புதன், 12 ஏப்ரல், 2017

ஏற்றம் தந்த ஏலகிரி!

நமது சிறப்பு செய்தியாளர்


ஏலகிரி, ஏப்.9 வேலூர் மாவட்டம் - திருப்பத்தூரை யடுத்த ஏலகிரி கடல் மட்டத்திலிருந்து 1048 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.   கிட்டதட்ட 4000 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
பெரிய அளவு சுற்றுலா மய்யமாக வளரவில்லை யென்றாலும் அதற்கான அடிப்படைக் கூறுகள் நிரம்ப உண்டு. அத்தகு இயற்கை மணம் வீசும் ஏலகிரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப்.7, 8) செம்மையாக நடைபெற்றது.


இது ஒரு வித்தியாசமான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! இயற்கை மணமும், இலட்சிய மயமும் தோகை விரித்தாட பெரியாரியல் பயிற்சி பட்டறை தூள் கிளப்பியது. 105 பயிற்சியாளர்களில் 46 பெண்கள் என்பது இந்தப் பட்டறைக்கான தனித்தன்மையாகும். பட்டதாரிகள் - 37, டிப்ளமோ - 3, பிளஸ் 2 - 23, பத்தாம்வகுப்பு - 13, பிறர் - 29. சென்னை வட்டாரத்திலிருந்து மட்டும் 30க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். கோவை விரைவு தொடர் வண்டியில் வந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அன் போடு வரவேற்றனர். ஏலகிரிக்கு தனிப்பேருந்து ஏற் பாடு செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை ரயிலடியில், ஏலகிரியில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பட்டறை தன் பட்டை தீட்டும் பணியினை மேற்கொண்டது.
இவ்வாண்டு கோடை வெப்பம் 1048 மீட்டர் உய ரத்தில் உள்ள ஏலகிரியையும் தாக்கியது; வழமையாக அதிகபட்சமாக 31 டிகிரி பாகை செல்சியசும், குறைந்த பட்சமாக 11 பாகை செல்சியசும் இருக்கும். இவ்வாண்டு இதில் ஒரு சரிவே! என்றாலும் வகுப்புகள் எல்லாம் குளிர்ச்சியாகவே நடைபெற்றன. ஏப்ரல் 1, 2 நெய்வேலியில் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூலையில் குற்றாலத்தில் நிறைவுபெறுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த பட்டறையின் பயணம் தொடர்கிறது.
மதவாதம் தலைக் கொழுத்து தான்தோன்றித்தனமாக துள்ளித் திரியும் இந்தக் காலகட்டத்தில், சரியான மாற்று மூலிகை தந்தை பெரியாரே என்று உணரப்படும் காலக்கட்டம் இது.
பிஜேபி - சங்பரிவார் கும்பலை முன்னிறுத்தி வெறும் பொருளாதார கொள்கை தார்கொண்டு அடக்கிட முடியாது. அதன் உயிர் நாடி அதன் இந்துத்துவா கொள்கையில் இருக்கிறது. பார்ப்பனீய சூளுக்குள் பத்திரமாகப் பதுங்கி இருக்கிறது.
ஈரோட்டு நுண்ணாடி எனும் ரேடியம்தான் அதன் அங்க மச்ச அடையாளங்களையும், அதன் சூட்சம முடிச்சுக்களையும் சிதைக்கும் பேராற்றல் கொண்டது.


இன்றைக்குக் கூட அந்தக் குழவிக்கல்லின் பக்கத்தில் பார்ப்பனரைத் தவிர வேறு யாரும் அண்டக்கூடாது என்பதில் சர்வ விழிப்போடு இருப்பதற்கு அதுதான் காரணம்.
ஒரு சிறிய குட்டிக் கடவுள் இருக்கும் வரை நாம் சூத்திரர்கள் தானே! (‘விடுதலை’ - 3.2.1956) நாம் ஒரு சிறியதாக ஆறறிவு பெற்றுப் பகுத்தறிவு வாதிகள் ஆகிவிட்டோமானால் கொல்லுவாரின்றியே பார்ப்பான் செத்தான் (விடுதலை - 4.3.1970) என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
உச்சநீதிமன்றம் வரை உச்சிக்குடுமியின் செல்வாக்கு கரங்கள் நீள்கிறது என்றால் அதன் கள பரிமாணத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
அதிகாரம் ஆரியத்தின் நுனி நகத்தில் நடனமாட ஆரம்பித்து விட்டது. வடபுலப் பார்ப்பனரல்லாத மக்கள் அதனை உணரத் தலைப்பட்டு விட்டனர்.


மதச்சார்பின்மை சக்திகள் ஓரணியில் ஒன்று சேர வேண்டும் என்று லாலு பிரசாத் குரல் கொடுத்திருக்கின்றார். பீகாரில் ஏற்படுத்தப்பட்டது போன்று கட்டாய கூட்டணி அவசியத் தேவை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுவாகப் பிரதமர்களை உருவாக்கும் உ.பி.யில் பச்சையான ஒரு சாமியார் முதலமைச்சர் பீடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பத்துத்தலை இந்துத்துவா பாம்பு படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டது. செத்துப் புதைக்கப்பட்ட முசுலிம் பெண்களைத் தோண்டியெடுத்து - இந்துக்களே புணருங்கள் என்று கூறும் ஒரு புழுத்துப் போனவரை முதல் அமைச்சராக்கி  அழகு பார்க்கிறது ஆரியம்.
ஆரியம் நேரடியாக அதிகார ஆசனத்தில் அமர்ந்தால் பளிச்சென்று மக்கள் மத்தியில் புரிந்து விடும்; அதனால் பார்ப்பனீயத்திற்கே உரித்தான முகமூடி வேலை அரங்கேறியிருக்கிறது. பிரதமர் மோடியும் அப்படிதானே! ஒரு பிற்படுத்தப்பட்டவரை பிரதமராக்கியிருக்கிறோம்  பாரீர்! என்று பசப்பு வார்த்தைகளைக் கொட்டுகிறார்களே!
மிகச் சரியாகவே தந்தை பெரியார் சொன்னார். நிஜப் புலியை விட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்று. அப்படிதான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி குதிக்கிறார். உ.பி. ஆதித்தியநாத்தும் அட்டகாசம் செய்கிறார்.


ராமன் கோயிலைக் கட்டுவோம் என்கிறார்கள், கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்கிறார்கள், இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்கிறார்கள். இது வெல்லாம் இன்னும் கூட அதிகமாக ஆர்ப்பரிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பாஜக பழைய பார்ப்பனீய மனுதர்ம கொடியை ஏற்றும் வேலையில் இறங்கிவிட்டது என்று இந்தியாவினுடைய கடைகோடி மனிதனுக்கும் தெரியும்போதுதான், புரியும்போதுதான் தமிழ்நாட்டை நோக்குவார்கள் - பகுத்தறிவுப் பகலவன் தத்துவத்தை நோக்கி தங்களின் கவனத்தைச் செலுத்துவார்கள்.
இப்பொழுது காசி பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் நரகாசூரன் விழா நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் அய்அய்டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு மத்திய பார்ப்பன பாரதிய ஜனதா ஆட்சி தடை விதித்ததன் விளைவு என்ன தெரியுமா?
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், மும்பைப் பல்கலைக்  கழகங்களிலெல்லாம் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொடரும்; மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் புதிய பூபாளம் வெடிக்கும், புரட்சியின் அர்த்தம் என்ன என்பதையும் விளக்கும்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் அதற்கான தளத்தை, தடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை என்பது தொலைநோக்கினை உள்ளடக்கமாகக் கொண்டது. அவர்கள் வன்முறை ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். நாமோ அறிவாயுதத்தை ஏந்துபவர்கள்  உடல் வலிமை மிக்க காட்டு மிருகங்களை சர்க்கசில் ஒரு ரிங் மாஸ்டர் ஒடுக்குவதில்லையா - பணிய வைப்பதில்¬லா?
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பல தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெரியாரில் பெரியார், சுயமரியாதை இயக்கம், நீதிக்ட்சி, திராவிடர்கழகம், இந்துத்துவா பேராபாயம், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு, கடவுள் மறுப்புத் தத்துவம், ஜாதி ஒழிப்பு என்னும் தலைப்புகளில் அனுபவம் பெற்றவர்கள் வகுப்புகளை நடத்துகிறார்கள். மாணவர்களின் அய்யப்பாடுகள் அந்தந்த வகுப்புகளிலேயே நீக்கப்படுகின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், டாக்டர் பிறைநுதல்செல்வி ஆகியோர் வகுப்புகளை எடுத்தவர்கள் ஆவார்கள். இருபால் மாணவர்களும், இந்த பட்டறையில் காட்டிய ஆர்வமும், அக்கறையும், மெட்சத்தகுந்ததாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன.


இப்பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்களில் பொறுக்கு மணியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் மேல்நிலைப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு புதிய கருத்தை இந்தப் பட்டறையில் கழகத்தலைவர் தெரிவித்தது அற்புதமானது - பரிணாம வளர்ச்சியை உள்ளடக்கமாகக் கொண்டது.
தமிழ்நாட்டிலேயே இத்தகு பட்டறைகளை முறையாக நடத்தக்கூடிய ஒரே சமூக புரட்சி இயக்கம் திராவிடர் கழகமே! தோய்வின்றித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த முகாமில் மகளிர் 46 பேர்கள் கலந்து கொண்டனர் என்றால் அவர்களுக்கென சிறப்பாகத் தனிப்பயிற்சி தரப்பட்டுள்ளது.
பெண்களுக்கொன்று இருக்கக்கூடிய பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், உடல் பிரச்சினைகள் என்று மனம் விட்டு ஒவ்வொருவரும் பேசினர், கருத்துகளையும் தெரிவித்தனர். இது அவர்களுக்கு ஒரு தனி அனுபவம் என்பதில் அய்யமில்லை. இதுவரை ஒலிப்பெருக்கி முன்னாலே வந்துபேசுவதற்குப் தயங்கியவர்களெல்லாம் டாண் டாண் என்று போட்டுடைத்தனர்.
பெண்கள் தங்களுக்குள்ள உடல் நல பாதிப்பை தங்கள் துணைவரிடம் கூட சொல்லக் கூசுகின்றனர் அல்லது அச்சப்படுகின்றனர்.  மார்பகப் புற்றுநோயின் தொடக்கம், வீக்கம் என்பது பெண்களுக்கு தொடக்கத்தில் தெரியக் கூடியவைதான். அதனை வெளியில் சொல்லத் தயங்கி தயங்கி கடைசியில் முற்றி உயிருக்கு உலை வைக்கும் பரிதாப நிலை பற்றியெல்லாம் பெண்களுக்குள் பேசப்பட்டது.
மாதவிடாய் - அக்கால கட்டத்தில் பெண்களின் மனநிலை பற்றி உளவியல் மருத்துவர்கள், பட்டறையில் பங்கேற்றதால் அதுகுறித்த புரிதல் முக்கியமாக இடம்பெற்றது. நோயில் கூட பெண் சீக்கு என்று சொல்வதெல்லாம் எத்தகைய அயோக்கியத்தனம்! ஆண்களும் அதற்கு காரணம் அல்லவா?
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான பெரியாரியல் உயர் எண்ணங்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டன; விவாதிக்கப்பட்டன. பெண்கள் காதலித்தால் பெருங்குற்றம் போல் ‘பூதாகரப்படுத்தும்‘ புன்மை எண்ணங்கள், பொடிப்பொடியாகப் அடித்து நொறுக்கப்பட்டன.
எவ்வளவு அதிகம் படிக்க முடியுமோ, வயது தடையின்றி படித்து அதற்கு பின் திருமணம் என்பதுதான் பெண்ணுரிமை திசையில் சரியான மைல் கற்களாகும்.
ஆண் அதிகம் படித்திருக்க வேண்டும்; பெண் ஆணை விட குறைவாகப் படித்திருக்க வேண்டும், ஆணை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும், உயரமும் குறைவாக இருக்க வேண்டும் என்ற பத்தாம் பசலித்தனங்களும் நார்நாராக உரிக்கப்பட்டன.
பாரதி காணவிரும்பியது புதுமைப் பெண்ணென்றால், பெரியார் படைக்க விரும்பியது புரட்சிப் பெண்ணே  - என்றெல்லாம் விரிவாகவே விவாதிக்கப்பட்டன. ஏலகிரி மலையில் மகளிர் கால் பதித்தபோது இருந்த மனநிலைக்கும், பட்டறைப் பயிற்சி முடிந்து மலையை விட்டு கீழே இறங்கியபோது அவர்களிடம் இருந்த மனோ நிலைக்கும் உள்ள வேறுபாடு - மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள தூரத்திற்கு ஒப்பானதாகும்.
பாசறையில் பட்டைத் தீட்டப்பட்டு உருவாக்கும் போது அதன் வீச்சம் சமூகத்தின் சகல பரப்புக்கும் சென்றடைய செய்ய வேண்டும்; இனி ஒவ்வொரு பெரியாரியல் பயிற்சி பட்டறையிலும் மகளிருக்கான இந்தத் தனிப்பயிற்சி தொடரும். அந்த வகையில் ஏலகிரி புதிய திருப்பத்திற்கான வழிகாட்டியாகும்.
விரைவில் மாநில அளவிலான மகளிர் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் தமிழ்நாட்டின் நடுநாயக இடமான திருச்சியில் கூடவிருக்கிறது.
புரட்சிகரமான திட்டங்கள் தீட்டப்பட்டு கழகத்தின் அணிகளில் மகளிர் பாசறை புது உத்வேகத்தோடு களத்தில் இறங்கும். மாணவியர் சந்திப்பும் நடைபெறும். அவர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர மகரந்தங்கள் தூவப்படும்.
ஏலகிரியில் இருபால் பயிற்சி மாணவர் களுக்கு மத்தியில் ஒரு புதுமையான அம்சம் அரங்கேற்றப்பட்டது. இன்றைய சமூகப் பிரச்சினைகளும், தீர்வுகளும் எனும் தலைப்பில் பயிற்சிக்கு வந்த தோழர்கள் (இருபாலரையும் இனிமேல் இப்படிதான் அழைக்க வேண்டும் என்பது கழகத்தலைவரின் கட்டளை) தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்தப் புது முயற்சி எந்த அளவு வெற்றிகரமாக அமையும் என்ற தயக்கம், பயிற்சி நடத்திய ஆசிரியர்களுக்கே கூட இருந்ததுண்டு.
முதல்நாள் இரவு (7.4.2017) நடைபெற்ற இந்த அரங்கத்தில் தோழர்கள்   எடுத்து வைத்த கருத்து மயிர் கூச்செரியச் செய்தது. இன்றைய இளைஞர்கள் எந்த அளவு சிந்தனை வளம் உடையவர்களாக - முற்போக்கு கருத்தாளர்களாக - சமூகத்தின் நடப்புகளை ஊடுருவக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
குறிப்பாக ஜாதிப்பிரச்சினை, கவுரவக் கொலை என்னும் அகவுரவக் கொலை, காதல் உணர்வு, ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு தனி ஒதுக்கீடு, (மிழிஜிணிஸி-சிகிஷிஜிணி
னிஹிளிஜிகி) முதல் தலைமுறையாகப் படிக்க வருபவர்களுக்கான தடைகள் மார்க் எனும் அளவுகோல், நுழைவுத்தேர்வு, அளவுக்குமீறிய நுகர்வுக் கலாச்சாரம், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தை வளர்க்கும் அயோக்கியத்தனம். ஊடகங்கள் யார் கைகளில்?, கருத்துகளை உருவாக்கும் இடத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டின் அவசியம், ஜாதி அரசியலில் மதவாதப் போக்குகள், பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்கள், ‘நீட்’ தடைக்கல், புதிய கல்வி எனும் குலக்கல்வி, கல்வியில் காவிமயம் என்று சமுதாயத்தில் புரையோடும்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூர்த்த மதியோடு தோழர்கள் அலசி எடுத்துத் தோலையுரித்து தொங்கப் போட்டது - ஆச்சரியமாகவும், புருவங்களை உயர்த்துவதாகவும் அமைந்திருந்தன.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஏலகிரி கழக வரலாற்றில் நடந்தவைகளில் கூட ஒரு புதிய வெளிச்சத்தை வாரி இறைப்பதாக அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
... நேரம் தவறாமை, பயிற்சியில் உரத்த சிந்தனை உரையாடல், சிறப்பான உணவு, தங்கும் வசதி என எல்லா வகைகளிலும் திருப்திதான் - திருப்திதான்!. ஏலகிரி ஏற்றமாக இருந்தது - ஏலகிரி உயரத்தில் இருப்பதுபோல இந்தப் பட்டறையும் உயரத்தில் வைத்து பாராட்டப்படத்தக்கதே!
ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டு! பாராட்டுகள்!!
தமது ஆப்பிரிக்கப் பயணத்தையும் ஒத்தி வைத்து இந்தப் பட்டறைக்காக பல வகைகளிலும் சுழன்று பணியாற்றி வெற்றிகரமாக பயிற்சிப் பட்டறையை  கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன், கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு நடத்திய பாங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்தடுத்த பட்டறைகள் மேலும் புதிய மைல் கற்களை எட்டட்டும்
ஏலகிரியின் ஏற்றத்திற்கு காரணமானவர்கள்!
தலைமை செயற்குழு .உறுப்பினர் கே.சி. எழிலரசன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், மாவட்ட செயலாளர் இளங்கோவன்  மாநில பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலைவர், அண்ணா.சரவணன், மண்டலத் தலைவர்  பழ.வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர்  எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட மகளிரணி கவிதா இளங்கோவன், மண்டல மாணவரணி செயலாளர் சி.இ.சிற்றரசன்,  பகுத்தறி வாளர் கழக தலைவர், தமிழ் செல்வன், ப.க. அமைப்பாளர் சித.வீரமணி, பழனிசாமி மாவட்ட இளை ஞரணி, மகளிரணி இந்திரா காந்தி மற்றும் தோழர் களின் அயராப் பணியும், ஒத்துழைப்பும் ஏலகிரியை ஏற்றம் பெறச் செய்தது.
ஏலகிரியின் மணம்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏலகிரி தோன்பாஸ்கோ பயிற்சி மய்யத்தில் ஏப்ரல் 7, 8 - வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது. இந்த வளாகத்துக்குப் பொறுப்பு அதிகாரி அருள் தந்தை அலெக்ஸ் தாமஸ் அவர்களது அன்பும், அரவணைப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியதாகும். கழகத் தலைவர் அவரைப் பாராட்டி சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மய்யம் உங்களுக்காகத் திறந்திருக்கிறது என்று அருள் தந்தை சொன்னதை அனைவரும் வரவேற்கும் வகையில் கர ஒலி எழுப்பினர்.
திருப்பத்தூர் தூய நெஞ்சர் கல்லூரியின் (இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளில் 95ஆம் இடம் இக்கல்லூரிக்குக் கிடைத்தது  குறிப்பிடத்தக்கதாகும்) முதல்வர் மரிய  ஆண்டனி ராஜ் அவர்களும், அக்கல்லூரியின் பொருளாளர் ஜான் போரிக் அவர்களும், பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.
-விடுதலை,9.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக