வியாழன், 27 ஏப்ரல், 2017

உழவர்களுக்காக முழு அடைப்பு - எழும்பூர் போராட்டம்.

கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.அய்ந்தரை லட்சம் கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு
விவசாயிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடியாதா?
மனுநீதி ஆட்சியை வீழ்த்துவோம் - இது தொடக்கமே!
எழும்பூர் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!


சென்னை, ஏப்.25 மத்தியில் உள்ள மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கும், சாமியார்களுக்கும் துணை போகும் ஆட்சி - விவசாயிகளைப் புறக்கணிக்கும் ஆட்சி - ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மனு நீதி ஆட்சியை வீழ்த்திட இது தொடக்கமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழக உரிமைகளை காத்திட, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று (25.4.2017) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடை பெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
அத்துணை பேரும் ஒத்துழைப்பை
நல்கியிருக்கிறார்கள்
மிகுந்த எழுச்சியோடு நாம் ஏற்கெனவே தோழமைக் கட்சிகளுடைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு ஏற்ப இன்றைக்கு இந்தப் பொது வேலை நிறுத்தம் - முழு அடைப்பு என்பது முழு வெற்றியாகி இருக்கிறது என்பது இப்பொழுதே தெளிவாகப் புரிந்திருக்கிறது. பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீம்புக்காக சில பேருந்துகளை அரசு வம்புக்காக ஓட்டினாலும்கூட, கடைகள் அத்துணையும் நம்முடைய அழைப்பை ஏற்று மூடியிருக்கிறார்கள், வணிகர்கள் சங்க வெற்றியைக் காட்டியிருக்கிறார்கள். திரைப்படக் கலைஞர்கள் உள்பட அத்துணை பேரும் ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், இந்தப் போராட்டத்தி னுடைய ஒரு முத்திரையாக ஒரு முழுமையான வெற்றியினுடைய முனைப்பாக இங்கே சிறப்பாக வந்திருக்கக் கூடிய டில்லியில் இடை விடாது 41 நாள்கள் இடையறாது போராட்டம் நடத்தி-போராட்டம்என்றால்,இதற்குமேல் வடிவங்கள் எடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று போராட்டத்திற்கே ஒரு முடிவு கட்டக் கூடிய அளவிற்கு,  அத்தனை விதவிதமான போராட்டங்களை செய்துவிட்டு, நம்முடைய போராட்டத் தலைவர், போராட்டமே வாழ்க் கையாக ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய அருமை விவசாயிகளுடைய  ஒப்பற்ற தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்; அவருடைய தோழர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் வந்திருக்கிறார்கள். முதற்கண் அவர்களை தமிழகம் வருக! வருக! என்று வரவேற்கிறது, வாழ்த்துகிறது! நீங்கள் உயிரோடு வந்திருக்கிறீர்களே,  உங்களை உயிரோடு விட்டிருக்கிறார்களே - அதற்காக வன்கொடுமையான உணர்வு படைத்த டில்லியாளர்களுக்கும் நாம் நம்முடைய தன்மையை மீறி நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் அவர்களை கோவணத்தோடு அனுப்பியிருக்கிறீர்கள், பரவாயில்லை!
நிர்வாணமாகப் போராட்டம் நடத்தினாலாவது....
டில்லியில் நிர்வாணமாகக்கூட போராட்டத்தை நடத்தியிருக்கி றார்களே விவசாயிகள், இது நியாயம்தானா? என்று சில ஊடக நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள்.
நான் அவர்களிடம் சொன்னேன்,
கும்பமேளா சாமியார்களை நிர்வாணமாகப் பார்ப்பது போலாவது - வருவோம் என்று வருவார்கள் உள்ளே இருப்பவர்கள். அப்படி போனாலாவது வருவார்களா என்று பார்த்தார்கள் - அதிலும் தோல்வி அடைந்து விட்டார்கள் எங்கள் விவசாயிகள்.
மதவாதத்திற்கு முடிவு கட்டவேண்டிய
நாள் நெருங்கி விட்டது
அந்த அளவிற்கு ஈவு இரக்கமில்லாத ஒரு ஆட்சி டில்லியில் நடந்துகொண்டிருக்கிறது என்றால், இந்த மதவாதத்திற்கு முடிவு கட்டவேண்டிய நாள் நெருங்கி விட்டது என்பதுதான் அதற்கு அடையாளம்.
இந்தப் போராட்டம் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு நடத்தப்படக்கூடிய அரசியல் கூட்டணி போராட்டமல்ல. தமிழ்நாட்டின் பறிபோகக்கூடிய உரிமைகள் - விவசாயிகள் உரிமைகளிலிருந்து - மருத்துவர்களுடைய உரிமைகளிலிருந்து மற்ற மற்ற உரிமைகள் அத்துணையும் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை மீண்டும் வாழ வைக்கவேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தளபதிக்குத் தமிழகம் தலைவணங்கி
நன்றி செலுத்தவேண்டும்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்க்கட்சி  அந்தஸ்தை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஆளும் கட்சி தவறுகிறபோது, அந்த கடமையை செய்யவேண்டிய ஜனநாயகப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவராகிய எங்களுக்கே உண்டு என்று காட்டிய தளபதிக்குத் தமிழகம் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்.
இது ஜனநாயக ரீதியான, அரசியல் சட்ட ரீதியான உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு சிறப்பு.
அரசியல் பார்வையை
நீங்கள் பார்க்காதீர்கள்
எனவே, இங்கே இருக்கிறவர்களுக்குச் சொல்கிறோம் - எல்லா தலைவர்களும் சொல்லவேண்டும் - கொளுத்துகின்ற வெயிலிலே உங்களுக்குச் சொல்லுகின்றோம். இதில் அரசியல் கிடையாது - இதில் அரசியல் பார்வையை நீங்கள் பார்க்காதீர்கள்!
விவசாயிகள் தண்ணீர், தண்ணீர், வறட்சி, வறட்சி என்று துடிக்கிறார்கள். குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. ஆனால், கருநாடகத்துக்காரன், கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல், குடிக்கக்கூட தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொன்ன உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் புறந்தள்ளும் பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் நடக்கிறது. நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தண்ணீர், தண்ணீர் என்றால்,
பன்னீர், பன்னீர் என்கிறார்கள்!
இங்கே அவர்கள் பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர், தண்ணீர் என்று டில்லியிடம் நாம் கேட்டால், அதோ பன்னீர், பன்னீர் - அங்கே போங்கள் என்று சொல்லக்கூடிய விவஸ்தைக் கெட்ட ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
எனவேதான் நண்பர்களே , இது வேடிக்கைக்காக அல்ல, அல்லது தியாக முத்திரை குத்திக் கொள்வதற்காக அல்ல - வம்பு செய்வதற்காக அல்ல - இந்த நாட்டின் மானத்தை, உரிமையை காப்பாற்றுவதற்காக. விவசாயிகள் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய முதுகெலும்பு!
முதுகெலும்பையே பறிக்கக்கூடிய ஒரு சூழலை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம்
இந்தப் போராட்டம் ஏன் தேவை? ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதற்குரிய ஒரே ஒரு விளக்கத்தை மட்டும் கூறி என்னுடைய சிற்றுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
விவசாயிகள் தேசிய வங்கிகளில் கடன் பெற்ற தொகை இந்தியா முழுவதும் 72,000 கோடி ரூபாய். அதைத்தான் அவர்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அய்யாக்கண்ணு அவர்கள் போராட்டம் நடத்தினார். வழக்கமாக இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம்.
இங்கிருந்து குரல் கொடுத்தால், டில்லியினுடைய செவிட்டுக் காதுகள் கேட்காது என்பதற்காக, டில்லிக்கே சென்று போராட்டம் நடத்திக் குரல் கொடுத்தார்கள். இருந்தாலும், அவர்கள் கேட்காமல், காதுகளை மூடிக் கொண்டார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
மத்திய அரசு அறிவித்துள்ள சலுகை 5,51,200 கோடி ரூபாய்
அதேநேரத்தில், இந்த ஆட்சி சாமியார்களைக்கூட கார்ப்பரேட் சாமியார்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற மோடியினுடைய மதவாத ஆட்சி - காவி ஆட்சி - கடந்த ஆண்டு மட்டுமே - நன்றாக கவனியுங்கள் ஊடக நண்பர்களே - குறித்துக் கொள்ளுங்கள் - கடந்த ஆண்டு மட்டுமே 2016 இல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சலுகை 5,51,200 கோடி ரூபாய்.
நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள், 5,51,200 கோடி ரூபாய் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, அம்பானிகளுக்கு, அதானிகளுக்கு, புதிய புதிய கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கக்கூடிய சாமியார்களுக்கு அளித்துக் கொண்டிருக்கின்ற மோடி அரசு - கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த ஏழை எளிய விவசாயிகளுடைய வேதனையைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை.
மல்லையாக்களுக்கு ஒரு நீதி - அய்யாக்கண்ணுகளுக்கு இன்னொரு நீதியா?
இவர்கள் கேட்டது, தேசிய வங்கிளில் 6 ஆயிரம் கோடி ரூபாய்  கடன்தானே தள்ளுபடி செய்யவேண்டும் எங்களுக்கு என்று அய்யாக்கண்ணு கேட்டார். 6 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று சொன்னால், அதேநேரத்தில், ஒரு மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு, வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். மல்லையாக்களுக்கு ஒரு நீதி - அய்யாக்கண்ணுகளுக்கு இன்னொரு நீதி என்றால், அதற்குப் பெயர்தான் மனுநீதி என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த அணிகள் பெருகவேண்டும் - தமிழ்நாட்டில் அரசியலில் இருக்கின்ற பிணிகள் ஒழியவேண்டும்
எனவேதான், மனுநீதி ஆட்சி மீண்டும் வரக்கூடாது; புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு - மீண்டும் வாழ வைக்கப்பட வேண்டுமானால், இந்த அணிகள் பெருகவேண்டும் - தமிழ்நாட்டில் அரசியலில் இருக்கின்ற பிணிகள் ஒழியவேண்டும்.
எனவே, இது அமைதியான அடையாள ஒரு நாள்  அறப்போராட்டத்தோடு முடிவதல்ல. இதுதான் தொடக்கம். எனவே, இதில் வன்முறையைக் கிளப்பலாம் என்று நினைக்கக் கூடும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக்கலாம் என்று கூட நினைப்பார்கள். தமிழ்நாட்டில் ஏதோ சட்டம் - ஒழுங்கு இருப்பதைப் போலவும், இனிமேல்தான் இந்த அணி அதனை சீர்குலைப்பதுபோலவும் சொல்கிறார்கள்.
கொட நாடு எஸ்டேட்டே கொள்ளை போகிறது என்றால், இந்த நாட்டில் எதையும் காப்பாற்ற முடியாதவர்கள் - சட்டம் ஒழுங்கைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சரித்திரத்தில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய தொடக்கம்!
எனவேதான், இது அறப்போர் உரைகள் கோட்டமே தவிர, இது அடங்காதவர்களுடைய பிடாரிகள் கூட்டமல்ல. எனவேதான், கட்டுப்பாடாக இந்தப் போராட்டத்தினை நடத்துவோம் - அடுத்த கட்டத்திற்குச் செல்லுவோம். இது முடிவல்ல - தொடக்கம் - நல்ல தொடக்கம் - புரட்சிகரமான தொடக்கம் - சரித்திரத்தில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய தொடக்கம்!
வெற்றி பெறுவோம்! வாகை சூடுவோம்!
விவசாயிகளை வாழ வைப்போம்!
ஆட்சி மாற்றம் நிச்சயமாக வரும்!
வாழ வைப்போம், நிச்சயமாக டில்லி சென்று போராடிய நீங்கள் திரும்பி வரும்போது - இப்பொழுது நீங்கள் இருக்கின்ற உருவத்தோடு இருக்கமாட்டீர்கள். ஆட்சி மாற்றம் நிச்சயமாக வரும் - அந்த ஆட்சி மாற்றத்திலே எப்படி 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கின்ற முதல் உத்தரவை கலைஞர் அன்றைக்குப் போட்டார்களே -அதுபோன்ற ஒரு காட்சியை நீங்கள் விரைவில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும், ஏற்படும்! அதனை ஏற்படுத்துவோம்! அதனை ஏற்படுத்தக்கூடிய அணிதான் இங்கே உருவாகியிருக்கிறது என்பதை கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------------------------------

‘‘பெரியாரப்பற்றித்தான் பேசினார்கள்!’’ - அய்யாக்கண்ணு


வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைக்காக டில்லியில் 41 நாள்களாகப் பல் வேறு வடிவங்களில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு அவர்கள் சென்னை எழும்பூர் - உடுப்பி ஹோம் அருகில் நடைபெற்ற போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் இன்று (25.4.2017) உரையாற்றியபோது முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது:
முதலாவதாக உங்கள்முன் கோவணத்துடன் நிற்பதற்கு எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டில்லியில் நாற்பது நாள்களுக்குமேல் பல வடிவங்களிலும் விவசாயிகளின் உரிமைக்காக - தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்காக போராட்டம் நடத்தினோம். சாலையிலேயே நாள் முழுவதும் தங்கினோம். உணவு உண்டோம்; உறங்கினோம். எங்களுக்கு ஆதரவுகள் நாளும் பெருகி வந்தன. தளபதி மு.க.ஸ்டாலின் விமானம்மூலம் பறந்து வந்து எங்களோடு ஒருவராய் அமர்ந்து பிரச்சி னையைப்பற்றிப் பேசினார் - ஆறுதலும் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எங்களோடு ஒருவராக அமர்ந்து பேசினார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களெல்லாம் எங்களைச் சந்தித்தனர். மாணவர்கள் எங்களுக்கு உணவளித்தனர். தலைவர்கள் எல்லாம் என்ன உதவி தேவை என்று கரிசனத்தோடு கேட்டனர். உங்கள் ஆதரவே போதும் என்றோம்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் எல்லாம் எங்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர். பேசிய அனைவருமே பெரும்பாலும் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியே பேசினார்கள்.
அன்று பெரியார் 1950 வாக்கில் இட ஒதுக் கீட்டுக்காக டில்லியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். பெரியார் கொடுத்த அந்த உணர்வில் இப்பொழுது நீங்கள் எல்லாம் டில்லியை எதிர்த்துப் போராடி வருகிறீர்கள் - அன்று பெரியார் டில்லியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதுபோலவே, நீங்களும் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தினார்கள்.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒவ் வொருவரும் சொல்லும்பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு மிகவும் பெருமையாகவே இருந்தது.
இப்பொழுதுகூடபோராட்டத்தைநிறுத்தி விடவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லையானால், மீண்டும் டில்லியில் வரும் மே 25 ஆம் தேதிமுதல் போராட்டத்தைத் தொடங் குவோம் என்று அறிவித்து விட்டுத்தான் இங்கே வந்துள்ளோம்.
டில்லி காவல்துறை எங்களைப் பல்வகையிலும் அச்சுறுத்தியது. ஒருவர் தலையைத் துண்டித்து உங்கள் முன்னால் போட்டுவிட்டு, நீங்கள்தான் கொலை செய்தீர்கள் என்று கொலைக் குற்ற வழக்கில் உங்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவோம் என்கிற அளவுக்குப் போனார்கள். எது வேண்டுமானாலும் செய்யுங்கள் - எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட் டோம் என்று உறுதியாகத் தெரிவித்த பிறகுதான் அடங்கினார் கள்.
பி.ஜே.பி. காரர்கள் எங் களைப் பற்றி அவதூறாக எல்லாம் எழு திக் கொண்டு இருக்கிறார் கள்.பிரச்சார மும் செய்து கொண்டுஇருக் கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவ லைப்படவில்லை. உண்மையும், நீதியும் வெல்லும்!
எங்கள் போராட்டம் வீண் போகவில்லை - இவ்வளவுப் பெரிய ஆதரவைக் காட்டியுள்ளீர்கள் - வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள் - நன்றி, நன்றி என்று நா தழுதழுக்கப் பேசினார் டில்லி போராட்டக் குழுத் தலைவர் வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர் கள்.


முழு அடைப்புப் போராட்ட விளக்கக் கூட்டம் 51ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது
சென்னை, ஏப்.25 தமிழக உரிமைகளை காத்திட, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலை மையில் கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானத்தின் படி, இன்று (25.4.2017) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்களும் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும்  அனைத்துக்கட்சியினரும் ஒட்டுமொத்த மாக கைது செய்யப் பட்டுள்ளார்கள். பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டவர்களை வாகனங் களைக்கொண்டு அழைத்துச்செல்லாமல் நடத்தியே அழைத்துச்சென்று மண்டபங்களில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் பகுதியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தலை மையில்  முழு அடைப்புப் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் திமுக, திராவிடர் கழகம்,  தமிழ்நாடு காங்கிரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி,  சமூக நீதிப் பேரவை, கிறித்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
டில்லி போராட்ட விவசாயிகள் பங்கேற்பு
டில்லியில் 41 நாள்களாக கோரிக்கைகளை வலி யுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள் அனைவரும் இன்று (25.4.2017) முழு அடைப்புப் போராட்டத்தை யொட்டி சென்னைக்கு வருகைதந்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரசு கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், குமரி அனந்தன், சமூக நீதிப் பேரவை  எஸ்றா சற்குணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் மு.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர்  இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசூப், இந்திய யூனியன் முசுலீம் லீக் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், பெருந் தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், விவசாயிகளின் போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் அய்யாக் கண்ணு ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கமாக எடுத்துக்கூறினார்கள்.
தமிழர் தலைவர் கைது
அனைத்துக்கட்சித் தலைவர்களின் உரை யைத் தொடர்ந்து அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அனை வரும் எழுச்சிமிக்க முழக்கங்களை எழுப்பினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் போராட்டப்பகுதி யிலிருந்து  மோதிலால் மண்டபத்துக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புரசை ரங்கநாதன், தாயகம் கவி, எழும்பூர் ரவிச் சந்திரன் மற்றும் மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், உள்பட பலரும், காங்கிரசு கட்சியின் மாவட்ட செயலாளர்கள்   ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் உள்பட பலரும், விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகி செல்வம், அகில இந்திய வங்கிப்பணியாளர்கள் சங் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு
போராட்ட விளக்கக்கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், பிரபாகரன், குமார், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் நாகராஜ், புழல் க.ச.க.இரணியன், புழல் அறிவு மானன், அர்ஜுன், அருள், மயிலை பாலு,  சூளை மேடு இராமச்சந்திரன்,  அண்ணா.இராமச்சந்திரன், செஞ்சி ந.கதிரவன், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், இனநலம், தென் சென்னை மகளிரணி வி.வளர்மதி, பி. அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, சி.சகனபிரியா, பெரியார் பிஞ்சு வி.நிலா, க.கவிதா, கலைமதி, சீர்த்தி, பொன்னேரி செல்வி உள்பட ஏராள மானவர்கள் கலந்துகொண்டார்கள்.
அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
-விடுதலை,25.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக