வியாழன், 27 ஏப்ரல், 2017

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி தியாகராயர் பிறந்த நாள்

சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப்.27 வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2017) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியைச் தோற்றுவித்த மும்மணிகளுள் முக்கியமானவரான வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2017) காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தமிழர் தலைவரை சர். பிட்டி தியாக ராயர் பேரவையின் நிர்வாகி மகாபாண்டியன் அவர்கள் வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மா.சேரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை டி.ஆர்.சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராம லிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய நிர்வாகி பசும்பொன் செந்தில்குமாரி, பொறியாளர் சீர்த்தி,போக்குவரத்துத்தொழிலாளர்கள் நல் லாளம் வடிவேல், பெரியார் மாணாக்கன், அசோக், மகேஷ், கலையரசன், யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை தியாகராயர் நினைவு வாழும்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சர். பிட்டி தியாகராயர் பிறந்த நாளான இன்று (27.4.2017) அவரது சிலைக்கு மாலை அணிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

சர். பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மேயராக இருந்தபொழுதுதான், முதல் முறையாக இந்தியாவிலேயே கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பகல் உணவு என்ற மதிய உணவுத் திட்டத்தினை 1920 ஆம் ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார். அதுதான் பிறகு காமராசர் ஆட்சிக் காலத்தில் பகல் உணவுத் திட்டமாக, பிறகு எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டது .

பிரதமர் பதவி என்று அந்தக் காலத்தில் அழைக் கப்படுவது முதல்வர் பதவியாகும். பிரிக்கப்படாத சென்னை ராஜதானியினுடைய  அந்த முதலமைச்சர் பதவியை, வெள்ளைக்கார கவர்னர்கள் தனக்கு அளித்தும்கூட, அதனை ஏற்க மறுத்துவிட்டார் - அதற்குப் பதிலாக தன்னுடைய கட்சியில் உள்ள வேறொருவர் முதல்வராக வரட்டும் என்று சொன்னார். பதவி வேட்கை இல்லாத ஒரு மாபெரும் தலைவராக நம்முடைய தியாகராயர் இருந்தார்.

எனவே, திராவிட இயக்கத்தவர்களுக்கெல்லாம் பதவி வேட்கைதான் என்று சொல்லுவதில் ஒன்றும் பொருளில்லை. அந்த வகையில், கடைசிவரையில் வள்ளல் பெருமானாகவே தியாகராயர் திகழ்ந்தார்.

அன்றைக்கு அவர் அடித்தளமிட்ட மேடைதான், இன்றைக்குப்பார்ப்பனரல்லாததிராவிடப்பெருங் குடி மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் படிப் புத் துறையிலும், கல்வித் துறையிலும் ஓங்கி நிற் பதற்கும், உத்தியோகத் துறையில் சமூகநீதியைப் பெற்றுள்ளதற்கும் அடித்தளமாகும்.

எனவே, அப்படிப்பட்ட தியாகராயர் பெருமான் அவர் களுடைய  அந்த நினைவு என்பது இருக்கிறதே - கடைசி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை வாழும் - தந்தை பெரியார் போன்றவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி செய்த பணியை  மிகச் சிறப்பாக செய்தவர் தியாகராயர் அவர்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

-விடுதலை,27.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக