செவ்வாய், 28 அக்டோபர், 2025

தி.இரா.இரத்தினசாமி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

 


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களின் மறைவையொட்டி இன்று (14.10.2025) காலை 10:30 மணிக்கு சேலையூர் அன்னை இந்திரா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகக் கொடியினைப் போற்றியும், மலர் மாலை வைத்தும் மரியாதை செலுத்தி, மகன்கள் இராமசாமி, சிவசாமி, மகள்கள் முத்துமணி, தங்கமணி, திருமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ஞானசேகரன், பூவை.செல்வி, தாம்பரம் மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள் நாகவள்ளி, நூர்ஜஹான், தாம்பரம் குணசேகரன், சேத்துப்பட்டு நாகராஜன், அனகை ஆறுமுகம் மற்றும் தோழர்கள் இருந்தனர்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.

தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும்  பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.

அவரது வாழ்விணையர் ஆதிலட்சுமி அம்மையார்; மூன்று மகன்கள் மூன்று மகள்கள்; மகன் சிவசாமி தாம்பரம் மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

கழகக் கொள்கையில் ‘முரட்டுத்தனமான’ உறுதி கொண்டவர். அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கே பேரிழப்பாகும்.

அவர்தம் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயமரியாதைச் சுடரொளி
மானமிகு தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.10.2025

- விடுதலை நாளேடு,14.10.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக