சென்னை, மே 12- தேசியக் கல்வி, நீட் போன்றவை பெண் கல்வியைத் தடை செய்வதால், அவற்றைக் கைவிட வேண்டும், ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சட்டம் தேவை; பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி அவசியம் என்பது உட்பட மாநில திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
11.05.2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் எண் 1:
முன்மொழிந்தவர்: ந.தேன்மொழி
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
பெண் கல்விக்கு ஆபத்தா? போராட்டக் களம் கண்போம்
பெண்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தலைவர் தந்தை பெரியார். கல்விக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்துமே முதலில் பாதிப்பது பெண்களின் கல்வியைத் தான். ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை, நீட் ஆகியவற்றின் மூலம் பெண் கல்வி அதிக பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துள்ளது. 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை வடிகட்ட சி.பி.எஸ்.இ வாயிலாகத் தொடங்கியுள்ள ஆபத்து மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறித்து, பெண் குழந்தைகள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இவற்றுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதோடு, தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் போராட்டக் களம் காணவும் திராவிடர் கழக மகளிரணியும், திராவிட மகளிர் பாசறையும் அணியமாக இருப்பதை இக் கூட்டம் உறுதிசெய்கிறது.
(இவ்வேண்டுகோளை ஏற்று, மே 20 அன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் திராவிட மாணவர் கழகமும், திராவிட மகளிர் பாசறையும் பங்கேற்கும் என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.)
தீர்மானம் எண் 2:
முன்மொழிந்தவர்: இறைவி
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் தேவை!
பள்ளி, கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், வன்முறைகளும் அதிகரித்து வரும் சூழலைக் காண்கிறோம். இது போன்ற பிரச்சினைகளைப் பெண்கள் துணிச்சலாக பொது வெளியில் கூறி, அதன் மூலமாக நீதி பெற விரும்புவது ஆரோக்கியமான ஒன்றாக இருப்பினும், பாதுகாப்பை வழங்க வேண்டிய கல்வி வளாகங்களில் பெண்களுக்கு எதிரான எவ்வகை பாலியல் கொடுமைகளும் நடப்பதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளாது. இதனைத் தடுத்துப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கு, முதலில் ஆசிரியர்களுக்கும், இருபால் மாணவர்களுக்கும், பணியிடங்களிலும் போக்சோ சட்டம் (POCSO), குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் தடுப்புச் சட்டம் ஆகியன குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில், கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்களை ஒருங்கிணைப்பது என முடிவு செய்யப்படுகிறது. இவற்றை மற்றவர்களுக்கு வகுப்பு மூலம் பயிற்றுவிக்கும் திறனுடன் நமது மகளிரைப் பயிற்றுநர்களாகத் தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 3:
முன்மொழிந்தவர்: வி.கே.ஆர்.பெரியார்செல்வி
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
பெண்களுக்குத் தேவை தற்காப்புப் பயிற்சி!
பெண்களுக்கு பொழுதுபோக்கில் நாட்டம் ஏற்படுத்தும் பயிற்சிகள் வழங்குவதை விட, தற்காப்புப் பயிற்சிகளை வழங்குவதும், பெண்ணுரிமைக்கான விழிப்புணர்வை வழங்குவதுமே முக்கியமானதாகும். பள்ளிக் கல்வி முதலே பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையைப் பயிற்றுவிக்கத் திட்டமிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையையும், அனைத்துப் பெற்றோரையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4:
முன்மொழிந்தவர்: க.அம்பிகா
(மாநில துணைச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
அறிவியல் சிந்தனையுடன் ‘பாலியல் கல்வி’ வழங்குக!
தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் சிந்தனையோடும் தொலைநோக்கோடும் வாழ்ந்து மறைந்தவர் தலைவர் தந்தை பெரியார். அவரது வழியில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையும் வன்கொடுமைகளையும் கல்வி வளாகங்களில் தடுப்பதற்கான முதல் முன்னெடுப்பாக அறிவியல் சிந்தனையுடன் கூடிய ‘பாலியல் கல்வி’ (Sexual Education) குறித்த பாடத்திட்டத்தை குழந்தைகள் நல ஆர்வலர்கள், சட்ட அறிஞர்கள், உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழுவினை அமைத்து தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 5:
முன்மொழிந்தவர்: எ.ரேவதி
(காஞ்சிபுரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)
ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சட்டம்!
பெண்கள் தாங்கள் விரும்பிய துணையைத் தாங்களே தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அற்றவர்கள் என்கிறது மநுதர்மம். அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்வோரை, மனிதத் தன்மை அற்ற ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்யும் நிலை தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருந்து வருகிறது. ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்திற்கும் முன்மாதிரியாக இருக்கக் கூடிய திராவிட மாடல் அரசு ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவதிலும் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுடன், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி பாதுகாப்பு மய்யங்கள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறையின் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 6:
முன்மொழிந்தவர்: பெ.கோகிலா
(தர்மபுரி மாவட்ட திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்)
தேவை மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்!
மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவதிலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவற்றைப் பரப்புவதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் பெண்களே! ஆணாதிக்கச் சமூகம் ஜாதிய மத சிந்தனைகளை காப்பதற்காக அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் பெண்களை முன்னிறுத்தியே செயல்பட வைக்கிறது. மூட நம்பிக்கைகளால் ஏற்படும் இழப்புகளும், மனிதத் தன்மையற்ற செயல்களும் ஏராளம். தாங்கள் அடிமைகளாக இருப்பதை மறந்து மூடத் தன்மைகளை பரப்புவதற்கு கருவியாக பயன்பெற்று கொண்டிருக்கின்றனர் பெண்கள். படித்த பெண்களும் இதற்கு விதிவிலக்க அல்ல. இந்நிலையை மாற்ற, தமிழ்நாடு போன்ற முன்னேறிய, பகுத்தறிவுச் சிந்தனை அதிகம் கொண்ட மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும். திராவிட மாடல் அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட மகளிர் பாசறை வேண்டுகோள் விடுக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தைப் பெண்கள் மத்தியில் கிராமங்களில் நடத்தி விழிப்புணர்வூட்டவும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 7:
முன்மொழிந்தவர்: ப.திலகவதி
(கோபி மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெண்ணுரிமை குறித்து சிந்தித்தபோது அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய இடம் வேண்டும் என்று முரசறைந்து வந்தார். தொடர்ந்து நமது இயக்கத்தின் போராட்டத்தாலும் அழுத்தத்தாலும் பல்வேறு நிலைகளில் தமிழ்நாட்டில் பெண்களை அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வரும் முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறோம். ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு பெண்களின் நலனைப் பற்றி கவலையின்றி இதனையும் அரசியல் நோக்கோடு அணுகக்கூடிய காலகட்டத்தில், ஏதாவது காரணங்களைக் கூறி பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்றும், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 8:
முன்மொழிந்தவர்: லால்குடி செல்வி
(லால்குடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர்)
தொகுதி மறுசீரமைப்பில் உரிமை காக்கப்பட
குழந்தைப் பேறு தீர்வாகாது!
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் வண்ணம் இடங்களைப் பறிக்க ஒன்றிய அரசு திட்டமிடுவது எப்பாடுபட்டாவது தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் அதற்காக அதிகம் குழந்தைகளைப் பெறுதல் என்பது சரியான தீர்வாகாது. தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சீரிய பிரச்சாராத்தினாலும், அரசின் முன்னெடுப்பாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் பெண்கள் முன்னேற்றம் பெருகியுள்ளது. உரிமைக் குரலாலும், சட்ட வழிமுறைகளாலும் தடுக்கப்படவேண்டிய நாடாளுமன்ற இடங்கள் பறிப்பு போன்ற பிரச்சினையில், குழந்தைகள் அதிகம் பெற வேண்டும் என்று பரப்புவது எவ்வகையிலும் வளர்ச்சி ஆகாது. பெண்ணுரிமை பெற்ற சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சிகள் கூடாது என்பதை இக் கூட்டம் கவனத்துடன் சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் எண் 9:
முன்மொழிந்தவர்: எ.அகிலா
(மாநில பொருளாளர், திராவிடர் கழக மகளிரணி)
இரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகள்
அதிகரிக்கப்பட வேண்டும்
தொடர்வண்டியில் பெண்கள் பயணிக்கும் முன்பதிவற்ற பெண்கள் பெட்டி, அவர்களின் பாதுகாப்பு கருதி தொடர்வண்டியின் நடுப்பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும். பெண்கள் மட்டுமே பயணிக்கும் தொடர்வண்டிப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இரயில் நிலையங்களிலும்,பேருந்து நிலையங்களிலும் அவற்றின் அருகில் உள்ள பகுதிகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறை மய்யங்கள் 24-மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும் இக் கூட்டம் ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
_
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியரின் முழக்கம்!
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில்தான்!
அதே செங்கல்பட்டில்தான் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – அக்டோபர் மாதம் நடைபெறும்!
குடும்பம் குடும்பமாக நம்முடைய திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற ‘திராவிட முன்னாள் வாலிபர்கள்’ பங்கேற்க வேண்டும்!
சென்னை, மே 13 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அக்டோபர் மாதம் செங்கல்பட்டில் நடைபெறும். ஏனென்றால், செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடுதான் – பெண்களுக்குப் படிப்புரிமை, சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்ட மாநாடு. தந்தை பெரியார் நடத்திய முதல் மாநாடுமாகும். இரண்டு நாள்கள் நடைபெறும் அம்மாநாட்டில், குடும்பம் குடும்பமாக நம்முடைய தோழர்கள் பங்கேற்கவேண்டும். அதில் முக்கியமாக மகளிர், திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
திராவிடர் மாணவர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று முன்தினம் (11.5.2025) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்கு ஒவ்வொருவரும் சுதந்திரமாகப் பேசுகிறீர்கள்; சுதந்திரமாக வந்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது.
மகளிரணியினர் மட்டுமே பங்கேற்ற கருத்தரங்கம்!
திருப்பத்தூர் எழிலரசனுடைய வாழ்விணையர் அகிலா அவர்கள், மகளிரணியினர் மட்டுமே பங்கேற்ற கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கருத்தரங்கத்திற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை.
ஏனென்றால், அந்தக் கருத்தரங்கில் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். மனோதத்துவ மருத்துவ அறிஞர்கள் வந்திருந்தார்கள். மகளிருக்கு ஏற்படுகின்ற உடல் பிரச்சினைகள் அல்லது மனோதத்துவ ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கும். அந்தக் கருத்தரங்கில் அவற்றையெல்லாம்பற்றி தங்களுடைய சந்தேகங்களை மருத்துவர்களிடம் மனம் விட்டு கேட்கவேண்டும்; உடல்நலம் பேணக்கூடிய நிகழ்வு.
பெரியார் கண்ட வாழ்வியல் என்பது சிக்கனம், அடக்கம், ஆடம்பரம் கூடாது, உழைப்பு என்பவைதான்.
இங்கே திருவாரூர் மாவட்டத் தோழர்களும் வந்தி ருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை சொல்கிறேன்.
முதன்முதலாக திராவிடர் கழகம்தான் சொல்லிற்று!
காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று முதன்முதலாக திராவிடர் கழகம்தான் சொல்லிற்று. எதையும் நாம்தான் முதலில் சொல்வோம். வெற்றி பெற்றவுடன், நாம்தான் கடைசியாக நிற்போம். ‘‘நாங்கள்தான் வெற்றிக்குரியவர்கள்’’ என்று பலர் சொல்வார்கள். நாம்தான் செய்தோம் என்று சொல்பவர்கள் நாமல்ல; அந்த விஷயம் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதுதான் நமக்கு முக்கியம்.
போராட்டத்தில், பெண்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும்!
அப்போது நாம், நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு வாரத்திற்குமேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். விவசாய சங்க மகளிர் தோழர்கள் மிகத் தீவிரமாக, உற்சாகமாக செயல்படக் கூடியவர்கள். அவர்களிடம் நான் கேட்டேன், ‘‘காவிரி நதி நீருக்காக போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்; அப்படி நடத்தினால், சிறைச்சாலைக்குச் செல்லவேண்டி இருக்கும். அப்படி நடக்கவிருக்கும் போராட்டத்தில், பெண்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும். ஏனென்றால், போராட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது முக்கியமல்ல; அவர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பது முதல் நோக்கம்; மற்றொரு நோக்கம் என்னவென்றால், பெண்கள் செய்கின்ற சமையலில் குறையைக் கண்டு பிடித்துத்தான் ஆண்களுக்குப் பழக்கமே தவிர, அதனைப் பாராட்டிப் பழக்கமில்லை. உப்பு இல்லை; கசக்கிறது என்றுதான் குறை சொல்வார்கள்.
வயிற்று வலி, உடல் உபாதையால் அவதிப்பட்டார் தந்தை பெரியார்!
அன்னை மணியம்மையார் அவர்கள் சமைய லைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு சமைக்கவே தெரியாதாம். அன்னை நாகம்மையார் 1933 ஆம் ஆண்டே இறந்து போய்விட்டார். அதற்குப் பிறகு, பெரியார் அவர்கள் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு, வயிற்று வலி, உடல் உபாதையால் அவதிப்பட்டார். அப்போது அன்னை மணியம்மையார் அவர்கள் பத்திய சாப்பாட்டினை தயார் செய்து கொடுத்ததன் காரணமாக, அய்யா அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
முதன்முதலில் அன்னை மணியம்மையார் அவர்கள், சமையல்பற்றிய ஆய்வை அய்யாவை வைத்துத்தான் செய்திருக்கிறார்கள்.
‘நல்லா இருக்கும்மா, நல்லா இருக்கும்மா!’’
அதுகுறித்து என்னிடம் அன்னை மணியம்மையார் சொல்வார்; ‘‘நான் ஏதாவது சமைத்துக் கொடுத்தால், அய்யா அவர்கள், ‘‘நல்லா இருக்கும்மா, நல்லா இருக்கும்மா’’ என்று சொல்வார்.
பிறகு நான் அதைச் சாப்பிட்டுப் பார்க்கும்போது, உப்பே இல்லையே, இதை எப்படி அய்யா சாப்பிட்டார்? காரம் இவ்வளவு இருக்கிறதே, இதை எப்படி அய்யா சாப்பிட்டார்? என்று நினைப்பேன்’’ என்பார்.
தோழர்கள் வீட்டிற்கு அய்யா சாப்பிடச் செல்லும்போது, தோழர்கள், மீன் மற்றும் அசைவ உணவு காரசாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக, மிளகாய்த் தூள் அதிகமாகப் போட்டு சமைத்து வைத்திருப்பார்கள்.
உணவு காரமாக இருக்கிறது என்று வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்!
அதைச் சாப்பிடும்போது அய்யா அவர்கள், அந்த உணவு காரமாக இருக்கிறது என்று வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். ஏனென்றால், தோழர்கள் மனது சங்கடப்படுவார்கள் என்பதால்.
‘‘கொஞ்சம் ரசம் இருக்கிறதா?’’ அல்லது ‘‘கொஞ்சம் மோர் இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் கொஞ்சம் நகர்ந்ததும், தண்ணீர் இருக்கும் டம்ளரில், காரசாரமாக இருக்கும் மீனை போட்டு, கழுவி விடுவார். அதற்குப் பிறகு அந்த மீனை சாப்பிட்டுவிட்டு, ‘‘மோர் வந்துவிட்டதா?’’ என்று கேட்பார்.
பரிமாறும் தோழர்களுக்கே தெரியாது. ஏனென்றால், அவர்களுக்குத் தெரிந்து செய்தால், அவர்கள் சங்கடப்படு வார்கள் அல்லவா, அதற்காகத்தான். இதுதான் பெரியார்!
பெரியாருடைய பண்பாடு இருக்கிறதே, அது மிகச் சிறப்பானதாகும்.
அன்னை மணியம்மையார், தான் சமைத்ததை சாப்பிட்டுப் பார்த்து, ‘‘அய்யோ, நாம் உப்பு போட வில்லையே’’ என்று தெரிந்து கொள்வார். ‘‘இப்படித்தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன்’’ என்பார்.
ஆண்கள், சமையல் செய்யக் கற்றுக்கொள்வார்கள்!
ஆகவேதான் நான் சொன்னேன், ‘‘போராட்டத்தில் பங்கேற்று பெண்கள் ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் சிறைச்சாலைக்குப் போய்விடுங்கள். வேறு வழியில்லாமல் ஆண்கள், சமையல் செய்யக் கற்றுக்கொள்வார்கள்’’ என்று அவர்களிடம் கூறினேன்.
நானும் அப்படித்தான்; சுடு தண்ணீர் வேண்டு மென்றாலும், என்னுடைய வாழ்விணையரிடம்தான் கேட்பேன். நானாகச் சென்று சமையலறையில் தண்ணீரை சுட வைத்து எடுத்துக் கொண்டு வரமாட்டேன்.
இவையெல்லாம் ஆண்கள் ஆதிக்கத்தினால் வந்த கோளாறுகள்தான்.
அதனால்தான் நான் சொன்னேன், சிறைச்சாலையில் வேளை தவறாமல் சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிடவில்லையென்றாலும், விடமாட்டார்கள். ‘‘தாயினும் சாலப்பரிந்து’’ கட்டாயப்படுத்துவார்கள். சிறைச்சாலையில். இரண்டு வேளை சாப்பிடவில்லை என்றால், சிறைத்துறை அதிகாரி வந்துவிடுவார்; ‘‘என்னங்க நீங்க சாப்பிடாமல் இருக்கிறீர்கள்’’ என்று கேட்பார். அந்த அளவிற்கு யாரும் வெளியே கவலைப்படமாட்டார்கள்.
காவிரி நதிநீர் போராட்டத்தில் பங்கேற்க 600 தாய்மார்கள் வந்துவிட்டார்கள்!
அப்போது நாம் வைத்த வேண்டுகோளை ஏற்று, காவிரி நதிநீர் போராட்டத்தில் பங்கேற்க 600 தாய்மார்கள் வந்துவிட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்ற எங்களை ஒரு மண்டபத்தில் வைத்திருந்தார்கள். ரிமாண்ட் செய்யப் போகிறார்களா? அல்லது வெளியில் விடப் போகிறார்களா? என்று மாலை 5 மணிவரையில் எங்க ளுக்கு எதுவுமே தெரியவில்லை.
மேலேயிருந்து ஒரு பதிலும் காவல்துறை அதிகாரி களுக்கு வரவில்லை. அதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், எங்களை கைது செய்த காவல்துறை அதிகாரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என்னோடு படித்தவர்.
பெண்களையெல்லாம் நாங்கள் கைது செய்வதாக இல்லை- அவர்களையெல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்!
அவர் என்னிடம் வந்து, மிகவும் மரியாதையாக ‘‘அய்யா இவர்களையெல்லாம் அழைத்துச் செல்வதற்குப் பேருந்துகள் கிடையாது. ஆண்களை மட்டும் அழைத்துச் செல்வதற்காக 8 பேருந்துகள் இருக்கின்றன. இவ்வளவு பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆகவே, போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையெல்லாம் நாங்கள் கைது செய்வ தாக இல்லை. அவர்களையெல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்’’ என்றார்.
நானும், போராட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம், ‘‘காவல்துறை அதிகாரி எனக்கு மிகவும் வேண்டியவர்; அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது. ஆகவே, நீங்கள் எல்லாம் வீட்டிற்குச் சென்றுவிடுங்கள்’’ என்றேன்.
நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்; வீட்டிற்குப் போகமாட்டோம்
உடனே அவர்கள், ‘‘நாங்களெல்லாம் வீட்டில் சொல்லி விட்டு வந்துவிட்டோம்; நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்; வீட்டிற்குப் போகமாட்டோம்’’ என்று அந்தக் காவல்துறை அதிகாரி இருக்கும்போதே சொன்னார்கள்.
நம்முடைய தாய்மார்களுக்கு எவ்வளவு உறுதி என்பதைப் பாருங்கள். அவர்கள் படிக்காத தாய்மார்கள், விவசாயத் தாய்மார்கள்.
திருச்சி சிறைச்சாலையில் இடம் இல்லை என்பதால், வேலூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்; பிறகு மதுரை சிறைச்சாலைக்கு மாற்றினார்கள்.
மதுரை பே.தேவசகாயம்
மதுரை பே.தேவசகாயம் அவர்கள், சிறைச்சாலையில் இருந்த மகளிர் தோழர்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார்.
ஆகவேதான், மகளிர் போராட்டத்தில் பங்கேற்றால், வெற்றி உறுதி நமக்கு!
இவ்வளவு மகளிர் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. மகளிரணி அமைப்பு இன்னும் வளரவேண்டியது மிகவும் தேவையாகும்.
அதேபோன்று இளைஞரணித் தோழர்கள்!
மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கவேண்டும் என்று போராடினார்!
மகளிரே பங்கேற்கும் போராட்டத்தைத் தனியாக நடத்தவேண்டும். உதாரணமாக, மகளிருக்கென இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். தந்தை பெரியார், அனைத்துத் துறைகளிலும் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கவேண்டும் என்று போராடினார்.
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நகராட்சி யிலும், பஞ்சாயத்திலும் கொடுத்துவிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ளதுபோன்று
வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது!
அதனால் இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், பெண் மேயர்கள், பெண் நகராட்சித் தலைவர்கள் மற்ற மற்ற பதவிகளில் பெண்கள் நிறைய வந்துவிட்டார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ளதுபோன்று இவ்வாறு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
எனவே, தோழமை உணர்வுடன் அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தை ஒழிக்கவேண்டும். அதேநேரத்தில், உரிமை என்கிற பெயரால், அத்துமீறல்களும் இருக்கக்கூடாது.
மகளிரணியினருக்கு சீருடையை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்; அனைவரும் புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனால், உங்களுக்கு அசவுகரியமாக இருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. ஆகவே, எது உங்களுக்கு வசதியான சீருடையோ அதனை உருவாக்குங்கள். சீர்மையான கருப்புடையை உருவாக்குங்கள்.
அக்டோபரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
அதோடு, நம்முடைய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறும். இதுதான் முதல் அறிவிப்பு.
இரண்டாவது, அந்த மாநாடு பெரும்பாலும் செங்கல்பட்டில்தான் நடைபெறும். ஏனென்றால், செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடுதான் – பெண்களுக்குப் படிப்புரிமை, சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்ட மாநாடு. தந்தை பெரியார் நடத்திய முதல் மாநாடாகும். நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், 1929 ஆம் ஆண்டு நடைபெற்றது.
எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும்!
ஆகவே, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இரண்டு நாள்கள் நடைபெறும். அம்மாநாட்டில், குடும்பம் குடும்பமாக நம்முடைய தோழர்கள் பங்கேற்கவேண்டும். அதில் முக்கியமாக மகளிர், திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும்.
‘‘முன்னாள் வாலிபர்கள்’’
பெரியார் அவர்கள் வயதானவர்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று சொல்வார். அதுபோல, முன்னாள் வாலிபர்கள் மட்டுமல்ல; முன்னாள் வாலிபிகளையும் அழைத்துக் கொண்டு வரலாம்.
மே 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தில்…
அதேபோன்று இளைஞரணி தோழர்கள்; இளைஞர ணியில் இளைஞர்களை ஏராளமாகப் பார்க்கின்றேன். இப்படித்தான் புதிய இளைஞர்கள் முன்வரவேண்டும். சிறப்பாகச் செயல்படவேண்டும். மே 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில். நீங்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும்.
மும்மொழித் திட்டத் திணிப்பை எதிர்த்து, 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று படிக்கின்ற பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அப்போராட்டம் நடைபெறும்.
நம்முடைய தமிழ்நாடு அரசாங்கம், தாய்மார்களுக்கு சமையல் அறையிலிருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்திருக்கிறது. காலையில் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்குத் தாய்மார்கள் காலைச் சிற்றுண்டியை சமைத்துத் தரவேண்டும் என்கிற அவசியமில்லை. பள்ளிக்கூடங்களிலேயே காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சத்துணவுத் திட்டமாக மதிய சாப்பாடும் பள்ளிக்கூடத்திலேயே கிடைக்கிறது. இன்னும் இரவு சாப்பாடு மட்டும்தான் மீதி. அதையும் கொடுத்துவிட்டால், பள்ளிக்கூடத்திலேயே மாணவர்கள் தங்கிவிடுவார்கள், வீட்டிற்கே வரமாட்டார்கள்.
எனவேதான், தோழர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில், படிப்பது, சிந்திப்பது, பெரியாருடைய வாழ்வியலைப் படிப்பது – ஆடம்பரத்தை நீக்கி, எளிமையாக வாழ்வது போன்ற சிறப்புகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.
மே 20 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில், மாணவர் கழகத்தினர், மகளிரணியினரும் பங்கேற்கவேண்டும்.
(தொடரும்)____________________________________________________
திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகத்தினர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி
திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழக உறுப்பினராக என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.
காரணம்,
- மானமும் அறிவும் தான் மனிதர்க்கழகு என்ற அறிவுச் சுதந்திர ஆசான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, காலமெல்லாம் எமது கல்வியை மறுத்த மனுதர்மத்தை எதிர்த்து வெற்றிபெற்ற இயக்கம் இது.
- ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்கவும், சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றை நிலைநாட்டும் கொள்கைப் பாசறையாக இயக்கத்தை உருவாக்கி எதிர்நீச்சல் அடித்து வெற்றி காணும் இயக்கமாம் திராவிடர் கழகத்தின் உருவாக்கமான திராவிட மாணவர் கழகம் இது.
- தன்னலம் மறுப்பு, பதவியாசை, அரசியல் வேட்டை முதலிய எந்தவித சபலங்களுக்கும் என்னை ஆளாக்கிக் கொள்ளாமல், சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வூட்டும் தொண்டறம் மட்டுமே எமது உயிர்மூச்சு என்று கொண்டதால், சபலங்களையும், பேராசைகளையும் விட்டெறிந்து, எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் பெரியார் சுயமரியாதைத் தொண்டறத்தைச் செய்யும் வலிமையான கொள்கை வீரராக என்றும் தொடர்வேன்.
இனி, எனது சிந்தனை, செயலாக்கம் எல்லாம் திராவிடர் கழகத்தின் கொள்கை, லட்சிய வெற்றிக்காக, உறுதியோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டு, முழு கொள்கை வழிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வேன் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும், வேறு எந்த சபலத்திற்கும் எப்போதும் ஆளாக மாட்டேனென்றும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்கூற, திராவிடர் மாணவர் கழக, இளைஞரணி தோழர்கள் தனித்தனியாக தொடுத்து எடுத்துக் கொண்ட உறுதிமொழி இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக