன வசதி என்றால், எல்லோரும் அவசரப்படாமல், அமைதியாக, நிம்மதியாக அமர்ந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சீரியல் கள்கூட தொலைக்காட்சியில் இல்லாத நேரம்.

ஆக, இதுபோன்று இருக்கக்கூடிய ஒரு கட்டத்தில், இங்கே நிறைய தாய்மார்களை நான் பார்க்கிறேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், இந்தக் குன்றத்தூர் மாநகருக்கு வரக்கூடிய வாய்ப்பும் - பொதுமக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக காலை நேரம் என்பது வசதியில்லாத நேரமாக இருக்கிறது. திங்கள்கிழமை நல்ல நாள் என்று நினைத்து, நிறைய பேர் மணவிழாவிற்கு ஏற்பாடு செய்வார்கள். வாரத்தி னுடைய முதல் நாள் அது. அவசர அவசரமாக அலுவலகத் திற்குச் செல்லவேண்டும்; கல்லூரிக்குச் செல்லவேண்டும் - கடமையாற்றவேண்டும் என்று நினைத்து, மணவிழாவிற்கு வந்தவர்கள் அவசர அவசரமாகப் போவார்கள்.

மாலை நேரத்தில்,  மணவிழாவிற்கு ஏற்பாடு செய்ததற்கு முதல் பாராட்டு

அப்படியில்லாமல், இன்றைக்கு எல்லோரும் அமைதியாக, நிம்மதியாக அமர்ந்து கருத்துகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு மணவிழா இது.

நாளும், கோளும் மதிப்போருக்கு இல்லை என்று ஒரு பழமொழி உண்டு.

நாளும், கோளும் நம்மையென்ன செய்யும்; நாளும் ஒன்றும் செய்யாது; கோளும் ஒன்றும் செய்யாது; நாம் தான் பயந்துகொண்டிருக்கிறோம்.

ஆக, உங்களைப் பொறுத்தவரையில், நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், மாலை நேரத்தில், துணிச்சலாக இந்த மணவிழாவிற்கு ஏற்பாடு செய்ததற்கு முதல் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் தமிழ்நாட்டை விட்டுத் தாண்டி, ஆந்திராவிற்குச் சென்றாலும், டில்லிக்குச் சென்றாலும் - ஆந்திராவில் மாலை நேரத்தில்தான் மணவிழாக்களை வைப்பார்கள். அதே போன்று டில்லியில் இரவு 12 மணிக்குத்தான் மணவிழாக்களை நடத்துவார்கள்.

ஆகவே, நல்ல புரட்சிகரமான ஒரு மாற்றம். நேரம், காலம் எல்லாம் நம்முடைய வசதியைப் பொறுத்ததுதான். ஆனால், நம்முடைய மூளையில் ஒரு பயத்தை உண்டாக்கி வைத்து விட்டார்கள். எல்லாவற்றிலும் பயம். அந்தப் பயத்தினால், நம்மைக் கோழைகளாக்கி விட்டார்கள்.

நமக்கு முதுகெலும்பு இருப்பதை ஞாபகப்படுத்தினார்

தந்தை பெரியார் என்ற அந்த மகத்தான சமூகப் புரட்சி யாளர் வந்துதான், நம்மை வீரமுள்ள மனிதர்களாக ஆக் கினார்; நமக்கு முதுகெலும்பு இருப்பதை ஞாபகப்படுத்தினார். அதுதான் மிக முக்கியம்.

பெரியார் செய்த காரியமே, தமிழ் மக்களுக்கு முதலில் முதுகெலும்பை கொடுத்தார். இப்பொழுதும் சிலருக்கு முதுகெலும்பு இருப்பதுபற்றி ஞாபகம் இருப்பதில்லை. கீழே விழுந்தவன், விழுந்தே கிடக்கிறான்.

அந்த சூழ்நிலையில், இந்த மணவிழாவில் சில செய்தி களை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்த மணமக்கள் செல்வர்கள் விஜயகுமார் - கனிமொழி இரண்டு பேருமே மகிழ்ச்சியோடு இங்கே அமர்ந்திருக் கிறார்கள். மணமகன் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி. படித்திருக்கிறார். மணமகள் எம்.காம் படித்திருக்கிறார்.

படிக்கலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம்

ஒரு காலத்தில் நமக்குப் படிப்பு வராது என்று சொன்னார் கள்; நம்மையெல்லாம் படிக்கக்கூடாத ஜாதி என்று சொன்னார் கள். நாம் கீழ்ஜாதி என்று சொன்னார்கள். நாம் படிக்கலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கிய இயக்கம் ஒன்று உண்டென்றால், அதுதான் திராவிடர் இயக்கம் - நூறாண்டு கண்டுள்ள திராவிடர் இயக்கம்.

சிலர் புரியாமல் சொல்கிறார்கள், திராவிடத்தால் வீழ்ந் தோம், வீழ்ந்தோம் என்று. திராவிடத்தால் யாரும் வீழ்ந்ததே கிடையாது - எல்லோரும் எழுந்துதான் இருக்கிறார்களே தவிர, வீழ்ந்தது கிடையாது.

திராவிடர் இயக்கம் என்ன செய்திருக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் காட்டவேண்டும் என்றால், வேறு எங்கும் செல்லவேண்டிய அவசியமில்லை. இங்கேயுள்ள மணமக்களு டைய டிகிரியைப் பார்த்தாலே போதும்.

நிறைய தாய்மார்கள் இங்கே வந்திருக்கிறார்கள் - தாய்மார்களின் சிந்தனைக்கோர் கேள்வி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக - திராவிடர் இயக்கம் தொடங்குவதற்கு முன்பாக -  சரசுவதி என்று பாட்டிக்குப் பெயர் இருக்கும். ஏன் சரசுவதி என்று பெயர் வைக்கிறார்கள்? கல்விக்குக் கடவுள் சரசுவதி என்பதினால். துறை வாரியாகப் பிரித்துவிட்டார்கள் கடவுள்களை. அந்தப் பாட்டிக்குப் பெயர் சரசுவதி - ஆனால், அவருக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது.

நம்மவர்கள் அத்துணை பேரும் படிக்கவேண்டும் என்று சொன்னார்

ஆனால், இன்றைக்குப் பேத்தி சரசுவதி டாக்டராக இருக் கிறார்; வழக்குரைஞர் சரசுவதியாக இருக்கிறார்; நீதிபதி சரசு வதியாக இருக்கிறார்; பொறியாளர் சரசுவதியாக இருக்கிறார்.

இது எப்படி நடந்தது? சரசுவதி பூஜை செய்ததினால்தான் நடந்தது என்று யாராவது சொன்னால், சரசுவதி பூஜையைத் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே - ஏன் அப்பொழுதெல்லாம் நடக்காத இது - இப்பொழுது நடைபெற்றது என்று கேட்டால், தந்தை பெரியார் என்கிற மாமனிதர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நம்மவர்கள் அத்துணை பேரும் படிக்கவேண்டும் என்று சொன்னார்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்கள். நம்முடைய பாட்டி காலத்தில், பெண்களைப் படிக்க வைக்காதே என்றார்கள். அதுமட்டுமல்ல, பெண் களுக்கு உரிமையே கொடுக்காத சமுதாயத்தில், பெண்களுக்கு சம உரிமையைக் கொடுக்கச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதில், இந்த மாவட்டம் பழைய செங்கல்பட்டு மாவட்டம். இதற்குப் பக்கத்தில்தான் செங்கல்பட்டு இருக்கிறது. செங்கல் பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில்தான் - நாம் எல்லாம் பிறப்பதற்கு முன் - சுயமரியாதை இயக்கத்தில் - 1929 ஆம் ஆண்டு மிகத் தெளிவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி னார்கள்.

எல்லோரும் சமமாகப் படிக்கவேண்டும் என்றார்கள்; பெண்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஆசிரியை களாக பெண்களை நியமனம் செய்யவேண்டும்; பெண்களுக் குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்றார்கள்.
அதனை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த பொழுது முதலமைச்சர் கலைஞர் பெண்களுக்கு சொத் துரிமை சட்டத்தை நிறைவேற்றினார்.

புரட்சியில் பூத்த மணமக்கள்தான்

இன்றைக்கு ஆண்களுக்கு இருக்கின்ற வாய்ப்பு, பெண் களுக்கும் இருக்கிறது. ஆகவே, இந்த மணமக்களே புரட்சியில் பூத்த மணமக்கள்தான்.

ஒரு துளி ரத்தம் சிந்தாமல், ஆயுதத்தை எடுக்காமல், வன்முறை இல்லாமல், பிரச்சாரத்தினால், இன்றைக்கு இவ் வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே மணமக்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக அமர்ந் திருக்கிறார்கள்.

ஆனால், இதே வைதீக முறையில் திருமணம் நடைபெற்று இருந்தால், புரோகிதர் மாங்குச்சி சுள்ளியைப் போட்டு தீயை வளர்க்க, புகையினால் மணமக்கள் கண்களை கசக்க, என் னங்க மணமகள் அழுகிறார் என்று மூலையில் ஒரு பாட்டி கேட்க, ஏதோ இருக்கும்போல இருக்கு என்று இன்னொருவர் கதை சொல்ல - இவை அத்தனையும் இல்லாத திருமணம் என்றால், இதனைக் கொடுத்த தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

துணிச்சல் - மகிழ்ச்சி இருந்தாலே வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை. மகிழ்ச்சி என்பது இன்னொருவர் கொடுப்பதன்று. நாம் பெறுவதுதான் மகிழ்ச்சி என்பது. நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் சட்டி, பானையின்மீது கோபமில்லை.

வைதீக திருமண முறையில், பானை, சட்டியை அடுக்கி வைப்பார்கள்; குத்து விளக்கை ஏற்றி வைப்பார்கள். இப்பொழுது மின்சாரம் இருக்கும்பொழுது, குத்து விளக்கு தேவையில்லை. மின்சாரம் கண்டுபிடிப்பதற்குமுன், குத்து விளக்கைக் கண்டுபிடித்தவன் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மேல் அறிவாளிதான், அதிலொன்றும் சந்தேகமில்லை.

ஆனால், இன்றைக்கு குத்துவிளக்கை வைத்து அதனை சுற்றி வருவார்கள் - சரியாக எண்ணெய் ஊற்றாமல், அந்தத் திரி உள்ளிழுத்துக்கொண்டே போகும். அப்படி அந்த விளக்கு அணைந்துவிட்டால், ஏதோ கெட்டு சகுனம் - என்னமோ என்று பயப்படுவார்கள். அப்படியொரு பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இவ்வளவு பெரிய மணவிழாவை நடத்தி, நாமெல்லாம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கின்ற நேரத்தில், மணமக்கள் இரண்டு பேரையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள் - நம்முடைய தோழர்கள் பகுத்தறிவாளர்கள் அதுபோன்று செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால், சடங்கு சம்பிரதாயத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் என்ன சொல்வார்கள், முதன் முதலில் திருமணம் ஆகி வருகிறாய், வலது காலை எடுத்து வைத்து வா என்பார்கள். இதற்கு ஒரு திரைப்படப் பாடலையே பாடியிருக்கிறார்கள். ஏன் இடதுகால் என்ன தவறு செய்தது? அது என்ன நொண்டிக் காலா? பயன்படாத காலா? அப்படி யொன்றும் இல்லையே! பெரியார்தான் கேட்டார், ஏன் இடதுகாலை வைத்தால் என்னாகும்? என்றார்.

இடதுகாலில் அடிபட்டால் அப்படியே விட்டு விடு வோமோ சிகிச்சை பெறாமல். வலது காலில் அடிபட்டால்தான் சிகிச்சை மேற்கொள்வோமா?

நாட்டையே காப்பாற்றுகின்ற ராணுவம் இடதுகாலை முதலில் எடுத்து வைக்கிறார்கள்

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நம்முடைய நாட்டை எல்லையில் நின்று காப்பாற்றுகிற வர்கள் யார்? ராணுவம். நம்முடைய ஊரை காப்பாற்றுபவர்கள் யார்? காவல்துறை. இந்தக் காவல்துறையாக இருந்தாலும், ராணுவமாக இருந்தாலும், உடற்பயிற்சி கொடுக்கும்பொழுது, லெப்ட் - ரைட், லெப்ட் - ரைட் என்றுதான் சொல்வார்கள். இடது காலைத்தான் எடுத்து வைக்க சொல்வார்கள்.

இல்லை, இல்லை நாங்கள் எல்லாம் அர்த்தமுள்ள இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் - இடதுகாலை எடுத்து வைக்க மாட்டோம் - வலது காலைத்தான் எடுத்து வைப்போம் என்றால், வேலையை விட்டுப் போ என்று சொல்லி விடு வார்கள். நாட்டையே காப்பாற்றுகின்ற ராணுவம் இடதுகாலை முதலில் எடுத்து வைக்கிறார்கள். வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் கால்களைப் பிரித்து வைக்கிறார்கள். கால் களைப் பிரித்தவர்கள் - ஆட்களைப் பிரிக்காமல் இருப் பார்களா? அதனால்தான், இடங்கை - வலங்கை என்கிறார்கள்; இது ஒரு ஜாதி -அது ஒரு ஜாதி என்கிறார்கள்.

பெரியார் செய்த மகத்தான புரட்சி

ஆகவே, இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், ஜாதியில்லை - மதமில்லை.

பெரியார் செய்த மகத்தான புரட்சி என்பது சாதாரண புரட்சியல்ல. நம்மைப் படிக்க வைத்து, நம்மவர்களுக்கெல்லாம் உத்தியோகம் வாங்கிக் கொடுத்து, மூடநம்பிக்கை இல்லாமல் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்.

என்னுடைய திருமணத்தை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், புரட்சிக்கவிஞர் அவர்கள் எல்லோரும் இருந்து நடத்தினார்கள். 58 ஆண்டுகளுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மாலையை எடுத்துக் கொடுத்தார்கள்.  அந்த நேரத்தை கொழுத்த ராகுகாலம் என்பார்கள்; அந்த ராகுகாலத்தில்தானே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு என்ன குறை. பயத்தைத் தூக்கி எறிந்தால், எந்த சங்கதியும் துணிச்சலாக இருக்கும்.

மூடநம்பிக்கையை ஒழித்துவிட்டால், தன்னம்பிக்கை தானே வளரும்

ஆகவேதான், சுயமரியாதைத் திருமணம் செய்துகொள் ளக்கூடியவர்கள் காலடி எடுத்து வைக்கும்பொழுதே உறுதி யாக எடுத்து வைக்கிறார்கள். பயத்திற்கு இடமே இல்லாமல், துணிச்சலோடு எடுத்து வைக்கிறார்கள். மூடநம்பிக்கைக்கு எதிரானது தன்னம்பிக்கை. மூடநம்பிக்கையை ஒழித்து விட்டால், தன்னம்பிக்கை தானே வளரும். இந்த மணமக்கள் இருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள்.

எனவே, அருமை மணமக்களே, இன்றைக்கு நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்; சுயமரியாதைத் தத்துவப்படி வாழ்ந்து வருகிறீர்கள். மணமகனுக்கு அறிவுரையெல்லாம் தேவையில்லை. அவர் வாழ்வியல் சிந்தனையையே ஆய்வு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இந்த மணமக்கள் எல்லா வகைகளிலும் சிறப்பாக வாழ்வார்கள் என்பது திண்ணம்.

அண்ணா அவர்கள் ஒரு அற்புதமான கருத்தை சொன்னார்.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

எனவே, நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தன்முனைப்பு இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். அப்படி வாழ்ந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

எளிமையாக வாழுங்கள் - இனிமையான வாழ்க்கையாக அது அமையும்.  சிக்கனமாக வாழுங்கள் - சீரான வாழ்க்கை யாக அது அமையும்.

வரவுக்குட்பட்டு செலவு செய்யவேண்டும் என்றார் தந்தை பெரியார். திருமணங்களைகூட ஆடம்பரமாக செய்யவேண்டிய அவசியமில்லை. மிகவும் எளிமையாக செய்யவேண்டும் - சிக்கனமாக செய்யவேண்டும் என்றார்.
ஆண் - எஜமானன் அல்ல. பெண் - அடிமையல்ல. இரண்டு பேரும் உற்ற தோழர்கள். அதுதான் சுயமரியாதைத் திருமணத்தினுடைய தத்துவமாகும்.

இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை

எனவே, அந்த வகையில் மணமக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். நான் எந்த மணவிழாவிலும் மணமக்களுக்கு அறிவுரை சொல்லுவதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக வேண்டுகோளாக வைக்கிறோம்.

அன்பார்ந்த இந்த மணமக்கள், படித்த மணமக்கள், பகுத்தறிவாளர்களாக இருக்கக்கூடிய மணமக்கள் - எல்லா வகைகளிலும் வெற்றி பெறுவார்கள் - வெற்றி பெறவேண்டும். ஆனால், ஒன்றே ஒன்று, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும், நன்றி உணர்ச்சியை மறக்காதீர்கள்; நன்றி காட்ட மறக்காதீர்கள். உங்கள் பெற்றோர்தான் உங்களுடைய வளர்ச்சிக்குக் காரணம். அந்தப் பெற்றோரிடம் பாசம் காட்ட மறக்காதீர்கள்; நன்றி காட்ட மறக்காதீர்கள். என்றென்றைக்கும் அந்த உணர்வோடு இருங்கள். உங்களுக்கு யார் யார் உதவினார்களோ, அவர்களுக்கு உதவுங்கள். உதவாதவர் களுக்கும் சேர்ந்து உதவுங்கள்.

வைதீக முறையில் மணவிழா செய்பவர்கள் என்ன சொல் வார்கள், காசிக்குப் போகிறேன், சாமியாராகப் போகிறேன், கோபித்துக்கொண்டு போகிறேன் என்று ஒரு சடங்கை வைத்திருப்பார்கள். இல்லறம் - துறவறம் - சந்நியாசியாகப் போகிறேன் என்பார்கள். அதெல்லாம் இந்த மணமுறையில் கிடையாது. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து காட்டுவதற்கே என்பது தான் மிக முக்கியம்.

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை!’’

அப்படி வருகிறபொழுது மிக அழகாக எடுத்துச் சொல் லக்கூடிய ஒரு கருத்து என்னவென்றால், இல்லறம் - துறவறம் என்று சொன்ன இடத்தில், துறவறம் என்றால், இல்லறத்தை விட்டுப் போய்விடவேண்டும் என்றார்கள். 
பெரியார் அவர்கள் சொன்னார்,

இல்லறம் - தொண்டறம் என்றார். தொண்டறம் என்றால், எல்லாருக்கும் தொண்டு செய்யவேண்டும்; உதவி செய்ய வேண்டும். சமுதாயத்தில் வாழ்கின்ற நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை’’ என்றார் தந்தை பெரியார்.

எனவே, பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் சிறப்பாக வாழுங் கள் - துணிச்சலாக வாழுங்கள் - தன்னம்பிக்கையோடு வாழுங்கள் - எளிமையாக வாழுங்கள் - மூடநம்பிக்கை இல்லாமல் வாழுங்கள்.

இந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். சுயமரியாதை இயக்கத்திற்கு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுமா என்று ஒரு காலத்தில் மிரட்டிப் பார்த்தார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் இம்முறையில் மணவிழாவினை நடத்திக் கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - மலேசியாவில் நடைபெறுகிறது - சிங்கப்பூரில் நடைபெறுகிறது - லண்டனில் நடைபெறுகிறது - ஜெர்மனில் நடைபெறுகிறது - உலகில் பல இடங்களில் பரவலாக நடைபெறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழக 
ஆட்சிக்கே உண்டு

தமிழ்நாட்டில் சுயமரியாதை மணமுறை செல்லாது என்று நிலையை மாற்றிய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கே உண்டு. தமிழக அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கி, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆக்கினார்.

மிகத் தெளிவாகவே சட்டத்தை இயற்றினார். அந்த அடிப் படையில், இப்பொழுது சட்டத்தாலும் செல்லும், சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மணமுறையாகும் இது.

எனவே, இந்த மணமக்கள் நம்முடைய இருபெரும் தலைவர்கள் - இதற்குக் காரணமான தலைவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்கு நன்றி கூறி, இப்பொழுது வாழ்க்கை  துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை இங்கே  நடத்திக் கொள்கிறார்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
குன்றத்தூரில் உள்ள சிறீ இராமச்சந்திரா மகாலில் 30.4.2017 அன்று அ.விஜயகுமாருக்கும் ஆ.கனிமொழிக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். அனைவரையும் வரவேற்று தாம்பரம் மாவட்ட இணைச் செயலாளர் கு.ஆறுமுகம் உரை யாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ் சாக்ரடீஸ் இணைப்புரை வழங்கினார். சென்னை மண்டல தலைவர் தி.இர.இரத்தின சாமி, மண்டல செயலாளர் வீ.பன்னீர்செல்வம், வடக்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திண்டிவனம் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் கல்யாண ராமன், தமிழாசிரியர் சுப்ரமணியன், திண்டிவனம் ராசேந்திரன், இணைப் பேராசிரியர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் ஆகியோரது உரைக்குப் பின்னர் மணமக்களை வாழ்த்தி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

கு.ஆறுமுகம் - ஆ.சந்திரா ஆகியோரின் மகள் ஆ.கனி மொழிக்கும், ஏ.அன்பழகன் - அ.வனிதா ஆகியோரின் மகன் அ.விஜயகுமாருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார். மணவிழாவிற்கு மு.காசி நாதன், கு.ஏழுமலை, பெ.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணவிழாவில் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், விடுதலை நகர் ஜெயராமன், கே.விஜயகுமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஒளி வண்ணன், மாவட்டச் செயலாளர் தென்னரசு, வெங்கடேசன், பொழிசை கண்ணன், சன் சரவணன் சுரேஷ், ஓவியச் செல்வன், கமலக்கண்ணன், கண்ணதாசன், ராஜா, கோபி, அன்பழகன் மகாலிங்கம், தாஸ், செந்துறை இராசேந்திரன், செங்கல்பட்டு சுந்தரம், செ.ரா.பார்த்தசாரதி, மறைமலை நகர் முத்து, வரதன் (திமுக), மணியம்மை மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-விடுதலை,9.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக