வெள்ளி, 16 மே, 2025

திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

 


விடுதலை நாளேடு



சென்னை, மே 12  மாணவர்களும், இளைஞர்களும், மகளிரும் இத்தனைப் பேர் திரண்டு இருப்பதைப் பார்க்கும்போது, நாம் உற்சாகம் பெறுகிறோம் – இளமை பெறுகிறோம். தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்பதற்கு இதுபோன்ற எழுச்சிக் கூட்டமே பதில்! தந்தை பெரியார் பணி முடிப்பதே நமது ஒரே இலக்கு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

திராவிடர் மாணவர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (11.5.2025) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட, தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், அவைத் தலைவர் மற்றும் மகளிர் அணியின் புதிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களாகிய அத்துணை தோழர்களையும் தனித்தனியே பெயர் சொல்லி அழைக்க நேரமின்மையால், அனைவரையும் அழைத்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும்.

நான் பேசவேண்டிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன. குறுகிய காலத்தில் நம்முடைய மகளிரணிப் பொறுப்பா ளர்கள் தமிழ்ச்செல்வி, மணியம்மை மற்ற தோழர், தோழியர்கள், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து உற்சாகமாக இக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வணக்கங்களும், வாழ்த்துகளும்!

பெண்களை முன்னுக்குக் கொண்டுவரும்

இயக்கம் இது!

சமூகநீதிக்காக இருக்கின்ற இயக்கம் நம்மு டைய இயக்கம். அந்த சமூகநீதிக்கு இந்த நிகழ்வே ஓர் உதாரணமாகும்.

அது என்னவென்றால், நம்முடைய இளைஞரணி தோழர்கள், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்  எல்லாம் முன் வரிசை யில் அமர்ந்திருந்தார்கள். நாங்களும், அவர்களை யொட்டியேதான் தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் எல்லாம் அமர்ந்திருந்தோம்.

மகளிர், நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள் என்றவுடன், அவர்களையெல்லாம் முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று  முன்னுக்குக் கொண்டு வந்துவிட்டோம். பொறுப்பாளர்கள் நாங்களும் எங்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டோம். பெண்களை முன்னுக்குக் கொண்டுவரும் இயக்கம்தான், பெரியாரின் இயக்கமாகும்.

இளைஞரணியினர் முன் வரிசையில் அமர்ந்திருந்த தால், மகளிரணியினர் பின்தங்கிய சமுதாயமாக ஆகிவிட்டார்கள். இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் ஆக்கப்பட்டது.

அவர்களுக்கு எந்தவிதமான தகுதிக் குறைவும் கிடையாது. நீங்கள் முன்பே வந்து அமர்ந்து விட்டதுபோன்றுதான், நிறைய பேர் அவர்களைத் தள்ளிவிட்டு, அமர்ந்துவிட்டார்கள்.

அவர்களுக்கும், நமக்கும் வேறுபாடு என்ன வென்றால், அவன், நம்மை ‘‘முன்னேறாதே’’ என்று பிடித்துக் கீழே தள்ளிவிட்டான்.

ஆனால், நாம் அப்படியில்லை.

நீண்ட நாள்கள் அவர்கள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் முன்னுக்குப் போகட்டும் என்று நாம் பின்னுக்கு வந்துவிட்டோம். இது தொடரவேண்டும். இதுவே ஒரு மகிழ்ச்சிகரமான தொடக்கமாகும், இது ஒன்று.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்!

இரண்டாவது, தோழர்களே! ஆஸ்திரேலியா பிரச்சார பயணத்திற்கு நானும், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் சென்றிருந்தோம் என்பது பெரும்பகுதி தோழர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அங்கே நாங்கள் எதிர்பார்த்ததைவிட, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களின் எதிர்பார்ப்பைவிட வெற்றி கரமாக நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்வளவு பேர் ஆதரவு நமக்கு இருக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டார்களே நினைக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூன்று வாரங்கள் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கிருந்து திரும்பி வரும்போது, என்னுடைய உடல்நிலை கொஞ்சம் தளர்ந்தது. ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை.

ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும்போதுகூட அதுபோன்ற  நிலையில்தான் என்னுடைய உடல்நிலை இருந்தது. என்னுடைய இணைர் உள்பட ஆஸ்திரேலிய பயணம் செல்வதை பலரும் விரும்பவில்லை.

முதலமைச்சர்கூட, ‘‘என்ன அண்ணே, அவ்வளவு தூரம் பயணம் போகவேண்டுமா? உங்களால் முடியுமா?’’ என்று கேட்டார்.

‘‘பரவாயில்லீங்க’’ என்றேன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிகள் ஒன்றுகூட தடைப்படவில்லை. ஆனால், உடல் கோளாறுகள், இடையூறுகள் இருந்துகொண்டுதான் இருந்தன.

ஒரு பக்கம் வலி இருந்தாலும், இன்னொரு பக்கம் அய்யாவினுடைய கொள்கையின் வலிமையினாலும், தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றதாலும், மகிழ்ச்சியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

உடல்நிலையையும்
பொருட்படுத்தாமல்…

‘‘உணவு விடுதியில் நீங்கள் சாப்பிடவேண்டாம்; வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் உணவை ஆசிரியருக்குக் கொடுத்துவிடுகிறோம்’’ என்று சொல்லி, அதன்படியே செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் கழகப் பிரச்சாரத்தை  முடித்துக்கொண்டு, இங்கே வந்த பிறகு, அதனுடைய தாக்கம் இருந்தது. அதுவரையில், கொள்கைப் பார்வை, பயணங்கள் இதில்தான் என்னுடைய கவனம் இருந்தது. உடல்நிலையைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. வலி இருந்தாலும், மேடை ஏறியவுடன் அந்த வலியைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்று இரவு 12 மணிய ளவில்தான் தூங்குவேன். அதிகாலை எழுந்துவிடுவேன். இப்படியே இருந்ததால், என்னுடைய உடல்நிலை தளர்ந்தது.

ஆகையால், சில மருத்துவப் பரிசோதனைகளை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு, மருத்துவர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என்று தடுத்தனர்.

அந்த நேரத்தில்தான், வெளியூர் பயணத்தை ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை நிறுத்தினேன். துணைத் தலைவர் கவிஞர், ‘விடுதலை’யில் என்னுடைய உடல்நிலையைப்பற்றிய அறிவிப்பைப் போட்டு, ‘‘ஆசிரி யரின் வெளியூர் பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன’’ என்று அறிவித்தார்.

மருத்துவர்கள் சொன்னதற்குக் கட்டுப்பட்டு, நான் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தேன்.

அதற்குப் பிறகு, நான் என்னுடைய உடல்நிலை யைப்பற்றி கவலைப்படவில்லை. கழகப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டேன்.

மருத்துவர்கள் கொடுப்பது மருந்து –

உங்களைப் பார்ப்பதுதான் மாமருந்து!

பொதுவாக, மருத்துவர்கள் எனக்குக் கொடுப்பது மருந்து. ஆனால், நான் என்னுடைய உடல்நலனைப்பற்றி கவலையில்லாமல், அதைப்பற்றி மறந்திருந்தேன். பிறகு, என் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தவுடன், எனக்குத் தோன்றியது, ‘‘உடனே கமிட்டிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றேன்.

ஆனால், நான் எதிர்பார்த்தைவிட, நிறைய பேர் வந்திருக்கிறீர்கள்.

எனவே, என் உடல்நலத்திற்காக எனக்கு மருத்து வர்கள் இதுவரையில் கொடுத்தது மருந்து!

ஆனால், இன்றைக்கு இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, சகோதரிகள், தாய்மார்கள், மகளிர ணித் தோழர்கள், மாணவர் கழக, இளைஞரணித் தோழர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது, இதுதான் எனக்கு மாமருந்து.

என்னுடைய உடல்நலம் நன்றாக இருக்கிறது. இனிமேல், என்னை ஓடச் சொன்னீர்கள் என்றாலும், ஓடுவேன், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

எனக்கு என்றால், தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு அல்ல; இந்த இயக்கத்திற்கு மாமருந்து!

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று சிலர் கேட்டார்கள்.

அவர்களுக்கு இந்த கமிட்டிக்கு வந்திருக்கும் கூட்டமே பதில்!

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்பவர்களுக்கு இத்தகைய கூட்டம்தான் பதில்!

இவ்வளவு பேர் மகளிர் இந்தக் கமிட்டியில் பங்கேற்பார்கள் என்று நானே நினைக்கவில்லை. தமிழ்ச்செல்வி, மணியம்மை போன்றவர்களைப் பாராட்ட வேண்டும். உங்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று வார்த்தையால் மட்டும் சொல்லக்கூடாது. மகளிரணியினர் இதுபோன்ற சந்திப்புகளில் அதிகம் கலந்துகொள்ளவேண்டும். உங்களையெல்லாம் பார்க்கும்போது, உற்சாகம் தானாக வருகிறது.

அதேபோன்று, என்னுடைய பேட்டரி, உங்களால் சார்ஜ் ஆகிறது; உங்கள் பேட்டரி, என்னால் சார்ஜ் ஆகிறது.

இக்கமிட்டி முடிந்து திரும்போது, நானும் அதிக உற்சாகத்தோடு செல்வேன்; நீங்களும் உற்சாகமாகத்தான் போவீர்கள்.

பெரியார் காலத்தில், மாணவர் கழகம் மட்டும் இருந்தது. திராவிடர் கழகம் உருவாவதற்கு ஓராண்டிற்கு முன்பே குடந்தையில் உருவானது அது என்பது வரலாறு.

ஆனால், இளைஞரணி, மகளிரணி போன்றவை அதற்குப் பிறகுதான் உருவாகியது.

அய்யா காலத்தில், மகளிரணி என்று தனியே கிடையாது. அய்யாவுக்குப் பின், இயக்கத்திற்கு அம்மா தலைமை தாங்கினார்.

இந்தியாவிலேயே ஒரு நூற்றாண்டைக் காணக்கூடிய இயக்கம்; நீதிக்கட்சியோடு இணைத்தால், நூற்றாண்டைத் தாண்டியிருக்கக் கூடிய இயக்கம், இந்த இயக்கம்.

தந்தை பெரியார் என்ற இமயமலை போன்ற ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவர், அவர் உடலால் மறைந்துவிட்ட ஒரு நிலையில், அந்த இடத்தை நிரப்பக்கூடியது யார்?

தந்தை பெரியாருக்காகவே வாழ்ந்த அன்னை மணியம்மையார்!

பெரியார் அவர்கள், யாரையும் அதற்காகப் பரிந்துரை செய்யவில்லை. அதேநேரத்தில், அம்மா அவர்கள், தந்தை பெரியாருக்காகவே வாழ்ந்தவர்; அவருக்காகவே வாழ்க்கையைத் தந்தவர்.

இன்று அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாள். அன்னை நாகம்மையார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக்காத்தவர்கள். இயக்கத் தோழர்களையெல்லாம் தன்னுடைய பிள்ளைகளாகக் கருதியவர். ஜாதி மறுப்புத் திருமணம், கைம்பெண் திருமணம், ஜாதி, மத மறுப்பு மணம், மணவிலக்குப் பெற்றவர்களுக்கு மறுமணம் செய்து வைத்த பெருமை அன்னை நாகம்மையாருக்கு உண்டு.

அன்னை நாகம்மையாருக்கும், அன்னை மணி யம்மையாருக்கும் என்ன வேறுபாடு என்றால், அன்னை நாகம்மையார் அவர்கள், பெரியார் அவர்களை, 13 வயதில் திருமணம் செய்துகொண்டவர். இயல்பான மணவாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய வாழ்விணையராக ஆக்கிக் கொண்டது, சட்டப்படிக்கான ஒரு ஏற்பாடே தவிர, மற்றபடி அன்னை நாகம்மையாருடன் வாழ்ந்தது போன்று அல்லாது, தாம்பத்திய வாழ்க்கை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

யாருக்காக செய்தார்கள் என்றால், நமக்காக, நம்முடைய இயக்கத்திற்காக.

இந்த இயக்கத்தின் பலம்
எங்கே இருக்கிறது தெரியுமா?

அந்த ஏற்பாட்டை அன்றைக்கு அய்யா செய்ய வில்லை என்றால், இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்தில் நாம் அமர்ந்திருக்க முடியுமா? பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம், 50 ஆண்டுகள் நிலைத்து இருக்கிறது. எந்தக் கொம்பனாலும் இதை அசைத்துப் பார்க்க முடியாது. இந்த இயக்கத்தினுடைய வேர் மிகப் பலமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஓர் இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்ற ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

காரணம், அன்னை மணியம்மையார் அவர்களுடைய துணிவு. அன்னையாரைப் பார்த்தால், மிகவும் எளிமையாக இருப்பார். கையில் ஒரே ஒரு பைதான் வைத்திருப்பார். அதில் ஒரு மாற்றுச் சேலையும், ரவிக்கையும் வைத்திருப்பார். கார் கூட அன்னையாருக்குத் தனியே கிடையாது. அய்யாவினுடைய வேனைத்தான் பயன்படுத்துவார்.

அய்யா காலத்தில் நான் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, அதற்குப் பிறகு அய்யா மறைந்த பின்னும் மீண்டும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டேன்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில், அன்னையாரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற பெண் உலகத்திலேயே அன்னை மணியம்மையார்தான்!

ஏனென்றால், ஒரு நாத்திக இயக்கம், சுயமரியாதை இயக்கம் – அந்த இயக்கத்திற்கு முதன்முறையாக, இந்தியாவிலேயே, ஏன் ஆசியாக் கண்டத்திலேயே, உலகத்திலேயே என்றுகூட சொல்லலாம்; ஒரு சமூகப் புரட்சி இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் என்பது அன்னை மணியம்மையார் அவர்கள்தான்.

அதற்குக் காரணம், அய்யா அவர்கள் போட்ட பாதை தான். அய்யா உருவாக்கியதுதான்; அன்னையார்மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை நியாயப்படுத்தப்பட்டு, அய்ந்தாண்டுகள் அன்னையார் அவர்கள், அய்யா இருந்திருந்தால், எப்படிப் போராட்டக் களத்தில் நிற்பாரோ, அதே பொலிவோடு நின்றவர்.

இதே இடத்தில், இந்த இடத்திற்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. ‘‘இராம லீலா’’வை வடநாட்டில் கொண்டா டியபோது, தமிழ்நாட்டில், ‘‘இராவண லீலா’’வை நடத்தி, இந்தியாவையே அலற வைத்த பெருமை அன்னை மணியம்மையாரின் தலைமைத்துவம்தான்.

அதேபோன்று, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டம். அன்னை மணியம்மையார் அவர்கள், மருத்துவமனையில் பாதி நாள்களிலும், வெளியில் மீதி நாள்களும் இருப்பார்கள்.

அய்ந்தாண்டுகள்தான் தலைமைப் பதவியில் இருந்தார். அவருடைய கணக்கு என்னவென்றால், பெரியாரை நூறாண்டுகள் வாழ வைக்கவேண்டும் என்பதுதான். அதில் நான் தோற்றுவிட்டேனே என்று வருத்தப்பட்டார்.

அன்னையாரைத் தூற்றியோரும் பிற்காலத்தில் போற்றினர்!

அன்னை மணியம்மையார் – பெரியார் திரும ணத்தைப்பற்றி விமர்சனம் செய்து, இயக்கத்தைவிட்டு வெளியேறிய அண்ணா அவர்கள், பிற்காலத்தில், ‘‘அன்னையாரால்தான், அய்யா நீண்ட பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்’’ என்று சொன்னார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பின்னாளில், ‘‘அன்னை என்று அழைக்காமல், இந்தப் பொடிப்  பெண்ணை வேறு என்னவென்று அழைப்பது?’’ என்றார்.

அப்படிப்பட்ட காலத்தில், நான் தயங்கித் தயங்கித்தான் அன்னையாரிடம் ஒரு கருத்தைச் சொன்னேன். ஏனென்றால், இயக்கத் தலைவர் அவர்.

இங்கேகூட சொன்னார்கள், ‘‘தலைவர் சிந்திக்க வேண்டும்; செயலாக்குவது தொண்டர்கள், தோழர்கள்’’ என்று.

அதற்கு நேரெதிராக தொண்டர்கள் சிந்திக்க ஆரம்பிக்கக் கூடாது. நேற்றுகூட பாகிஸ்தான் பிரச்சி னையில், முப்படைத் தளபதி என்ன சொல்கிறாரோ, அதைத்தான் செய்யவேண்டும்.

‘‘இல்லை, இல்லை, எனக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருக்கிறது’’ என்று சொல்லி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இராணுவம் என்ன ஆவது?

இந்த இயக்கம், பகுத்தறிவு இயக்கம். அப்படியானால், ஏன் தொண்டர்கள் யோசிக்கக்கூடாதா? என்று கேட்கலாம்.

யோசிக்கலாம்; உங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு. பகுத்தறிவுப்படி எல்லா கருத்துகளையும் சொல்லலாம். ஆனால், எங்கே? இதுபோன்ற கமிட்டிகளில்.

மாறுபடலாம்; ஆனால்…

அதற்குப் பிறகு, விவாதம் செய்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு,  நாமெல்லாம் கலந்து ஒரு முடிவை எடுத்த பிறகு, ஒரே கருத்துதான் இருக்கவேண்டும். இந்தப் பதில், மகளிரணிக்கு மட்டுமல்ல, இளைஞரணிக்கும், மாணவர் கழகத்திற்கும் சேர்த்துதான் சேர்த்துத்தான்.

இல்லை இல்லை, எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொன்னால், பகுத்தறிவு பற்றி பேசுகி றீர்களே, அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் என்ன அடிமையா? என்று சிலர் கேட்கலாம்.

மாறுபடுவதற்குத் தாராளமாக உரிமை உண்டு. யாருக்கு? ஆனால், நாணயமாக அவர் வெளியே போய்விட வேண்டும்.

இங்கே இருந்துகொண்டே, முன்னால் ஒன்று பேசுவது; பின்னால் ஒன்று பேசுவது இருக்கக்கூடாது.

‘‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கத் தரும்’’

ஆகவே, இந்த இயக்கத்தில் அதுபோன்று கிடையாது. இந்த இயக்கம் நாளுக்கு நாள் பரிசுத்தமாகிறது. தங்கத்தை நெருப்பில் போடப் போட, அது பரிசுத்த மாவதைப்போன்று!

நீங்கள் பாத்திரங்களைப் புளி போட்டு தேய்க்கும் போது, பாத்திரம் தேய்வதுபோன்று இருந்தாலும், அந்தப் பாத்திரம் மிகப் பொலிவோடு, ஒளியோடு, சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. அதுபோன்றதுதான் நம்முடைய இயக்கமும்.

மகளிரணியை ஏற்படுத்தாதது, ஏன்?

அன்னை மணியம்மையாரிடம் கேட்டோம், ‘‘நம்முடைய இயக்கத்தில் மகளிரணி அமைப்பை ஏற்படுத்தவேண்டும்’’ என்று.

கொஞ்சம் யோசித்தார் அன்னை மணியம்மையார்.

‘‘என்னம்மா’’, என்றோம்.

‘‘புகார் நிறைய வரும், அதனால்தான் யோசிக்கிறேன்’’ என்றார்.

ஏனென்றால்,  அம்மா அவர்களைப்பற்றி அந்த அளவிற்கு அவதூறுச் செய்திகளைப் பரப்பினார்கள். உலகத்தில், வேறு எந்தப் பெண்ணும், அன்னையார் போன்று, இழிவை, அவதூறைச் சந்தித்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் உண்மையான புகார் கிடையாது. அதனால், அன்னை மணியம்மையார் மகளிரணி வேண்டாம் என்று நினைத்திருப்பார்.

அப்போது நான் சொன்னேன், ‘‘அம்மா, இது ஒரு முயற்சிதான்; நம்முடைய தோழர்கள் கட்டுப்பாடா னவர்கள்; ஒழுக்கமானவர்கள், நாணயமானவர்கள்; மற்ற இயக்கத்தில் வேறுமாதிரியாக இருக்கலாம்; நம்முடைய இயக்கத்தில் அதுபோன்று இல்லை’’ என்றேன்.

‘‘சரி, உன்னுடைய இஷ்டம்; மகளிரணியை தொடங்குங்கள்’’ என்றார் அன்னை மணியம்மையார்.

பிறகு, தஞ்சாவூர் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் திராவிடர்  கழக மகளிரணி அமைப்பைத் தொடங்கினோம்.

அதேபோன்று தோழர்களே, இளைஞரணித் தோழர்க ளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். அய்யா காலத்தில் இளைஞரணி என்று தனியே ஒன்று கிடையாது.

அய்யாதான் முதல் இளைஞர். ஏனென்றால், இளைஞர் என்பது வயதைப் பொருத்தது அல்ல; உழைப்பைப் பொருத்ததுதான். நான் இளைஞன்தான். இளைஞரணிப் பொறுப்பாளன்தான்; எனக்கு ‘‘92 வயதாகிவிட்டது, 92 வயதாகிவிட்டது’’ என்று மிரட்டாதீர்கள்; எனக்கு 29 வயதுதான் – உங்களையெல்லாம் பார்த்த பிறகு, இந்தக் கூட்டம் முடிந்த பிறகு!

92 வயது எப்போது என்றால், சாப்பிடும்போது ஞாபகத்திற்கு வரும் – அளவோடு சாப்பிடவேண்டும் என்பதால்.

நோய் வந்தவுடன், மருந்து சாப்பிடும்போது எனக்கு 92 வயது.

எனக்கு வயது 92 அல்ல; 29 தான்!

உங்களையெல்லாம் பார்க்கும்போது, போராட்டக் களத்தில் நிற்கும்போது, எழுதும்போதெல்லாம் எனக்கு 29 வயதுதான். இன்னுங்கூட வயதைக் குறைக்கவேண்டுமானால், குறைத்துக் கொள்ளலாம்.

அந்த உற்சாகம் நமக்கு இருக்கின்ற வரையில் நாமெல்லாம் என்றைக்கும் இளைஞர்கள்தான். அதுதான் நம்முடைய கொள்கை.

இரண்டு பேர்தான் அந்த உற்சாகத்தை நிலைநாட்டுகிறார்கள்.

ஒன்று, அய்யாவும், அய்யாவினுடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்ற உங்களைப் போன்ற இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள்.

இன்னொருவர், நம்முடைய கொள்கை எதிரிகள்.

அவர்கள்தான், நம்மைக் கொஞ்சம்கூட  சோர்வடையவிடாமல், ‘‘இருக்கீங்களா, நாங்கள் சவால் விடுகிறோம்’’ என்கிறார்கள்.

‘‘நீ, வாய்யா, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லுகின்ற துணிச்சல் நமக்குண்டு.

இந்த இரண்டு பேரால்தான், எங்களுடைய ஆயுள் நீளுகிறது. இதில் வேறொரு ரகசியமும் கிடையாது.

ஓர் இராணுவ வீரன்போல…

எதிரி நன்றாக இருக்கிறான்; கடுமையாக இருக்கிறான். அப்போது போர்க் களத்தில் நிற்கின்றவன் தூங்கிக் கொண்டா இருப்பான். அவனுக்கு எதிரில் நிற்பவர்கள் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், இவனுக்குத் தூக்கம் வருமா? எதிரில்  நிற்பவர்களை ஒழிப்பது எப்படி? அடக்குவது எப்படி? என்பது ஓர் இராணுவ வீரனுக்கு எப்படி கடமையாக இருக்குமோ, அதுபோன்றுதான் நம் எல்லோருக்கும்.

அவரவர்கள் வயதை மறந்துவிட்டு, அவரவருடைய உணர்வின் காரணமாக இங்கே வந்திருக்கிறீர்கள். இக்கமிட்டி முடிந்து செல்லும்போது, அனைவரும் இளைஞரணியினர்தான். ஆகவேதான், இளைஞரணியையும், மகளிரணியையும் பிரிக்கவில்லை.

எங்களைப் போன்றவர்களை உருவத்தில் பார்த்தால் குறைவாகத்தான் இருப்போம். மணியம்மை, மதிவதனியைப் பார்த்தீர்கள் என்றால், உருவத்தில் சிறிதாக இருக்கிறோம் என்று நினைக்கலாம் கொள்கை பலமாக இருப்போம்.

ஆகவே தோழர்களே, நம்முடைய குடும்பம் பலமான குடும்பமாகும்.

இயக்கத்தின் பலம் எது?

அய்யா உருவாக்கிய  இந்த இயக்கம், மிகப் பலம் வாய்ந்த இயக்கமாகும். அதில் எத்தனை பேர் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு காலத்தில் நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கைக் குறைவுதான். படிக்காதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஆகவே, எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ண பலமும், செயல்திட்டமும், உறுதியும், வீரமும்தான் முக்கியம்.

ஆகவே, நீங்களெல்லாம் இங்கே வந்தமைக்காக மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் நீங்கள் வரவேண்டும். இந்த ஆண்டிற்கு தனியே ஒரு சிறப்பு உண்டு.

தந்தை பெரியார் பணி முடிப்பதே
நமது ஒரே இலக்கு!

சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு அது. இளைஞர்களுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்லுகிறேன், கவனமாகக் கேளுங்கள்.

அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘ஒரு சிறிய குப்பியில் மருந்தை அடைத்து, அதில் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியதுபோன்று, பெரியார் தமது உழைப்பை – பல நூற்றாண்டுகளை, ஒரு நூற்றாண்டுக்குள் அடைத்துவிட்டார்’’ என்றார்.

(தொடரும்)

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை தீர்மானங்களை நிறைவேற்றும் விதமாக அனைவரும் நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக