செவ்வாய், 17 மார்ச், 2015

வட சென்னை- 111வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு-16.3.15

எங்களை, எங்கள் தாய்மார்களை தாசிகள் என்று கூறும்
இந்து மதத்தை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?


இராவண லீலா கண்ட அன்னை மணியம்மையார் நினைவு நாளில்
 தமிழர் தலைவரின் இனமானப் பேருரை!
சென்னை, மார்ச் 17- எங்கள் தாய்மார்களை வேசிகள் என்று கூறும் இந்து மதம் எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் - ஒருக்காலும் நடக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியில் அன்னை மணியம்மையார் 37ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 111 ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நேற்று (16.3.2015) மாலை நடைபெற்றது.
நாட்டிலிருந்து ஜாதி வெறி, மத வெறி ஒழித்து மனித நேயத்தைக் காக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிட்டார்கள்.
அவரது உரை வருமாறு:-
தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுக்காலம் வாழ வைத்து, தன்னுடைய வாழ்க்கையையே தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்து, அதன்மூலம் திராவிட சமுதாயத்தினுடைய மானமீட்புக்குத் தன்னை ஒப்படைத்த புரட்சிகரமான தாயாக,
திராவிடர் தாயாக திகழ்ந்த அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளான இன்றைக்கு அந்த நினைவு நாளையும், ஏற்கெனவே கழகம் அறிவித்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டையும் இணைத்து நடைபெறுகிறது.
நண்பர்கள் இங்கே சொன்னதைப்போல, அன்னை மணியம்மையார் அவர்களுடைய 37 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும். அவர்கள் மறைந்து இன்றைக்கு 37 ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
வடநாட்டைவிட தமிழ்நாடு மோசமாக ஆகியிருக்கும்!
தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று பலர் கேட்டார்கள். இருக்காது என்று சிலர் ஆருடம் கணித்தார்கள். இருக்கக்கூடாது என்று சிலர் ஆசைப்பட் டார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் எப்படி வாழ வைத்தார்களோ,
அதுபோலவே அன்னை மணியம்மை அவர்கள் மேலும் அய்ந்து ஆண்டு காலம்  மிக சோதனையான காலக்கட்டத்திலே இந்த இயக்கத்தைப் பாதுகாத்து, வளர்த்து, தமிழ் மக்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டு, பெரியார் பணி தொடரக்கூடிய அந்த நிலையை உருவாக்கியிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு இயக்கம் இல்லாமலிருந்தால்,  பெரியார் பிறக்காமல் இருந்தால், அன்னை மணியம்மையார் அவர்கள் இந்தப் பணியைத் தொடராமல் இருந்தால், இந்தப் பணியை நாமெல்லாம் இந்தக் கொள்கையை நினைவுபடுத்திக் கொள் ளாமல், இந்த மண்ணைப் பக்குவப்படுத்தாமல் இருந்திருந்தால், வடநாட்டைவிட இது மோசமாக ஆகியிருக்கும்.
இப்போதே நம்முடைய மக்கள் திராவிடர் கழகம் நாடாளு மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னாலே கொடுத்த அந்த எச்சரிக்கையை அவர்கள் அலட்சியப்படுத்திய காரணத்தால்,
வளர்ச்சி வளர்ச்சி என்ற மாயையிலே  அவர்கள் மயங்கிய காரணத்தால் தான் இளைஞர்கள் பலர் இந்த உணர்வுகளைப்பற்றித் தெரியாத ஒரு சமுதாயமாக அவர்கள் சிமெண்ட் சாலையிலே கார் ஓட்டக்கூடியவர்கள் எப்படி ஏற்கெனவே இருந்த மேடு பள்ளங் களைப்பற்றிக் கவலைப்படாமல்,
இதுதான் என்றைக்கும் இருக்கின்ற நிலைபோல் இருக்கிறது என்ற நிம்மதியோடு அவர்கள் செல்வார்களோ, அதுபோன்று பல இளைஞர்கள் நினைத்த காரணத்தினாலே அவர்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், வெகுவிரைவில் தங்களுடைய சுய உருவத்தை மதவாத சக்திகளும், ஜாதி வெறி சக்திகளும் காட்ட ஆரம் பித்தன. திராவிடர் கழகத்தினுடைய வாக்கு என்றைக்கும் பொய்க்காது என்று சொல்லக்கூடிய அனுபவத்தை இன்றைக்கு நாடு பெற்றுக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் எங்கள் மேடைக்கு வருவதற்கு என்ன காரணம்? எதிரும், புதிருமாக இருக்கக்கூடியவர்களைக்கூட இதில் ஒத்தகருத்துள்ள அத்துணை பேரையும் நாங்கள்  அழைக்கின்றோம்.
இங்கே நான் பழைய தோழர்களையும் பார்க்கிறேன். புதிய இளைஞர்களையும் பார்க்கிறேன். தோழியர்களும் உற்சாகத் தோடு பணியாற்றுகிறார்கள். எங்களுடைய இயக்கம் என்பது, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியபடி எல்லோருக்கும சொல்லு கிறோம் இங்கே இருக்கிற சில காவல்துறை நண்பர்கள் உள்பட.
இந்த இயக்கம் என்பது யாருக்கும் எதிரி அல்ல. அதேநேரத்தில் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தம் உடையதும் அல்ல. இதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லா மக்களுக்காகவும் பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் கழகம்
எப்படி ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்தால், அந்தப் பள்ளிக்கூடம் எல்லோருக்கும் சொந்தம். அதிலே இன்னார் தான் படிக்கவேண்டும் என்கிற நியதிகள் கிடையாது. எல் லோருடைய கல்லாமையைப் போக்கி, அதை இல்லாமையாக ஆக்கி, நல்ல அளவுக்குக் கல்வி அறிவைப் பரப்புவதற்காக பள்ளிக்கூடம். எல்லோருக்கும் உரியது.
பள்ளிக்கூடம் வைத்த வர்கள் தனியாராகக்கூட இருப்பார்கள். ஆனால் பள்ளிக்கூடத் தில் மாணவர்களை சேர்க்கின்றபொழுது, எல் லோருக்கும் அங்கு உரிமையும், உறவும் உண்டு. அதுபோலத் தான் நண்பர் களே, திராவிடர் கழகம். இது எல்லா மக்களுக்கும் பாடு படுகின்ற இயக்கம்.
யார் யார் ஒடுக்கப்பட்டவர்களோ, யார் யார் மிதிக்கப்பட்ட வர்களோ, யார் யார் அழுத்தப்பட்டவர்களோ அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், சிறுபான்மைச் சமுதாயமாக இருந்தாலும், வேறு வகையாக இருந்தாலும் எல்லோருக்கும் கதவு திறந்திருக்கிற இயக்கம் ஒன்று இருக்கிறதென்றால், அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய பொது இயக்கமான இந்த கருஞ்சட்டை இயக்கம். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மருத்துவமனை என்பது எல்லோருக்கும் பொது வானது. யார் யாருக்கு நோய் வந்திருக்கிறதோ, அவர்கள் எல்லாம் மருத்துவமனைக்குப் போவார்கள். கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த 108 இன்றும் அதன் பணி குறைய வில்லை. அதன்மூலம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுபோய் இன்றைக்கு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் கள்.
மருத்துவமனையில் சிகிச்சை செய்து அனுப்புவதுதான் மருத்துவர்களின் கடமை. மருத்துவமனைக்கு போவதற்கு கட்சி உண்டா? மருத்துவமனைக்கு பேதம் உண்டா? மருத்து வர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும்போது அவர்கள் எங்காவது வித்தியாசத்தைப் பார்க்கிறார்களா? அதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அதுபோல்தான் திராவிடர் கழகம்.
நாங்கள் யாரையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. யார் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் யார் மூடநம்பிக்கை நோய்க்கு ஆளாகி இருக்கிறார்களோ, யார் யார் ஜாதி நோய்க்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் யார் மதவெறி நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுக்கின்ற ஒரு மாமருந்து, மருத்துவ நிலையம்தான் தந்தை பெரியார் அவர்களாலே உருவாக்கப்பட்ட இந்த திராவிடர் கழகம்.
அதுபோலவே திடீரென்று தீப்பிடித்தால், எந்த நேரமும் தயாராக இருந்து அது இரவா? பகலா? வெயிலா? மழையா? அது எப்படிப்பட்ட பருவம்? அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் என்றைக்கும் தயாராக இருக்கிற அந்தத் தீயணைப்பு நிலையம்தான், காவல்துறைபோலவே 24 மணிநேரமும் பணியாற்றக்கூடிய ஒரு மிக முக்கியமான பணியாற்றுகின்ற தீயணைப்பு நிலையம்.
எங்கே தீப்பிடித்தாலும் சில மணித் துளிகளிலே ஆயத்தமாகிப் போவார்கள். அதுபோலவே, எங்காவது ஜாதி வெறி, மதவெறி, வகுப்பு வெறி என்று சொல்லிக்கொண்டு யாராவது வெறியாட்டம் ஆடினால், அதைத் தடுப்பதற்கு இந்த கருஞ்சட்டை தீய ணைப்பு நிலையம். சமுதாயத்திலே அந்தத் தீ பரவிவிடக் கூடாது என்று பெரியார் காலத்திலிருந்து செய்த பணிகளால் தான்,
இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள்; இரத்த ஆறு ஓடியது. பிணக்குவியல் மலையெனக் குவிந்தது.
தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது
ஆனால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இங்கிருந்து காவல்துறையினரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினார்கள் உதவுவதற்காக. அப்போது பத்திரிகைகள், ஊடகங்கள் தெளிவாக எழுதின.
இதற்குக் காரணம் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல. இதற்கு மூலகாரணம் என்னவென்றால், தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. ஆகவே, மதவெறிக் கலவரங்கள் இங்கே வராது என்று சொன்னார்கள்.
காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே என்ற மராத்திப் பார்ப்பானுக்கு, ஆர்.எஸ்.எஸிலே பயிற்சி எடுத்த பார்ப் பானுக்கு, இந்து மகாசபைக்காரராகத் தன்னை முழுக்க முழுக்க ஆயத்தப்படுத்திக் கொண்ட நாதுராம் விநாயக் கோட்சே என்ற அந்த மராத்திய பார்ப்பான், காந்தியாரைக் கொலை செய்து விட்டு, திசை திருப்புவதற்காக, இந்து - முஸ்லிம் கலவரங்களை உருவாக்கவேண்டும் என்பதற்காக, கையிலே அவன் பச்சைக் குத்திக் கொண்டிருந்த பெயர் இஸ்லாமிய பெயராகும்.
1948 ஜனவரி 30 காந்தியார் சுடப்படுகிறார். அப்படிப்பட்ட நேரத்திலே இரண்டொரு நாள்களிலே இந்தியா முழுவதும் சுட்டவன் ஓர் இசுலாமிய சகோதரன் என்பது மாதிரி தவறாகப் பரப்பி விட்டார்கள்.
வட நாட்டிலே ஏற்கெனவே பேதங்கள். தென்னாட்டிலே அந்தப் பேதங்கள் கிடையாது. உடனடியாக பல கலவரங்கள். ஆனால், இங்கே இருந்தவர்கள் பதம் பார்ப்பதற்காக, ஒத்தி கைக் களமாக அதை மாற்றிக்கொண்டு மதக் கலவரங்களை வாணியம்பாடி, ஈரோடு, ஆம்பூர், திருவண்ணாமலை,
சென்னையில் ஒரு சில பகுதிகள் இப்படி எங்கெங்கெல்லாம் சிறுபான்மைச் சமுதாயச் சகோதரர்கள் வாழுகிறார்களோ, அங்கே இசுலாமியர்கள் தாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை அரசல்புரசலாக ஏற்பட்டது. வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல அது. அதை நிறுத்தக்கூடிய அளவுக்கு மக்களிடையே செல்வாக்கு வாய்ந்த ஒரு தலைவர் தேவை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொன்னால், இன்னொரு அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். அப்போது சென்னை ராஜ்யம்.
தமிழ்நாடு என்று அண்ணா வந்ததற்குப்பின், திராவிடம் வந்ததற்குபின் கிடைத்த பெயர் நமக்கு. அப்போது சென்னை ராஜ்யம். அந்த சென்னை ராஜ்யத்திலே முதலமைச் சராக இருந்தவர் மதிப்பிற்குரிய ஒழுக்கச் சீலர் காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள். ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்டவர். அவருடைய பெயரில் தான் நம்முடைய கலைஞர் அவர்கள் ஓமந்தூரார் தோட்டம் என்று பெயர் வைத்தார்கள்.
முதலமைச்சர் ஓமந்தூரார் என்ன செய்தார்? அவர் பேசவில்லை. மற்றவர்களை, வடநாட்டுத் தலைவர்களைப் பேசவைக்கவில்லை. வானொலி ஒன்றுதான் அப்போது பொது மக்களை இணைக்கக்கூடிய ஒரு சாதனம். இப்பொழுது இருப்பதைப்போல, ஊடகங்கள் வளர்ந்த பகுதிகள் கிடையாது. அந்த சூழ்நிலையில் நண்பர்களே, என்ன நடந்தது என்றால், திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைத் தான், திருச்சி வானொலி நிலையத்திற்கு அழைத்து அவர்களைப் பேச வைத்தார்கள்.
அய்யா, நீங்கள் பேசினால்தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள் என்று முதலமைச்சர் ஓமந்தூரார் சொன்னார்.
அப்பொழுது பெரியார் அவர்கள் சொன்னார், யாரும் தனிப்பட்ட மனிதர்கள்மீது கோபப்படக்கூடாது; உணர்ச்சி வயப்பட்டு நடந்துகொள்ளக்கூடாது; கலவரங்கள் கூடாது; துப்பாக்கியை நீங்கள் தண்டிக்க முடியுமா? என்று கேட்பதைப் போல, பொறுத்திருந்து அமைதியாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டவேண்டிய தருணம் இது. மிகுந்த அளவிற்குப் பொறுப்புணர்ச்சியோடு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.
அந்த உரை, இங்கே புத்தகமாகக்கூட கிடைக்கிறது. காந்தியார் கொலை முயற்சியைப்பற்றி ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. அதிலே பதிவாகியிருக்கிறது.
எங்கள் தாய்களையும், சகோதரிகளையும் தாசிகள் என்று அழைப்பதா?
அப்படி தந்தை பெரியார் அவர்கள், இந்த இயக்கம், இந்த மண்ணிலே ஜாதி வெறி, மதவெறி இவைகளுக்கு இடமில்லை. மனிதநேயம்தான் தேவை. மதவெறியை மாய்த்து, மனித நேயத்தைக் காப்பாற்றவேண்டும். இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளம். சுயமரியாதை இயக்கம் என்பது வெறும் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கக்கூடிய இயக்கம் அல்ல.
பார்ப்பனர்களை ஏன்?எதிர்க்கிறோம்? ஏன் பார்ப்பன மதமாகிய, சனாதன மதமாகிய இந்து மதம் என்கிற பெயராலே இன்றைக்கு அழைக்கப்படக்கூடிய பார்ப்பன சனாதன வேத மதத்தை, வைதீக மதத்தை எதிர்த்துப் பேசுகிறோம்? அதுதானே நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதுபோல, எங்களை சூத்திரன் ஆக்கியிருக்கிறது; எங்கள் பெண்களை யெல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.
எங்கள் தாய்களை யும், சகோதரிகளையும் தாசிகள் என்று அழைத்திருக்கிறது. தேவடியாள் என்று எழுதி வைத்திருக்கிறானே! நல்ல ரத்தம் உடம்பில் ஓடக்கூடியவர்களுக்கு மான உணர்ச்சி இருக்கக் கூடாதா? தயவு செய்து நீங்கள் சிந்திக்கவேண்டும்.
தந்தை பெரியார் கேட்டார், அன்னை மணியம்மையார் அந்தப் பணியைத் தொடர்ந்தார். சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில், சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கின்ற காலகட்டத்தில், எந்த நாட்டிலே இன்னமும் சூத்திரன் இருக்கிறான்; இன்னமும் பஞ்சமன் இருக்கிறான்; பறையன் இருக்கிறான்; பள்ளன் இருக்கிறான்; சக்கிலியன் இருக்கிறான்;
தொட்டால் தீட்டு என்று சொல்கிறவன் இருக்கிறான்; ஒதுங்கிப் போ என்று சொல்கிறான். தேநீர்க் கடையில் காசு கொடுத்துத் தேநீர் வாங்கிக் குடிக்கின்ற நேரத்தில்கூட, இரட்டைக் குவளை முறை ஏன் இருக்கிறது? ஜாதி இருக்கலாமா? இந்த ஜாதிக்கு என்ன அடையாளம்? ஏதாவது அறிவியல் அடையாளம் உண்டா? பின் ஏன் ஜாதி இருக்கிறது? ஜாதி இருக்கக்கூடியவர் களை நாங்கள் அழைக்கிறோர் என்று யாராவது சொல் லட்டுமே?
எங்களுடைய தோழர்கள் எல்லாம், 40, 50, 60 ஆண்டுகளுக்குமேலாக பழகியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, இன்னார், இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா?
இராவண லீலா நடத்தி இந்தியாவையே நடுநடுங்க வைத்தார் அன்னை மணியம்மையார்
பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கும்பொழுதுகூட, பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று. அவன் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு போனாலும் பரவாயில்லை; என்னை தாழ்ந்தவன் என்று சொல்கிறானே, என்னுடைய தாழ்வை அசிங்கப்படுத்துகிறானே, பிறகு அவனைக் கண்டிக்காமல் இருந்தால், என்னைவிட முட்டாள் வேறு எவன் இருப்பான்?
இதனை நீங்கள் நன்றாக சிந்திக்கவேண்டாமா? இதைத்தானே தந்தை பெரியார் கேட்டார், அன்னை மணியம்மையார் அவர் கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். இராவண லீலா நடத்தி இந்தியாவையே நடுநடுங்க வைத்தார்.
வடநாட்டில் உள்ள மக்களுக்கு இன்னமும் எழுச்சி வரவில்லை. இங்கே 1975 ஆம் ஆண்டு இராவண லீலா நடைபெற்றது. இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கினார்கள்.
டில்லியில் ராமலீலா நடத்தினார்கள்; சரி பரவாயில்லை. ஆனால், அந்த விழாவில், ராவணன் உருவத்தையும், கும்ப கர்ணன் மற்றும் அவர்களுடைய சகோதரர்களின் உருவத் தையும் கொளுத்தினார்கள்.
இதைக் கண்டித்து பல பேர் கேட்டார்கள். இந்திரா காந்திக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதினார்.
அவரால் தெளிவான பதில் சொல்ல முடியவில்லை. ஆதாரபூர்வமாக சொல்கிறேன். ஏனென்றால், 1975 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள், பெரியாரைப் பார்க்காமல், அன்னை மணியம்மையாரைப் பார்க்காமல், இளைஞர்களாக திராவிடர் கழகத்தில், இந்தக் கொள்கைகளை மட்டுமே பார்த்து வந்தவர்கள் இருக்கிறார்கள். இதுபற்றி தெரிந்துகொள்ளாத பொதுமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
ராம லீலாவை நிறுத்தவேண்டும் என்று சொல்லி அன்னை மணியம்மையார் கடிதம் எழுதினார். அண்ணா அவர்கள் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்திலேயும் எழுதினார், தமிழிலேயும் எழுதினார்.
ராம லீலா என்று ஏன் கொண்டாடவேண்டும்? எங்களைப் புண்படுத்தாதா? பண்டித ஜவகர்லால் நேரு சிறையில் இருக்கும்பொழுது இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதுகிறார்:
வடநாட்டில் இருந்தவர்கள் ஆரியப் பரம்பரையினர்; தென்னாட்டில் இருந்தவர்கள் திராவிடர்கள். திராவிடர்களைக் கொச்சைப்படுத்தத்தான் குரங்குகள் என்றும், அவர்களையெல் லாம் அனுமார்கள் என்று சொல்லி, அசுரர்கள் என்றும் அழைத்தார்கள். எனவே, அவர்கள் இரண்டு பேருக்கும் நிற பேதம் இருந்தது; திராவிடர்கள் கறுப்பாக இருந்தார்கள்.
இவர்களுக்குள் தகராறு நடைபெற்றது. அதற்காகத்தான் ஆரியர்கள்  திராவிடர்களை குரங்குகள் என்று வருணித்து, ராமாயணம் என்பதே, ஆரியர் - திராவிடர் போராட்டம்.
அன்னை மணியம்மையார் எழுதிய கடிதத்தில், ராம லீலாவில், எங்கள் இராவணனை எரிக்கக்கூடாது என்று. இதற்கு இப்பொழுது புதிதாக ஒரு வியாக்கியானம் சொல்கிறார்கள். இராவணன் என்றால் தீமையாம்; ராமன் என்றால் நன்மையாம்.
எங்களிடம், ராமன் செய்த வேலையை விவாதம் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம். எவ்வளவு பெரிய ராமாயண பக்தனாக இருந்தாலும் சரி.
கடவுள் அவதாரம் என்று சொல்கின்ற ராமன் என்ன செய்தான்?
மார்ச் 8 ஆம் தேதிதான் உலக மகளிர் நாளைக் கொண் டாடினோம். மகளிர் உரிமைபற்றி பேசினார்களே; ராமா யணத்தில் ராமராஜ்ஜியம் என்று சொல்லி, கடவுள் அவதாரம் என்று சொல்கின்ற ராமன் என்ன செய்தான், அவனுடைய மனைவியை ஒழுங்காக நடத்தியிருக்கிறானா? கடவுள் அவதாரம் மனிதர்களைவிட, மிகவும் வழிகாட்டக்கூடிய அளவில் அல்லவா இருக்கவேண்டும்.
சீதையை மீட்கிறான், ராமனிடம் சீதை செல்லும்பொழுது, தொடாதே, எட்டி நில்! உன்னைப்பற்றி  எனக்கு நல்ல அபிப் பிராயம் இல்லை. ஊரில் உன்னைப்பற்றி தவறாக சொல் கிறார்கள். ஆகவே, நீ உண்மையானவள் என்று சொன்னால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? ஒரு பெரிய தீக்குண்டம் வளர்த்து, அந்தத் தீயில் நீ இறங்கவேண்டும்.
நீ பரிசுத்தமானவள்; கற்பு கெடாதவள் என்பதை நிரூபித்து நீ தீயில் இறங்கி வந்தால், நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறானாம்.
தாய்மார்களைக் கேட்கிறோம், பெரியவர்களைக் கேட்கி றோம், உங்கள் வீட்டில் யாராவது உங்களிடம் இப்படிக் கேட்டால், தீக்குண்டம் வளர்த்து அதில் இறங்கி வருகிறேன் என்று எந்தப் பெண்ணாவது சொல்வார்களா? இந்த 21 ஆம் நூற்றாண்டில்! அவர்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தாலும், காவல்துறை சும்மா இருக்குமா?
ஒரு பாட்டில் மண்ணெண் ணெய் கொண்டு சென்றாலே, பின்னாலேயே சென்றுவிடுமே காவல்துறை. தீயில் இறங்குகிறேன் என்று சொன்னால், சும்மா இருப்பார்களா? தீ உண்டாக்கியவனையும் பிடிப்பார்கள்; ராமன்போல கண்டிஷன் போட்டவனையும் கைது செய்து, முதல் குற்றவாளியாக்குவார்கள்.
ராமனிடம் என்ன ஒழுக்கம் இருக்கிறது? எதில் முன்மாதிரி யாக இருந்தான்? இது ஒரு கட்டம்.
நிறைமாத கர்ப்பணியாக இருந்த சீதையை, சந்தேகப்பட்டு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறான். அங்கேதான், ராமனுக்கு லவ, குசா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. யாராவது கர்ப்பிணியை காட்டிற்கு அனுப்பினால், அவனை நல்ல மனிதன் என்று சொல்வீர்களா?
ராமராஜ்ஜியத்தில் அவர் என்ன செய்தார்? உத்திர காண்டம்; ராமாயணத்தில் இருக்கின்ற கடைசி காண்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். எதுவும் நம் கற்பனையல்ல. அவன் எழுதி வைத்திருக்கிறான்.
இன்றைக்கு நாங்கள் ராமராஜ்ஜியத்தை நடத்துகிறோம் என்று சொல்கிறார்களே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பி.ஜே.பி., சிறீராம், ஹரே ராம், ஹே ராம் என்று சொல்கிறார்களே!
பாவம், காந்தியே ராமன் வந்து காப்பாற்றுவான் என்று நினைத்தார்.
அவர்,
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
சீதாராம் ஜெய சீதாராம்!
பஜ து ப்யாரே சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சப்கோ சன்மதி தே பகவான்!
ரகுபதி ராகவ ராஜா ராம்!
பதீத பாவன சீதாராம்!
கடவுளுக்கே ஒரு கூட்டணி போட்டார். அப்படி இருந் தாலும் காந்தியை என்ன செய்தான் பார்ப்பான், உயிர் வாழ விடவில்லையே! கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்ற தால்தானே அவர் 80 வயதைத் தாண்ட முடியவில்லையே!
இன்றைக்குக் கோட்சேவிற்கு சிலை வைக்கவேண்டும் என்று வெளிப்படையாக வந்துவிட்டார்கள். ஒரு பக்கம் கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் லண்டனில் காந்திக்குச் சிலை திறந்தால், அதற்கு நம்முடைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செல்கிறார். இதுதான் இரட்டை வேடம்.
பேசுநா இரண்டுடையாய் போற்றி போற்றி! ஆரிய மாயை பற்றி அண்ணா அவர்கள் எழுதினார்கள் பாருங்கள்; ஒரு பக்கம் இது நடக்கும்; இன்னொரு பக்கம் இன்னொரு வேலை நடக்கும்.
ஆகவே, பார்ப்பனர்கள் ஒரு சின்னக் குழந்தையை ராமனுக்கு முன்பாக போட்டு, ராமா, உன்னுடைய ஆட்சியில் எவ்வளவு பெரிய கேடு நடைபெறுகிறது பார்த்தாரா? என்கிறார்கள்.
ஒன்றும் புரியவில்லை, ராமனுக்கு! என்னவென்று கேட் கிறான்! எனக்குத் தெரிந்து நான் அதர்மம் எதையும் செய்ய வில்லையே என்கிறான். நான் ஆட்சிக்கு வந்த பிறகு அப்படி ஒன்றும் சட்டம் போடவில்லையே, நீங்கள் எல்லாம் பாதிக் கும்படியாக! பார்ப்பனர்களைப் பார்த்து, உங்களுக்காகத்தானே நான் ஆட்சியே நடத்துகிறேன் என்கிறான்.
அப்பொழுது பார்ப்பான் ஒருவன் சொல்கிறான், இதோ பார் என்னுடைய குழந்தை இறந்து போய்விட்டது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த ஊருக்கு வெளியில் சென்று பார்! அங்கே ஒருவன் கண்ணைமூடிக்கொண்டு கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அவன் பெயர் சம்பூகன், சூத்திரன், கீழ்ஜாதிக்காரன், நாலாஞ்ஜாதிக்காரன்.
அவன் தவம் செய்வது சாஸ்திரத்திற்கு விரோதமானது; மனுதர்மத்திற்கு விரோத மானது; பிராமண தருமத்திற்கு விரோதமானது; வருண தருமத்திற்கு விரோதமானது. மூடனானாலும், ஞானியானாலும், சூத்திரனுக்குப் பிராமணனே தெய்வம்.
எனவே, அவன் யாரைக் கும்பிடவேண்டும்;
இன்றைக்குப் பஞ்சாயத்துத் தலைவர்களிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் எல்லாம் அரசியல் சாசன சட்டத்தின்மீதுதான் பதவிப் பிராமணம் எடுத்துக்கொள் வார்கள். அந்த அரசியல் சாசன சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மத்தை அங்கே வைக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள்.
யார்? டில்லியில், கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி, சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கக் கூடிய, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளில் ஒருவரான அசோக்சிங்கால், விசுவ இந்து பரிசத்தினுடைய உலகத் தலைவர்.
அந்தக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் என்கிற பார்ப்பன அம்மையார், இவர்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், என்ன சொன்னார் தெரியுமா? பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொன்னார். அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மம் இருக்கவேண் டும் என்று சொன்னார்கள். மனுதர்மம் என்றால், குலதர்மம்.
நாங்கள்தான் இதனைப் புரிந்துகொண்டு, உங்களுக்குச் சொல்கிறோம். எங்களுக்கு இந்தப் பணியை விட்டால், வேறு பணி கிடையாதே! நாங்கள் அமைச்சராவதற்காகவா இதனைச் சொல்கிறோம். அப்படி அமைச்சராகி என்ன செய்ய முடியும்?
நான் வெறும் சூத்திரன்; அவர் மாண்புமிகு சூத்திரர்
பெரியார் கேட்டார், தி.மு.க. அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டு பேசினார். நான் மந்திரியாவது முக்கியமல்ல; அதன்மூலம் சில காரியம் நடக்கவேண்டும்; நம்முடைய எதிரிகள் வரக்கூடாது என்பது வேறு விஷயம். ஆனால், இழி தன்மை ஒழியுமோ! சூத்திரப்பட்டம் ஒழியுமோ! என்று கேட்டார்.
இங்கே மந்திரி உட்கார்ந்திருக்கிறார்! அவரை அழைப்பவர்கள், மாண்புமிகு மந்திரியார் என்று கூப்பிட வேண்டும். எனக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்? நான் வெறும் சூத்திரன், சட்டப்படி. அவர் மாண்புமிகு சூத்திரர். இவ்வளவுதானே வித்தியாசம் என்று பெரியார் கேட்டார்.
சூத்திரன் என்றால் என்ன பொருள்?
சூத்திரன் ஏழு வகைப்படும்: 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.  2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.  3) பிராமணனிடத்தில் பக்தி யினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
மேற்கண்ட நிலை மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ். அதை மீண்டும் உருவாக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வினுடைய இன்னொரு திட்டம். என்னுடைய தாய் யார்? என்னுடைய சகோதரி யார்? என்னுடைய மகள் யார்? இந்த உணர்வு வராதா? இதைக் கேட்பது என்ன பெரிய தேசியக் குற்றமா?
தந்தை பெரியார் என்னும் மாமனிதர் பிறந்திருக்காவிட்டால், திராவிடர் இயக்கம் தோன்றியிருக்காவிட்டால், இந்த மேடை உங்களுக்குக் கிடைத்திருக்காவிட்டால், இதனைச் சொல்வதற்கு நாதியுண்டா? எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், இந்த இழிநிலை போய்விடுமா? அய்.ஏ.எஸ். அதிகாரியாகி, அய்க் கோர்ட் ஜட்ஜாக ஆகி, அய்.பி.எஸ். ஆகி, அய்.ஜி.யானாலும் இந்த இழிநிலைப் பட்டம் போகுமா?
முதலில் மசூதிகளை இடிப்பேன்; கிறிஸ்தவர்களை உதைப்பேன் என்கிறார்கள். நேற்றுகூட ஒரு சர்ச்சை உடைத்துவிட்டு, அனுமார் சிலையை வைத்துவிட்டார்கள்; இவையெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வந்துள்ளன. ஒரு புரோக்கர் சாமி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார், மசூதிகளையும், சர்ச்சுகளையும் வெறும் கட்டடங்கள் என்று சொல்கிறார்.
அவற்றை உடைத்துப் பாருங்களேன் என்னாகும் என்று தெரியும்? ரத்த ஆறு ஓடும். இரண்டு பேர் மோதிக் கொண்டால், ஆரிய நரி ரத்தம் குடிக்கும்.
இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யார்? கிறிஸ்தவர்கள் யார்?
எங்களுக்குள்ள கவலையெல்லாம், இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் என்ன ஹெலிகாப்டர்மூலம் அரேபிய நாட்டிலிருந்து வந்தவர்களா? இங்கே இருக்கின்ற கிறிஸ்தவர்கள் யார்? இஸ்ரேல் நாட்டிலிருந்து வந்தவர்களா? பத்து தலைமுறைக்கு முன்பு, நம்முடைய சொந்த மூதாதை யர்கள். இருபது தலைமுறைக்கு முன்பு, நம்முடைய சொந்தக் காரர்கள்.
அவன், தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், தொடக்கூடாதவன், எட்டி நில் என்று நீ சொன்னாய். ஆகவே, நீ அப்படி சொன்னதினால், அவன் எவ்வளவு காலம் பொறுத்திருப்பான். ஆடு, மாடுகளைக்கூடத் தொடலாம், எங் களைத் தொடக்கூடாதா? நாயைப் பக்கத்தில் வைத்திருக்கிறீர் கள், பூனையைப் பக்கத்தில் வைத்திருக்கிறீர்கள். ஆறறிவு படைத்த என்னைத் தொட்டால் தீட்டு என்கிறாயே, இது என்ன நியாயம் என்று கேட்டான்.
வெளியில் இருந்து வந்தான் பாருங்கள், அந்த மதத்துக் காரன், என்னை வாருங்கள் என்று கட்டிப் பிடித்துக் கொண் டான்; கட்டிப் பிடிக்கிறவனோடு நான் போகிறேன் என்று அவன் போய்விட்டான். அவனுக்கு மனிதத் தன்மை, சுயமரி யாதை வந்து அவன் சென்றுவிட்டான். இன்றைக்கு நீ அதனை ஒழிக்கவேண்டும் என்கிறாயே!
எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் நாங்கள் ஏற்காதவர்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அதேநேரத்தில், மற்றவர்களையெல்லாம் மனிதர்களாக மதிக்கின்ற இயக்கம், இந்த இயக்கம். யாரையும் அழிக்கக்கூடாது என்று நினைக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.  நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
மனுதர்மத்தை சட்டமாக்கு என்று சொல்கிறார்களே, சிறுபான்மை சமுதாய மக்கள் எல்லாம் இந்துக்கள்தான் என்று நேற்றுகூட ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசுகிறாரே!
கோல்வால்கர் எழுதிய புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறார்?
கோல்வால்கர் எழுதிய நாம் என்கிற புத்தகத்தினுடைய ஒரு பகுதி; பக்கம் 65. பாருங்கள், அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:
இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமு தாயத்தில், மிக முக்கியமாக இருக்கக்கூடிய உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் நீங்கள் எல்லோரும் அந்நிய மக்கள். நாட்டில் வாழும் அன்னிய மக்களுக்கு, இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, அவர்கள் சமுதாய இனத்தில் ஒன்றென கலந்து, அவர்கள் பண்பாட்டை தழுவுதல் வேண்டும். அல்லது சமுதாய இனத்தின் தயவு தாட்சண்யத்தில் வாழுபவராக இருக்கவேண் டும். அதுதான் தர்க்கரீதியாக உட்பட்ட சரியான முறையாகும்.
ஒன்றுதான் மிக முக்கியம்,
இந்துஸ்தானத்தில் வாழும் இந்துக்கள் அல்லாதார், இந்து பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, இந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, இந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது.
அதாவது, அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மைகளையும், நன்றிகெட்ட தன்மையையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளவேண்டும். ஒரே வார்த்தையில் கூறவேண்டு மானால், அவர்கள் அன்னியராக இருப்பதை விட்டொழித்து விடவேண்டும்.
அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதிலேயோ அல்லது பிரஜா உரிமையோ கூட அவர் அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழுதல் வேண்டும்.
ராமனைக் கும்பிட்டால்தான், இஸ்லாமியர்களாகிய நீங்கள் இந்த நாட்டில் இருக்க முடியும். கிருஷ்ணனை நீங்கள் வணங்கினால்தான், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் இருக்க முடியும் என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். ஆதாரம் இருக்கிறதே!
இதை எவ்வளவு விரைவாக நம்முடைய ஆட்சியில் செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் செய்யவேண்டும் என்பது தான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.
மத்திய ஆட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தானே! யாருக்கு எந்த மந்திரி பதவியைக் கொடுப்பது; மற்ற மற்ற பிரச் சினைகளில் முடிவு எடுப்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தானே!
ஒரு அமைச்சர் பேசுகிறார், நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்; 10 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகள் பெறுவதில் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு இந்துவும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். எல்லோரையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை, இந்துக்கள் மட்டும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டுமாம்! இன்னொரு சங்கராச்சாரி என்ன சொல்கிறார், 10 குழந்தை களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று.
மருத்துவமனைகளில் இல்லாத கருவிகள்கூட சாமியார்கள் ஆசிரமத்தில்!
சாமியார் பயல்களுக்கு குழந்தைகள் பெறுவதைப்பற்றி என்ன அக்கறை இருக்கிறது. இவன்தான் முற்றும் துறந்த முனிவனாகப் போய்விட்டானே! ஆக, எல்லா சாமியார் பயல்களும் வடநாட்டில் ஆசிரமங்களில் பரிசோதனைக் கூடங்களையே வைத்திருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் இல்லாத கருவிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். அங்கேயுள்ள ஆசிரமத்தில் கருக்கலைப்பில் இருந்து, புதுப்புது அறுவை சிகிச்சை செய்யக்கூடிய கருவிகளையெல்லாம் வைத்திருக் கிறார் என்பதை தொலைக்காட்சிகளில்கூட ஒளிபரப்பினார்கள்.
மனுதர்மத்தில்,
11 ஆவது அத்தியாயம்; 84 ஆவது சுலோகத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்,
பிராமணன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாய் இருக்கிறான். மனிதர்களுக்குள் மிகவும் உயர்ந்திருக்கிறான் என்பது கேட்கவேண்டியதில்லை. இன்னும் உலகத்தாருக்கு நம்பத்தகுந்த பிராமணனாக இருக்கிறான். அவ்விஷயத்தில், அவன் உபதேசிக்கிற வேத மந்திரமே காரணம். அதுமட்டுமல்ல, அவனை யாராவதுத் திட்டினால், தண்டனை சாதாரணமானதல்ல!
சூத்திரன், துவிஜர்களை கொடுமையாகத் திட்டினால், அவனைவிட, இவன் தாழ்ந்தவிதமான காலில் பிறந்தவனா கையால், அவன் நாக்கை அறுக்க. துவிஜர்களின் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குலம் உள்ள எஃகு கம்பியைக் காய்ச்சி, எரிய எரிய வைக்க.
நீ இதனைச் செய்யவேண்டும் என்று பிராமணனுக்கு தர்மத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணெய்யை காய்ச்சி ஊற்றவேண்டியது. இதைத்தான் அரசியல் சட்டமாக கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுதான் இந்துராஷ்டிரம்; அதுதான் மோடி ராஜ்ஜியம்.
எங்களிடம் எவனும் கம்பியை நீட்ட முடியாது!
நீங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந் தீர்களேயானால், நாங்கள் விழிப்புணர்வு மாநாட்டைப் போட்டுத் தட்டி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாலும், நீங்கள் திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டே இருந்தால், எங் களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. எப்பொழுது நாங்கள் கறுப்புச் சட்டை போட்டோமே, எங்களிடம் எவனும் கம்பியை நீட்ட முடியாது!
பெரியாருடைய தொண்டர்கள் நாங்கள். அப்படி கடைசி கட்டம் வந்தால், ஒன்றுக்கொன்று நேரே முடித்துவிடுவோம். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்கள் கதி என்னாகும்? உங்கள் சந்ததி நிலை என்னாகும்?
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், படிப்பைக் கொடுக் காதே!
சூத்திரனுக்குக் கற்பு கிடையாது! சூத்திரப் பெண்கள் எங்களுக்கே உரியவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறானே!
தாசி முறையை தந்தை பெரியார் வந்த பிறகுதானே ஒழித்தார்கள். இந்த இயக்கம் இல்லை என்றால், அந்த நிலை ஏற்பட்டிருக்குமா? இப்பொழுது தேவதாசி முறை இருக்கிறதா? கோவிலில் சென்று ஆட முடியுமா?
முன்பெல்லாம் எங்கள் பெண்களைத்தானே ஆட வைத்தார்கள். இப்பொழுது பார்ப்பனப் பெண்கள் ஆடுகிறார்கள் என்றவுடன், அவர்கள் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் ஊட்டுகிறார்கள் என் கிறார்கள். நம் பெண்கள் ஆடினால், சதுர் கச்சேரி ஆடு கிறார்கள் என்றார்கள்.
கீதையின் மறுபக்கம்
என்னுடைய கையில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல். இந்த நூல் லட்சக்கணக்காக இதுவரையில் பரவியிருக்கிறது. இந்த நூல் முதல் பதிவு எப்பொழுது வெளிவந்தது தெரியுமா? 1998 ஆம் ஆண்டு. இந்த நூல் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்பொழுது சில புதிய பகுதிகளைச் சேர்த்து புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
பகவான் கிருஷ்ணன் 10 அவதாரம் எடுத்தார். நாவலர் சொல்லியதுபோன்று, சுற்றிச் சுற்றி நம்மூரிலேயே 10 அவதாரத்தையும் எடுத்தார். அதிலே கிருஷ்ண அவதாரம் ஒரு அவதாரமாகும்.
அந்த அவதாரம் அர்ஜூனனுக்கு உபதேசித்தது.
சதுர் வர்ணம் மயாசிருஷ்டம்
நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். நான் நினைத்தாலும் இதனை மாற்ற முடியாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
மனுர்தமம், கீதை தான் முக்கியம் இந்த மத்திய ஆட்சிக்கு என்று வந்துவிட்டால், இந்த ஆட்சியினுடைய தன்மை, அதிகாரம் பெருகினால், இந்த நாட்டில் மற்றவகள் எல்லோரும்  பழைய காலத்து அடிமைகள் போல இருக்கக்கூடிய சூழ்நிலைதானே ஏற்படும்.
இதனை எதிர்த்துப் பேசக்கூடிய உரிமை இருக்குமா? எங்களைத் தவிர இதைப் பேசுவதற்கு ஆள் இருக்கிறதா? தயவு செய்து இளைஞர்களே, இதனை நீங்கள் நினைத்துப் பாருங்கள். 10 அவதாரம் என்று சொல்கிறார்களே,
10 அவதாரத்தில் ஒன்று மீன் அவதாரம், ஆமை அவதாரம், பன்றி அவதாரம்;
இப்பொழுது பன்றிக் காய்ச்சல் பரவியிருக்கிறதே, மற்ற நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பன்றிக் காய்ச்சல் என்று சொல்லலாம்; ஆனால், நியாயமாக நம் நாட்டில் அதை எப்படி அழைக்கவேண்டும்; மகாவிஷ்ணு காய்ச்சல் என்று அழைக்கவேண்டும். மகாவிஷ்ணுதானே பன்றி அவதாரம் எடுத்திருக்கிறார். பன்றியை விரட்டக்கூடாது; வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து வைக்கவேண்டும் அல்லவா!
ஹிந்து மித்தாலஜி
ஹிந்து மித்தாலஜி Hindu mythology (இந்து புராணங்கள்) இது 2 நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய புத்தகம். அவர்கள் சமஸ்கிருதத்தில் படித்துவிட்டு, நாம்தான் படிக்கக்கூடாது, வெளளைக்காரன் படிக்கலாம். அவன் படித்தது விஷ்ணு புராணம், மச்ச புராணம் என்று 18 புராணங்கள்குறித்து எழுதியிருக்கிறார்கள்.
5 அவதாரம். ஒன்று இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், அதற்கும் முன்னால் பலராமன் அவதாரம், அப்படியே வரிசையாக கடைசியாக பத்தாவது அவதாரம். கல்கி அவதாரம், நரசிம்ம அவதாரம். பாதி அப்படி, பாதி இப்படி. தூணை உடைத்தார், சிங்கம் முகத் தோடு வந்தார் என்று எழுதிவைத்துள்ளார்கள்.
இதில் கிருஷ்ண அவதாரம், பலராம அவதாரம் இரண்டு அவதாரத்திலும் என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா? இதைச் சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால், தரக்குறைவாக பேசுவதோ, வார்த்தைகளைக்கூட உச்சரிக்காதவர்கள் நாங்கள்.
ஆனால், நாம் இப்போது பகவான் கதையை அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். மனிதன் கதையை பேசவில் லையே. மகாவிஷ்ணுவின் கிருஷ்ணன், பலராமன் அவதாரம். தேவர்கள், இந்தப் பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலே போய் முறையிடுகிறார்கள். நிரம்ப அக்கிரமங்கள் நடைபெறுகின்றன என்று படுத்திருக்கும் மகாவிஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள். என்னய்யா நடக்கிறது என்று கேட்கிறார்.
இந்த சத்திரியர்களும், சூத்திரர்களும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். கூட்டணி வைத்து விட்டார்கள். நமக்கு ரொம்ப ஆபத்து வந்துவிட்டது. அதிலேயே எழுதியிருக்கிறார்கள். அவர்களை அழிக்கவேண்டும். நீங்கள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.
உடனே அவதாரம் எடுத்துவருவதற்கு நான் செய்கிறேன் என்று கூறி, நான் இரண்டு அவதாரம் எடுத்து அனுப்புகிறேன். ஒரு அவதாரம் சத்திரியர்களை அழிப்பதற்காக பலராம அவதாரம். இன்னொரு அவதாரம் இந்த கிருஷ்ண அவதாரம் எடுத்து நான் அழிக்கிறேன். என்று சொல்லி என்ன செய்கிறான் என்றால், இந்த நூலில் உள்ளதை அப்படியே படிக்கிறேன் பாருங்கள்.
The Vishnu purana from which most following...
அப்படி விஷ்ணுவின் இரண்டு மயிரைப்பிடுங்கி எறிந்தா னாம். விஷ்ணு புராணத்தில் இருக்கிற செய்தி இது. கடவுள் எவ்வளவு முக்கியமான வேலையை செய்திருக்கிறான். அவமானப்பட வேண்டியிருக்கிறது. அதிலே ஒன்று வெளளை. இன்னொன்று கருப்பு. நமக்குத்தான் வெளளையும், கருப்பும் சேர்ந்திருக்கிறது. அவர் கடவுள், ஒரே நிறத்தில் இருக்க வேண்டாமா? அவருக்கே இந்த வெளளை கருப்பு பிரச்சினை அப்பவே வந்திருக்கிறது.
இந்த மனிதன் கடவுளை எப்படி உருவாக்கினான் என்றால், கடவுளை உண்டாக்கியவன் மனிதன்தான் என்று பெரியார் சொன்னார். உனக்கு என்னென்ன ஆசாபாசங்கள் இருக் கிறதோ, அத்தனையையும் கடவுளில் சேர்த்துவிட்டாய். கதை எழுதும்போது இவன் அதைச் சொல்லிவிட்டான். அந்த வெளளை மயிரைப் பிடுங்கி போட்டான் பாருங்கள் அவன்தான் பலராம அவதாரம்.
இந்தக் கருப்பு மயிர் இருக்கிறது பாருங்கள்,  அதுதான் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ணன் என்றாலே கருப்பு என்று வடமொழியிலே அர்த்தம். நம்முடைய கடவுள் யாரென்று வெளிநாட்டுக்காரன் எழுதியிருக்கான் பாருங்கள். இந்த கடவுள் எல்லாம் இப்படிப் பிடுங்கிப்போட்டுத்தான் வந்தார்கள். அதிலே கருப்பு இந்தக் கடவுள்,
வெளளை இந்தக் கடவுள் என்றால், எனக்கு என்ன கவலை என்றால், எங்க அப்பாவுக்கு பெயர் கிருஷ்ணசாமி. நானல்லவா பேச வேண்டும். எங்க அப்பனுக்கு நான் மரியாதை காட்ட வேண்டாமா? ஏனென்றால், நம்மை எவ்வளவு முட்டாள் ஆக்கியிருக்கிறான் பாருங்கள்.
ஆண்கள் எதிலிருந்து வந்தார்கள்?
நல்ல வேளை ஒரு இராமசாமி வந்து என்னைக் காப்பாற் றினார். நம்மை காப்பாற்றினார். உங்களைக் காப்பாற்றினார். அவர் சாமியில்லை நமக்கு. வழிகாட்டி. அவர்தானே நமக்கு மான உணர்வு கொடுத்து இந்தக் கேள்வியைக் கேள் என்று சொன்னார்.
கிருஷ்ண அவதாரத்தில் உபதேசித்தானாம், பெண்கள் எல்லாம் பாவ யோனியில் இருந்து வந்தவர்கள்; ஆண்கள் எதிலிருந்து வந்தார்கள்? என்ற இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார்களா?
ஆகவேதான், இந்த வர்ணம், குலதர்மம், மனுதர்மம் இதேபோல, சாஸ்திரங்கள், கீதைகள் இவைகளை வைத்துக் கொண்டு, இந்துராஷ்டிரம் என்ற பெயராலே வருணசிரம தருமத்தை, ஜாதியை நிலைநாட்டவேண்டும் என்று வருகிற பொழுது, ராமராஜ்ஜியம், கதையினுடைய ஆரம்பித்திற்குப் போகலாம்,
சம்பூகன் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்கிறான், தவம் செய்கிறான்.
ராமன் சென்று அவனிடம் கேட்கிறான், நீ என்ன செய்கிறாய் என்று.
சம்பூகன், நான் தவம் செய்கிறேன், கடவுளைத் தேடுகிறேன் என்றான்.
உடனே ராமன் விசாரணையே செய்யவில்லை, கத்தியை எடுக்கிறான், சம்பூகன் கழுத்தை வெட்டுகிறான்; கண்ட துண்டமாக வெட்டுகிறான்.
சம்பூகன் இறந்தவுடன், இறந்துபோன பார்ப்பனச் சிறுவன் உயிர் பெற்று எழுகிறானாம்.
சூத்திரனைக் கொன்றால், பிராமணச் சிறுவன் உயிர் பெற்று எழுந்தானாம்.
இதற்கு என்ன அர்த்தம்? ராமாயணத்தினுடைய தத்துவம் என்ன? ராமராஜ்ஜியத்தினுடைய தத்துவம் என்ன? ஜாதியைக் காப்பாற்றுவதுதானே!
எந்தக் கோவிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா?
எனவே, ஜாதியைக் காப்பாற்ற, மதத்தைக் காப்பாற்ற ராமனை, கிருஷ்ணனை, கடவுளை, புராணத்தை, வழிபாட்டை பயன்படுத்துகிறார்கள்.
எங்களுக்கு அவர்கள் மேல் என்ன கோபம்? நாங்கள் மணி ஆட்டவேண்டும் என்றா நாங்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்று சொல்கிறோம். எந்தக் கோவிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா? தயவு செய்து நீங்கள் இதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவேதான் நண்பர்களே, ஜாதியை ஒழிக்கவேண்டு மானால், மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், எல்லோரும் சமம்; யாரும், யாரோடும் கைகோர்த்துக் கொண்டிருங்கள். அவர்கள் எந்த மதம் என்பது முக்கியமல்ல; எந்த மனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியம். நீங்கள் சகோதரர்களாக எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இருங்கள் என்று சொல்வதற்குத்தான் இந்த இயக்கம்.
ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம்! சிறுபான்மை, பெரும்பான்மையல்ல. எல்லா மக்களும் குடிமக்கள். அப்படிப் பட்டவர்கள் வாழவேண்டும். இன்னுங்கேட்டால், எந்த மக்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடாது. எல்லோருக் கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத் தும் என்பதுதான் இந்த இயக்கம்.
அதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்; அதைத்தான் அன்னை மணியம்மையார் முன்னெடுத்துச் சென்றார். அதைத்தான் இந்த இயக்கம் மக்கள் மத்தியிலே பரப்பிக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த இயக்கம் உங்களுடைய அறிவுக் கண்களைத் திறக்கின்ற இயக்கம்; உங்களை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரக்கூடிய இயக்கம்; இந்த இயக்கத்தை ஆதரியுங்கள் என்று கேட்டு, சிறப்பாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த இந்தப் பகுதித் தோழர்களுக்கு நன்றியை தெரிவித்து, வாழ்த்துகளைக் கூறி முடிக்கிறேன், வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
முன்னதாக, வீ.பிரபாகரன் தலைமையில் சொ.அன்பு வரவேற்றார். வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டிஸ், வட சென்னை மாவட்டச் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவர், மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன்,
மாநிலத் தொழிலாளரணி செயலாளர் செல்வராசு, மேனாள் மாவட்டச் செயலாளர்கள் தங்க மணி, கி.இராமலிங்கம், தெ.சு.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகக் கொடியை மகளிர் பாசறை விமலா ஏற்றிவைத்தார்.
சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை தொடக்கவுரை ஆற்றினார்.  தொடக்க நிகழ்வாக பகுத்தறிவு செயல்விளக்க நிகழ்ச்சி யாக ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நடைபெற்றது.
மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், பெரியார் சட்ட உதவி மய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் மாநாட்டு உரையாற்றினார்கள்.
கலந்துகொண்டவர்கள்
ஆவடி மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச் செல்வன், செயலாளர் தளபதிபாண்டியன், வட சென்னை இளைஞரணி துணைச் செயலாளர் தே.ஒளிவண்ணன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,
மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோ.வீ.இராகவன், சா.தாமோதரன், பன்னீர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த துரைசாமி, ராசு, அரிதாஸ், கழக மகளிரணியைச் சார்ந்த தங்க.தனலட்சுமி, சுமதி, லதா, அமுதவள்ளி, மரகதமணி, ஷெரினா கோபால்,  செயலட்சுமி ராசு, அம்முசுதா வீரா, கஸ்தூரி, பெரியார் களம் இறைவி, மீனாட்சி, கணேசன்,
கருத்தோவியன், கோ.கதிரவன், கருங்குழி கண்ணன், இளைஞரணி ஜோதி இராமலிங்கம், பாலமுருகன், பொழிசை கண்ணன், பெரியாரணி விசுவநாதன், மாணவரணி வ.தமிழ்ச்செல்வன், வ.கலைச்செல்வன், பார்த்திபன், இந்திரஜித், பாலமுருகன், பெரியார் பிஞ்சுகள் வி.பி.அறிவுச்செல்வன், வா.நிலா, வா.மணிமாறன், பா.நதியா, மூர்த்தி மற்றும் கொடுங்கையூர், முத்தமிழ்நகர்,
எருக்கஞ்சேரி, கண்ணதாசன்நகர் பகுதிகள் மற்றும் வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம் மாவட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டு நிறைவாக வாசு நன்றி கூறினார்.
-விடுதலை 17.3.15


வட சென்னை- 111வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு-16.3.15 

மாலை 5.00மணி அளவில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் நடைபெற்றது.


தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்டத் 

தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் 

துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ச.மகேந்திரன்,

ஈழ முகிலன் மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக